lapuya anniversary 600

கௌதமாலா, பசிபிக் பெருங்கடலில் மெக்சிகோவிற்கு அருகேயுள்ள ஒரு மத்திய அமெரிக்க தேசம். கௌதமாலா என்றவுடன் நினைவிற்கு வருவது மாயன் நாகரிக விழு­மியங்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் மழைக்காடு­கள், சதுப்பு நிலங்கள், அரிய தாவரங்கள் மற்றும் விலங் கினங்களைக் கொண்ட உயிர்ச்சூழல் தொகுதிதான்.

கௌதமாலா என்ற சொல்லிற்கு நித்திய வசந்தத்தின் பூமி, கழுகுகளின் பூமி, மரச்செறிவுள்ள பகுதி எனப் பல்வேறு பதங்கள் வழங்கப்படுகின்றன. நாட்டின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகளால் நிறைந்துள்ளது. மறுகாலனியாதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்கள் இந்தத் தேசத்தைச் சூழ்ந்ததன் பின்பு இதன் காடழிப்பு வீதம் 17 விழுக்காட்டை எட்டியுள்ளது.

நிச்சயமற்ற அரசியல் சூழல் மற்றும் மோசமான நிதிநிலைமையின் காரணமாக பன்னாட்டுமுதலாளிகளின் லாபநோக்க பொருளாதாரக் கொள்கைகளை (வளர்ச்சித் திட்டங்களை!) இங்கே நிறைவேற்று வதில் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. கொளதமாலா அரசானது லாப வெறியுள்ள பண முதலைகளின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து அவர்களின் நலன்களுக்காக இயங்கிவரும் இன்றைய எதார்த்த சூழலில் அந்நாட்டில் நிலவுகிற வறுமை, ஊழல், உள்நாட்டுப்போர், இன வாதம், ஆண் பெண் பாகுபாடு போன்ற சிக்கல்கள் கூர்மையடைந்துள்ளன.

சாமானிய மக்கள்மீது உலக மயமாக்கல் கொள்கைகள் செலுத்தும் அழுத்தத்தின் நேரடி விளைவுகளே இன்று தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் பெரும்போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்க பெரும் காரணமாக இருக்கிறது. அப்படியானதொரு லாபவெறி கொண்ட பன்னாட்டுச் சுரங்க நிறுவனங்களின் பிடியிலிருந்து தங்கள் வாழ்வா தாரங்களை மீட்டெடுக்க உருப்பெற்ற போராட்டம்தான் இந்த “லாபுயா” போராட்டமாகும். கடந்த மார்ச் இரண்டாம் தேதி “லாபுயா” போராட்டத்தின் இரண்டாமாண்டு தினம் அப்போராட்டக்காரர்களால் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு சமூகச் செயல்பாட்டு அமைப்புகள், மனித உரிமை குழுக்கள், சூழலியல் -செயல்பாட்டுக் குழுக்கள், மகளிர் அமைப்புகள், பள்ளிச் சிறார்கள் ஒன்றுசேர்ந்து சான்ஜோஸ்திகோல்ஃபா நகரிலிருந்து லாபுயா நோக்கி ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலத்தில், ‘மாசுபட்ட காற்றையும் நீரையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?’ எனப் பொருள்படும் பதங்கள் அமைந்த பதாகைகளை ஏந்தியபடி தங்கள் உரிமைக் குரலை ஆளும் வர்க்கத்திற்கு உரக்க அறிவித்தனர். ஊர்வலம் போராட்டக்களத்தினை அடைந்ததும் வருகைதந்த சிறப்புப் பேச்சாளர்கள் போராட்டத்தின் வெற்றியில் பெண்களின் பங்கினையும் குடிமக்களின் அடிப்படை சூழலியல் உரிமைகளையும் எடுத்துரைத்தனர். எந்தப் பெருவளர்ச்சித் திட்டங்களும் பொதுமக்களின் கலந்தாலோசனையின்றி நிறைவேற்றப்படுதல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினர். தங்களின் வாழ்வாதரங்களை நச்சாக்கும் சுரங்கத் திட்டங்களுக்கு எதிரான ஒருமித்த எதிர்ப்பைக் காத்திரமாக உணர்த்தினர்.

ஆளும் அதிகார வர்க்கத்தினரின் அனைத்து வடிவிலான ஒடுக்குமுறைகளையும் கடந்து மூன்றாமாண்டில் அடியெடுத்துவைக்கும் இப்போராட்டத்திற்கான பின்புலம்தான் என்ன? சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்: லாபுயாவில் கொட்டிக்கிடக்கும் கனிமவளங்களுக்காகத் தோண்டப்படும் சுரங்கங்களால் தங்களின் நிலம், நீர் பெரிதும் பாதிக்கப்பட்டதை உணர்ந்திருந்த அப்பகுதி மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளான சுத்தமான குடிநீர், மாசுபடாத காற்று, வாழிடம் ஆகியவற்றை நாசப்படுத்தும் எல் தாம்பார் (El Tambor) சுரங்கப்பணியை நிறுத்தும் நோக்குடன் சாலைமறியல் போராட்டத்தினை முதலில் முன்னெடுத்தனர்.

