மனிதர்கள் உள்ளவரை இருக்கும் உணவுச் சந்தையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பேராசைப்படும் வணிக நிறுவனங்களின் உணவு அரசியலின் ஒரு பகுதியே மரபணு மாற்றுப் பயிர்கள், விதைகள்.

• மரபணு மாற்று விதைகளை விதை நிறுவனங்கள் வணிக இலாபத்திற்காகத் தயாரிக்கின்றன.

• அந்தந்த வணிக விதை நிறுவனத்தின் தனித்த சொத்தான இவ்விதைகளின், பயிர்களின் நன்மை தீமைகள், சாதக, பாதகங்களை ஆராய்வதற்கும் இந்த நிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே ஆய்வு செய்ய முடியும். சுதந்திரமான ஆய்வுகள் நடத்த மான்சான்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை உலகில் எவரையும் அனுமதிக்கவேயில்லை.

• ஆகவே இயற்கைக்கு மாறான மரபணு மாற்றுப் பயிர்களை அறிவியல் உலகம் இன்னும் அறிவியல் பூர்வமாக முழுமையாக சோதிக்கவேயில்லை.

• இந்தியாவில் இவற்றை முழுமையாக ஆராய்வதற்குரிய ஆய்வுக்கூடங்களையும், அறிவியல் வல்லுநர்களையும் உருவாக்க 10 ஆண்டுகள் தேவை என்கிறது உச்சநீதி மன்றத்தின் வல்லுநர் குழு.

• மரபணு மாற்றுப்பயிர்கள் உணவு உற்பத்தியை அதிகரிப்ப தில்லை, பயிர்களை எல்லாப் பூச்சிகளிடமிருந்தும் காப்பதுமில்லை.

• இங்கிலாந்து அரசின் உத்தரவால் நடத்திய சோதனையில் மரபணு மாற்று விளைபொருட்கள் (உருளைக்கிழங்கு) கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், உணவுப்பாதை போன்ற உள் உறுப்புகளில் கட்டிகள், புண்கள், வீக்கம், புற்றுநோய் ஆகியவற்றை உருவாக்குகின்றன என்று ஆர்பட் புஸ்தாய் என்ற விஞ்ஞானி கண்டறிந்து தெரிவித்ததற்காகவே அவரை பணிநீக்கம் செய்தார்கள்.

• முதன்முறையாக பிரஞ்சு அரசின் உதவியால் நடத்தப் பட்ட பல தலைமுறைகளுக்கு உணவாகக் கொடுக்கும் ((Multi Generational Feeding Test)) சோதனையில் எலிகளில் தலைமுறை தலைமுறைக்கு இனப்பெருக்க சக்தி குறைவதைக் கண்டறிந்தார் செராலினி என்ற விஞ்ஞானி. இவர் ஒரு நல்ல ஆய்வாளரே இல்லை என்று உலகளவில் அவர் மீது களங்கம் கற்பித்து பிற விஞ்ஞானி களையும் பயமுறுத்துகின்றன மரபணு மாற்று விதைகள் தயாரிக்கும் நிறுவனங்கள்.

• தவறான அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களில் திணிக்கப்பட்ட மரபணுக்கள் பிற தாவரங்களுக்கும் பரவி, மரபணு மாசுபாட்டை உருவாக்குகின்றன.

• சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி இரண்டு வகை மரபணு மாற்றுப்பயிர்களையே உருவாக்கியுள்ளன. பி.டி. வகை, மற்றொன்று எவ்வளவு களைக்கொல்லியைத் தெளித்தாலும் தாங்கும் சக்தி கொண்டவை என்ற 2 வகைகள் மட்டுமே உள்ளன.

• 170க்கும் அதிகமான உலக நாடுகளில் 13 நாடுகளில் மட்டுமே மரபணு மாற்றுப்பயிர்கள் உள்ளன. அதிலும் 5 நாடுகளில் மட்டுமே அதிக பரப்பில் உள்ளன. அத்துடன் சீனம் அண்மையில் மரபணு மாற்று நெல், மக்காச்சோளத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது.

• தனது ஹவாய் தீவு அமெரிக்கப் பருத்தியின் தாயகம் என்பதால் அங்கு பாரம்பரிய மூல இரகங்கள் மரபணுக் கலப்படம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஹவாய் தீவில் மரபணு மாற்றுப் பருத்தியை அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால் இந்திய அரசோ இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட நெல், பருத்தி, கத்தரி உள்ளிட்ட பல மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிக்கிறது.

• ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய நாடுகளும் மரபணு மாற்றுப் பயிர்களைத் தடை செய்துள்ளன. பல ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் மரபணு மாற்றுப் பயிர்களுக்குத் தடை விதித்துள்ளன.

• மரபணு மாற்றுப்பண்டங்கள் புழக்கத்தில் வந்தபின் அமெரிக்கர்களிடம் ஒவ்வாமை, புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பிற உணவு சார்ந்த நோய்கள் அதிகரித்துள்ளன.

• இந்தியாவின் உணவுத் தேவையை மரபணு மாற்றுப் பயிர்களால் பூர்த்தி செய்ய இயலாது என்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு.

• “பூச்சிகளைக் கட்டுப்படுத்த வெற்றிகரமான மாற்று வழிகள் உள்ளபோது பி.டி. கத்தரி அவசியமில்லை” பி.டி. கத்தரியைத் தடைசெய்த அறிக்கையில் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

• இப்படி உண்மைகள் கொட்டிக்கிடக்க, அறிவியலைத் தடுக்க முடியாது என்று கூறி, மத்திய அரசு இப்பயிர்களை அனுமதிப்பது இந்திய மக்களை ஆபத்தில் தள்ளுவதாகும். இப்படி மரபணு மாற்றுப்பயிர்களை வயல்வெளியில் சோதிக்க அனுமதிப்பது என்பது இந்திய மக்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் சோதனை எலிகளாக மாற்றுவதேயாகும்.

• மரபணு மாற்றுப்பயிர்களை வயல்வெளிகளில் சோதனைக் காகப் பயிரிட்டபோது மகரந்தம் மூலம் பிற பயிர்களில் கலந்து அவற்றையும் மரபணு மாற்றுப் பயிர்களாக மாற்றியதால் அமெரிக்க விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

• மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் அறிவியல் அல்ல, அது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அறிவியல் அடிப்படைகள் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு எதிராகவே உள்ளன.

மரபணு மாற்றுப்பயிர்கள் உலகின் இயற்கை வளத்திற்கு எதிரானவை, மனிதகுலத்தின் நலனுக்கு எதிரானவை என்பதால் அவற்றைத் தடுத்து நிறுத்தும் பணி நம் எல்லோருடைய பொறுப்பும் ஆகும்.

நம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கும் வகையில் தாங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ‘பிரதமரை வலியுறுத்துகிறோம்’ கடிதத்தைக் கையப்பமிட்டு பூவுலகின் நண்பர்கள் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். உங்கள் சார்பில் அவை பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அரசு நல்லன செய்யத் தவறும்போது அதை நல்வழிப் படுத்தும் பொறுப்பு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நம் அனைவரின் கடமை என்பதால் மரபணுமாற்றுப் பயிர்கள் குறித்த நிலையில் மத்திய அரசை நல்வழிப் படுத்துவோம்.

பூவுலகின் நண்பர்கள்

எண்:106/1, முதல்தளம்,

கனகதுர்கா வணிக வளாகம்

கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி

சென்னை600 026

கைப்பேசி: 98416 24006

இணையம்: www.poovulagu.org,

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வலைப்பூ: www.poovulagu.net

https://www.facebook.com/poovulagu

Pin It