பறவை ஒளிப்படக்கலை

இன்று நாம் காணும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட காட்டுயிர்களையும், அவற்றின் நடத்தையியலையும் (Behaviour) அறிவியல் ரீதியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்து கிறோம். இந்த ஆய்வுக்கு அடிப்படை ஆதாரமாக இன்றைய அறிவியல் உலகில் புகைப்படங்கள் அல்லது புகைப்படக் கலை அமைந்துள்ளது.

Bird-Book_450நாம் பார்க்கும் ஒவ்வொரு பூச்சி, விலங்கு, பறவை புகைப்படத்தின் மூலமாகவும், காணொளி (Video) மூலமாகவும் உறுதி செய்யப்படுகிறது. புதிய வகை பூச்சியோ, பறவையோ கண்டுபிடிக்கப்பட்டாலும் புகைப்படத் தின் மூலமாக உறுதி செய்யப்படுகிறது. உடலின் வண்ணங்கள், அலகு, வால், கால்களின் அமைப்பு, வித்தியாசமான உடலமைப்பு, அமர்ந்து இருக்கும் இடம் என பலவற்றை இரு கண்நோக்கி (Binocular) மூலம் பார்க்க முடிந்தாலும்கூட, புகைப்படங் களே ஆய்வுகளுக்கும், ஆதாரத்துக்கும் பயன் தரும் வகையில் இருக்கின்றன. புகைப்படக் கலை பரவலாவ தற்கு முன்பு உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு, பாடம் செய்யப்பட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில், கணினிமயமான உலகத்தில் இன்றைய இளைஞர்கள் பலர் காட்டுயிர் புகைப்படக் கலையில் விருப்பத்துடன் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழகத்தின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களாகக் கருதப்படுப வர்களில் எம்.எஸ்.மயில்வாகனன், டி.ஆர்.ஏ. அருந்தவச் செல்வன், அல்போன்ஸ் ராய், சேகர் தத்தாத்ரி, சரவணக்குமார் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். கோயம்புத்தூரை சேர்ந்த அருந்தவச்செல்வன் எழுதி, அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் வந்திருக்கும் நூல் ‘பறவை ஒளிப்படக்கலை’.

தமிழகத்தின் சிறந்த புகைப்படக் கலைஞராக அறியப்பட்டுள்ள அருந்தவச்செல்வன் தனது புகைப்பட அனுபவங்களையும், பறவைகளை புகைப்படம் எடுப்பது எப்படி என்பது பற்றியும் தனது நீண்ட அனுபவத்தின் துணையுடன் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை ‘பெஸ்ட் போட்டோ கிராபி டுடே’ (ஒளிப்படக்கலைக்கான தமிழ் மாத இதழ்) வெளியிட்டுள்ளது. விலையுயர்ந்த தாளில், முன் அட்டை முதல் பின்அட்டை வரை அழகிய பறவைகளின் வண்ணப் படங்களுடன் வெளியிடப் பட்டுள்ளது.

பறவைகளை புகைப்படம் எடுக்கும் போது பயன்படுத்த வேண்டிய ஒளிப்படக் கருவிகள் (Camera Body, Lens), பயன் படுத்தும் முறைகள், உகந்த நேரம், காலநிலை பற்றி விரிவாக நூலாசிரியர் கூறியுள்ளார். அதேநேரம் பறவைகளை பற்றிய அடிப்படை அறிமுகத்தை இன்ன மும் சிறப்பாகவும், பாமர மக்களுக்குப் புரியும் எளிய நடையிலும் சொல்லியிருக்க லாம். பறவைகளின் கூடுகளை பற்றிப் பேசும் நூலாசி ரியர், தனது அனுபவத்தையும் அதில் சேர்த்துச் சொல்லியிருந்தால், சுவாரசியமாக அமைந்திருக்கும். கடைசி பக்கத்தில் பறவை ஒளிப்படக்கலையில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது பற்றி குறிப்பிடும் ஆசிரியர் கம்புகள், கம்பிகள், மின் கம்பங்கள் போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்கிறார். இன்றைய சூழல் சீர்கெடும்போது, அதை பதிவு செய்வதும் அவசியமானதே. மனித நடவடிக்கையால் ஏரி, குளம், நீர்நிலைகள் அழிக்கப்படும்போது, அதை பதிவு செய்வதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் சார்ந்த பதிவுகளின் ஒரு பகுதியாக மாறுகிறது.

