“நாம் வாழும் காலத்தைப் பொறுத்தவரை, எவ்வகை யிலேனும் இலாபமீட்டுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியச் சமூக அமைப்பு முறையும், அதனோடு சேர்ந்த அரசியல் சக்திகளும் தான் மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் அளவிற்கு இயற்கையை அழிப்பதிலும், சுற்றுச்சூழல் கேடுகளை, மாசுகளை உருவாக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன” என்று இன்றைய யதார்த்த நிலையை மார்க்சிய ஆசான் கார்ல் மார்க்ஸ் தெளிவாக வரையறுத்துள்ளார். அதனடிப்படையிலேயே காட்டுயிர்கள் ஊருக்குள் வருவதை அவதானிக்க வேண்டியுள்ளது.

Elephant

 ஊட்டியில் தொட்டபெட்டா மலைச்சிகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மூன்று பேரைக் கொன்று, மக்களை அச்சுறுத்தி வந்த ஆண் புலியை, வனத்துறை, அதிரடிப்படை, காவல்துறை மூன்றும் இணைந்து சுட்டுக்கொன்று, மக்களோடு மகிழ்ந்த நிலையில் இருந்ததாக, ஊடகங்களில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செய்திகள் உண்மையெனில், இழப்பு காட்டுயிருக்கு மட்டுமல்ல, மனித சமூகத்திற்கு விடுக்கப் பட்ட கடைசி எச்சரிக்கை மணியாகவும் உள்ளது. காட்டையும் உயிரினங்களையும் பறவைகளையும் பூச்சி களையும் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி அழித்து விட்டு, மனித சமூகம் மட்டும் இப்புவியில் வாழ்ந்திட நினைக்கும் நிலையை எட்டிவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. இப்போக்கு, மனித சமூகம் தனக்குத் தானே சவக்குழியைத் தோண்டும் செயலைச் செய்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. மனிதர்களை கொல்லும் உயிரினங்களைக் கொல்வது என்பது, பொதுப்பார்வையில் சரியாகத் தோன்றினாலும், அதன் பின்னுள்ள அரசியலையும் இணைத்துக் காண வேண்டியுள்ளது.

 ஆண் புலியைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றில், கடந்த ஒரு மாதத்தில் வெளிவந்துள்ள மூன்று கட்டுரைகளில், ஆட்கொல்லி (?) புலியைச் சுட்டுக் கொன்றது நியாயம் என்று ஒரு கட்டுரையும், புலியைச் சுட்டுக் கொன்றதற்கான அரசியலையும், காட்டுயிர்களை கொல்வது தீர்வாகுமா? என்ற கேள்வியை மற்ற இரு கட்டுரைகளும் எழுப்பின. புலியை சுட்டுக் கொல்வதன் பின்புலத்தை இங்கு பேச வேண்டியது அவசியமாகிறது.

 இவ்வுலகில் வாழத் தகுதி படைத்தவன், தான் மட்டுமே (மனிதன் மட்டுமே) என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே இச்சம்பவத்தை கருதவேண்டி யுள்ளது. ஓர் உயிரினத்தைக் கொன்ற பின் வரும் குரூர மகிழ்ச்சியும், இச்சிந்தனையின் நீட்சியாகவே அமைந்துள்ளது. ஓருயிர் அமீபாவிலிருந்து பேருயிரான யானை முதலான அனைத்து காட்டுயிர்களும் வாழத் தகுதி படைத்ததாக இப்புவியின் சூழலமைவு இருப்பதுடன், மனிதன் இந்தப் பிணைப்பின் ஓர் ‘அங்கம் தான்’ என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. சங்கிலிப் பிணைப்பில் எந்தவொரு கண்ணி அறுந் தாலும், அதன் பாதிப்பு மற்றொரு இடத்தில் கடுமை யாக எதிரொலிக்கவே செய்யும். அதற்கான மௌன சாட்சிகளாக, தொட்டபெட்டாவில் சுட்டுக் கொல்லப் பட்ட ‘ஆண் புலி’யும், உணவு, தண்ணீர் தேடி ஊருக் குள் வரும் யானைகளும் இருக்கின்றன. இதுபோன்ற அசாதாரணமான சூழலில் தான் மனிதன்&விலங்கு மோதல் ஏற்படுகிறது. இதில் காட்டுயிர்களின் மேல் ஒட்டு மொத்தப் பழியையும் சுமத்திவிட்டு, முதலாளித் துவ உற்பத்தி முறைக்கு சார்பாக உள்ள ஆதிக்க சக்திகள் தப்பிக்கின்றன.

