கூடங்குளம் முதலாம் அணுஉலை, ஜூன் 7, 2014 அன்று நிறுவப் பட்டுள்ள 1,000 மெகா வாட்டைத் தாண்டி 1,009 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளதாக இந்திய அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றமோ, கூடங்குளம் அணுஉலை பாது காப்பு தொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ தாக்கல்செய்த வழக்கில் இப்படிக் கூறியுள்ளது: “நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்து­வதில் சம்பந்தப்பட்ட துறைகள் கவனக்குறை வுடன் இருப்பாக நீதிமன்றம் கருதவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாகச் செயல்படுத்தக் கூடுதல் காலம் ஆகலாம். அதைச் சம்பந்தப்பட்ட துறைகள் சரியாகச் செயல்படுத்தும் என நீதிமன்றம் நம்புகிறது.” இங்கு சம்பந்தப்பட்ட துறைகள் என்று கூறப்படுவது அணுசத்தி துறை, அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், இந்திய அணுசக்தி நிறுவனம், தமிழக அரசு, தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் போன்றவையே. இயேசுவிற்கு மரண தண்டனை விதித்த மன்னன் பிலாத்து தனது பாவச்செயலைப் போக்க கைகழுவியதுபோல கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பிலிருந்து இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து கைகழுவிவிட்டது உச்ச நீதிமன்றம்.

koodankulam 600

கடந்த மே 2013ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைத் திட்டதிற்கு எதிராக ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் தொடுத்த வழக்கில் தீர்ப்புக் கூறியது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பில் கூடங்குளம் அணுஉலையில் அமல் படுத்த வேண்டிய அம்சங்களாக 15 உத்தரவு கள் கூறப்பட்டன. இந்த 15 உத்தரவுகளும் முழுமையாக அமல்படுத்தபடாத நிலையில் கூடங்குளம் அணுஉலை செயல்படுவதற்கான அனுமதி ஜூலை 2013ல் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மே 8, 2014இல் தீர்ப்புக் கூறிய உச்சநீதி மன்றம் மேற்கூறிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. (தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே கூடங்குளம் அணுஉலையில் கொதிகலனிலிருந்து நீராவி வெளியேறி 6 பேர் காயமடைந்தனர். சிலர் கொதிகலன் வெடித்தாகக் கூறுகிறார்கள். அணுசக்தி நிறுவனம் இதனை மறுத்துள்ளது)

அணுஉலை பாதுகாப்புத் தன்மை:

கூடங்குளம் அணுஉலை உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணு உலை, மூன்று அடுக்கு பாதுகாப்பு கொண்டது, விமானமே மோதினாலும் அணுஉலைக்கு ஒன்றும் ஆகாது என்று கூறுகிறது இந்திய அணுசக்தித் துறை. இந்த வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் கூடங்குளம் வழக்கு விசாரணையின்போது மத்திய அரசால் கூறப்பட்டது. இதற்குச் சாதகமாக பல குழுக்களின் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றைப் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், முதல் உத்தரவாக கூடங்குளம் அணுஉலையில் உள்ள கருவிகள் மற்றும் உபகரணங்களின் பாதுகாப்புத் தன்மை பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மே 2013இல் கூறியது. இந்த ஆய்வுகள் அணுஉலை செயல்படுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு அதுகுறித்தான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியது நீதிமன்றம்.

