காட்டிலிருந்து எழுந்த பேரோலம்
நடுக்குறுத்துகிறது

வண்ணச்சிறகடித்துப் பறக்கும்
பெயர் தெரியாப் பறவையன்று
அம்புபட்டு வீழ்ந்தது

பறவையின் எடைக்கு எடை
சதையறிந்து கொடுக்கும் சிபியைக்
காணவில்லையென அறிவிக்கிறது
காணாமல் போனவர்களின் பட்டியல்

பிணந்தின்னிக் கூட்டம் மறைவாய்
அலைகிறதென்று கூவுகிறது
அக்கக்காக் குருவி

அமிலக் குடுவையுடன் அலையும்
அராஜகர்களைக் கண்டு நடுங்குகிறது காடு

ஒளிய இடம் தேடி அலையும்
வன தேவதைகளை
வருத்தத்துடன் விசாரிக்கின்றன
கரிந்த மரங்கள்

பனிப்பாறை வழியும் பளிங்கு நீர்ப் பாசி
தூசியும் குப்பைகளுமாய் நிலைகுலைந்திருக்கிறது

வேலிக்காத்தானின் முட்கரங்கள்
உறிஞ்சித் தீர்த்துவிட்டது நற்சுனையை

செந்நிற வெயில் மங்கி விட்ட அகாலத்தில்
கரிந்து வெந்த வனத்தில்
தீயெரித்த சிறகு பார்த்து
ஒப்பாரி வைக்கின்றன வனத்தெய்வங்கள்...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.