தங்கள் கண்ணெதிரே பறிபோகும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் கடமையை உணர்ந்த அப்பகுதி மக்களும் போராட்டத்தில் இணைந்ததால் போராட்டம் மெல்ல வலுப்பெற ஆரம்பித்தது. போராட்டம் வீரியம் பெறுவதை உணர்ந்த P - F என்ற சுரங்க ஒப்பந்த நிறுவனம் சுரங்கத்திலிருந்து அனைத்து சரக்குந்து மற்றும் கனரக இயந்திரங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மக்கள் போராட்டத்தை மதிப்பதாகவும் இனியும் தங்கள் சேவையைத் தொடரும் எண்ணம் இல்லையென்றும் போராட்டக்குழுவிற்கு அந்நிர்வாகத்தின் சார்பில் கடிதமொன்றும் அனுப்பப்பட்டது. வாக்குறுதிக்கு ஏற்ப அடுத்த இருதினங்களில் எல் தம்பார் சுரங்கத்திலிருந்து அனைத்து கனரக இயந்திரங்களும் திரும்பப்பெறப்பட்டன. நீளமான வரிசையில் சுரங்கத்திலிருந்து அனைத்து கனரக இயந்திரங்களும் திரும்பப் பெறப்படுவதைக் கண்ட மக்கள் ஆனந்தக்களிப்பில் திளைத்தனர்.

எவ்வித சந்தேகமுமின்றி லாபுயா போராட்டம் உலகெங்கிலும் உள்ள மக்களைச் சென்றடைந்துள்ளது. போராட்டத்தைப் பாராட்டும் நோக்கில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாட்டிலுல்ள மனித உரிமை அமைப்புகள் கையெழுத்திட்ட வாழ்த்துமடல் ஒன்றினை கௌதமாலா மனித உரிமை ஆணையம் போராட்டக்குழுவிற்கு வழங்கியது.

சூழல் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தீர்க்கத்தோடும் துணிவோடும் போராடும் மக்களின் நெஞ்சுரத்தைப் பாராட்டுவதோடு அறவழிப் போராட்டங்கள் மூலம் அதிகார வர்க்கத்தின் இன்னல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைச் சமாளித்த சாதுர்யம் உலகெங்கிலும் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பொன்னான இயற்கை வளங்கள் சீரழிவிற்கு இயற்கைச் செல்வங்கள் மீதான அக்கறையின்மை, அறியாமை மற்றும் மக்களிடையே நிலவியிருந்த வறுமை, ஊழல் ஆகியனவும் காரணிகளாக அமைந்துள்ளன. எது எப்படியிருந்தாலும் தங்களின் அடிப்படைச் சூழலியல் உரிமைகளுக்காகத் தீர்க்கமான அறவழிப் போராட்டத்தையே இவர்கள் நம்பியிருந்தனர்.

பல்வேறு அச்சுறுத்தல்களை ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிட்ட போதும் அறவழிப் போராட்டத்திலிருந்து சிறிதும் வழுவாது கண்ணியம் காத்தனர். தங்­களை விரட்டி யடிக்க வந்த காவல் துறையின­ருக்கும் உணவு படைத்துத் தங்கள் அறப் போராட்டத்தை நிலைநிறுத்தினர்.

இந்த விளிம்புநிலை மக்களின் போராட்டம் அங்குள்ள மூன்று சுரங் கங்களின் செயல்பாட்டினை முடிவுக்குக்­கொண்டு வந்துள்ளது. லாபுயா போராட்டத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் அடையாள அரசியலை முன்னிறுத்தாமல் பூர்வக்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒற்றுமையாகப் போராட்டத்தை முன்னெடுத்ததே ஆகும். லாபுயா மக்கள் போராட்டம் வெற்றியின் மற்றொரு அதிமுக்கிய காரணி போராட்டத்தில் பெண்கள் முன்னிலை வகித்ததே ஆகும்.

ஆண்கள் இயல்பிலேயே வன்முறைக்கு ஆட்கொள்ளப்படுவர் என்பதை உணர்ந்ததால் அவதூறுகள், அச்சுறுத்தல்கள், பொய்ப் பரப்புரைகள் யாவற்றையும் மகளிரே முன்வரிசையில் நின்று திறம்பட சமாளித்தனர். ஆளும் வர்க்கம் போராட்டக் குழுவில் உள்ள ஆண்களைப் பெண்களின் பின்னே ஒழியும் பேடிகள் என்று வெற்றுக் கூச்சலிட்டபோதும் உணர்ச்சி வயப்படாமல் போராட்டத்தினை முன்னெடுத்தனர். லாபுயா போராட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பல. வேற்றுமை மறந்து நமது இயற்கை வளங்களைப் பாதுகாக்க முற்படுவதிலிருந்து போராட்டக்களத்தில் பெண்களின் சம பங்களிப்பினையும் பெறுவதுவரை இப்போராட்டம் நமக்கு பல படிப்பினைகளை வழங்குகிறது.

