சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஹோலி பண்டிகையில் ஈடுபட்டிருந்த பொறியியல் துறை மாணவன் சுபித்குமார் விபத்தில் படுகாயம் அடைந்தார். பல்கலைக்கழக மருத்துவல்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவனுக்கு உரியமுறையில் சிகிச்சை அளிக்காமல் பாண்டிச்சேரிக்கு அனுப்புகின்றனர். அங்கு அந்த மாணவன் உயிர் இழக்கிறார். தங்களது மருத்துவமனையில் உயிரிழந்தால் எங்கு பிரச்சனையாகுமோ என்று அஞ்சி அந்த மாணவன் புதுச்சேரிக்கு அனுப்பியுள்ளனர். உயிரைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் அவர்களது அலட்சியத்தால் பரிதாபமாக ஒருமாணவனின் உயிர் போகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கிச் செல்கின்றனர். சக மாணவன் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்களை சமாதானம் செய்ய வேண்டிய  பதிவாளர் மற்றும் துணைவேந்தர் மாணவர்களை சந்திக்க மறுத்தது மட்டுமல்ல காவல்துறையின் உதவியை நாடுகின்றனர். ஆத்திரமடைந்த மாணவர்கள் தகறாரில் ஈடுபடுகின்றனர்.

      உடன் நமது கடமை தவறாத காவல்துறை அதிகாரிகளின் தடிகள் வேகம் கொள்கின்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்படுகின்றனர். வழிதெரியாமல் ஓடிய மாணவர்கள் கண்ட இடத்தில் விழுந்து ஓடுகின்றனர். காவல்துறை விரட்டி விரட்டி அடிக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உள்ள அன்பை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம காவல்துறை பொங்கி எழுந்து வாலைக் குழைத்து நிர்வாகத்திற்கு சேவை செய்வது வரலாற்றுப் பின்னணி கொண்டது. இதே பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு இன்றைய முதல்வர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை கடுமையாகத் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் கொல்லப்பட்டான். முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு, ஜான்டேவிட் என்ற சக மாணவனால் கொடூரமாக படுகொலை செய்யய்யப்பட்டான். விவசாய ஆராய்ச்சி மாணவன் இளந்திரையன் மர்ம மரணம் அடைந்தான். சிவசக்தி என்ற ஊழியருக்கு தவறான சிகிச்சையளித்து அவர் மரணமடைந்து போராட்டம் நடந்துள்ளது, சதீஸ்கரை சார்ந்த சேத்னா என்ற மாணவி வழிகாட்டாளரின் பாலியல் துன்புறுத்தலால் பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டது என இன்னும் பல கொலைகள், மரணங்கள் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துகொண்டுதான் உள்ளது.

      இப்போது பிப்ரவரி 28 அன்று இரவு நடத்திய தாக்குதலில் காயம்பட்ட பல மாணவர்கள் உயிர்ப் பிழைக்க ஓடி மரணமடைந்தது மக்கள் மனதை வேதனைப்படுத்துவதாக உள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி ஜார்கண்டைச் சார்ந்த சுபீந்தர் சிங் என்ற மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி பிகாரைச் சார்ந்த சர்பாஸ் ரேப் மற்றும் ஆஷிஸ் ரஞ்சன் குமார் ஆகிய இரண்டு மாணவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலங்கள் காவல்துறையின் கடுமையான தாக்குதலின் சாட்சியாய் இருக்கிறது. இப்படி கடுமையாக மாணவர்களைத் தாக்க காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிர்வாகம் மாணவர்களை சந்திக்க மறுத்தது ஏன்? தாக்குதலால் மறைந்து போன மூன்று உயிர்களுக்கு யார் பொறுப்பு?

விபத்தில் காயமடைந்த மாணவனை 80 கிலோமீட்டர் தூரம் அனுப்பாமல் பொறுப்பாக சிகிச்சை அளித்திருந்தால் அவனைக் காப்பாற்றி இருக்கலாம். சரி! அதன் பிறகு துணைவேந்தரோ அல்லது பதிவாளரோ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் மற்ற மூன்று மாணவர்கள் சாவைத் தடுத்திருக்கலாம்.