மேற்கூறிய உத்தரவுகள், உச்ச நீதிமன்றம் கூடங்குளம் அணுஉலையில் தற்போது உள்ள உபகரணங்களின் தரத்தன்மை, வடிவமைப்பு மற்றும் பாதுகாப்புத்தன்மை மீது போதிய அளவில் நம்பிக்கை பெறவில்லை என்ப தையே காட்டுகிறது. ரஷிய நிறுவனத்திலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட தரக்குறைவான பொருட்கள் கூடங் குளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத் தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்பே மேற்கூறிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலையில் பயன்படுத்தியுள்ள நான்கு முக்கிய வால்வுகள் பழுதாக உள்ளதை அணுசக்தி ஒழுங்காற்று வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது. கூடுதலாக அணுஉலையில் பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள் வயர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று முன்னாள் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைப்படி தீர்ப்புக்குப் பின்பாக கூடங்குளம் அணு உலையின் கருவிகளின் பாதுகாப்புத்தன்மை குறித்து ஆய்வு செய்ய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஒரு குழுவை அமைத்ததாகக் தெரிகிறது. இந்தக் குழு கூடங்குளம் அணுஉலைக்குச் சென்றாகக்கூடத் தகவல் இல்லை. அங்கு உள்ள உபகரணங்கள் மற்றும் பிற கருவிகளின் தரத்தன்மையை நேரில் கண்டறியாமல் ஆய்வு அறிக்கை தந்துள்ளது. இந்தக் குழு கூடங்குளம் அணுஉலை தொடர்பாக இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு அனுமதி ஆணைகளை மட்டுமே ஆராய்ந்து அனைத்தும் சரியாக உள்ளதாகக் கூறியுள்ளது. இப்படி யான மேம்போக்கான நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு சுயசார்புடைய நிபுணர்களைக் கொண்ட குழுவின் ஆய்வு கூடங்குளம் அணுஉலைக்குத் தேவை யில்லை என்று உச்ச நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

கூடங்குளம் அணுஉலைகள் 3, 4, 5 மற்றும் 6 வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி ஆணைகள், கூடங்குளம் அணு உலைகள் 1 மற்றும் 2க்கும் பொருந்தும் என்று கூறி யுள்ளது உச்ச நீதிமன்றம். இந்தச் சுற்றுச்சூழல் அனுமதி பலவித கட்டளைக்கு உட்பட்டதாகும். இவை அனைத்தும் கூடங்குளம் அணுஉலை செயல்படுவதற்கு முன்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் மே 2013இல் கூறிய உத்தரவாகும்.

மேற்கூறிய சுற்றுச்சூழல் அனுமதியில் கூறப்பட்டுள்ள கட்டளைகள் பல இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. இவற்றில் முக்கியமான கட்டளை அணு உலையிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுநீர் கடலில் கலக்கும் இடத்தைக் கண்காணிக்க தனி ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பது. கழிவு நீர் நேரிடை யாகக் கடலில் கலக்கப்படாமல் தனிக் குழாய் மூலம் கடல் மையப்பகுதில் செலுத்தப்பட வேண்டும் என்பது மற்றொரு கட்டளை. இந்தக் கட்டளைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இவை அனைத்தும் அணுஉலை செயல்படுவதற்கு முன்பாக அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதே போல மத்திய வனஉயிரினப் பாதுக்காப்பு ஆணையத் திடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மற்றொரு கட்டளையாகும். கடல்சார் உயிரினப் பாதுகாப்புக்கும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இந்த அனுமதி மிகவும் அவசியமானது. இதுவும் இன்று வரை பெறப்படவில்லை.

அணுக்கதிர்வீச்சு பாதுகாப்பு :

நிலையற்ற அணுக்களின் அணுக்கருக்கள் ஒரு நிலையான இடத்தை அடைய முயலும்போது, ஏராளமான ஆற்றல்மிக்க மின்காந்த அலைகளையோ, அதிவிரைவாகப் பறக்கும் அணுத்துகள்களையோ, வெளிப்படுத்தும். இதுவே கதிரியக்கம் எனப்படுகிறது. அப்படி அந்த அணுத்துகள்கள் வெளிப்படும்போது, எதிர்ப்படும் எல்லாவற்றிலும் ஊடுருவும். அதற்கு மனித உடலும் விதிவிலக்கல்ல. நமது உடலின் உள்ளே இந்த சிறிய துகள்கள் போனவுடன் நமது செல்களைத் தாக்கு கின்றன. அச்செல்களில் உள்ள மரபுக்கூறுகள் நேரடி யாகத் தாக்கப்படும்போது, நமது உடற்கூறு உயிரியல் திட்டம் சர்வ நாசமடைகிறது.

