ஆட்சி, அதிகாரத்திற்கு யார் வந்தாலும், “பகிர்ந் தளிக்கப்பட்ட நீதியோடு, அனைத்து தரப் பினரையும் உள்ளடக்கிய முன்னேற்றம்” என்பதைக் கற்றுக்கொண்டு செயல்படவேண்டும். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு சம மதிப்பளித்து, இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2014 மே 3ஆம் தேதி அன்று அதிகாலை 3.50 மணிக்குத் தனது கட் டுரையை இப்படித்தான் நிறைவுசெய்தார் அருட்பணி. தாமஸ் கொச்சேரி.

thomas kocherry

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் சவாலாக விளங்கப் போவது வளர்ச்சியா அல்லது பெரும்பான்மை மதவாதமா என்று கேள்வி மேல் கேட்டு, புதியதாக பொறுப்பேற்கவிருக்கும் இந்திய அரசு குறித்து அலசி ஆராய்ந்து, கட்டுரையை எழுதி முடிக்கும்போது, 74 வயதான அருட்பணி தாமஸ் கொச்சேரி அவர்களுக்கு இதுதான் அவரது நிறைவுக் கட்டுரை என்பதுகூட அவருக்கே தெரிந்திருக்காது. படுத்த படுக்கையிலும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடிய போராளி நமக்காக விட்டுச்சென்ற பணிகளும் ஏராளம்.

கடந்த 2004ஆம் ஆண்டு உலகை உலுக்கிய ஆழிப் பேரலை, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனை வாய்ப்பாகக் கொண்டு, கடலோர மக்களைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையில் இந்திய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்குக் கடற்கரையைத் தாரைவார்க்க குறுக்கு வழியில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது. அதற்கென பல வரைவுகள், திட்டங்கள் உருவானது.

கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை, கடலோர ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டம் பற்றியெல்லாம் மீனவர்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மத்தியிலும், சமூகச் செயல்பாட் டாளர்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வந்த நேரம் அருட்பணி தாமஸ் கொச்சேரி அவர்கள் இந்திய அரசின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆவணங்களோடு, ஆதாரங்களோடு புட்டுப்புட்டு வைத்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலமுறை முயற்சித்தும் கடலோர மேலாண்மைச் சட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் கைவிடப்பட்டன. தனது போர்க் குணத்தை பல்வேறு போராட்ட வழிகளிலும், எழுத்திலும், பேச்சிலும் மக்களுக்கான கல்வியாக எடுத்துச்சென்று, அரசின் தவறான கொள்கைகளைப் படம் பிடித்துக்காட்டிய பெருமை தாமஸ் கொச்சேரி அவர்களுக்கு உண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தின் சங்கனாச்சேரியில் 1940 மே 10 ஆம் தேதி வாவச்சான் மற்றும் அலேயம்மா தம்பதியரின் ஐந்தாவது மகனாகப் பிறந்த தாமஸ் கொச்சேரியின் உடன்பிறந்தவர்கள் 11 பேர். ஏழு ஆண்கள், நாலு பெண்கள்.

கல்லூரிக் காலங்களில் கம்யூனிசத்தின் மீது நாட்டம் கொண்ட தாமஸ் கொச்சேரி, தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு கிறித்துவ திருச்சபையின் மதகுருவாக 1971 ஏப்ரல் 20இல் பணியைத் துவக்கினார். வங்கதேச விடுதலைக்காக 1971 இல் இந்தியா - பாகிஸ்தான் போர்நடை பெற்றபோது அகதிகளாகப் பலரும் மேற்கு வங்க மாநிலத்தில் அடைக்கலம் புகுந்தனர். அப்பகுதியின்ராய்கஞ்ச் என்ற இடத்தில் வங்கதேச அகதிகள் மத்தியில் செயலாற்றியவர் தாமஸ் கொச்சேரி.

அதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துரா மீனவ கிராமத்தில் மதகுருவாக இருந்தவர், இடைத்தரகர்களாலும், அரசியல் வாதிகளாலும் உழைக்கும் மீனவ மக்கள் சுரண்டப்படுவதைக்கண்டு, சமூகக் கல்வியாளராக மாறினார். சுரண்டலில்இருந்து மக்கள் மீள பாடம் கற்றுக் கொடுத்தார்.

1981 இல் பட்டினிப் போராட்டம், சிறை வாழ்க்கை என்று களம் கண்டவர், 1982இல் மீனவ மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காக “கேரள மாநில சுதந்திர மீன்பிடி தொழிலாளர் சம்மேளனம்” (Kerala Swantra Matsyathozhillali Federation) என்ற அமைப்புஉருவாக அடித்தளமிட்டார்.

1987 செப்டம்பர் 22 இல் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் துவங்கியது. இதனைதேசிய அளவில் எடுத்துச் செல்லும் முகமாக பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து, 1989 மே 1, தொழிலாளர்தினத்தில் தாமஸ் கொச்சேரி அவர்கள் ஒருங்கிணைத்த நீரைக் காப்போம், வாழ்வைக் காப்போம் என்ற “கன்னியாகுமரி பேரணி” வரலாற்றில் இடம் பிடித்தது. மீனவர்களின் வாழ்வுரிமைக்காகவும், அணு சக்திக்கு எதிராகவும் நடைபெற்ற அந்தப் பேரணியில் அரசின் அடக்கு முறையால் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.

வெளிநாட்டுக் கப்பல்கள் இந்தியக் கடலில் மீன்பிடிக்க முயற்சிப்பதைக் கண்டித்து 1990 இல் நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களால், இந்தியக் கடலை அந்நிய நாட்டு மீன் பிடித்தலுக்குத் திறந்துவிடும் சட்டம் அரசால் திரும்பப் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீனவர்களின் நலன் காக்க, 1995இல் முராரி கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி நடந்த பட்டினிப் போராட்டம் என தேசிய மீனவர் பேரவை தலைவராக தாமஸ் கொச்சேரியின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலப் பழங்குடிமக்களின் உரிமைக்காகப் போராட்டக்களம் கண்டவர்.

உலக மீனவர் பேரமைப்பு உருவாக காரணமானவர்களில் ஒருவர், உலக மயத்திற்கு எதிரான தொழிற் சங்கவாதியாக, மக்கள் வழக்குரைஞராக, இறுதிவரை அணு சக்திக்கு எதிரானவராக வாழ்ந்து மறைந்துள்ள தாமஸ் கொச்சேரி, உலகெங்கிலும் பல விதைகளை விதைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அன்னாரது செயல்பாடுகளை பெருமை பாராட்டும் விதமாகவும், அவரது கருத்துகளை மக்களிடம் விதைக்கும் முகமாகவும் இந்தியா முழுக்க நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. சென்னை ராயபுரத்தில் கடந்த 2014 மே 30ஆம் தேதி தேசிய மீனவர் பேரவை, வங்கக் கடல் மீன் தொழிலாளர் யூனியன், இராமநாதபுரம் மீன்பிடி தொழிலாளர் யூனியன், தமிழ்நாடு புதுச்சேரி மீனவ மக்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி மீனவர் பேரவை ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் அருட்பணி தாமஸ் கொச்சேரி அவர்களின் படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

“வளர்ச்சி என்பது உற்பத்தி அளவை மட்டும் கணக்கில் கொண்டதல்ல, நிலைத்த தன்மை, வாழ்வாதாரம், மனித நலன் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்ற அருட்பணி தாமஸ் கொச்சேரியின் வாக்குகளைச் செயலாக்க வேண்டியதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான நினைவேந்தலாக, நன்றிக்கடனாக இருக்கும் என்று நினைவேந்தல் நிகழ்வில் ஒலித்த குரல், மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் செயலாகவும் எதிரொலிக்க வேண்டும்.

Pin It