      தமிழக அரசு தற்போது நடந்த சம்பவங்களுக்கு கோட்டாச்சியர் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இது வேடிக்கையானது. ஏனெனில் கடலூர் மாவட்டத்தின் அரசு எந்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பது அந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கூட தெரியும். தெரிந்தே அமைக்கப்பட்ட கமிஷன் இது. எனவே பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி அளவில் விசாரணை மேற்கொண்டால்தான் உண்மைகள் வெளிவரும்.

வரைமுறைகளை மீறும் நிர்வாகம்

      1922 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணமலைநகரில் தான் நடத்திவந்த மீனாட்சிக் கல்லூரியை பல கலைகள் கற்பிக்கும் பெரும் நிறுவனமாக்க இராஜா சர் அண்ணாமலை செட்டியார் கனவு கண்டார். அந்த கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் ரூபாய் 20 இலட்சம் நிதியை தமிழக அரசிடம் ஒப்படைத்தார். அவரது கல்வி ஆர்வத்தைப் பார்த்த தமிழக அரசு அவர், அவரது சந்ததியினர் நிறுவனர் மற்றும் இணைவேந்தர் என்ற பதவி வகிக்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தை 1929 ஆம் ஆண்டு உருவாக்கி பல்கலைக்கழகம் அமைக்க வழிவகை செய்தது.  சிறந்த கல்வி நோக்கத்துடன் துவக்கப்பட்ட பல்கலைக்கழகம் ராஜாவின் வழித்தோன்றல்களால் இன்றைய தினம் வியாபார நிறுவனம் போல செயல்படுகிறது.

      1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதைய இணைவேந்தர் பொறுப்பேற்ற பிறகு ஏழைகளுக்கு அங்கு கல்வி எட்டாக்கனியாக மாறியது. பல்கலைக்கழகம் என்பது பலகலை வியாபார நிறுவனமானது. துவக்கத்தில் பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், விவசாயம், கல்வியியல், மருந்தியல், மேலாண்மை போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை வியாபாரமாக்கப்பட்டது. இதனால் பலகோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டது. சிதம்பரம் நகரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மாணவர்களைப் பிடிக்க பல்கலைக்கழக தரகர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது தரகு பணத்திற்காக ஒட்டுண்ணிகள் போல பல அரசியல் கட்சி போர்வையில் பல்கலை கழக நிர்வாகத்தை ஆதரித்து நிற்கின்றனர்.

      1998 பின் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நியமனங்களும் விற்பனைப் பொருளாகின. இன்று இந்த பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு என்பது பணி நியமனத்தில் கொஞ்சமும் கடைபிடிக்கப்படுவதில்லை. பணம் அது மட்டுமே எதையும் தீர்மானிக்கும் காரணியாக மாறி உள்ளது. அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 - 8 லட்சம், இளநிலை உதவியாளர் பதவிக்கு 10 - 12 லட்சம், சிறப்பு அதிகாரி (ஸ்பெஷல் ஆபிஸர்), அனுமதி அதிகாரி (லைசன்ஸ் ஆபிஸர்) மற்றும் விரிவுரையாளர் பதவிக்கு 22 முதல் 25 லட்சம் என்று வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. நிர்வாக சீர்கேடும், ஊழல் நிலையும் பல்கலைக்கழகத்தினை சீரழித்து வருகிறது.

      மாணவர் சேர்க்கையில் பெறப்படும் பெரும் தொகை பல்கலைக்கழக நிதியில் சேர்க்கப்படுவதில்லை. சாதாரண தொகையில்லை எல்லாம் லட்சங்களில்தான். இதன் விளைவு மதிப்பெண்கள் உள்ளிட்ட பல தகுதிகள் இருந்தும் பணம் இல்லாத ஏழை மாணவர்களுக்கு இந்த கல்வி நிறுவனம் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த சட்டப்பூர்வமற்ற வசூல் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலகங்களிலேயே நடப்பதுதான் கொடுமை. கால வரையரையின்றி செமஸ்டர் வகுப்புகள் முடிந்ததும் சேர்க்கை நடக்கிறது. மாணவர்களிடம் பெறப்படும் திரும்பப்பெறும் வைப்புத் தொகையும் திரும்ப அளிக்கப்படுவதில்லை. ஏற்புடைய காரணங்கள் இருந்தும் வருகைப் பதிவேடு குறைவை காரணம் காட்டி தேர்வுக்கு அனுமதிக்க பல்லாயிரங்கள் வசூலிக்கப்படுகிறது.