இந்திய அணுசக்திச் சட்டம் கதிரியிக்கம் என்பதை இப்படி வரையறுக்கிறது: காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் மற்றும் ஆல்பா, பீட்டா, நியூட்ரான், புரோட் டான் மற்றும் அணுவிசை வெளியிடக் கூடிய அனைத்தும் அணுக்கதிர்களாகும். இந்த வகை கதிர்கள் அயன்களைக் ((Ions)) கொண்டது. செல்போன் கதிர்கள், ஊதா கதிர்கள் என மற்ற எல்லா கதிர்களிலிருந்தும் அணுக்கதிர் வேறுப்படுவது இந்த அயன் தன்மையில் தான். இவை மிகவும் ஆபத்தான கதிர்களாகும்.

அணுஉலையில் அணுக்கதிர் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை மனிதர்களுக்குப் புற்றுநோய் உள்பட பலவித நோய்களை உண்டாக்க வல்லது. எனவே இவை அணுஉலையை விட்டு வெளி யேறாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. இதற்காக 2004ஆம் ஆண்டு அணுசக்தி (கதிர்வீச்சுப் பாதுகாப்பு) சட்ட விதிகள் இயற்றப்பட்டுள்ளன.

அணுக்கதிரியக்கத்தால் மனித உடலில் ஓர் அங்கம் எந்த அளவு பாதிக்கப்படும் என்பது

  1. கதிர்வீச்சின் அளவு மற்றும் கதிர்வீச்சு பெறப்படும் வீதம்
  2. கதிர்வீச்சுக்கு உட்படும் உடலில் பகுதி ஆகியவற்றைச் சார்ந்து அமையும். சிறிய அளவிலான கதிர்வீச்சுகளுக்கு உட்படும்போது தோல் பாதிப்புகள் மற்றும் முடி உதிர்தல் போன்ற குறுகிய கால விளைவுகள் ஏற்படும்.

கதிர்வீச்சின் அளவு 100R அளவுக்கு இருக்கும்போது, லுக்கெமியா என்ற இரத்த வெள்ளை அணுக்களின் அதிகரிப்பு ஏற்படும் (இரத்தச் சிவப்பு அணுக்களின் அழிவு) அல்லது புற்றுநோயைத் தோற்றுவிக்கும். 600ஸி அளவில் கதிர்வீச்சு உடலின்மீது விழும்போது மரணத்தை ஏற்படுத்தும். கதிர்வீச்சு ஏற்படுத்தும் மரபுவழிப் பாதிப்பு மிகவும் மோசமானது. கதிர்வீச்சுகள் இனப்பெருக்கச் செல்களில் உள்ள மரபு அணுக்களைப் பாதிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கடத்தப்படுகிறது.

ஒரு நபர் எவ்வளவு கதிரியிக்கத் தாக்கம் அடையலாம் என்கிற அளவையும் நம் சட்டங்கள் நிர்ணயித்துள்ளது. அதாவது இவ்வளவு அளவிற்கு மட்டுமே ஓர் அணு உலை ஊழியர் கதிரியிக்கத் தாக்கம் பெறலாம் என்று கூறுகிறது சட்டம். அணுஉலை ஊழியர்களுக்கு ஆண் டொறுக்கு 30 mSv மிகாமலும் பொது மக்களுக்கு 1 mSv மிகாமலும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது சட்டம்.

இதனையும் அணுசக்தித் துறையே கண்காணிக்கும் என்பதுதான் வேதனையான ஒன்று. இதுவரை கல் பாக்கம் அணுஉலைக்கு அருகாமையில் உள்ள சுற்று வட்டாரப் பகுதியில் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல கல்பாக்கம் சுற்று வட்டார மக்களிடம் அணுக்கதிரின் தாக்கம் குறித்தோ அதன் விளைவாக ஏதேனும் நோய்கள் உண்டாகி யுள்ளனவா என்பது பற்றியோ ஆய்வுகளை இதுவரை மத்திய அரசோ, மாநில அரசோ மேற்கொள்ளவில்லை.

