பாதுகாப்புக்கான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள்

கூடங்குளத்தில் தரமற்ற ரஷ்ய கருவிகள், உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டிருப்பது, இந்திய மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது - தமிழக, மத்திய அரசுகள் சுயேச்சை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ரஷ்ய கம்பெனிகளான ஜியோ பொடால்ஸ்க், இன்ஃபார்ம்டெக், பவர் மெஷின்ஸ், இஸோர்ஸ்கையி ஸாவடி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட தரமற்ற கருவிகள், உதிரி பாகங்கள் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் பொருத்தப்பட்டிருப்பது இந்திய மக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் வெளிப் படையான, உடனடி ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

இது தொடர்பாக PMANE ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.பி. உதயகுமாருக்கு 2013 ஏப்ரல் 29ந் தேதி என்.பி.சி.ஐ.எல். அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்தில் (கடித எண்: NPCIL/VSB/CPIO/2574/ KKPN /2013/737), சர்ச்சைக்குரிய மற்றும் ஊழலில் சிக்கிய ஜியோ பொடால்ஸ்க் நிறுவனம், கீழ்க்கண்ட கருவிகள், உதிரிபாகங்களை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு விநியோகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது:

“நீராவி இயந்திரங்கள், காஷன், அனியன் வடி கட்டிகள், இயந்திர வடிகட்டி, ஈரப்பத பிரிப்பான், மறு வெப்பமூட்டி, போரிக் நீர்ம சேகரிப்புத் தொட்டி, ரீஜெனரேட்டிவ் புளோ டௌன் ஹீட் எக்சேஞ்சர், குழாய்கள், பல்வேறு அமைப்புகளுக்கான ஃபிட்டிங்க்ஸ், வெப்பத்தடுப்புப் பொருள்கள், பி.எச்.ஆர்.எஸ். ஹீட் எக்சேஞ்சர்”

2012 ஃபிப்ரவரியில் ஜியோ பொடால்ஸ்கின் கொள்முதல் பிரிவு இயக்குநர் செர்காய் ஷ¨ட்டோவ், தரம் குறைந்த, விலைகுறைவான மூலப்பொருள்களை வாங்கிவிட்டு, அதை மேம்பட்ட தரம் உடையதாகக் கூறியது மட்டுமில்லாமல், வித்தியாசத்தை மறைத்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப் பட்டார்.

இதை தனித்த நிகழ்வாகப் பார்க்க முடியாது. ஜியோ பொடால்ஸ்க், இது போன்ற தரம் குறைந்த கருவிகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது தொடர்பாக நீண்ட வரலாறு இருக்கிறது.

அந்த வகையில் கடைசியாக கவனத்துக்கு வந்த முக்கியமான நிகழ்வு, சீனாவில் தியான்வான் அணு மின்நிலையத்தின் முதல் உலைக்கான தரம்குறைந்த நீராவி இயந்திரக் குழாய்களை அது விநியோகம் செய்திருந்ததுதான். இதன் காரணமாக அந்த அணு உலையை இயக்குவதில் ஓராண்டுக்கு மேலாக தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சினை சீனா, ரஷ்யா இடையிலான உறவில் முக்கிய உரசல் ஏற்படக் காரணமாக அமைந்தது.

தியான்வான் அணு மின் நிலைய உலை 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் செர்னோபில் விபத்துக்குப் பின், வெளிநாடு ஒன்றில் ரஷ்ய கூட்டமைப்பு கட்டிய அணுஉலைகள் ஆகும். முதல் உலை 1999 அக்டோபர் 20ந் தேதி கட்டப்படத் தொடங்கியது, திட்டமிட்டபடி கருவிகளைப் பொருத்துதல் 2003 அக்டோபரில் முழுமையாக முடிந்தது. அணுஉலை செயல்பாட்டுக்கான முன்தயாரிப்பு 2003 ஏப்ரல் 29ந் தேதி தொடங்கப்பட்டு, 2005 பிப்ரவரியில் முதல் தயாரிப்பு நிலைக்கு வந்தது. 2005 அக்டோபரில் அணுஉலை கிட்டத்தட்ட செயல்படும் நிலைக்கு வந்தபோது, ஜியோ பொடால்ஸ்க் நிறுவனம் விநியோகம் செய்த, நான்கு நீராவி இயந்திரங்களின் ஒன்றினுடைய குழாயில் விரிசல்கள் கண்டறியப்பட்டன.