      அதே போல பதவி நியமனங்களை கல்வித் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக இல்லாமல் பெரும் தொகைகள் மட்டுமே தீர்மானிக்கின்றன. 2001 ஆம் ஆண்டு 1285 என்றிருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 2006 நவம்பரில் 2800 என்ற எண்ணிக்கையாக உயர்ந்து, தற்போது  3200 என்று உள்ளது. 2001 ஆம் ஆண்டு 3000 ஆக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை 2006 நவம்பரில் 6500 என்று உயர்ந்து, 2009 இறுதியில் 8500 என்று உயர்ந்துள்ளது.  பணி நியமன வரைமுறைகளை பின்பற்றாமல், கல்விக் குழுவின் முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக, இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக இவை நடந்துள்ளது. இதனால் தற்போது 150 கோடி நிதிபற்றாக்குறையில் இந்த பலகலைக் கழகம் (நிறுவனம்) உள்ளது. இதன் தொடர்ச்சியாய் எங்கு பணம் எதற்காக இருப்பினும் அதில் கையை வைக்க நிர்வாகம் தயங்குவதில்லை. உதாரணம் ஓய்வூதியர் நிதியையும் இவர்கள் விதிக்குப் புறம்பாக வேறு செலவுகளை செய்ய பயன்படுத்துகின்றனர். இந்த முறைகேட்டுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் ஓய்வு பெரும் வயதை எட்டினாலும் பிறந்த தேதியைத் திருத்தி பணியில் தொடர ஏற்பாடு செய்யப்படுகிறது.

யு.ஜி.சி விசாரணை

      இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் குறித்த பல புகார்களை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்கள் அனுப்பின. பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை, அத்துமீறல்களை விசாரிக்க பல்கலைக்கழக மானியக் குழு நான்குபேர் கொண்ட கமிட்டியை நியமித்தது. ஹைதராபாத் மொழியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. அபிப் மௌரியா தலைவராகவும், கர்நாடக பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. எஸ்.கே.சைதாபூர் (உறுப்பினர்), பெங்களூர் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னால் இயக்குனர் டாக்டர். ஏ.ஜெயகோவிந்த் (உறுப்பினர்) பல்கலைக்கழக மானியக் குழுவின் இணை இயக்குனர் பேரா. ராஜேஷ் ஆனந்த் செயலராகவும் கொண்ட இந்த கமிஷன் கடந்த 2009 ஆகஸ்ட் 27 மற்றும் 28 தேதிகளில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்துள்ளனர்.

      2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு அண்ணாமலை பல்கலைக்கு இங்கு நடக்கும்முறைகேடுகள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய மனுவை இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய புகார்களை கமிஷன் உறுப்பினர்களும் கேள்விப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழு விசாரிக்க வந்தால் என்னென்ன சொல்ல வேண்டும் என்பது இங்குள்ளவர்களுக்கு நிர்வாகத்தால் சொல்லிக்கொடுக்கப் பட்டுள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். பலரிடம் விசாரணை செய்து கமிஷன் கீழ்காணும் முடிவுகளுக்கு வந்துள்ளது.

      1. ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளது உண்மை. இது பல்கலைக்கழக சட்டம் பிரிவு 22 ஜி (இணைப்பு) படி குற்றம். 14.03.2009 அன்று நடந்த செனட் கூட்டத்தில் நியமனம் சம்பந்தமான எதிர்ப்பையும் மீறி நிர்வாக உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பலகோடி பெற்றுக்கொண்டு பலரை நியமனம் செய்துள்ளனர்.

