"சிங்களவன் போட்ட குண்டில்
50 பேர் பலியானார்கள்.
500 பேர் புலியானார்கள்"  -  பேரா.ஹாஜா கனி
 
              ஒவ்வொரு தேசிய இனமும் தன் அடையாளங்களையும், தன் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்ற போராடத் துணிந்திருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசிய சிந்தனை மென்மேலும் தன்னகத்தே செழுமை அடைந்து விரிவடைவதை நாம் காண்கிறோம். நடந்து முடிந்திருக்கும் ஈழப்போரும், அதில் தமிழர்கள் அடைந்த பின்னடைவும் தமிழ்த் தேசிய சிந்தனையினை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கான அடையாளங்களைப் பாதுகாக்க முனைவதும், தன் மொழியின் அடிப்படை சாரத்தினை அறிவியல் உச்சங்களில் ஏற்றி வாழ வைப்பதற்கான தகவமைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதும் இயல்பானதே. இந்நிலையில் இனம் குறித்த வரையறைவியலில் தவறான பிரச்சாரங்களைப் போதிப்பதன் மூலம் பெருகி வரும் தமிழ்த் தேசிய ஓர்மையினை - மதம், சாதி போன்ற சமூக உள்ளடுக்கு முரண்களை முன்னிறுத்தி முறியடிக்க முயன்றிருக்கும் ஆபத்தானவர்கள் கருத்து நிலையின் துவக்கத்திலேயே வீழ்த்தப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்.
 
              பூர்வகுடி மக்களிடையே அயலார் ஊடுருவல் வழியாய் உருவாகும் சாதி, மதம் போன்ற சமூகக் குழுக்கள் நாளடைவில் அந்த மக்களிடையே உருவாகி இருக்கவேண்டிய உரிமை சார்ந்த ஓர்மை உணர்விற்கு மிகப்பெரிய சவாலாக‌ மாறுகின்றன. இந்த மண்ணில் பூர்வ குடிமக்களாகிய தமிழர்கள் மீது ஆரியர் உள்ளிட்ட அயலார் படையெடுப்புகள் மூலமாகவே சாதிக்குழுக்கள், மதப்பிரிவுகள் தோன்றின என்பதற்கான அனைத்து சாட்சியங்களும் ஏற்கனவே பல ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர் மெய்யியல் வரலாற்றில் சாதிக்கு இடமில்லை என்பதும், இந்த பரந்துபட்ட நிலப்பரப்பில் காலத்தால் பழைமை உடையதாகக் கருதப்படும் சமண, பெளத்த மரபுகளுக்கு மூத்தது தமிழர் மெய்யியல் என்பதும் ஆசீவகம் என்றும், தமிழர் அணுவியம் என்றும் அழைக்கப்படும் இந்த சிந்தனை தமிழர்களுக்கான மெய்யியல் அடையாளமாய் இருந்திருக்கிறது என்பதும் புத்துலக சிந்தனையாய், ஆய்வாய் உருவாகி வருகிறது. (ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் – பேரா.க.நெடுஞ்செழியன், மனிதம் வெளியீடு). 
 
இச்சூழலில் இந்த மண்ணின் பூர்வகுடித் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் நாசகார வேலையை, அ.மார்க்ஸ் போன்ற மூன்றாம் தர பிழைப்பு ஆய்வாளர்கள் செய்யத் துவங்கி உள்ளார்கள். மொழி, இனம், குடும்பம் போன்ற அனைத்துமே கற்பிதம் என உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு உரத்துப் பேசும் அ.மார்க்ஸ்க்கு மதம் மட்டும் சமீப காலமாக  இனிக்கும் காரணியாக மாறிப் போனதன் உண்மை அனைவரும் அறிந்ததே. அ.மார்க்ஸ் போன்றவர்கள் மதத்தினை முன்வைத்து இயங்கி இனத்தினைப் பிரிக்கும்  விஷமிகள்; மத அடிப்படைவாதிகளை விட அபாயமானவர்கள்.
 
              முஸ்லிம்கள் இந்த மண்ணின் பூர்வீகத் தமிழர்கள் என்பதும் அவர்கள் தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தில் தங்களுக்குரிய பங்கினை நிறைவாகவே செய்து வருகின்றனர் என்பதனையும் யாராலும் மறுக்க இயலாது. மதம், சாதி போன்றவை தமிழ் இன வரலாற்றில் இடையில் தோன்றிய  முரண்கள் ஆகும். மேலும்  இந்து மதம் கடைப்பிடிக்கும் வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்கு எதிராகவே தமிழர்களின் பூர்வீக மெய்யியல் வரலாறு இருந்திருக்கிறது. எனவே இந்து மதத்தில் நிலவும் சாதீய ஏற்றத்தாழ்வும், இதர சமூகக் காரணிகளுமே தமிழர்கள் முஸ்லிம்களாக, கிருத்துவராக மதம் மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதும் உண்மை. எனவே பூர்வீகத் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்த் தேசிய ஓர்மைச் சிந்தனைக்கு எதிராக முன்னிறுத்துவதன் அரசியல் - இன எதிரிகளிடம் எவ்விதக் கூச்சமுமில்லாமல் நக்கிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளைச் சார்ந்தது.
 
