கடந்த மாதம், கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில், ஆறு தொழிலாளர்களின் மீது வெந்நீர் கொட்டியது. இதனை சாதாரண நிகழ்­வாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு பணியமைப்பில் உள்ள மருத்துவ மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, ஆறு பேரின் தீப்புண்களைக்கூடச் சரியாகக் கையாள முடியாவிட்டால் எவ்வாறு கதிரியக்க விபத்துகளில் நிர்வாகம் செயல்படும்?

தேசத்தின் முக்கிய தேர்தல், இந்நூற்றாண்டின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என ஊடகங்கள் தாமாகவே வரையறுத்துக்கொண்டு தேர்தல் செய்திகளில் நம்மை மூழ்க அடித்துக்கொண்டிருந்த வேளையில் 2014 மே 14 அன்று கூடங்குளம் அணு உலையில் ஒருவிபத்து ஏற்பட்டது.

மே 14 புதன்கிழமை, எனது அலைபேசிக்கு சுருக்கமான தகவலுடன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. “கூடங்குளம் அணு உலையின் முதல் நிலையத்தில் விபத்து; ஆறு தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.” உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு பற்றியும் அவசரநிலைகளை எதிர்கொள்ள உதவும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி திருப்தியும் நம்பிக்கையும் வெளிப்படுத்தி இருந்த ஒரு வாரத்திற்குள் நடந்துள்ளது இந்தச் சம்பவம். இவ்விபத்து ஆலையின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு குறித்த சந்தேகத்தை எழுப்பியதுடன், உச்சநீதிமன்றத்தின் ஏமாளித்தனத்தையும் குருட்டு நம்பிக்கையையும் கூட வெளிப்படுத்துகிறன.

தகவல் கொடுத்தவர் நம்பிக்கையான செய்தியாளராக இருந்ததால் வந்த குறுஞ்செய்தித் தகவலை உறுதி செய்துகொள்ள விரும்பினேன்.

என்.பி.சி.ஐ.எல். என்றழைக்கப்படும் Nuclear Power Corporation of India Ltd (NPCIL) இவ்விபத்தைப் பற்றி முதலில் அறிவிக்கவில்லை. கூகுளாண்டவர் (Google)) கூட அந்நேரத்தில் இவ்விபத்து பற்றி உறுதியான தகவலை வெளியிடவில்லை. என்.பி.சி.ஐ.எல்லின் இணைய தளம் இவ்விபரத்தைப் பற்றி இக்கட்டுரை எழுதப்படும்வரை கள்ள மௌனத்தைக் கடைப் பிடிக்கிறது. கூடங்குளத்தில் இருக்கும் என்.பி.சி.ஐ.எல்லின் பணியாளர்களும் அப்படியே.

Kudangulam 340

அணுஉலைக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் தோழர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களுக்கும் இவ்விபத்து பற்றி தெரிந்திருந்தது. மேலும், அவர்கள் என்னிடம் கூடங்குளம் அணுஉலை நிர்வாகமும் (KKNPP) , என்.பி.சி.ஐ.எல்லும் (NPCIL) முரண்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினர்.

அணுஉலைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் வி.புஷ்பராயனிடம் பேசியபோது, அவர் தெரிவித்தது “முதலில், அவர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், முதலுதவி மட்டுமே அவர்­களுக்குத் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். பின்னர், டவுன்ஷிப் மருத்துமனையில் காயமடைந்த வர்கள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறினர்; காயமடைந்தவர்கள் தாங்களாகவே நடக்கும் அளவுக்கு உள்ளனர்; சிறிய விபத்துதான் என்றும் கூறினர். அவர்கள் முழு உண்மையையும் சொல்லவில்லை என்பதை அறிய முடிகிறது. அஞ்சுகிராமத்தில் கடை வைத்திருந்த கூட்டப்புளி கிராமத்தார்கள், ஆறு ஆம்பு லன்சு வாகனங்கள் நாகர்கோவில் நோக்கி வேகமாகப் போனதாகத் தொலைபேசியில் கூப்பிட்டுத் தகவல் கொடுத்தார்கள். சற்றுநேரத்திற்குப் பிறகு மில்ரேட் அம்மா மூன்று ஆம்புலன்ஸ்களை மைலாடி கிராமத்திற்கு அருகே பார்த்ததாகத் தகவல் கொடுத்தார்கள்.

