“உணவை ஆயுதமாகப் பயன்படுத்த முடியுமெனில் அதை மகிழ்ச்சியுடன் செய்வோம்!” -ஏர்ல் பட்ஸ், அமெரிக்காவின் முன்னாள் வேளாண்துறை அமைச்சர்

இந்தியாவின் முதன்மையான உணவுப்பொருளான நெல்லில் தற்போது எத்தனை வகைகள் இருக்கின்றன தெரியுமா? என்று ஒரு தற்கால விவசாயியிடமோ, நெல் மண்டிக்காரரிடமோ விசாரித்தால் அதிகபட்சமாக சுமார் 100 நெல்வகைகளை பட்டியலிடக் கூடும்.

biodiversityஆனால் இந்தியாவில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் நெல் வகைகள் இருந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. விளையும் பகுதியின் மண்வளம், தட்பவெப்ப நிலை உள்ளிட்ட காரணி­களுக்கேற்ப இயற்கையில் உருவான இத்தனை நெல் வகைகளையும் நமது முன்னோர்கள் அடையாளம்கண்டு பட்டியலிட்டு, பாதுகாத்து, பயன்படுத்தி வந்துள்ளனர். இவை அனைத் தும் எங்கே சென்றன?

அரிசி உணவுக்குத் தொடர்பே இல்லாத அமெரிக்க பெருமுதலாளிகள் இணைந்து 1960ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் ஆரம்பித்த பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையத்தின் சதித்திட்டம் காரணமாகவே நமது பாரம் பரிய நெல்ரகங்கள் திட்டமிட்டு திருடப்பட்டு, அழிக்கப் பட்டு உயர் விளைச்சல் ரகங்கள் என்ற பெயரில் தரமில்லாத நெற்பயிர்கள் இங்கே இறக்குமதி செய்யப் பட்டதாகவும், இதில் வேளாண் நிபுணர் என்று போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் முக்கிய பங்காற்றியதாகவும் கோவாவைச் சேர்ந்த பிரபல சூழலியல் ஆர்வலர் கிளாட் ஆல்வாரிஸ் ‘A Great Gene Robbery” என்ற கட்டுரையில் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பால்லியா மாவட்டத்தில் பல்லாண்டுகாலமாக பயிரிடப்பட்டு வரும் பார்லி (வால் கோதுமை) பயிருக்கு ஜப்பானில் உள்ள சப்போரா என்ற மதுபான ஆலை பேடன்ட் உரிமை பெற்றுள்ளது.

பார்லி என்ற சிறுதானியம் வட இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாகும். புரதச்சத்தும், மேலும் பல சத்துகளும் மிகுந்த பார்லி தமிழ்நாட்டிலும்கூட பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக பால்லியா மாவட்டத்தில் பயிர் செய்யப் படும் பார்லி பல சிறப்புத்தன்மைகளைக் கொண்டதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த பார்லியில் லிபோசைனேஸ்1 என்ற என்ஸைம் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த பார்லியில் தயா ரிக்கப்படும் பீர் எனப்படும் மதுபானம் நீண்ட நாட் களுக்கு புதுப்பொலிவோடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் தேசியப் பல்கலைக்கழகமான ஓகயாமா பல்கலைக்கழகத்தின் விதை வங்கியில் இந்த பார்லி விதைகளைக் கண்ட சப்போரா நிறுவனம் இதற்கு பேடன்ட் உரிமை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த சப்போரா மதுபான நிறுவனம், பன்னாட்டு விதை நிறுவனமான கார்கில் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தரப் பிர தேசம், பால்லியா மாவட்டத்தில் பயிரிடப்பட்டுவந்த பார்லி பயிருக்கு, ஜப்பான் நாட்டின் சப்போரா நிறுவனம் பேடன்ட் உரிமை பெற்றதில் பால்லியா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நற்பயனும் ஏற்பட வில்லை. அதற்குப் பதிலாக இனி இப்பகுதி விவசாயிகள் அந்த பார்லி பயிரைப் பயிரிடுவதற்கு சப்போரா நிறுவனத்திற்கு ராயல்டி செலுத்தும் நிலை ஏற்படலாம்.

இது ஒரு சிறிய உதாரணம்தான்! இதைப்போல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறப்பியல்பு வாய்ந்த பல்வேறு பல்லுயிர் இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் “அறிவுசார் சொத்து” உரிமையாகின்றன.

