Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

இணைய உலகத்தில் ஒரு முக்கியமான வளர்ச்சி வலைப்பூ. வலைப்பூக்களில் வம்பில்லாத, மேலோட்ட மான எழுத்துக்களும் ரசனைவெளிப்பாடுகளும் பொதுவான மனிதநேயச் சிந்தனைகளுமே நிறைய இருக்கின்றன. அவற்றைத் தாண்டி கூர்மை யான அரசியல் விமர்சனங்களோ, சமுதாய விவாதங்களோ வருவது குறைவு. அவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் நவீன மனுவாதிகளும், நடைமுறை அரசியலில் கால் வைக்காத தீவிரவாதக் கருத்தாளர்களும்தான்.

இடதுசாரிக் கண்ணோட்டத்தைகுறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் கண்ணோட்டத்தை வலைப்பூ வடிவில் கொண்டு செல்வதை ஒரு கடமையாகவே செய்தவர் கேஎஸ்பி என்றழைக்கப்பட்ட தோழர் கே. செல்வ பெருமாள். அவரது சந்திப்புஎன்ற வலைப்பூவைத் திறந்தால் உள்ளூர்ப்பிரச்சனைகள் முதல் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்குகள் வரையில் காணலாம். தேர்தல் முடிவுகள் பற்றிய அலசல், அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டில் அடகுவைக்கப்பட்ட இந்திய சுய மரியாதை, போராளிகளின் கதைகள், புத்த கத் திறனாய்வுகள் என்று பல தளங்களில் அவர் தம் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.

தீக்கதிர்அலுவலகத்தில் ஒரு கணினி தட்டச்சு ஊழியராக இணைந்து, பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் பணியாற்றச் சென்றவர் தோழர் கேஎஸ்பி. தாம் குடியிருந்த பகுதியில் கட்சிப் பணிகளிலும் வாலிபர் சங்க வளர்ச்சியிலும் பங்களித்தவர். அவரிடம் இத்தனை கூர்மையான வாதத்திறனா, இயக்கத்திற்காக நவீன ஆயுதம் சுழற்றும் வல்லமையா என்று வியக்கவைத்தவர்.

இணையத்தில் நம்மைத் தாக்கி எத்தனையோ அபத்தங்களும் அவதூறுகளும் வருகின்றன. கணினி கையாளத்தெரிந்த நம் தோழர்கள் அவற்றுக்கு பதி லளிக்க முன்வரவேண்டும். புதிய விவாதங்களையும் தொடங்க வேண்டும். அதிலே ஒரு சிறு முயற்சிதான் என்னுடைய வலைப்பூ,” என்று எங்களது ரயில் பயண சந்திப்பு ஒன்றின்போது கூறினார் கேஎஸ்பி.

மார்க்சிஸ்ட்டுகளைத் தாக்குவதில் பொய்களை மட்டுமல்லாமல், அநாகரிகத்தையும் கைக்கொள்ளத் தயங்காத சில அதிதீவிரவாதிகளை அவர் சந்திப்புவழியாக, அவர்களது மொழிநடையிலேயே ஒரு முறை சந்தித்தார். பின்னர் தன் வழக்கமான நடைக்கு மாறிய அவர், “நம்மாலும் அப்படி எழுத முடியும் என்று காட்டுவதற் காகத்தான் அவர்கள் பயன்படுத்துவது போன்ற சொற்களை நானும் கையாண்டேன். மற்றபடி அதைத் தொடர்வது என் நோக்கமல்ல,” என்று என்னிடம் கூறினார்.

பல தோழர்கள் (நான் உட்பட) தங்களது சொந்த வலைப்பதிவு தொடங்க அவர் ஒரு தூண்டுதலாக இருந்தார். அதைத் தொடங்குவதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி அதை நடத்த வேண்டும், எப்படி படங்களை இணைக்க வேண்டும், எப்படி உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆர்வத்தோடு சொல்லிக்கொடுத்தார். வலைப்பதிவுக் கட்டுரைகள் மிக நீளமாக இருக்கக் கூடாது, ஒவ்வொரு பத்திக்கும் இடையே நல்ல இடைவெளி விட வேண்டும் என்பதையெல்லாம் கூட எடுத்துக்கூறினார்.

கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய விரும்பிய தோழர்களுக்கு அவரது மற்றொரு முக்கியமான கொடை, தமிழ் எழுத்துருவைக் கையாள்வதற்கான ஒரு மென் பொருளை வழங்கியதாகும். உலகளாவிய சுதந்திரக் கணினி இயக்கத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த மென்பொருளை அவரே உருவாக்கி, பயன்படுத்தக்கூடிய தோழர்களுக்கு அதனை எவ்விதக் கட்டணமும் இல்லாமல் வழங்கினார்.

மற்ற ஏடுகளில் வெளியாகும் கட்டுரைகளுக்கு எதிர்வினையாற்றச் சொல்வது, தானே எதிர்வினை யாற்றுவது, என்னுடைய கட்டுரைகளைப் படித்து விட்டு உடனடியாகக் கருத்துக்கூறுவது என்று இயங்கிய அந்தத் தோழனுக்கு 41 வயதில் நேர்ந்த முடிவு இயற்கையின் அநீதி. குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தோழர்கள் ஒவ்வொரு வருக்கும் தாங்க முடியாத இழப்பு. மார்க்சிய சிந்தனைகளை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து விரியும் வலைப்பூக்கள் அவரது பங்களிப்பின் மணத்தைப் பரப்பிக்கொண்டே இருக்கும்.

-அ.குமரேசன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 vimalavidya 2010-03-01 02:39
K.S.Selvaperuma l was a great writer. vey active worker of the CPI-M.

His immediate reactions rejoinder was very accurate one. His life ended sad within 41 years.. he will be remembered always when open blogs.
Report to administrator

Add comment


Security code
Refresh