மற்றுமொரு நண்பர் மதியம் 2.30 மணி அளவில், காயமடைந்தவர்கள் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறினார். அணுஉலைக்கு எதிரான போராட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதய­குமாரிடம் அவரின் சொந்த ஊர் நாகர்கோவில் என்பதால் இது குறித்துக் கேட்டேன். குமார் என்ற பெயரில் நாகர்கோவிலில் மருத்துவமனை இருப்பதாக தனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்றார். இணைய தளத்தில் உடனடியாகத் தேடிப்பார்த்தேன். ‘கிருஷ்ண குமார் ஆர்த்தோபெடிக் மருத்துவமனை’ என்ற பெயரில் ஒரு மருத்துவமனை இருப்பதை அறிந்தேன். இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்த அம்மருத்துவமனை யின் தொலைபேசி எண்கள் வேலை செய்யவில்லை. கூடங்குளம் அணுவுலையின் இயக்குநரைத் தொடர்பு கொண்டு கேட்க விரும்பவில்லை. அவர் அவசர நிலையைக் கையாளுவதில் பரபரப்பாக இருக்கக்கூடும் என நினைத்தேன். ஆனால், சிறிது நேரத்தில், அவரைத் தொடர்புகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என உணர்ந்தேன்.

மதியம் 3 மணிக்குள்ளாக, வதந்திகள் வேகமாகப் பரவத் தொடங்கியதும், தயக்கத்துடனே கூடங்குளம் அணு உலையின் இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தரை தொடர்புகொண்டேன். விபத்து ஏற்பட்டதா இல்லையா என்றும், காயமடைந்தவர்கள் கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்களா இல்லையா? என்றும் உறுதியான தகவலை அளிக்க வேண்டும் என்றும் கேட்டேன். என்னுடன் ஐந்து நிமிடங்கள் வாதிட்டு விட்டு, ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து விவரங்களைக் கேட்டுக்கொள்ளவும் என்றார். இதை அவர் முதலிலேயே கொடுத்திருக்கலாம்!

அவர் கொடுத்த தொலைபேசியில் பேசியவர் தன்னை இயக்குநரின் உதவியாளர் என்று அறிமுகம் செய்து­கொண்டார்; சில அதிகத் தகவல் களைத் தெரிவித்தார். முதற்கட்ட தகவல்கள்தான் இவை என்ற அறிவிப்புடன் தெரிவித்தவை: “துறைப் பணியாளர்கள் மூவருக் கும், தற்காலிக பணியாளர் மூவருக் கும் இன்று முதல் யூனிட்டில் டர்பைன் கட்டடத்தில் அதிக அழுத்தமுள்ள நீராவி உட்செல் லும் குழாயிலிருந்து வெந்நீர் சிந்தி விபத்து ஏற்பட்டது; காய மடைந்தவர்கள் முதலில் முதலுதவி மையத்தில் சிகிச்சை பெற்றனர்; பின்னர், அனு விஜய் டவுன்ஷிப்பில் உள்ள எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; அங்கிருந்து நாகர்கோவில் சிறப்பு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனை வரும் சுயநினைவுடன் உள்ளனர்.”

idinthakarai 600

மறுத்தலும், மறைத்தலும்:

“வெந்நீர் சிந்துதல்?”, “சுயநினைவுள்ள நிலை?” இந்த வார்த்தைகள் என்ன சொல்லவருகின்றன? அதிக அழுத்தமுடைய, சூடேற்றும் சாதனத்திலிருந்து வெளி­யான வெந்நீரால் விபத்து ஏற்பட்டது என்று நிகழ்வைக் குறைத்துக் கூறுவது ஏமாற்று வேலையே. காயமடைந்­தவர்கள் சுயநினைவுள்ள நிலையில் உள்ளதாக நிருபர்­களிடம் சொல்வது ஆபத்து ஒன்றுமில்லை என்று வெளிப்படுத்த விரும்புவதைக் காட்டுகிறது. மேலும், காயமடைந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைபற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் தவிர்க்கவே “சுயநினைவுள்ள நிலை” என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனர்.