 காடுகளின் செழுமைக்குக் குறியீடாகவும், உணவுச் சங்கிலியின் உச்சத்திலுமுள்ள யானை, புலி, சிறுத்தைகள் ஊருக்குள் வருவது ஏன்? என்ற காரணத்தைத் தேடினால், இதன் பின்னாலுள்ள அரசியலை அறிந்துகொள்ளலாம். புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடி உயிரினங்கள், தங்களுக்கென சில கிலோ மீட்டர் பரப்பளவை வாழ் வெல்லைகளாக நிர்ணயித்துக்கொண்டு, அதற்குள்ளாகவே இனப்பெருக்கம், இரை தேடல் என அனைத்தையும் நிகழ்த்துகின்றன. யானைகள் தங்களுக்கென ஒரு சுற்றுப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுகின்றன. இது பேருயிர்களுக்கு மட்டுமல்ல, சிறு பூச்சி வரை அனைத்து உயிரினங்களிடமும் பரவியுள்ளது. தங்களது வாழ்வெல்லைக்குள் தங்களினத்தின் மற்ற உயிரினங்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றன. யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற பேருயிர்கள் வளமாக இருந்தால், காடும், மற்ற காட்டுயிர்களும் செழுமையாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

 இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து 1975ஆம் ஆண்டு வரை, விவசாயத்திற்காக சுமார் 24,33,000 எக்டேர் நிலப்பரப்பும், பெரிய அணைகள், நீர்நிலைகள் அமைக்க ஏறத்தாழ 4,01,000 எக்டேர் நிலப்பரப்பும், தொழிற்சாலைகளுக்கென சற்றேறக்குறைய 1,25,000 எக்டேர் நிலப்பரப்பும், சாலை, மின் ஊர்தி தடத்திற்கு சுமார் 55,000 எக்டேர் நிலப்பரப்பும், இதர பயன் பாட்டிற்காக ஏறத்தாழ 3,88,000 எக்டேர் நிலப்பரப்பு காடுகளும் அழிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 1975ஆம் ஆண்டிற்கு பிறகு நாளது தேதிவரை காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளதா என்பதை, பகுத்தறிவோடு சிந்திப்பது அவசியமாகிறது. ஒரு நாளைக்கு உலகளவில் 350 ச.கி.மீ., பரப்பளவு காடுகள் ஏதோவொரு வழியில் அழிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மனிதன்&விலங்கு மோதல் கடந்த சில பத்தாண்டுகளில் தான் அதிகரித்துள்ளது என்பதை, இதனோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தியா முழுமைக்கும் பரந்து விரிந்திருந்த காடுகள், இன்று சிறு சிறு தீவுகளாக சுருங்கிக் காணப்படுகின்றன!

 இதன் மறுபுறமாக, நூறாண்டுக்கு முன்பு வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டிருந்த புலிகள், அறுபதாயிரம், நாற்பதாயிரம் என குறைந்துக் கொண்டே வந்து, இன்று 1,700 என்ற அளவில் மிகவும் குறைந்து, அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. முதலாளித்துவத்தின் லாபமீட்டுதலுக்கு, இயற்கை வளங்களான காடுகளும், காட்டுயிர்களும் மீள முடியாத அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

 புலிகள் தங்களது இயல்பான இரையைத் தவிர, ‘ஆட்கொல்லியாக’ (மனிதரை கொல்வதற்கு) ஏன் மாறுகிறது என்பதற்கு சில விளக்கங்களை ஆங்கிலேய அதிகாரியும், வேட்டை இலக்கியத்தை துவக்கி வைத்தவர்களில் ஒருவருமான ஜிம் கார்பெட் விவரிக்கையில், ‘வேங்கைக்குத் தன்னால் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அவற்றின் நிர்ப்பந்தத்தாலேயே, அது ஆட்கொல்லியாக மாறி விடுகிறது. தன் இயல்புக்குப் புறம்பான ஓர் இரையை (மனிதரை) உண்ணத் தொடங்குகிறது.