ஆனால் ரஷ்ய பொறியியல், கொள்முதல், கட்டுமான நிறுவனமான ஆட்டம் ஸ்டிராய் எக்ஸ்போர்ட், இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், அணுஉலை திட்டமிட்டபடி செயல்படத் தொடங்கும் என்றும் கூறியது. அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் கூறியதன்படி: “எங்களுடைய நீராவி இயந்திரங்களில் உள்ள குழாய்கள் ஒடுங்குவதை தாங்கக்கூடிய வகையிலேயே உள்ளன. இந்தத் திட்டத்துக்கு சில வரம்புகள் உண்டு. இந்த வெப்ப உற்பத்திக் கருவி, சாதாரண கொள்ளளவில் அதன் ஆயுளின் கடைசி வரை இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது”

இருந்தபோதும், சீன தேசிய அணுசக்தி கழகத்தின் (சி.என்.என்.சி.) அதிகாரிகள் இதை ஏற்றுக் கொள்ள வில்லை. இந்தப் பிரச்சினையைப் பற்றி புரிந்துகொள்ள அவர்கள் ஆராய்ச்சியை தொடங்கினர். இந்த தரம் குறைந்த குழாய்கள், பம்ப்களை முற்றிலும் புதிதாக மாற்றித் தர வேண்டும் என்று ஆட்டம் ஸ்டிராய் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் அவர்கள் கோரினர்.

இந்த நிகழ்வுகள் பற்றி தியான்வான் ரஷ்ய அணு உலைகளை வடிவமைத்த நிறுவனமான ஜிட்ரோ பிரெஸ் -இன் துணைத் தலைமை கட்டுமான நிபுணர் டிமிட்ரி எர்மகோவ் 2008இல் அளித்த பேட்டியில்:

“தியான்வான் திட்டத்தில் நிறைய விஷயங்கள் புதுமையானவை. எடுத்துக்காட்டாக அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பம்ப், அணுஉலை, டிரைவ் போன்றவை புதியவை”

“இந்த அணு உலையில் சில பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டோம். நீராவி இயந்திரங்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. பம்ப்புகள் பலமுறை பழுதுபட்டன.”

“இந்த இடத்தில் தியான்வான் முதல் அணுஉலைத் திட்டம் என்பது முற்றிலும் தனித்தன்மை கொண்டது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சோவியத் காலத்தில், முதலில் ரஷ்யாவுக்கு உள்ளேயேதான் பிரதான அணுஉலைகளை கட்டி, பரிசோதனை செய்து, அதன் பிறகே வெளிநாட்டுச் சந்தைக்குச் சென்றோம். ஆனால், சீனாவில் ஏற்பட்ட நிலைமையோ வேறு. தியான்வான் வகை அணு உலையை நாம் ரஷ்யாவில் கட்டிப் பார்க்கவில்லை. நேரடியாக சீனாவில் கட்டிக் கொண்டிருகிறோம். எனவே நாம் பரிசோதிக்காமல் இந்த உலையை சீனாவில் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது”

“உலையில் குறைபாடுகள் இப்போது கண்டறியப் பட்டுள்ளன. இது குறித்து சீனர்கள் பெரிதாகக் குரல் எழுப்புகிறார்கள். தியான்வான் அணு மின்உலையின் பாதுகாப்பு குறித்து மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் என்று அவர்கள் நம்மைக் கடுமையாக வற்புறுத்துகிறார்கள்.”