உலகமெங்கும், அணுசக்தித் துறையானது புதுமை யான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் பெரு விருப்பம் கொண்டுள்ளது. அதனால்தான், அணு குண்டை ‘அணு சாதனம்’ என்றும், ஃபுகிஷிமா பேரழிவை ‘ஏழாம் நிலை அணு நிகழ்வு’ என்றும் கூறுகின்றனர்.

புதன்கிழமை விபத்து எவ்விதக் கதிர்வீச்சையும் ஏற்படுத்தவில்லை. பணிபுரியும் இடங்களில் தீக்காயங்களும், எலும்புமுறிவுகளும் சாதாரணமானவைதான். ஆனால் கூடங்குளத்தில் எல்லாவித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என அறிவித்துக்கொண்டு விபத்து ஏற்படும்போது நிலவும் அவசர நிலைமையை எதிர் கொள்ளத் தடுமாறுவது நன்றாகவே தெரிகிறது. முன்னுக்குப் பின்னான செய்திகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்களிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம்பகத்தன்மையையும் இழக்கிறது கூடங்குளம் அணுஉலை.

இயக்குநரின் உதவியாளரிடம் மறுநாள் ஏதேனும் மேல்விவரங்கள் கிடைக்குமா எனத் தொடர்புகொண்டேன். அவர் அமைதியாக, “நேற்று உங்களிடம் கூறிய தகவல்தான் எங்களிடம் இப்போதும் உள்ளன. மேல்தகவல் கள் எதுவும் இல்லை” என்று கூறிவிட்டார்.

பொதுவாகவே, பணிபுரியும் சூழல் களில் தோன்றும் ஆபத்தான நிலைகளும், நோய் குறித்த தகவல்களும் வெளியுலகிற்குப் பெரும்பாலும் தெரியவருவதில்லை. இந்தியாவில், கதிர்வீச்சு குறித்த ஆபத்தான நிலைகள்கூட பெரும்பாலும் மாதக்கணக்கில், ஏன் வருடக் கணக்கில் வெளியே தெரிவதில்லை. சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கம் அணுஉலையில் 2003 ஜனவரி 21ஆம் நாள், ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையைவிட அதிகமான கதிர்வீச்சு வெளிப்பட்டது. இதுபற்றி, தொழிற்சங்கங்கள் - அதுவும் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தின.

இது சாதாரண நிகழ்வா?

காயமடைந்த ஆறு பணியாளர்களும் நாகர்கோவிலில் ஒரு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக அணுவுலை நிர்வாகிகள் கூறியுள்ளனர். கூடங்குளத்திலிருந்து நாகர்கோவில் 30 கி.மீ தூரம். குண்டும் குழிகளும் நிறைந்த சாலையில் சென்றால் எப்படியும் ஒரு மணிநேரம் எடுக்கும். நாகர்கோவிலில் இருக்கும் கிருஷ்ணகுமார் மருத்துவமனை எலும்பு முறிவில் சிறப்புப்பெற்ற மருத்துவமனை. அதில் தீக்காயங்களைக் குணம் செய்ய எந்தக் கட்டமைப்பு வசதிகளும் இல்லை.

கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களில் தீக்காயங்களுக்கோ, கதிர்வீச்சுக் காயங்களுக்கோ சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் இல்லை என்பது உச்சநீதிமன்றத்திற்கு ஏற்கனவே தெரிவிக்கப் பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அனைத்து வழக்குகளையும் தொடுத்துள்ள ஜி.சுந்தர்ராஜன் கூறுகையில், “அணு நிறுவனங்கள் தங்கள் தொழில் வளாக எல்லைக்குள்ளாகவே தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் வைத்திருக்க வேண்டும் என்றும், கதிர்வீச்சு விபத்துகளுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 16 கிலோ மீட்டர் சுற்று­வெளியில் இருக்க வேண்டும் என்பதுவும் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் கட்டாய விதி.”

கூடங்குள அணுஉலை இயக்குநர் ஊடகங்களிடம், “பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்று அணுஉலைக்கு அருகில் கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளதாகக் கூறியுள்ளார். உள்ளூர் மக்களோ இதனை மறுக்கின்றனர். கட்டட வேலை கூட இன்னும் முடியவில்லை” என்று தெரிவிக்கின்றனர்.

ஆச்சரியம் என்னவெனில், உச்சநீதிமன்றம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் வரை எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாது என உறுதியாக நம்புகிறது. பாதுகாப்புக்கும் அவசரநிலை களைச் சமாளிக்கவும் ஏராளமான வழிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் நம்புகிறது.

பணியாளர்களின் தவறு:

அணுசக்தித் துறையின் முன்னாள் இயக்குநர் அ.கோபாலகிருஷ்ணனுடன் இதுகுறித்துப் பேசினேன். “இது கதிர்வீச்சு விபத்தல்ல. எனினும், காயமடைந்த பணியாளர்களைப்பற்றி குறிப்பிட்டாக வேண்டும். மூன்று தற்காலிகப் பணியாளர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர். தற்காலிகப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சிமுறைகள் அளிக்கப்பட்டிருக்காது. தற்காலிகப் பணியாளர்கள் சாதாரணத் திறமை கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் ஒரு விசையைத் திருப் பவதற்கோ, அதைத் தூக்குவதற்கோதான் பயன்படு வார்களே தவிர தொழில்நுட்பத்துடன் வேலை செய்யச் சிறந்த திறன் எதுவும் அவர்களிடம் இருக்காது. எனவே, தவறாகக்கூட உபகரணங்களை உபயோகித்திருக்கலாம். இதுபோன்று, தற்காலிகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைப் பல இடங்களில் பார்த்துள்ளேன். பணத்தை மிச்சப்படுத்த இவ்வாறு செய்கிறார்கள்.”

சாதாரணத் திறமை கொண்டப் பணியாளர்களை ஆபத்தான மற்றும் அதிக கதிர்வீச்சு கொண்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவதற்கு இன்னொரு காரணம் அவர்கள் நாடோடிகளாக இருப்பது தான். அவர்களிடம் எந்த அடையாள ஆவணங்களும் இருக்காது; எனவே, விபத்துக் காலங்களில் இவர்களை வகைப்படுத் தவோ, அடையாளப்படுத்தவோ தேவையிருக்காது.

ஒப்பந்த ஊழியர்களுக்கும், முறையாக பயிற்சி பெறாத ஊழியர்களுக்கும் பணியிடங்களில் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றியும், பணியாளர்களின் பாதுகாப்பு பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கும். இருப்பினும், இப்பொழுது நிகழ்ந்த விபத்து போல் அல்லாது கதிர்வீச்சு விபத்து ஆகியிருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும்.

சாதாரணத் திறமை கொண்டப் பணியாளர்களை ஆபத்தான மற்றும் அதிக கதிர்வீச்சு கொண்ட இடங்­களில் வேலைக்கு அமர்த்துவதற்கு இன்னொரு காரணம் அவர்கள் நாடோடிகளாக இருப்பது தான். அவர்களிடம் எந்த அடையாள ஆவணங்களும் இருக்காது; எனவே, விபத்துக் காலங்களில் இவர்களை வகைப்படுத் தவோ, அடையாளப்படுத்தவோ தேவையிருக்காது.