 காயத்தாலோ, முதுமையாலோ ஆற்றலற்றுப் போகும் போது, உயிர் வாழ வேண்டுமே, அதற்காக மனிதரை உண்ணும் நிர்பந்தம் அதற்கு உண்டாகிறது. அதன் இருப்பிடத்தில் இயல்பான இரை இருக்கும் அளவு, காயத்தின் அல்லது குறைபாட்டின் தன்மை, ஆணா, குட்டிகளுடன் கூடிய பெட்டையா என்ற விவரம்’ போன்ற குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தான் புலிகள் தங்கள் இயல்புக்கு புறம்பான இரையை (மனிதர்களை) வேட்டையாடுகிறது.

 இதில் எந்த ஒரு விஷயத்தையும் தொட்டபெட்டாவில் ஆய்வு செய்தார்களா? என்பது புலப்படவில்லை. எந்தவொரு காட்டுயிரும், மனிதரைக் கொல்ல வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொள்வதில்லை. அது போலவே, சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஊருக்குள் நுழைந்து, ஒரு மாத காலத்திற்கும் மேலாக மக்களுக்கு தொல்லை (?) கொடுத்துக் கொண் டிருந்ததாக பத்திரிகைகள் மாறி, மாறி செய்திகள் வெளி யிட்டுக்கொண்டிருந்த யானைக் கூட்டத்தையும், நீண்ட போராட்டத்திற்குப் பின் மயக்க ஊசி செலுத்தியே பிடித்தனர் என்பது கவனிக்கத்தக்கது. அதுபோன்ற முன்முயற்சிகள் ஏதும் தொட்டபெட்டாவில் பின்பற்றவில்லை என்பதும் வருத்தத்திற்குரியதே.

tiger

 அந்த வகையில், புலிகள், யானைகள் பாதுகாப்பிற்கென தனித்தனி திட்டமும், பல கோடிகளும் செலவு செய்து அவற்றை காக்கும் போது, எண்ணிக்கை அதிகரித்த புலிகளும், யானைகளும் வாழத் தேவையான பரப்பளவுள்ள காடுகள் இருக்கின்றனவா? என்பதையும் அறிவியல்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

 யானைகளின் வழித்தடத்தில் சொகுசு மாளிகைகளும், கேளிக்கை விடுதிகளும், பொறியியல் கல்லூரிகளும், மதவழிபாட்டுத் தலங்களும் வந்தபின், உணவுக்கும், தண்ணீருக்கும் யானைகள் எங்கு செல்லும்? தனக்கான வாழ்வெல்லை சுருங்கும் போதும், தீவுகளாக காட்சி யளிக்கும் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி, இட நெருக்கடியானால் வயது முதிர்ந்த புலிகளும் காயம்பட்ட புலிகளும் என்ன செய்யும்? சிறுத்தை உள்ளிட்ட மற்ற காட்டுயிர்களுக்கும் இந்தப் பார்வையை விரிவுபடுத்தி பார்த்தால், காட்டுயிர்களின் வாழ்வு மிகவும் சிக்கலுக்குரியதாக மாறிவிட்ட நிலை புரியும்.

 யானையையும் புலியையும் தனித்துப் பாதுகாத்து விட முடியாது. அவற்றின் வாழிடமான காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்துவதையும் அதனுடன் இணைத்தே செயல்படுத்த வேண்டும். இவ்விரு செயல் பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்போது தான் பேருயிர்களையும், அவற்றின் வாழிடமான காடுகளைக் காப்பதையும் வெற்றிகரமாக்க முடியும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணா மலைக்குள் நுழைந்த யானைகளை பிடித்து, வெவ்வெறு காட்டுப் பகுதிக்குப் பயிற்சிக்கு (யானைக்கா அல்லது மனிதனுக்கா?) அனுப்பியது எந்தளவிற்கு தவறோ? அது போலவே ‘இயல்பான இரையற்ற’, மனிதர்களைக் கொன்ற புலியை சுட்டுக் கொன்றதும் தவறான முன்னுதாரணமாகும்.