      2. பணம் பெற்றதற்கான ஆதாரம் இல்லை என்ற காரணத்தினாலேயே இது உண்மை இல்லை என்றாகிவிடாது. அளவுக்கு அதிகமான நியமனமே அதன் உண்மைத் தன்மையை உறுதிபடுத்துகிறது.

      3. தகுதியற்ற ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஒரு மாணவன் கொடுத்த புகார் உண்மையானது. தகுதியற்ற ஆசிரியர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு மதிப்பெண்களை இடுவது உண்மை என இக்குழு கருதுகிறது. 

      4. பொறியல் கல்லூரியில் 2002 - 03 முதல் 2008 - 09 வரை ஏழு ஆண்டுகளில் ஆண்டுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதித்த மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 810 பேர் மட்டுமே. அப்படியெனில் 7 ஆண்டுகளில் 5670 மாணவர்கள் மட்டுமே பயின்றிருக்க வேண்டும். ஆனால் சட்டவிதிகளை மீறி இவர்கள் சேர்த்த மாணவர்களின் எண்ணிக்கை 14,929 அதாவது 9,259 மாணவர்களை அதிகமாக சேர்த்துள்ளனர்.

      5. முனைவர் பட்டம் தார்மீகமற்ற முறையில் கொடுக்கப்படுவதாக ஒரு முன்னாள் துணைவேந்தரின் மகள் கூறிய குற்றச்சாட்டை பல ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது மிகவும் அநீதியானது.

      6. தமிழக அரசின் ஓய்வு பெறும் வயது 60. ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் வயது 68. இதுவே இவர்களது சட்டத்தை மீறும் செயலுக்கு சிறந்த எடுத்துகாட்டு.

      7. மதிப்பெண் பட்டியல் பதிவாகும்போது பல குற்றங்கள் நடப்பதை கமிஷன் ஆமோதிக்கிறது.

      8. எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கான இட ஒதுக்கீடு இந்த பல்கலைக்கழகத்தில் மிக மோசமான முறையில் சீரழிக்கப்படுகிறது. குறிப்பாக பேராசிரியர்கள், முதுநிலைப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் அறவே கடைபிடிக்கப்படவில்லை. இது பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முற்றிலும் முரணானது. சமூகநீதியை சீரழிக்கும் இந்த செயல் மோசமான முன்னுதாரணம்.

      9. இங்கு நடக்கும் அத்துமீறல்களுக்கு துணைவேந்தர் பொறுப்பேற்க மறுப்பது சரியல்ல. அவருக்கு பொதுவாக அனைவர் மத்தியிலும் நல்ல பெயர் இருந்தாலும், பதிவாளர் மற்றும் தேர்வு துறைத் தலைவர் மீது குறிப்பிடத்தக்க புகார்கள் உள்ளது.

      10. சிதம்பரம் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னுசாமி பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும், பாராளுமன்ற மனித மேம்பாட்டுத் துறைக்கும் அனுப்பி உள்ள மனுவில் "அண்ணாமலை பல்கலைக்கழகம் ஒரு கல்வி நிலையமாக இல்லாமல் நிறுவனம் போல செயல்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாடற்ற ஆசிரியர் ஊழியர் நியமனங்கள் இதற்கு சான்றாக உள்ளது.

      இப்படி கடுமையான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக மானியக் குழு விசாரணைக் கமிஷன் வைத்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வியப்பானது அல்ல. இணைவேந்தரின் செல்வாக்கு அத்தகையது. கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் ஓடும் அவரது பந்தயக் குதிரைகள் பல கோடி மதிப்புள்ளது எனில் அவரது மற்ற மதிப்பைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சமூகநீதியை குழிதோண்டிப் புதைத்து, இன்று மூன்று மாணவர்களையும் குழிதோண்டிப் புதைத்துள்ள பல்கலைக்கழகத்தை எதிர்த்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மக்கள் போராட்டமே அதை சாத்தியப்படுத்தும்.

===================================================================================================================

      * ஆதாரங்கள்: யு.ஜி.சி கமிஷன் ரிப்போர்ட். பல்கலை ஆசிரியர் சங்கப் பிரசுரம் 

(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It