சி.ஆர். பிஜாய் ஒரு சுயாதீனமான ஆய்வாளர், சிந்தனையாளர் மற்றும் சுற்றுச்சூழல், ஆதிவாசி மக்கள் ஆகிய சொல்லாடல்களில் மதிப்பிற்குரிய செயல்வீரர். 2002இல் காடுகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு பன்னாட்டு மற்றும் அதிகார வர்க்கத்தினரிடமிருந்து அதிகமான அழுத்தங்கள் ஏற்பட்ட போது களமிறங்கியவர். உயிர்வாழ்தலுக்கும் மாண்பிற்குமான பரப்புரையில் நேரடியாகப் பங்குபெற்று ஆதிவாசி மக்களின் போராட்டத்தில் தீவிர பங்காற்றியவர். 2006 வனப் பாதுகாப்புச் சட்டம் மூலம் ஆதிவாசி மக்களுக்கு நில அதிகாரத்தைப் பெற்றுத்தந்ததில் இவருக்கும் பங்கு இருக்கிறது. இந் தியக் காடுகளில் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்த சில நபர்களில் இவரும் ஒருவர். அதனாலேயே முக்கியத்துவம் பெறுகிறார்.

சென்ற மார்ச் ஏப்ரல் 2014 பூவுலகு இதழில் வெளிவந்த நேர்காணலின் தொடர்ச்சி...

இரா. முருகவேள்

தமிழில்: சங்கர்

காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து...

வடக்கின் ஆடம்பர வாழ்க்கைமுறையும் அவர்களது தனிதேசகார்பன் வெளியேற்றமும்தான் ((percapita emission), காலநிலை மாற்றப் பிரச்சனைகளுக்குக் காரணம், தெற்கு அதற்கு ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது, என்பதுதான் இந்தியாவின் ஆரம்பகால நிலைப்பாடாக இருந்தது. ஆகையால், தீர்வுகாண் பேச்சுவார்த்தை, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப் பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான திட்டவட்டமான எண்ணிக்கை, அவற்றைச் சாதிப்பதற்கான குறைந்தபட்ச கால அளவு, கொள்கைகள், செயல்முறைகள் உள்ளிட் டவற்றில், வளர்ச்சியடைந்த நாடுகளின் தீர்மானகரமான உறுதியளிப்பை நோக்கி முன்னேற வேண்டும். மேலும், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிடம் புது உறுதி மொழிகளைக் கோரக்கூடாது. தட்பவெட்பநிலை மாற்றத்திற்கான, இந்திய அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களும், தேசத்தின் கார்பன் வணிகம் மற்றும் அதன் காரணமாய் வளர்ந்து வரக்கூடிய காலநிலை வணிகத்தையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை.

cr bijoyஇந்திய முதலாளிகளிடம் இது மிகுந்த வரவேற்பையும் பெற்றிருந்தது. ‘பாலியில் நடந்த கூட்டத்தில், REDD PLUS (Reduction of Emission from Deforestation and Degradation) பற்றியும் ஏற்கனவே இருக்கிற காடுகளைப் பாதுகாக்க அந்தந்த தேச அளவில் ஒரு பொறியமைவை ஏற்படுத்தி அதன் மூலம் ஊக்கமும் ஆக்கமும் தருவது தொடர்பாகவும் விவாதிப்பதில் இந்தியா முன்னணிப் பங்குவகித்தது. இதில் ஒருபடி மேலே போய், காடுகள் அழிப்பைக் கட்டுப்படுத்தவும், காடுகளைப் பாதுகாக்க வும் மற்றும் இவற்றைத் தொடர்ந்து தக்க வைக்கக்கூடிய காட்டுமேலாண்மையை, REDD விவாதத்திற்குள் கொண்டுவருவதை முன்மொழிந்தது. இவற்றுக்கு, நிதி வெகுமதிகள் அளிக்கப்படவேண்டும் என்றும் விவாதித்தது.