கூடங்குளம் அணுஉலை சுற்றுவட்டாரப் பகுதியில் அணுகதிரின் அளவு நிர்ணயக்கப்பட்ட அளவைவிட மிகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு ஏற்ப கூடங்குளத்தில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது இதுவரை தெளி வாக மக்களுக்கு விளக்கப்படவில்லை. கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் அணுக் கதிரியக்கத் தன்மையை அளவிடும் ஆய்வு மையங்கள் இதுவரை அமைக்கப்பட வில்லை. அணுஉலையிலிருந்து அணுக்கதிரே வெளி­யாகாது என்னும் அறிவியலுக்கு எதிரான வாதம் மட்டுமே அரசுத் தரப்பால் முன்வைக்கப்படுகிறது. இது மிகவும் தவறான வாதம்.

இந்தியாவெங்கும் இருக்கும் அணுஉலையிலிருந்து வெளியேறக் கூடிய அணுக்கதிரின் அளவை இந்திய அணுசக்தி நிறுவனமே ஆராய்கிறது. இவர்கள் தரும் தகவல்படி இந்திய அணுஉலைகள் தொடர்ந்து நிர் ணயக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் அணுக்கதிரை வெளியேற்றிக்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுத் தகவல்களை சிலர் மறுக்கவும் செய்கின்றனர்.

சரி, இப்படிக் குறைந்த அளவு அணுக்கதிர் வெளி யாகுவதாக வைத்துக்கொள்வோம். தொடர்ச்சியாக பல வருடங்கள் தினமும் இப்படிக் குறைந்த அளவு அணுக்கதிர் வெளியாகிக்கொண்டே இருக்கும்போது, அது தொடர்ந்து சுற்றுச்சூழலில் கலக்கும்போது என்ன பாதிப்புகளை, மாற்றங்களை ஏற்படுத்தும்? இதற்கான ஆய்வுகள் போதிய அளவில் இல்லை.

அணுக்கழிவு மேலாண்மை:

அணுஉலை செயல்படுகின்றபோது சுமார் 200 விதமான அணுக்கதிரியக்கப் பொருட்கள் வெளியாகின் றன. ஓர் அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை (Radioactive Spent Fuel Wastes) உண்டாக்கும். அணு கதிரியக்கத் தன்மையுடைய இவற்றை அழிக்க முடியாத காரணத்தால் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் இவற்றைப் பாதுகாக்க வேண்டும். அணுஉலையிலிருந்து வெளி யாகும் அணுக்கழிவுகள் இயற்கையாக இருந்ததைவிட கோடி மடங்கு அதிகமான கதிரியக்கத் தன்மையுடன் இருக்கும்.

1987ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி (அணு கதிரியக்கக் கழிவுப் பாதுகாப்பு மற்றும் அழிப்பு) சட்ட விதி, கதிரியக்க எருக்கழிவு பாதுகாப்புப் பற்றிக் கூறுகிறது. இந்த சட்டவிதிப்படி அணு உலை செயல்படுவ தற்கு முன்பாக உலையிலிருந்து வெளியேறக் கூடிய அணுக்கழிவின் அளவைப் பற்றிய தகவல்களையும் அது சுற்றுச்சூழல்மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய மதிப்பீடும் தெரிவித்திருக்க வேண்டும். இத்தகைய ஆய்வுகள் கூடங்குளம் அணுஉலையில் மேற்கொள்ளப்படவில்லை.

வாயுக்களாகவும் நீராகவும் வெளியாகும் அணுக் கழிவுகளை “குறைந்த அளவு அணுக்கதிரியக்கத் தன்மைக் கொண்ட கழிவுகளாக” வகைப்படுத்தப்படுகிறது இந்திய அணுசக்தித் துறை. இந்த வகை வாயுக்கழிவுகளில் உள்ள அணுகதிரியிக்கப் பொருட்கள் நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவதாக அணுசக்தித் துறை கூறுகிறது. இந்தச் செயலை “Venting” என்று அழைக்கின்றனர். ஆனால் இத்தகைய வாயுக்களில் பல அணுக் கதிரியக்கப் பொருட்கள் இருக்கவே செய்கின்றன. திரவக் கழிவுகள் கடலில் அல்லது வேறு நீர்நிலையோடு கலக்கப்படும். இவையும் கதிரியக்கத் தன்மை உடையவையே. இப்படி வெளியேற்றப்படும் அணுக்கதிரியக்கப் பொருட்கள் அனுமதியளிக்கப்பட்ட கதிரியக்க அளவைவிட மிகாமல் இருப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

