தேச விடுதலைக்குப் பிந்தைய நவீன தமிழகத்தின் வரலாற்றை எழுத முயலும் யாரும் அண்ணா என்ற பெயரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. தமிழக அரசியல் அரங்கில் மட்டுமின்றி கலை - இலக்கிய, பண்பாட்டுத் தளத்திலும் அழுத்தமான தடங்களை உருவாக்கியவர் அண்ணா.

திருப்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் தந்தை பெரியாரைச் சந்தித்த பிறகு அண்ணாவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. தென்னிந்திய நலவுரிமை சங்கம் துவங்கி சுயமரியாதை இயக்கம் வரை தமிழக அரசியலில் உருவாகியிருந்த சூழலை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி மிகக் குறுகிய காலத்தில் தனது கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் சாதுர்யமும், சாமர்த்தியமும் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.

பெரியாரைப் பின்பற்றி நடந்த அவர், சரியான நேரத்தில் அவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டிக்கொண்டார். நாடு விடுதலை பெற்ற போது மக்களிடையே ஒரு புதிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பெரியார் விடுதலை நாளைத் துக்க நாள் என்று அறிவித்து விலகி நின்ற போது, இன்ப நாள் இது, இனிய நாள் இது என்று வர்ணித்தார் அண்ணா. வெகுஜனத் திரளின் மனநிலையை துல்லியமாக புரிந்து கொள்ளும் அவரது பாங்கு இதிலிருந்து வெளிப்படும்.

திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா பேசியதையும், எழுதியதையும் தொகுத்தால் சில ஆயிரம் பக்கங்கள் வரும். நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு கன்னி உரை நிகழ்த்தும்போது கூட திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்க அவர் தவறவில்லை. அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு என்ற அளவுக்கு முழக்கங்கள் எழுந்த காலமது.

ஆனால், பிரிவினை பேசும் இயக்கங்கள் தடை செய்யப்படும் என்று அன்றைக்கு பிரதமராக இருந்த நேரு எச்சரித்த பின்னணியில், திராவிட நாடு கோரிக்கையை கைவிட நல்ல தருணத்தை அண்ணா எதிர்நோக்கி இருந்தார். இந்திய - சீன எல்லைப் பிரச்சனை எழுந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு கருதி பிரிவினை கோரிக்கையை கைவிடுவதாகவும், ஆனால், திராவிட நாடு கோருவதற்கான நியாயங்கள் அப்படியேதான் இருக்கிறது என்றும் அறிவித்தார் அவர்.

பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்து தனி இயக்கம் கண்டபோது, எதிர் முகாமிலிருந்து கடுமையான தாக்குதலை அண்ணாவும், அவரது தம்பிமார்களும் எதிர்கொள்ள நேர்ந்தது. "பெரியாரிடமிருந்து கண்ணீர்த் துளியோடு வெளியேறுகிறேன்" என்று அண்ணா சொன்னதையே கிண்டலடிக்கும் வகையில் "கண்ணீர் துளி பசங்க" என்று பெரியார் கூறினார். அப்போது, பெரியாரோடு இருந்த சிலர் அவரைவிட கடுமையாக அண்ணாவை தாக்கினார்கள். ஆனால், என் இயக்கத்தில் தலைவர் நாற்காலி காலியாகவே இருக்கிறது. பெரியார் வந்து அமரும் வரை அந்த நாற்காலி காலியாகவே இருக்கும் என்று அண்ணா கூறியதோடு தான் மட்டுமல்ல, தன்னுடைய தம்பிமார்களும் பெரியாருக்கு எதிராக தாக்குதல் தொடுக்காமல் பார்த்துக் கொண்டார்.

திமுக தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதைக் கூட திருச்சியில் நடந்த மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியே முடிவு செய்ததாக அறிவித்தார். தன்னுடைய இயக்கத்தை முற்றிலும் ஜனநாயகப்பூர்வமாகவே அண்ணா நடத்த முயன்றார். தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் திமுக இருந்த போதே, பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு, "தம்பி வா! தலைமை ஏற்க வா!" என்று அழைத்து நாவலர் நெடுஞ்செழியனை பொதுச் செயலாளராக்கினார்.