 உணவிற்கு வழியில்லாத நிலையில், ஊருக்குள் நுழைந்து மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்த புலியை, மயக்க ஊசி மூலம் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க முயற்சிக்காமல், நேரடியாக சுட்டுக் கொன்று மகிழ்ச்சியடையும் மனநிலையை என்னவென்று சொல்வது?

 இந்த அணுகுமுறை தொடர்ந்தால், ஆண்டிற்குப் பல யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும் இறக்க நேரிடும் அபாயம் உள்ளது. காட்டிலிருந்து வெளியேறும் காட்டுயிர் களின் இன்னல் மிகுந்த நிலையை அறிவியல் பார்வை யுடன் சிந்திந்துப் பார்த்து, செயல்படுதல் அவசியம்.

 இயற்கை வளங்களை வணிக நோக்கில் பார்த்து, மண்ணையும், மக்களையும் மீளமுடியாத அழிவிற்கு கொண்டு செல்லும் போக்கைத்தான் முதலாளித்துவம் தொடர்ந்து செய்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே, மக்களையும், சூழலையும் மீட்டெடுக்கும்.

 காட்டுயிர்கள் மட்டுமின்றி, இயற்கை வளங்களின் சுரண்டல்களுக்கு போலியான ‘வளர்ச்சி’ என்ற முதலா ளித்துவ சிந்தனையே முதன்மைக் காரணமாக அமை கிறது. இதிலும், பெருநிறுவனங்களும், முதலாளிகளும், அதிகாரமிக்கவர்களும், இயற்கை வளங்களை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் சுரண்டுபவர்களாக இருக்க, பாதிக்கப் படுபவர்கள் ‘ஒடுக்கப்படும் மக்களாகவே’ இருக்கிறார்கள்.

 ‘வேங்கை பெரிய மனது படைத்த ஒரு கனவான். அது எல்லையற்ற தைரியம் உடையது. பொதுசன அபிப்பிராயம் திரண்டு அதை ஆதரிக்கவில்லையானால், அது அற்றுப் போய் விடும். அப்படி அற்றுப் போகுமா னால், இந்தியா தன்னுடைய விலங்கினங்களிலே மிக உன்னதமான ஒன்றை இழந்துவிடும் அபாயமுள்ளது” என்ற ஜிம் கார்பெட்டின் வார்த்தைகளோடு, தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுக்க வாழ்ந்திருந்த, உலகளவில் அதிவேக ஓட்டமுடைய ‘சிவிங்கிப்புலி’யை (Cheetah) ஏற்கெனவே நாம் இழந்துள்ளோம் என்பதையும் சேர்த்து கவனத்தில்கொள்வது நல்லது.

 ஊருக்குள் வரும் காட்டுயிர்களைக் கொல்வது தீர்வானால்...?

 காட்டை அழித்தவர்களையும் யானைகளின் சுற்றுப் பாதையை (Elephant Corridor) ஆக்கிரமித்தவர்களையும் என்ன செய்வது...?

 ‘புலியை சுட்டுக் கொன்ற’ நாகரிக (?) மனிதர்களிடம் என்ன பதிலை எதிர்பார்ப்பது...!

 இன்று நமக்கு வேண்டுவது, ‘நீடித்த, நிலையான வளர்ச்சி’ என்ற ஒற்றைக் கோரிக்கை மட்டுமே...!

 இதற்கு முதலாளித்துவம் என்றென்றைக்கும் உடன் படாது, ‘சமூக மாற்றமே’ உழைக்கும் மக்களை மட்டு மல்ல, சூழலையும் மீட்டெடுக்கும் என்பதை உணர்ந்து ஒன்றிணைவோம்.

 தரவு நூல்கள்:

சா.செயக்குமார், ஏ.சண்முகானந்தம், காடுகள், தடாகம் இணைய இதழ்.

ஜிம் கார்பெட், தமிழில்: தி.ஜ.ரா. குமாயுன் புலிகள் காலச்சுவடு, நவம்பர் 2009.

Pin It