சில வகையான கழிவுகள் கான்கிரீட் சிமிண்ட்டுடன் கலக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் சில வகை கழிவுகள் அதாவுது ஆபத்தான அணுக்கதிரியிக்க தன்மைகொண்ட கழிவுகள் தொடர்பான மேலாண்மைக்கான சரியான தீர்வு இன்னும் கண் டறியப்படாமல் உள்ளது. இத்தகைய கழிவுகளின் பாதிப்புகளைப் பற்றி சுயசார்புடைய நடுநிலையான ஆய்வுகள் மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பற்றித் தெரியவரும்.

மிகவும் ஆபத்தான உயர் அளவு அணுக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான நிரந்தரத் திட்டம் இந்தியாவிடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உலகெங்கும் செய்வதுபோல இந்தியாவும் இவற்றை ஆழ்கிணறு தோண்டி நிலத்தடியில் புதைக்கவே எண்ணியுள்ளது. ஆனால் இத்தகைய திட்டத்திற்கான இடத்தை இன்றுவரை இந்திய அணுசக்தி நிறுவனம் தேர்வு செய்யவில்லை. இத்தகைய இடத்தைத் தேர்வு செய்வது என்பது சமூக- அரசியல் பிரச்சனையாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கோலார் தங்கச் சுரங்கங்களை ஆராய்கிறோம் என்று கூறியதற்கு எழுந்த எதிர்ப்பு இதனை உறுதி செய்கிறது. இதனையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி உத்தரவிட்டுள்ளது (மே 2013): “அணுஉலையிலிருந்து உருவாகும் அணுக்கழிவுகளின் அயனியாக்கும் (ionizing) )அணுக்கதிரியக்கதால் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் மனித ஆரோக்கியத்திற்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத் தீங்கும் நேராமல் மேலாண்மை செய்யப்பட வேண்டும், மேலும் அதனைக் கண்காணிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.”

மேலும், அணுக்கழிவுகளை நிரந்திரமாக பூமிக்கடியில் புதைப்பதற்கான இடத்தைக் கூடிய விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது (மே 2013): “ஆழ்கிணறு தோண்டி பூமிக்கு அடியில் அணுக் கழிவுகளைச் சேமிக்கும் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுவதன் மூலம் அணுஉலையிலிருந்து அணுக் கழிவுகளை இடம்மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும். இந்திய அணுசக்தி நிறுவனம் இதனை நிறைவேற்ற ஐந்தாண்டு காலம் ஆகும் என்று கூறி யுள்ளது. மத்திய அரசு, இந்திய அணுசக்தி நிறுவனம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், அணுசக்தித் துறை மற்றும் பல அமைப்புகள் நிரந்தர நிலத்தடி அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை விரைவாக உருவாக்கத் துரித நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளைச் சேமித்து வைத்திருப்பதன் ஆபத்து குறித்தான மக்களின் அச்சம் நீக்கப்படலாம்.”

நிரந்தர அணுக்கழிவு மேலாண்மைத் திட்டம் இந்தியாவிடம் இல்லாததையும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது: “... .... ... இந்திய அரசு, இந்திய அணுசக்தி நிறுவனம் மற்றும் பலரை எச்சரிக்க விரும்புவது என்னவென்றால் அணுக் கழிவுகளை நிரந்திரமாக நிலத்தடியில் ஆழ்கிணறுகளில் புதைத்துவைக்கக் கூடிய இடத்தைக் கண்டறிய வேண்டும் என்பது தான். தீர்ந்து எரிந்த அணுக்கழிவுகளை அணுஉலைக்கு அருகாமையில் சேமித்து வைப்பதென்பது நீண்ட காலப்பொழுதில் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகவும் சுற்றுச்சூழலுக்கு அபாயமாகவும் அமையக்கூடும். .... எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் கண்டறியப்படலாம் என்பது தவிர்த்து இந்திய அணுசக்தி நிறுவனத்திடன் அணுக்கழிவு மேலாண்மை குறித்தான எதிர்காலத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று தெரிகிறது”.