“இது சீனர்களின் வழக்கமான அணுகுமுறை போலத் தெரிகிறது. தியான்வான் அணுமின் நிலை யத்தில் உள்ள சீன சக ஊழியர்கள் நம்மீது கடுமையான கட்டுப்பாடுகளை சுமத்துவதாக, ரஷ்ய நிறுவனங்களும் கூறுகின்றன. ஆனாலும் அவர்களது இந்தக் கோரிக் கையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் - ஏனென்றால், இந்த அணு உலைகளை அவர்கள் நம்மிடமிருந்து பணம் கொடுத்து வாங்குகியிருக்கிறார்கள். எனவே, அவை குறைவான பிரச்சனைகளையும், அதிகத் தரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது நியாயம்தானே?“

கடைசியில் சீன தேசிய அணுசக்தி கழகத்தின்கோரிக்கையை ஆட்டம்ஸ்டிராய் எக்ஸ்போர்ட் நிறுவனம் வேறு வழியின்றி ஏற்கவேண்டி வந்தது. பழுதுபட்ட, தரம் குறைந்த குழாய்களையும், பம்புகளையும் மாற்றித் தந்தது. தியான்வான் முதல் அணுஉலை 2007 மே 17ந் தேதி அன்று, ஓராண்டு தாமதமாக, தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியது.

அந்த அணுஉலை செயல்படுவதற்கு ஓராண்டு தாமதம் ஆனதற்குக் காரணம், ஜியோ பொடால்ஸ்க் நிறுவனம் தரம் குறைந்த உதிரி பாகங்களை விநியோகம் செய்ததே.

உலகெங்கும் உள்ள அணுமின் நிலையங்களுக்கு தரக் குறைவான, போலியான உதிரிபாகங்கள் விநியோகம் செய்யப்படுவது தொடர்பான அறிக்கையில் முக்கியமான இந்த விஷயம் இடம்பெற்றுள்ளதை, இந்த நேரத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும்.  (பொருளாதார கூட்டுறவு, மேம்பாட்டு நிறுவனம்) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அணுசக்தி முகமை 2011 அக்டோபரில் வெளியிட்ட “OPERATING EXPERIENCE REPORT : COUTERFEIT,SUSPECT AND FRAUDULENT ITEMS’”2011)9, பக்கம் 75] என்ற அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. 15 நாடுகளில் உள்ள (அணுசக்தி) ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அணு உலைகளின் பாகங்களின் தரம் குறித்த கேள்விகளை அனுப்பி பதில்களைப் பெற்றதன் அடிப்படையில், தரக்குறைவான, போலியான உதிரிபாகங்கள் விநியோகிக்கப்படுவது தொடர்பான ஓர் அறிக்கையை அது முன்வைத்தது. ரஷ்யாவில் இந்தப் பிரச்சினை எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றி அந்த அறிக்கை பின்வரும் கருத்துக்களைக் கூறுகிறது:

“அணு உலைகளில் உள்ள கருவிகள் குறித்து உறுதி செய்யப்பட்ட போலியான மற்றும் மோசடியான செயல்பாடுகளைத் தடுக்கவோ, கண்டுபிடிக்கவோ, அறிக்கை சமர்ப்பிக்கவோ, விசாரணை நடத்தவோ ரஷ்ய (அணுசக்தி) ஒழுங்குமுறை ஆணையத்திடம் எந்த எழுத்துரீதியிலான சட்டங்களோ, நடைமுறைகளோ இல்லை”

இந்தப் பின்னணியில்தான், கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்ய ஒப்பந்ததாரர் விநியோகம் செய்துள்ள கருவிகள் தரம்குறைந்தவை, மோசடியானவை என்பது பற்றி மத்திய அரசும், தமிழக, கேரள மாநிலங்களும் விரிவான, முழுமையான, சுயேச்சையான விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

தமிழில்: வள்ளியப்பன்

Pin It