வளர்ச்சியடைந்த நாடுகள், கார்பன் வெளியேற்றக் குறைப்பு சம்பந்தமான தங்கள் இலக்குகளை, ஒருபோதும் எட்டப் போவதில்லை என்பதும் அதை அசட்டை செய்யப்போகிறதென்பதும் (புறக்கணிக்கப் போவது) தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருந்தபோதிலும், காலநிலை ஒப்பந்தத்திற்கான எவ்விதப் பேச்சுவார்த்தைக் கும்தான் உட்படப் போவதில்லை என்று இந்தியா தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது. டர்பன் கூட்டத்தில், வறுமை ஒழிப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கிய ‘சமத்துவம்’ தான் அடிப்படைப் பிரச்சனை என்பதை இந்தியா, மீண்டும் முன்வைத்தது. தனிதேச கார்பன் வெளியேற்ற அளவு (per capita emission) இந்தியா போன்ற நாடுகளில் மிகக்குறைவு என்பதால், இவர்கள், கார்பன் வெளியேற்றக் குறைப்பை சட்டப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும்.

வளர்ச்சியடந்த நாடுகளிடமிருந்து நிதியாதாரங்கள் பெற்று, ‘பசுமைச் சூழல் நிதியம்’ ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. விதியின் கோரத்தை என்ன வென்று சொல்வது? புது ஒப்பந்தம் எதையும் ஏற்க மாட்டோம் என்று அதுவரை சொல்லி வந்த இந்தியா. அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தும் இலக்குகள் மற்றும் ‘பசுமைச் சூழல் நிதியம்’ ஏற்படுத்தப்படுவதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டது. தற்போதைய கார்பன் வணிகம் தொடர்ந்து நீடிக்கும் என்பதும் சட்ட நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தும் புது ஒப்பந்தம் ஏற்பட்டால், (அந்நிய) முதலீடுகளுக்கான முதன்மைத் தலமாக இந்தியா இருக்கும் என்பதும்தான் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு (பேரம்பேசும் குழு) முக்கியமாகத் தோன்றியது. ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்புடன், தேசிய செயல் திட்டத்தின் கீழ், ‘பசுமை இந்தியாவிற்கான தேசம் தழுவிய இயக்கம்’ ஒன்றை இந்தியா முன்னரே அறிவித்திருந்தது.

இயற்கை வளங்களை சனநாயகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவரும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும். எனவே, சுற்றுப்புறச் சூழல் பிரச்சனைகள், சாராம்சத்தில், சனநாயகம் மற்றும் சனநாயகப்படுத்துதலின் பிரச்சனைகள்.

‘மனிதரில்லாக் காடுகள்’ என்ற கருத்தாக்கம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

‘மனிதரில்லாக் காடுகள்’ என்பது ஒரு கட்டுக்கதை; அல்லது ஒரு முழுப் பொய். இந்த காடுகளையெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டு போய், மனிதரே இல்லாத கிரகத்தில் நட்டுவைத்தாலொழிய இது சாத்தியமே இல்லை. சமீபத்திய வருங்காலத்தில் கூட, அப்படி யோசிப்பதற்கான சாத்தியமேயில்லை. வனங்களுடனும், வனங்களில் உள்ள எல்லாவற்றுடனும் சேர்ந்துதான் மனிதர்களும் வசிக்கிறார்கள். ‘மனிதரில்லாக் காடுகள்’ என்ற உணர்வு, மேட்டுக்குடி உணர்வு என்பது மட்டுமல்ல, அதன் வேர்கள் காலனி ஆதிக்கத்தில் இருந்து வருகிறது என்பதும் தெளிவு. ஏனெனில் காலனியாதிக்கம், எப்போதும் காலனி மக்களை பிரச்சனைகளாகவும், காலனியாதிக்கம் செலுத்துபவனை, பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவனாகவும் பார்க்கிறது. இனி மேலும், இது விஞ்ஞானப்பூர்வமாய் செல்லத்தக்கதென்று, பாதுகாப்பு விஞ்ஞானத்தில் கருதப்படமாட்டாது.,

அணைகள் மற்றும் சுரங்கங்களால் ஏற்படும் சூழலியல் சிக்கல் குறித்தும் மாற்றுவழி முயற்சிகள் குறித்தும் உங்கள் கருத்து என்ன?