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் 1989ம் ஆண்டே கூடங்குளம் அணுஉலையில் இருந்து வரக் கூடிய அணுக்கழிவுகளை அணுஉலையின் பக்கத்திலேயே சேமிக்காமல் தொலைதூரத்தில் சேமிக்க வழிகாண வேண்டும் என்று கூறியுள்ளது. இன்றுவரை இது செயல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது (மே 2013) : “கூடங்குளம் அணுஉலைத் திட்டப் பகுதிக்குள் ளாக, அணுஉலைக்குத் தொலைவாக, அணுக்கழிவு சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய வேண்டும். மேலும், அவற்றின் வடிவமைப்பு பாதுகாப்புத்தன்மை ஆகியவற்றை அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் காலந்தோறும் ஆராய்வதன்மூலம் சுற்றுச் சூழலுக்கு அணுக்கழிவால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும். இதன் மூலம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்களைப் போக்க முடியும்.” மேற்கூறிய அணுக்கழிவு தொடர்பான இரண்டு உத்தரவுகளும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் பரிந்துரைகள்:

அணுசக்தி ஒழுக்காற்று வாரியக் குழு கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு தொடர்பாக வழங்கிய 17 பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் மே 2013இல் கூறியது உச்ச நீதிமன்றம். இவற்றில் 15 பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, மீதம் உள்ள இரண்டை நிறைவேற்ற நீண்ட காலம் தேவைப்படும் என்று அணுசக்தித்துறை உச்சநீதிமன்றத் தில் தெரிவித்துள்ளது. நிறைவேற்றப்படாத இந்த இரண்டு பரிந்துரைகளும் அணுஉலையில் உள்ள ரியாக்டரின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பானவையாகும்.

அணுசக்தி ஒழுங்காற்று வாரியக் குழுவின் பரிந் துரைகளின் முக்கிய அம்சம், இவை அனைத்தும் புகுஷிசிமா அணுஉலை விபத்திற்குப் பின்பாகத் தரப்பட்டவை என்பதுதான். எந்த ஓர் அணுஉலைக்கும் இரண்டு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஒன்று அணுஉலை வடிமைப்புக்கு ஏற்ப நேர வாய்ப்புள்ள விபத்துகளைக் கட்டுப்படுத்தும் அம்சங்கள். இரண்டு அணுஉலை வடிமைப்புக்கு மீறி ஏற்படக் கூடிய விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள். மேற்கூறிய பரிந்துரைகள் இந்த இரண்டு அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.

பேரிடர் மேலாண்மை :

அணுஉலையில் விபத்து நேருகின்றபோது அதனை கையாளுவதற்கு ஏற்றவகையில் மத்திய, மாநில, மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகள் தயாரிப்பு நிலையோடு இருக்க வேண்டும் என்று அணுசத்தி சட்டவிதிகள் கூறுகின்றன. குறிப்பாக அணுவிபத்து நேருகின்றபோது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசரத் தயாரிப்புநிலை செயல்பாடுகளைப்பற்றி திட்டமும் மற்றும் அணு உலை சுற்றுப்புரத்தில் மேற் கொள்ள வேண்டிய அவசரத் தயாரிப்பு நிலை குறித்த திட்டமும் ஒவ்வொரு அணுஉலை சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று “அணு விபத்துகளைக் கையாளுவதற் கான முன்தயாரிப்பு” நிலைக்கான சட்டவிதிகள் கூறுகிறது. இந்தத் தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப் பாளருக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அணு உலை விபத்து குறித்த அவசரத் தயாரிப்பு நிலைக்கான திட்டஅறிக்கை 2009ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தயாரிப்புநிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. கூடங்குளம் அணுஉலையைப் பொருத்தவரை இத்தகைய விதகள் இன்னும் நடைமுறைப்படுத்தபடாமல் இருப்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக பேரிடரின்போது மக்களை வெளியேற்ற சாலை வசதி, போக்குவரத்து வசதி, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மருத்துவ வசதி, மருத்துவர்களுக்கான பயிற்சி, பல்வேறு அரசு நிர்வாகப் பணியாளர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சிகள் போன்ற எவையும் இன்னும் நடைமுறைப்படுத்தபடாமல் உள்ளது. இதை விடப் பெரிய கொடுமை என்வென்றால் கூடங்குளம் அணுஉலை பேரிடர் மேலாண்மை அவசர முன் தயாரிப்புத் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டமே சேர்க்கப்படவில்லை என்பது தான். எந்த ஓர் அணு உலைக்கும் பேரிடர் அவசர முன்தயாரிப்புத் திட்டத்தை தயாரிக்கும்போது அணுஉலைச் சுற்றியுள்ள 30 கிலோ மீட்டர் வட்டாரப் பகுதிகள் கணக்கில் எடுக்கப்படும். அதாவுது விபத்து நேர்கின்றபோது மக்களை வெளி யேற்ற வேண்டிய பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அந்த வகையில் கூடங்குளம் அணுஉலையின் அவசரத் தயாரிப்புத் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய அவலாமாகும்.