இந்தியா போன்ற பன்மய இனக்குழுக்கள் உள்ள தேசத்தில் பகுதி சார்ந்த போராட்டத் தேவைகள் என்பதை விடுத்து ஒன்றுபட்ட குரலில் மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கத் தவறினால் நாம் சூழலியல் அகதிகளாக மாற வேண்டிய சூழலை நிச்சயம் தவிர்க்க முடியாது. நம் பொருளாதாரக் கட்டமைப்பு, வளர்ந்த நாடுகளின் கொள்கைகளை சார்ந்திருப்பது மற்றொரு பேராபத்து. அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பது நமது சூழலையும் பொருளாதாரத்தையும் குட்டிச்சுவராக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்துவிட்டு பூர்வக்குடி களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் அரசுக்கு நிகர் அரசே! இயற்கைக்கு சற்றும் தீங்கு விளைவிக்காத (மாசுபடுத்தாத) வாழ்வியல் முறைகொண்ட பூர்வக்குடிகளே இந்த இயற்கை வளச் சுரண்டல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக திருவண்ணாமலை வேடியப்பன்-கவுத்தி மலை இரும்புத்தாது வெட்டி யெடுக்கும் திட்டத்திற்கு எதிரான போராட்டமும், ஒடிஷா வில் போஸ்கோவை விரட்டியடித்த நியாம்கிரி பூர்வக்குடிகளின் போராட்டமும் குறிப்பிடத்தக்கது. மலைகளையும் காடுகளையும் சார்ந்துள்ள பூர்வக் குடிகளின் உரிமை வளர்ச்சியென்னும் பெயரில் ஒடுக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி என்னும் பெயரில் பூர்வக்குடிகளின் நிலங்கள் அபகரிக்கப்படுவது மறு காலனியாதிக்கத்தின் முகாந்திரமே.

lapuyaanniversary2 600எல்லாவற்றிற்கும் மேலாக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சட்டங்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு வளைந்து கொடுக்கவே செய்கின்றது. தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டி யடிக்கப்படும் பூர்வக்குடிகள் சரியான மறு குடியமர் வில்லாமல் சூழலியல் அகதிகளாகத் தன் சொந்த நாட் டிற்குள்ளாகக் கடத்தப்படுகின்றனர். சுற்றுச்சூழல் மதிப்பீட்டு முறைகள் ((EIA)) எதுவும் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களிலும் சரியாக செயல்படுத்தப்படு­வதில்லை. பன்னாட்டு மூலதனத்தைக் காப்பதற்குப் பூர்வக்குடிகளின் வாழ்விடங்களின்மீது தொடரும் மறு காலனியாதிக்கத்தின் கொடுமைகளைச் சமர் செய்ய தேசம் முழுவதும் பரந்துபட்ட மக்களின் ஆதரவை, மக்கள் போராட்டம் பெற்றிருத்தல் மிக அவசியம்.

இந்தியாவில் நடந்த சூழல் போராட்டங்கள் பல பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவை முழு வெற்றி பெறவில்லை என்பதை ஆமோதித் தாக வேண்டும். பிழைப்புவாத ஆளும் வர்க்கம் மக்கள் போராட்டங்களை ஒடுக்க தன் குடிமக்களையே பகை­வராக எண்ணத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்களையும் பொய் வழக்குகளையும் சரியாகவே பயன்படுத்தியுள்ளது.

நம்முடைய சூழல் விழிப்புணர்வை ஒட்டு மொத்த தேசத்தின் உணர்வாக மாற்ற நாம் இன்னும் பல தூரம் பயணிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இந்த பொதுப்புத்தியாலே நமது இயற்கைச் செல்வங்கள் சீரழிக்கப்படும்போது தூரநின்று வேடிக்கைப் பார்த்துக்­கொண்டிருக்கிறோம். வளர்ச்சி என்னும் வாதத்தினை முன்வைக்கும் எவரும் வளர்ச்சித் திட்டங்களால் சீர்­கெடும் இயற்கை வளங்களைப் பற்றியோ பூர்வக்குடிகளையோ கருத்தில் கொள்வதில்லை.

இந்தியா முழுவதும் வளர்ச்சித் திட்டங்களால் சூழலியல் அகதி களாக்கப்பட்ட பூர்வகுடிகளின் எண்ணிக்கை மட்டும் பத்து மில்லியனுக்கும் மேல். இப்பூவுலகில் ஏற்படும் பல சூழலியல் பிரச்சனைகளுக்கு சமூகநீதிக் குறை­பாடும் வளர்ந்த நாடுகளின் சுரண்டல் பொருளாதாரக் கொள்கைகளுமே காரணம். நமது பொருளாதாரக் கொள்கைகளை மறுவரையறை செய்யத் தவறினால் அழிவு நிச்சயம்.! இதில் சந்தேகமில்லை.

ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது.

பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. 

Pin It