1948ம் ஆண்டு அக்டோபர் 23, 24 தேதிகளில் ஈரோட்டில் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் போது, தலைவராக இருந்த பெரியார், அண்ணாவை சாரட் வண்டியில் அமர வைத்து ஈரோடு முழுவதும் வலம் வர வைத்தார். அந்த ஊர்வலத்தின்போது பெரியார் அந்த வண்டியின் பின்னால் நடந்தே வந்தார். தனயனிடம் பெட்டிச் சாவியை ஒப்படைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று பெரியார் கூற, கெட்டிக்காரத்தனமாக பெட்டிச்சாவியை வைத்துக் கொள்வேன் என்று அண்ணா கூறினார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

திமுகவின் தனிப்பெரும் தலைவராக அண்ணா இருந்த போதும், அனைத்து முடிவுகளையும் பொதுக் குழு, செயற்குழு என்று விவாதித்து அதனடிப்படையிலேயே எடுத்தார். "என் விருப்பப்படியேதான் எல்லாம் முடிவுகளும் அமைய வேண்டுமென்று நினைப்பவன் அல்ல நான்; அனைவரது கருத்துக்கும் மதிப்பளிக்க முயல்பவன். ஆனால், நான் ஒன்றை விரும்புகிறேன் என்பதற்காகவே அதற்கெதிராக கருத்து தெரிவிப்பவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை எண்ணி வேதனையடைகிறேன்" என்று அண்ணா ஒருமுறை கூறியுள்ளார்.

பெரியாரிடமிருந்து விலகி வந்து தனி இயக்கம் கண்டு ஆட்சியைப் பிடித்த நிலையில், பொறுப்பேற்றவுடன், அவர் தேடிச் சென்றது பெரியாரைத்தான். அண்ணா தன்னை சந்திக்க வருகிறார் என்று அறிந்தவுடன் பெரியார் மிகவும் சங்கடப்பட்டார். பெரியாரை சந்திக்கச் செல்வது தேவைதானா என்று சிலர் கேள்வி எழுப்பிய போது, அவர் இல்லையென்றால் இந்த நிலையில் நானும் இல்லை; இந்த இயக்கமும் இல்லை என்பதே அண்ணாவின் பதிலாக இருந்தது. பெரியார் நெடுங்காலமாக போராடி வந்த சுயமாரியாதை திருமணங்கள் சட்டப்பூர்வமாகச் செல்லும் என்று கையெழுத்திட்டு அதற்கான அரசு உத்தரவை பெரியாருக்கு பரிசாக வழங்கினார்.

கட்சிக்குள் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக மேலவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எம்.ஜி.ஆர். விலகுவதாக அறிவித்த போது, அவரை நேரடியாகச் சந்தித்து அந்த முடிவை மாற்றிக் கொள்ளச் செய்தவர் அண்ணா. ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன் போன்றவர்கள் திமுகவிலிருந்து விலகிய போது, தன்னால் முடிந்த வரை அதைத் தடுக்க முயன்றார்.

1967தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜர் தோற்றபோது, அண்ணாவைச் சுற்றி இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து துள்ளி குதித்த நிலையில் அவர்களை கண்டித்த அண்ணா, ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல என்று கூறினார்.

1967 தேர்தலில் திமுக ஆட்சியமைக்க துணை நின்றதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் அப்போது திமுகவை ஆதரித்தது. ஆட்சியமைக்கும் அளவுக்கு திமுக அதிக இடங்களை பெறும் என்று அப்போது அண்ணாவே கருதவில்லை. எனவேதான் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். வென்றார்.

தேர்தல் முடிவு வந்த பின்னணியில், இந்தக் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வர் பொறுப்பேற்க தயார் என ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் சூசகமாக பொடிவைத்த நிலையில், அண்ணா எவ்விதத் தயக்கமுமின்றி திமுக தனித்து ஆட்சியமைக்கும். நான் முதல்வர் பொறுப்பேற்பேன் என்று ராஜாஜியின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் காங்கிரஸ் எதிர்ப்பின் மூலம் கிடைத்த அறுவடையை சுதந்திரா கட்சி கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மாநில சுயாட்சிக் கோரிக்கையில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர் அண்ணா. முதல்வர் பொறுப்பேற்ற போது கூட "உள்ளபடியே இந்த அமைச்சர் பதவி மூலம் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய அதிகாரம் இல்லையே" என்ற ஏக்கத்தையே அவர் வெளிப்படுத்தினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது கூட, தமக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் யார் வழிநடத்த வேண்டும் என்று அண்ணா வெளிப்படையாக யாரையும் கைகாட்டவில்லை. இயக்கம் ஜனநாயக முறையில் முடிவு செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். தனது குடும்ப உறுப்பினர்களை, ஆட்சியிலேயோ கட்சியிலேயோ முன்னிறுத்தவும் அவர் முயலவில்லை.

