பொது இடங்களை கழிப்பறையாக பயன் படுத்துவது, விதிகளை மீறிய செயல்களில் ஈடுபடுவது, பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது இப்படி எந்த குற்றச்சாட்டையும் பெண்கள் மீது வைக்கமுடியாது. ஏன்னெனில்  பொது இடங்களில் சட்டத்திற்குட்படுவதும், மதிப்பதும் தான் பெண்ணின் இயல்பு. இப்படி இயல்பாக பெண்களிடம் உள்ள குணங்கள் தான் அவர்களை மீறிப் போகும் பல செயல்களுக்கு வீதியில் இறங்கி போராட்ட களம் காண வைக்கிறது.

ஆண்களின் போராட்டம் போன்று அடையாளப் போராட்டமாக இல்லாமல் தொடர்ந்து தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருக்க  கூடிய தீர்க்கமான முடிவுகளை பெண்கள் எடுப்பர். தனி நபர் போராட்டமாக 12 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளாவில் ஆரம்பித்து குழுவாக இணைந்து போராடும் பல்வேறு போராட்டங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இயற்கையையும் பெண்ணையும் இவ்வுலகில் பிரித்து பார்க்கவே முடியாது.

பெண்தான் சுற்றுச் சுழலோடு தொடர்புடைய பல வேலைகளைத் தினமும் செய்துக் கொண்டே இருக்கிறாள். அந்த வகையில் தன்னோடு ஒன்றிய சுற்றுச்சூழலை பேணிக் காப்பதற்கான போராட்டக் களம் கண்டவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்தை சேர்ந்தவர் தனலட்சுமி..

சுதந்திரப் போராட்ட தியாகியின் பேத்தி என்ற புள்ளியில் ஆரம்பிக்கிறது தனலட்சுமியின் பொது வாழ்க்கை கூலி விவசாய குடும்பம் என்பதால் விவசாயம் மீதான ஈர்ப்பும் இயல்பாகவே தனலட்சுமிக்கு இருக்கிறது. எதிர்கால நடைமுறை சிக்கல் பற்றிய சிந்தனை ஏதும் இல்லாமல் தனக்கு சோறிடும் காவிரி ஆற்றுக்கு மணல்குவாரி என்ற பெயரில் பங்கம் வர..

பதறிப்போய் சட்டத்தின் வழியாக போராட ஆரம்பிக்கிறார் தனலட்சுமி. தமிழகத்தில் உற்பத்திச் செலவின்றி போட்ட முதலை பன்மடங்காக அதிகரிக்க வைக்குமளவில் மணல் கொள்ளைகள் கொடிகட்டிப் பறக்க தொடங்கிய கால கட்டம் அது. சட்டம் இயற்றும் அரசியல்வாதிகளின் கண்ணசைவோடு, அதிகாரிகளின் கைவரிசையோடு ஆற்றின் வயிற்றைக் கிழித்து சுரண்டிக் கொண்டே இருக்கும் இந்த சுரண்டல் மாஃபியாக்கள் குறித்த பயமின்றி தனி நபராக போராட ஆரம்பிக்கிறார் தனலட்சுமி.

சுற்றுச்சூழலுக்கு மணல்கொள்ளையினால் வரும் கேடுகள் குறித்த பிரச்சாரத்தை மெதுவாக ஊர் மக்களிடம் முன் வைக்கிறார். வழக்கம் போல் பொது பிரச்சனைக்காக வீதிக்கு வரும் பெண்களை ஒடுக்க. ‘‘என்ன  பெண்ணை இப்படி வளத்திருக்காக? ஊரில் உள்ள ஆம்புளகள மதிக்காம இப்படி போராட்டம் எல்லாம் பொம்பளபுள்ளைக்கு தேவையா’’ என்று போகிற போக்கில் ஊருக்கு (அ)நியாயம் சொல்லுகிறோம் என்ற பெயரில் பெண்களை ஓடுக்க நினைக் கிறவர்களிடம் இருந்து தனலட்சுமியும் தப்பவில்லை. இந்தப் பேச்சுகளை எல்லாம் செவிகளுக்குள் ஏற்றாமல் தொடர்ந்து பிரச்சனை குறித்து செவிமெடுக்க வைக்க சாகும் வரை உண்ணாவிரதம் அறிவத்தார்.

சட்டத்தின் உதவியோடு போராட்டங்களை கையாண்டாலும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.. தனது அப்பாவுடன் சிறை சென்று திரும்பிய பிறகு தான் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தி இருக்கிறார். நாமக்கல் மாவட்ட அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் தனலட்சுமியின் உக்கிரப் போராட்டத்தை செயலிழக்க வைக்க செய்த முடிவு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவி தனலட்சுமிக்கு கொடுக்கப்பட்டது. அரசு பணி கிடைத்தால் தனலட்சுமி பொது பிரச்சனையில் மூக்கை நுழைக்க மாட்டார் என்ற பொதுப் புத்தியை, கிடைத்த வாய்ப்பை இன்னும் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட தனலட்சுமி. சுக்கு நூறாக்கினார்.