ஃபுகிஷிமா பேரழிவுக்குப் பின் வெளியான பல்வேறு அறிக்கைகள் கூறுவதும் இது தான். முறையான, பயிற்சி பெறாத பல தொழிலாளர்கள் டோக்யோ போன்ற நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து ஃபுகிஷிமா அணு உலையில் வேலை செய்திருக்கிறார்கள். டோகைமுரா அணு விபத்தில் 89 சதவீத பணியாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர் என லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை வெளியிட்டது. அந்தப் பணியாளர் களில் 90 சதவீதத்துக்கும் மேலானோர் கதிர்வீச்சினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அணுசக்தி கமிஷனின் தலைவர் ஆர்.கே.சின்ஹா, கூடங்குளம் அணுஉலையின் முதல் நிலையம் ஏன் பரிசோதனை முயற்சியில் தோல்வியடைந்தது என்பதை 2013 ஜனவரியிலேயே குறிப்பிட்டிருந்தார்.

மின் உற்பத்தி தொடங்கும் முன், உபகரணங்களை உலையில் பொருத்தும்போதே, சென்ற டிசம்பரில் மேற்கொண்ட ஹைட்ரோ பரிசோதனையில் சில வால்வுகள் சரியாக வேலை செய்யவில்லை. பின்னர், அந்த வால்வுகளைக் கழற்றி, சரிசெய்து, மீண்டும் பொருத்தியுள்ளதாக அணுஉலை அதிகாரிகள் கூறியுள்ளனர். சில உதிரிப் பாகங்களை மாற்றிப் பொறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

அணுஉலைக்கான உபகரணங்களை வாங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வரும் செய்திகள் இவ்விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷியோபோடோல்ஷ்க் எனும் நிறுவனத்தின் கொள் முதல் பிரிவின் இயக்குநர் செர்ஜி ஷடோவ் என்பரை ஃபெடரல் செக்யூரிட்டி செர்விஸ் பிப்ரவரி 2012ல் கைது செய்துள்ளது. இந்நிறுவனம் ரஷ்ய அணுசாதனங்களுக்கான முக்கிய மூலக்கூறுகளை வழங்கி வருகிறது.

மலிவான உக்ரைன் எஃகினைக் கொண்டு ரஷ்ய நாட்டினர் பல்கேரியா, ஈரான், சீனா மற்றும் இந்தியாவில் அணு உலைகளை நிர்மானித்து வருவதாக ரஷ்ய ஊடக நிறுவனம் ரோஸ்போல்ட் தெரிவிக்கிறது.

ஷியோபோடோல்ஷ்க் நிறுவனம் கூடங்குளம் அணு உலையின் முதல் நிலையத்திற்கு நீராவி ஜெனரேட்டர், வடிகட்டிகள், ஈரப்பத பிரிப்பான்கள், சூடேற்றும் சாதனங்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா, பல்கேரியா, மற்றும் ஈரான் நாடுகள் இம்முறைகேடுகள் குறித்து ரஷ்யர்களுக்கு சம்மன் அளித்து விளக்கம் கேட்டுள்ள நிலையில், இந்தியா இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஷியோ­போடோல்ஷ்க் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கூடங்குளம் அணுஉலை நிர்வாகமும் எந்தக் கேள்வியையும் இதுவரை எழுப்பவில்லை.

மொத்தத்தில், ஒத்த கருத்தின்மை, மனிதக் தவறுகள், ஊழல் இவையெல்லாம் சேர்ந்து சிறந்த பாதுகாப்பு முறையை வீழ்த்தவே போகின்றன; இவற்றால் நடக்கக் கூடாது என அஞ்சும் பேரழிவுகள் விரைவில் நடந்தே விடும். அப்போதும் ‘சாதாரண நிகழ்வு தான் இது’ என உலகுக்கு அறிவிப்பார்கள்.

(கட்டுரையாளர், கூடங்குளம் போராட்டத்திற்கு சென்னை ஆதரவு குழுவில் உள்ள தன்னார்வலர்)

ஆங்கிலம்வழிதமிழில்: கோ.முருகராஜ்

Pin It