திமுகவின் தலைமைப் பொறுப்பில் அண்ணா இருந்த போது அவரே சில பத்திரிகைகளை நடத்தினார். ஆனால், இதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை என்று எதையும் அறிவிக்கவில்லை. கட்சியில் முன்னணியிலிருந்த பல தலைவர்களும் தனித்தனியாக பத்திரிகைகளை நடத்தி வந்தனர். இந்தப் பத்திரிகைகளின் பெயர்களை அடுக்கியே கண்ணதாசன் சிவகங்கைச் சீமை படத்தில் "தீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது" என்ற பாடலை எழுதியிருப்பார். தான் நடத்திய பத்திரிகைக்கு மட்டுமின்றி, கட்சியினர் நடத்திய பல பத்திரிகைகளிலும் அண்ணாவின் எழுத்தோவியங்கள் வெளிவந்தன. "எனக்கென்று எந்த தனி ஆற்றலும் இல்லை; என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டு சக்தியின் உரிமையாளன் நான்" என்று தன்னடக்கத்தோடு கூறிக் கொண்ட தகைமையாளர் அவர்.

அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காங்கிரசாரால் நிராகரிக்கப்பட்டு வந்த கோரிக்கையான சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் செய்ததும் அண்ணா ஆட்சிக் காலத்தில்தான். அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் எதுவும்இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டார் அண்ணா. ஆனால், இன்றுவரை அந்த உத்தரவு முழுமையாக அமலாகவில்லை என்பது மட்டுமல்ல, அரசு அலுவலக வளாகங்களிலேயே கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது என்று வளர்ந்திருக்கிறது.

அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த சொற்பொழிவார் என்று கூறுவது பாலின் நிறம் வெண்மை என்று கூறுவதுபோலதான். முதன்முதலாக தமிழ்நாட்டில் கட்டணம் செலுத்தி மக்கள் பேச்சைக் கேட்டது அண்ணாவின் பேச்சைத்தான்.

தீபாவளி பண்டிகைக்கு மாற்றாக பொங்கல் விழாவை தமிழர்களின் பண்பாட்டுப் பண்டிகையாக மாற்றியதில் அண்ணாவுக்கு பெரும் பங்கு உண்டு. அரசியலில் பண்பாட்டுத்தளத்தின் தாக்கத்தை மிகச் சரியாக உணர்ந்திருந்தார் அவர். அவரைத் தொடர்ந்து கலைஞர், எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற பலரும் திமுகவின் கருத்துக்களை திரைப்படத்தின் வழியாக மக்களிடம் கொண்டு சென்றனர்.

திராவிட இயக்கம் தமிழ் இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்ற மலிமான குற்றச்சாட்டை இப்போதும் கூட சிலர் முன்வைக்கின்றனர். அந்த இயக்கம் உருவாக்கிய பிராமண எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதைக் கருத்துக்கள் சார்ந்த உள்ளடக்கத்தின் பாற்பட்ட எதிர்ப்பே அது. அண்ணாவின், 'செவ்வாழை'த் தமிழின் சிறந்த சிறுகதைப் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும்.

வடமொழிக் கலப்பு மிகுந்திருந்த தமிழ்நடையை மாற்றி, தமிழ்ச் சொற்களைத் தென்றலாகவும், தீயாகவும் பயன்படுத்தும் கலையைஅண்ணா துவக்கிவைத்தார். அவருடைய நகைச்சுவைக்கு பல உதாரணங்களை கூற முடியும். அனல் பறக்கும் அரசியல் விவாதங்களைக் கூட தனது நகைச்சுவையால் திசை திருப்பி விடுவார் அண்ணா. தமிழகத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய சி.சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு டில்லிக்கு சென்றார். அப்போது சட்டமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஒருவர் சி.எஸ்-ஐ இயேசுவோடு ஒப்பிட்டுப் பேசினார். அதற்கு அவர் "சிலுவையில் அறையாமல் இருந்தால் சரி" என்றார். உடனே அண்ணா எழுந்து "இயேசுநாதரை காட்டிக் கொடுத்தது அவருடைய சீடர்தான்" என்றார். அவையில் சிரிப்பொலி எழுந்தது. காங்கிரஸ் கோஷ்டிப் பூசலும் சேர்ந்து சிரித்தது.