குற்றவியல் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்:

சுமார் மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தில், அரசு இதுவரை சுமார் 349 வழக்குளை சுமார் 2 லட்சம் மக்கள் மீது பலவேறு தண்டனைப் பிரிவு களில் குற்றவியல் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. இவற்றில் தேசத் துரோக வழக்குகளும் அடங்கும். மேலும் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் கீழ் பலமுறை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், அணுஉலைக்கு எதிரான மாற்றுக் கருத்துகள் மற்றும் ஜனநாயகபூர்வாமான போரட்டங்கள், தொடர்ந்து கடுமையான சட்டப் பிரிவுகள் மூலம் ஒடுக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டப் பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் “போராட்டக்காரர்கள் மீதான குற்றவியல் வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளப்படுவதன் மூலம் கூடங்குளம் மற்றும் அருங் கான்மை இடங்களில் அமைதி திரும்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியது.

உச்ச நீதிமன்றத்தீர்ப்பிற்கு முரணாக மாநில அரசோ 248 வழக்குகளை மட்டுமே திரும்பப்பெற முடியும் என்று தற்போது தெரிவித்துள்ளது. மீதம் உள்ள 101 வழக்குகளில் 6 வழக்குகள் கடல்வழி அணுஉலை முற்றுகை, 40 வழக்குகள் தனி நபர்களுக்கு எதிரானது, 55 வழக்குகள் அரசு அலுவலர்களுக்கு எதிரானது எனவே இவற்றைத் திரும்பப்பெற முடியாது என்று கூறியுள்ளது தமிழக அரசு. இந்த வாதத்தை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுதான் நமக்குக் கவலை அளிக்கின்றது. அரசு பின்வாங்கத் தயாராக இல்லாத வழக்குகளைக் குறித்த முடிவை கீழ் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம் (மே 2014).

கூடங்குளம் அணுஉலை என்பது தற்போதைய நிலையில் கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மீது அவர்களது எதிர்ப்பை மீறி திணிக்கப்பட்ட திட்ட மாக இன்று உள்ளது. குறைந்தபட்சம் இந்திய அணு சக்திச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் போன்றவற்றில் கூறியுள்ள அம்சங்களைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அணுசக்தி நிறுவனம் தயாராக இல்லை என்பது தான் வேதனையான உன்மை. இந்தியச் சட்டங்களுக்கு புறம் பாகத்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதில் உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவு களை நடைமுறைப்படுத்த போதிய நடவடிக்கை மேற் கொள்ளவில்லை என்பது அரசமைப்புச்சட்டக் கடமையை மீறிய செயலாகும். சில நேரங்களில் நீதி தேவன்கள் மயங்கிப் போகிறார்கள். நீதிதேவனின் மயக்கம் என்பது மக்களின் எதிர்க் குரலால் மட்டுமே விழிப்படையச் செய்ய முடியும்.

Pin It