1994ம் ஆண்டில் வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைக்கான பன்னாட்டு ஒப்பந்தம் [[Agreement on Trade Related Aspects of Intellectual Property Rights (TRIPS)])] கையெழுத்தானதைத் தொடர்ந்து உலக வர்த்தகத்தின் போக்கே திசை மாறியது. இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் எவ்விதமான விவாதமும் நடத்தப்படாமலே, யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்கப் படாமலே இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது..! (இந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் நாம் அனைவரும் கடமை உணர்வுடன் வரிசையில் நின்று வாக்களித்து நம் விரலை கறைப்படுத்திக் கொண்டுள்ளோம்.)

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டக்கோட்பாடு களுக்கு எதிரான பல அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை தேவையான அளவில் எத்தரப்பிலும் விவாதங்கள் நடைபெறவில்லை என்பதே உண்மை.

இந்தியாவில் நடைமுறையில் இருந்த பல மனித உரிமைக்கூறுகளை இந்த ஒப்பந்தம் கேள்விக் குறியாக்கு கிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங் களைத் தனியார்மயமாக்கி அதற்கான விலை கொடுப்ப வர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குகிறது. ஆனால் இது குறித்த எந்த விமரிசனங்களும் நடத்தாமல் ஆண்டுதோறும் ஏப்ரல் 26ம் தேதியன்று அறிவுசார் சொத்துரிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த அறிவுசார்சொத்துரிமை என்ற கருத்தாக்கம் வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளை தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது என்றே சொல்லலாம்.

அறிவுசார்சொத்துரிமையின் ஒரு மிகமுக்கியமான பிரிவு பேடன்ட் என்று அழைக்கப்படும் புத்தாக்க உரிமையாகும். புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய கண்டு பிடிப்பை நிகழ்த்தும் ஒருவருக்கு அதற்கான அங்கீகா ரத்தையும், பொருளியல் ரீதியான பலனையும் கொடுப் பதன் மூலம் மென்மேலும் கண்டுபிடிப்புகள் நிகழும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பேடன்ட் உரிமை உருவாக்கப்பட்டது.

இயற்கையில் உருவாகாத, புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய பொருளை அதற்கான பயன்பாட்டுடன் கண்டு பிடிக்கும் ஒருவருக்கு இந்த பேடன்ட் உரிமை வழங்கப் படுவதாக நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் இயற்கையில் உருவாகும் தாவர வகைகளுக்கோ, விலங்குகளுக்கோ, அவற்றின் உறுப்புகளுக்கோ பேடன்ட் உரிமை வழங்கக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது.

எனினும் பெரும் வர்த்தகக் கழகங்களின் நிர்ப்பந்தங் களால் இந்தத் தடையில் ஆங்காங்கே ஓட்டைகள் உரு வாக்கப்பட்டன. இதன்படி தாவர, விலங்குகளின் அணு ((Cell))க்களில் மனிதத்தலையீடு மூலம் மாற்றம் இருந்தால் அந்த குறிப்பிட்ட அணுக்களுக்கு பேடன்ட் உரிமை வழங்கலாம் என்று விதிமுறை கள் தளர்த்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து தாவர, விலங்குகளின் மரபணுக் களில் மனிதத் தலையீடு மூலமாக மாற்றம் செய்யும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு பேடன்ட் வழங்கும் முறை அமலுக்கு வந்தது. இதை ஆயுதமாகப் பயன்படுத்தும் மான் சான்டோ உள்ளிட்ட பல பன் னாட்டு வணிக நிறுவனங்கள் உலகில் உள்ள அனைத்து தாவரங்களையும், விலங்குகளையும் தம் அறிவுசார் சொத்துரிமை என்று பதிவு செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. இந்தியா உள் ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள பாரம்பரியத் தாவர வகைகளை ஏதோ ஒரு விதத்தில் தமது அறிவு சார் சொத்துரிமையாக பதிவுசெய்து, அவற்றின் உண்மை யான உரிமையாளர்களான விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்பாட்டிலும் அந்த நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

பேடன்ட் என்ற பெயரில் பெரும் வர்த்தகக் கழகங்கள் உலகில் உள்ள அனைத்துத் தாவர, விலங்குகளையும் தமதாக்கிக் கொள்ளும் சதித்திட்டத்தை உணர்ந்த பல தரப்பினரும் மேற்கொண்ட போராட்டத்தைத் தொடர்ந்து விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் சில சட்டங்களை உலக வர்த்தகக் கழகம் அறிமுகம் செய்தது.