சென்னையை ஒட்டிய பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், எத்தனையோ சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பருந்து இனங்கள், வாத்து இனங்கள் உள் ளிட்ட பறவைகள் நெடிதுயர்ந்து நிற்கும் மின்கம்பங்கள், அலைபேசி கோபுரங்கள் இவற்றுக்கிடையே வாழ தகவமைத்துக் கொண்டுள்ளன.இது டார்வினின் பரிணாமத் தத்துவத்தை ஞாபகப்படுத்துகிறது. கோபுரங்கள், தந்தி கம்பங்களில் எடுத்த புகைப்படங்கள் புகைப்பட போட்டிகளில் பரிசு வெல்லாமல் போகலாம். ஆனால் அவை ஆவணமாக்கப்படும்போது மட்டுமே மனித பேராசைகளையும், தவறுகளையும் கண்டிக்கவும் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் முடியும்.

Poovulaku-2_450பெரும்பொருள் செலவில் உருவாகியுள்ள இப்புத்தகத் தின் மொழிநடையில், சரிபாதிக்கும் மேல் ஆங்கிலம் இடம் பிடித்திருப்பது கேள்வியை எழுப்புகிறது. இது நூலாசிரியரின் அறிமுகத்திலேயே தொடங்கி விடுகிறது. தமிழில் ஒரு பறவையின் பெயரை குறிப்பிட்ட பின்பு அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழ்ப்படுத்தி ஒரு முறையும், பிறகு ஆங்கிலத்தில் ஒரு முறையும் குறிப்பிட்டு, படிக்கும் வாசகரை குழப்பி, படிக்கும் ஆர்வத்தை குறைத்து விடுகிறது எழுத்து நடை. (உ.ம்) ..... ஆலா என்னும் டேர்ன்ஸ் (terns), பருத்த அலகு ஆலா என்னும் குல்ஸ், மீசை ஆலா (gulls, Wiskerd), பனிப்பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவை நோக்கி தோட்டக்கள்ளன் என்னும் இந்தியன் பிட்டா (Indianpitta), நீலத்தலை பூங்குருவி என்னும் புளு கேப்டு ராக் திரஸ் (Blue- capeed Rock Thrush), இந்தியன் புளூ ராபின் போன்ற பறவைகள் இடம்பெயர்கின்றன (பக்-56).இந்த மொழிநடை நூல் முழுக்க நீடிக்கிறது.

 மேலும் கட்டுரைகளில் சில பறவைகளின் அழகிய தமிழ்ப் பெயர்களை குறிப்பிட்டு செல்லும் நூலாசிரியர், புகைப்படங்களிலும் அதையே பின்பற்றி இருக்க வேண்டும். நினைவு தேக்க அட்டைகள் (Memory Cards) என துறை சார்ந்த கலைச்சொல்லை ஒரு சில இடங்களில் சரியாகப் பயன்படுத்தியுள்ள ஆசிரியர், பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தை தமிழ்ப் படுத்தியுள்ளது வாசிப்பில் குழப்பத்தையும், சோர்வையும் உண்டாக்குகிறது.

புகைப்படக்கலை குறித்து பேசும்போது அத்துறை தொடர்பான கலைச்சொற்கள் தமிழில் மிகவும் குறைவு என்பதை ஒப்புக் கொண்டாலும், கலைச்சொற்களை தமிழில் தேடி, பயன்படுத்தி இருந்தால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு மிகப் பெரிய பங்களிப்பை நூலாசிரியர் செய்திருக்க முடியும்.

விலை உயர்ந்த தாள், வண்ணமிகு, எழில் கொஞ்சும் அழகிய பறவைகளின் ஒளிப்படங்கள் என நல்ல அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் இருந்தாலும், ஆங்கிலம் கலந்த எழுத்து நடை, தொடர்ச்சியற்ற வார்த்தைப் பயன்பாடு, பறவைகளின் தமிழ் பெயர் இல்லாதது, எழுத்துப் பிழை போன்ற குறைகளால் படிக்கும் ஆர்வம் குறைந்து போய் விடுகிறது. நூலைப் படிக்கப் போகிறவர்களை மனதில் கொண்டு இப்புத்தகம் வந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புகைப்படக்கலை துறை சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்களைக் கண்டறிய வேண்டியது இப்போதுள்ள நிலையில் தமிழ் சூழலுக்கு அவசரமும், அவசியமும் மிகுந்தது.

நூல் பெயர்: பறவை ஒளிப்படக்கலை

ஆசிரியர்: டி. ஆர். ஏ. அருந்தவச்செல்வன்

வெளியீடு: பெஸ்ட் போட்டோகிராபி டுடே

28, ஆராட்டு ரோடு, ஒழுகினசேரி,

நாகர்கோவில் -& 629 001.

அலைபேசி: 94434 95151

விலை ரூ. 70 பக்கம்: 80

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.