தொடர்ந்து மனித உரிமைக்கு எதிரான விஷயங் களுக்கு குரல் கொடுத்த நேரத்தில் ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பில் தனலட்சுமி இணைந்தார். நாமக்கல் மாவட்டத்தின் காவிரி படுகை நீரேற்று பாசனம், குடிநீர் கிணறுகள் ,அங்குள்ள ராகின்திட்டு போன்ற மணற்திட்டுக்கள் தொடர்ந்து வருடம் முழுவதும் நாமக்கல்லில் தண்ணீரை வாரி வழங்கிக் கொண்டிருப்பது குறித்து ஆய்வில் கண்டறிந்து அது குறித்த அறிக்கையையும் தனலட்சுமி தமிழக அரசிடம் 2005 ல் சமர்பித்திருக்கிறார்.. இப்படி தொடர்ந்து மணல் கொள்ளைக்கு எதிராக போராடி வந்தவருக்கு அந்த தொகுதி பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அக்கட்சி தலைவர்களால் தொடர்ந்து பிரச்சனைகளும் வந்த வண்ணம் இருந்தன.

தனலட்சுமியின் வீட்டை கொளுத்திவிடுவேன் என்று அச்சுறுத்துவதும், கரும்பு வயலை கொளுத்திவிடுவேன் என்று மிரட்டவதும், உறவுகளுக்கு சிக்கல் ஏற்படுத்துவதும் தொடர்ந்தாலும் மணல்கொள்ளை மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் காகித ஆலைகள் தொடர்ந்து அந்த பகுதிகளில் வருவதைத் தடுக்கவும் சட்டப்  போராட்டங்கள் கண்டு 14 புதிய ஆலைகள் வரவிடாமல் தனலட்சுமி தடுத்து நிறுத்தினார். மேலும் வரவிருந்த இரும்பு பார் தொழிற்சாலையின் தீமைகள் உணர்ந்து அதனையும் தடுத்தது என தொடர்ந்து தனலட்சுமி அந்த பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் அவருடைய போராட்டத்தை அர்த்தமுள்ளாதாக்கியது. ஏற்கனவே முறையற்று இருந்த இரண்டு காகித ஆலைகளை போராட்டங்கள் மூலம் சுற்றுசூழலுக்கேற்றவாறு முறைப்படுத்தினார் .

சமீபத்தில் மோகனூரில் மணல் அள்ளுவதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பிடம் அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு வந்து மணல்குவாரி அமைக்க திட்டமிட்டுள்ளார்கள் சிலர்.. ஆனால்  அரசு கொடுத்திருந்த 69 நிபந்தனைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் மணல்குவாரி தொடங்க முற்பட்ட போது மீண்டும் போராட்டத்தை துரிதமாக்கி இருக்கிறார்...

மணல்குவாரிக்கு அருகிலேயே ஒருவன்விளை என்ற ஊரில் 120 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட இருப்பதை அறிந்து மணல்குவாரியை நிறுத்தியே தீர வேண்டும் என்ற முனைப்போடு ஊர் மக்களை திரட்டி காவேரியைக் காப்போம் என்ந நடை பயணம் மேற்கொண்டார். இதன் விளைவு தற்போது தற்காலிகமாக அந்த மணல்குவாரிக்கு இடைக்காலத் தடைவிதித்திருக்கிறார்கள்.மணல் கொள்ளையை தடுக்க குரல் கொடுக்கும் வேளையில் மணல் பயன் பாடுகளுக்கு மாற்றுப் பொருள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ..

தன்னுடைய போராட்டங் களை மண லுக்கு மாற்றுப் பொருள் இல்லாத நேரத்தில் இது பைத்தியக் காரத்தனம் என பிதற்றிய வர்களுக்கு பதில் அளிக்க முயற்சித்த இந்த ஆராய்ச்சி தன லட்சுமியை 2005ல் டெல்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்று தந்தது. கற்களை பொடியாக்கி மணலுக்கு மாற்றுப் பொருளாக வைக்கலாம் என்ற வலுவான வாதங்களை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த விஷயங்களை கருத்தரங்கில் முன் வைத்தார்.

மணல்கொள்ளையில் ருசி கண்டவர்களுக்கும், இயற்கை சார்ந்து நீர், மணல் போன்றவற்றில் தான்  நோகாமல் பணம் சம்பாதித்துப் பழகிய சமூகத்திற்கு அது காதில் விழாமல் போனாலும்.. வருங்காலத்தில் இந்தச் சமுகமே மணலுக்கான மாற்றுப் பொருளை தேடி அலையப்போகிறது அதை நானும் பார்க்கத்தான் போகிறேன் என்கிறார் தனலட்சுமி தீர்க்கமாக.

Pin It