இத்தகைய ஒரு சட்டம் இந்தியாவில் அமல் செய்யப் படும் விதத்தைப் பார்ப்போம்.

கடந்த 2002ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டம், பல்லுயிரியச் சட்டம், 2002 ((The Biological Diversity Act, 2002)) ஆகும். இந்தியாவின் வளங்களில் ஒன்றான பல்வகைப்பட்ட தாவர, விலங்கு உயிரினங்களையும் இவற்றைப் போற்றி பாதுகாத்து வரும் பாரம்பரிய அனுபவம் மற்றும் நவீன அறிவியல் அறிவு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக இந்தச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களோ, வேறு அமைப்புகளோ வணிகரீதியில் பயன்படுத்தும்போது பன்னெடுங்காலமாக இவற்றைப் போற்றி பாதுகாத்த மக்களுக்கு உரிய பொருளாதாரப் பலனை அளிப்பதற்கு ((Benefit sharing)) வழிகாணும் நோக்கமும் இந்த சட்டத் தின் முக்கிய அம்சம் என்று இச்சட்ட முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் தேசிய பல்லுயிரிய ஆணையம் அமைத்தல், மாநில பல்லுயிரிய ஆணையங்களை அமைத்தல் இவற்றின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து அளவிலும் பல்லுயிரிய மேலாண்மைக் குழுக்களை ((Bio-Diversity Management Committee)) அமைத்தல், இக்குழுக்களின் மூலம் மக்கள் பல்லுயிரியப் பதிவேடு (People’s Bio-Diversity Register) உருவாக்கி பராமரித்தல் உள்ளிட்டவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவதே பல்லுயிரியச் சட்டம், 2002இன் நோக்கமாகும்.

இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய தாவரங் களையோ, விலங்குகளையோ பன்னாட்டு வணிக நிறுவனங்கள் எந்த வகையிலும் களவாடி பேடன்ட் உரிமையைத் தடுப்பதே இந்த சட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தேசிய பல்லுயிரிய நிறுவனம் சென்னையில்தான் இயங்குகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மாநில பல்லுயிரிய ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாடுகள்தான் பெருமளவில் கேள்விக்குரியதாக உள்ளது.

பல்லுயிரியப் பாதுகாப்புக்கான அடிப்படை அலகு உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கும் பல்லுயிரிய பாதுகாப்புக் குழுவாகும். பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் உரிய கட்டாய இடஒதுக்கீட்டை அளிக்கும் இந்தக் குழுவின் முக்கியமான பணி, மக்களுடைய பல்லுயிரிய பதிவேடு ((People’s Bio-Diversity

Register)) உருவாக்கி பராமரித்தல் ஆகும். அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்களோ, அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவின் பாரம்பரியச் செல்வங்களான தாவர வகையையோ, விலங்கு வகையையோ எவ்விதத்தில் பதிவு செய்தாலும் அதைக் கண்டறிந்து தடுக்க முடியும்.

இந்தியாவின் பாரம்பரிய உரிமையான தாவரங் களையோ, விலங்குகளையோ வணிக நோக்கில் பயன் படுத்த வேண்டிய அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் லாபத்தில் அந்த அரிய வகை உயிரி னத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் சமூக மக்களுக்கும் உரிய பங்கை பெறுவதற்காகவே ((Benefit sharing) இத்தகைய மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s Bio- Diversity Register)) பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவின் இயற்கை, பல்லுயிரிய வளங்களைப் பாதுகாப்பதற்காகக் கடந்த 2002ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்ட சட்டம், சுமார் 12 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதை அரசு அமைப்புகளின் தோல்வியாகக்கூட கருதலாம்.

இந்த பல்லுயிரிய பாதுகாப்புக்குழு கேரளா போன்ற சில மாநிலங்களில் மிகச்சிறப்பாகவும், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் மிகவும் கவலைக்குரிய விதத்திலும் செயலாற்றி வருகின்றன.

உள்ளாட்சி அமைப்புகள் ரீதியாக செயல்பட வேண்டிய பல்லுயிரியப் பாதுகாப்புக் குழுக்கள் மத்திய பிரதேசத்தில் மிக அதிக எண்ணிக்கையாக 23,743ம், கர்நாடகத்தில் 4,493ம், கேரளாவில் 1043ம் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டிலோ வெறும் 13 பல்லுயிரிய பாதுகாப்புக்குழுக்களே இருப்பதாக தேசிய பல்லுயிரிய ஆணைய இணையம் தெரிவிக்கிறது.