தொழில்நுட்பம் மற்றும் சமூக ரீதியாக ஏற்புடைய, அக்கரைசார்ந்த மாற்றுத் திட்டங்களை/மாற்று ஏற்பாடுகளை (alternative) கட்டமைப்பதாகச் சொல்வது மிகவும் பிழையானது. மாற்றுத் திட்டங்கள்/மாற்று ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் அதற்கே உரித்தான வரை யறைகளையும், பிரச்சனைகளையும் கொண்டுள்ளன. மேலும், அவைகள் தத்தம் சூழலால் எல்லையிடப்பட்டவையும்கூட. எடுத்துக்காட்டாக, பெரிய அணைகள், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் பேரழிவு மற்றும் அங்கு வாழும் மனிதர்களைப் பெருமளவில் இடப் பெயர்ச்சி செய்கிறது என்பதற்காக எதிர்க்கப்படுகிற தென்றால், புனல்மின்சார அணைகளின் தொகுதிகளை ஒன்று சேர்த்தால், அவையும் அதே விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைதான். காற்றாலை மின்சாரம் கார்பன்- டை- ஆக்சைடை வெளியேற்றாது என்பது உண்மைதான்.

ஆனால் அதற்கு மிகப்பெரிய நிலப்பரப்பு (ஒரு டர்பைனுக்கு 3.5 ஏக்கர் நிலம்) தேவைப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே மற்றைய காலங்களில், கூடுதல் மாற்று ஏற்பாடுகளின் உதவி தேவை. சூரிய மின்சாரமோ, மிகுந்த பொருட்செலவிலானது; அதன் பொருளாதாரச் சாத்தியப்பாடும் கேள்விக் குரியதுதான்.

 உண்மையில் காற்றாலை, சூரிய மின்சாரம் இரண்டுமேமைய நீரோட்ட மின்துறையின் ஒரு பகுதியே தவிர மாற்றுத் திட்டங்களைச் சேர்ந்ததில்லை. அதுபோலவே, இயற்கை விவசாயமும் மைய நீரோட்ட வேளாண் வணிகத்தின் ஒரு பகுதிதான். எனவே, உண்மையில் மாற்று என்பது, உற்பத்தியைக் கட்டுப்படுத்துபவர் எவர்? என்ன நோக்கத்திற்காக (சமூக நோக்கமா அல்லது லாப நோக்கமா) அதைச் செய்கிறார் போன்ற மிக முக்கியமான கேள்விகளை உள்ளடக்கியது. மாற்றுத் திட்டங்கள் பற்றிய இந்த கருத்துக்கள், ’80களிலும் 90களிலும் விவாதிக்கப்பட்டது. மாற்றுத் திட்டங்களில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அதைப் பற்றிய விவாதம் அனேகமாகக் கைவிடப்பட்டது.

இயற்கை வளங்களை சனநாயகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவரும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும். எனவே, சுற்றுப்புறச் சூழல் பிரச்சனைகள், சாராம்சத்தில், சனநாயகம் மற்றும் சனநாயகப்படுத்துதலின் பிரச்சனைகள். ஆகவே, வழமையான ‘கலப்பற்ற பசுமை இயக்கம்’ என்ற கருத்தாக்கம், அதிலிருந்து விடுபட்டு இப்போது, சமூகத்தை மையப்படுத்துகிற பாதுகாப்பு விஞ்ஞானம் என்ற கருதுகோளிற்கு வந்திருக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு என்பது இயற்கையைச் சுற்றி வளைத்து அதிகாரம் செலுத்துவதாகாது; மாறாக, அதன் பயன்பாட்டைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான பாதுகாப்பு என்பதேயாகும்.

Pin It