எதிர்க்கட்சி வரிசையில் திமுக இருந்த போது, திமுக ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இயங்கவில்லை என்று ஆளுங்கட்சியான காங்கிரசார் சட்டமன்றத்தில் குறை கூறினர். இதற்கு பதிலளித்த அண்ணா, "கவலைப்படாதீர்கள் அந்தக் குறையை நீங்களே நீக்கிவிடுவீர்கள்" என்றார். 1967ல் அது உண்மையானது மட்டுமின்றி, காங்கிரஸ் பல சமயங்களில் பிரதான எதிர்க்கட்சியாகக் கூடச் செயல்பட முடியவில்லை.

நீதிக் கட்சியின் வகுப்புவாரி பிரதித்துவக் கோரிக்கையை மிகச் சரியாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்வாங்கிக் கொண்டாலும் உள்ளடக்கத்தில் அது பிற்படுத்தப்பட்டோரின் இயக்கமாகவே வடிவமைக்கப்பட்டது. அண்ணா பொறுப்பேற்ற சில காலத்திலேயே நடந்த வெண்மணிக் கொடுமை துவங்கி, இப்போது நடந்து வரும் உத்தப்புரம் நிகழ்வுகள் வரை அந்தக் கட்சியிடம் காணப்படும் தடுமாற்றத்தின் பின்னணி இதுதான். அடித்தட்டு தலித் மக்களின் கோரிக்கைகள் குறித்து கவலைப்படுவதாக காட்டிக் கொண்டாலும், அடிப்படையான ஜாதி ஒழிப்புக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்து அந்த இயக்கம் போதிய அக்கறை செலுத்துவதில்லை.

வர்க்கத்தையும் வர்ணத்தையும் பிரித்துப் பார்ப்பதிலும், அது இரண்டும் விலகியும் ஒட்டியும் நிற்பதை புரிந்து கொள்வதிலும், திமுகவுக்கு ஆரம்பக் காலத்திலிருந்தே குழப்பம் உண்டு. அண்ணாவின் எழுத்துக்களிலும் கூட இது வெளிப்படுவதை காண முடியும்.

பெரியாரின் பல்வேறு கருத்தோட்டங்களை அண்ணா உள்வாங்கிக் கொண்ட போதும், பெண்ணுரிமை, பெண் விடுதலை விஷயத்தில் பெரியாரை அண்ணா அப்படியே பின்பற்றியதாகக் கூற முடியாது. அதன் தொடர்ச்சி இன்று வரை தொடர்கிறது.

தன்னுடைய இயக்கத்தை ஜனநாயகப்பூர்வமாக நடத்துவதில் மட்டுமின்றி இயக்கத்தின் தளபதிகளாக சாமானியர்களையே அண்ணா முன்னிறுத்தினார் என்பது இன்றைக்கு நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும். அன்றைக்கு அவருடைய கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் சீமான்களோ, கோமான்களோ அல்ல. மாறாக, எளிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்தான். ஆனால், இன்றைக்கு தேர்தல் நேர்காணலின்போது எத்தனை கோடி செலவிட முடியும் என்ற கேள்வி பிரதான கேள்வியாக மாறியுள்ள நிலையில், தேர்தல் என்றாலே காந்தி படம் போட்ட நோட்டு முதல் மட்டன் பிரியாணி, மது விருந்து என்று அணிவகுக்கத் துவங்கியுள்ள நிலையில் அண்ணா காலத்தில் அந்தக் கட்சி தேர்தலை சந்தித்த விதம் பழங்கதையாக மாறிவருகிறது.

அண்ணாவின் நூற்றாண்டு ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. தேசியக் கட்சியாக வளர்ந்து வருகிறோம் என்று அவருடைய வழி வந்தவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், மாநில உரிமை, மாநில சுயாட்சி என்பதெல்லாம் கைகழுவப்படும் வேடிக்கையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மாநில சுயாட்சி கோரிக்கை கூட அண்ணாவை நினைவு கூரும்போது சேர்த்து நினைவு கூர வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.

அரசியல் அரங்கில் மட்டுமின்றி பண்பாட்டு அரங்கில் பணியாற்றுபவர்களும் அண்ணாவின் வியூகங்களை, சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை புரிந்து உள்வாங்கிக் கொள்வது அவசியமாகும்.

- மதுக்கூர் இராமலிங்கம் 

Pin It