இந்தப் பல்லுயிரியப் பாதுகாப்புக்குழு சார்பில் உருவாக்கப்பட்ட மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s Bio-Diversity Register)இன் எண்ணிக்கையை பார்ப்போம். மத்திய பிரதேசத்தில் 741, கேரளாவில் 670, கர்நாடகத்தில் 267 மக்கள் பல்லுயிரிய பதிவேடுகள் உருவாக்கப்பட்டு அம்மாநிலங்களின் பாரம்பரிய பல்லுயிரியச் செல் வங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு மக்கள் பல்லுயிரியப் பதிவேடுகூட ((People’s Bio-Diversity Register) உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பல்லுயிரிய பாதுகாப்புக்குழு இயங்கும் இடங்களில் கூட அதற்கான அதிகாரங்களோ, நிதி ஆதாரங்களோ வழங்கப்படாமல் தடுக்கும் பணியே மேற்கொள்ளப் படுகிறது. மேலும் மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s Bio-Diversity Register))இன் சட்ட அதிகாரம் வரையறுக்கப் படாமல் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இதுவரை உள்ளது.

இந்தக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி நாடு முழுவதும் உள்ள சுமார் 300 சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கையப்ப மிட்ட மனு ஒன்று கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள், அன்றைய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ. ராசா அவர்களிடம் நேரில் அளிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலை யிலும் அந்த மனு இதுவரை யார் கண்ணிலும் படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் மக்களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கின் காரணமாகவே, இந்தக் கட் டுரையில் நாம் ஏற்கனவே பார்த்ததுபோல உத்தரபிரதேச பார்லி பயிருக்கு, ஜப்பான் நாட்டு மதுபான நிறுவனம் பேடன்ட் உரிமை பதிவு செய்கிறது. நம் நாட்டு வேம்புக் கும், பாசுமதி அரிசிக்கும் இன்னும் பல இயற்கை வளங் களுக்கும் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் உல கின் பல நாடுகளிலும், இந்தியாவிலும் கூட பேடன்ட் உரிமைக்கான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்காகவே மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் பல்வேறு முறை கேடுகளோடு அறிமுகம் செய்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களைக் கொண்ட நாடுகளின் பாரம்பரிய செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாக்கும் பேடன்ட் உரிமை பதிவுசெய்யும் முறைகள் அனைத்து நாடுகளிலும் மிக வும் செம்மையாக செயல்பட்டு வருகிறது. இது குறித்த எந்த அடிப்படைப் புரிதலும் இன்றி, தேசிய பல்லுயிரிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் கண்ணையன் அவரது அலுவலக ரீதியான கடமையையும் பொறுப்பு களையும் மறந்துவிட்டு, “மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை வேளாண்துறையில் பயன்படுத்துவதன் மூலமே உணவு உற்பத்தியைப் பெருக்கி, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க முடியும்” என்பது போன்ற தவறான தகவல்களைப் பதிவுசெய்வது மிகவும் கவலைக்குரியதாகும்.

இந்தியாவின் இயற்கை, பல்லுயி ரிய வளங்களைப் பாதுகாப்பதற்காகக் கடந்த 2002ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டம், சுமார் 12 ஆண்டுகள் நிறை வடையும் நிலையிலும் அதை முழுமையாக நடைமுறைப் படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதை அரசு அமைப்புகளின் தோல்வியாகக்கூட கருதலாம்.

இயற்கையின் கருணையாலும், மக்களின் கூட்டு உழைப்பாலும் உருவான இயற்கைச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களின் கயமைத்தனத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட நடைமுறைகள் அனைத்தும் திட்டமிட்டுப் பாழடிக்கப்படுகின்றன.

இந்தியாவின் இறையாண்மையைப் பலியாகக் கேட்கும் இந்த சதித்திட்டங்கள் குறித்து அரசியல் கட்சியினருக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, வணிக ஊடகங்களுக்கோ, நீதித்துறைக்கோ, மக்கள் அமைப்பு களுக்கோ எவ்விதமான அக்கறையுமில்லை.

என்ன செய்யப் போகிறோம்?

Pin It