           தமிழ்த் தேசிய சிந்தனை மரபின் அளவுகோல் முழுக்க முழுக்க சமூக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆனால் மதங்களின் அளவுகோல் அவ்வாறல்ல. குறிப்பாக இந்து மதத்தின் அளவுகோல் சாதீய ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிய வர்ணாசிரமக் கோட்பாடுகளின்படி அமைந்தது. இந்து மத மேலாண்மையை போதிக்கும், பெரும்பான்மை மதவாதச் சின்னமான ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை எதிர்த்துத்தான் தமிழ் தேசிய அமைப்புகளின் அரசியல் இருந்து வருகிறது. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதித் தகர்ப்பில் ஈடுபட்ட இந்து மத மேலாதிக்கத்தினை ஒற்றைக்குரலாய் எதிர்த்த தமிழர்களின் குரலே இன்றளவும் தமிழ்நாட்டினை மதவாதம் பெருகாத பூமியாய் நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே தமிழ்த் தேசிய சிந்தனை என்பது மதங்கள் வழி சார்ந்தது அல்ல என்பதும் மதங்களின் மேலாதிக்கத்தினை எதிர்த்து மிகவும் உக்கிரமாக போர் தொடுக்கும் சக்தி என்பதும் இந்த மண்ணில் மதச் சிறுபான்மையான  இஸ்லாமியர்களுக்குத் தோழமையான  குரல் என்பதனையும்  உணர்வு மிக்க தமிழர்களாகிய இஸ்லாமிய உறவுகள் புரிந்தே வைத்துள்ளனர். தமிழர்கள் மதத்தில் இந்துவாக, முஸ்லிம்களாக, கிருத்துவர்களாக இருக்கலாம்; ஆனால் இனத்தில்  தமிழர்களாக இருக்கிறார்கள்.
 
             இஸ்லாமியர்களில்  தமிழ்த் தேசிய சிந்தனையை உள்வாங்கி தன் இனம் உணர்ந்து இனம் காக்கப் போராடும் வீரர்கள் ஏராளம். ஈழப் போரின் கடைசி கட்ட காலத்தின் தமிழினத்தின் அறம் சார்ந்த உணர்வின் உச்சமாய் நின்ற முத்துக்குமாரின் ஈகைக்கு முன்பாகவே, 1995 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்தபோது - சுரணையற்ற தமிழனை சூடேற்ற - அன்றும் ஒரு முத்துக்குமார் இருந்தான். அவன் தான் அருமை தமிழின வீரன் அப்துல் ரவூப். அன்றைய காலகட்டத்தில் தமிழினத்தினை அழித்தொழிக்கும் சிங்களர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அரசால் அழைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசின் இந்த இரண்டகத் துரோகம் தாங்காமல், இனம் காக்க, தன் சொந்த சகோதர சகோதரிகளின் துயரம் பொறுக்காமல்.., தமிழினத்தினை உசுப்ப தன்னைத் தானே எரித்துக் கொண்டு இந்த மண்ணில் விதையாய் விழுந்த தமிழன் அப்துல் ரவூப்பினை - அ.மார்க்ஸ் போன்ற - 'சிறுபான்மை உரிமைகளுக்காக எழுதுகிறேன்' என்ற போலி முகமூடியில் - திடீரென்று வானில்  இருந்து குதித்து, இனத்தினைப் பிரிக்கும் பிழைப்புவாதிகளுக்குத் தெரியாது.
 
மாவீரன் அப்துல் ரவூப்பின் தந்தை - அருமை அப்பா அசேன் முகமது இன்றளவும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர். அது மட்டுமல்ல தமிழினத்தின் போராளியாக இருந்து கடும் பொடாச் சட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் சிறைப்பட்ட தமிழ் முழக்கம் சாகுல் அமீது நாம் தமிழர் அமைப்பின்  நிர்வாகிகளுள் ஒருவர். நாம் தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூத்தன் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.
 
                தமிழர்களுக்கு என தரணியில் ஒரு நாடு கட்டி ஆண்ட எம் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை சந்திக்கச் சென்ற  - கவிதை உலகின் போர்க்குரல் - இன்குலாப்  இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த விருதை திருப்பி அனுப்பிய பெரும் தமிழர் இன்குலாப்பினை இவர்களால் சீரணிக்க முடியாது. இன்னும் ஏராளமான, லட்சணக்கணக்கான இஸ்லாமிய தமிழின வீரர்களை எம்மால் அடையாளம் காட்ட இயலும். 
 
         திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய இரவில் இந்து மதத்தின் போலித் தன்மைகளை எடுத்துக் காட்டி பேசிய செந்தமிழன் சீமான் மீது  இந்துத்துவா வெறியர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதும், அந்தக் கலவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. கோவையில் நடந்த தோழர் மதிமாறனின் புத்தக வெளியீட்டு விழாவில் சீமான், இந்து மத போலித்தன்மைகளை தன் பேச்சால் அடித்து நொறுக்கியபோது பொறுத்துக் கொள்ள முடியாத இந்து மத வெறியர்கள் மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டதும், பெரியார் திக தோழர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்து மத வெறியர்களை ஓட ஓட விரட்டியதும் அனைவருக்கும் தெரியும். பெரியாரின் பேரன்களாக தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான தமிழின இளைஞர்கள் சாதி, மத மறுப்பாளர்களாய் களம் கண்டு வருகிறார்கள் என்பதும்… இவர்கள் தான் மதம் கடந்து, சாதி வென்று இனம் காக்க தமிழ்த்  தேசியம் வென்றெடுக்கும் நம்பிக்கையாய்த் திகழ்கிறார்கள்  என்பதும் அ.மார்க்ஸ் போன்ற நேர்மையற்றவர்களால் பொறுக்க முடியவில்லை.

பால் தாக்கரேவினை செந்தமிழன் சீமான் சபை நாகரீகத்திற்காக 'பெருமகன்' என விளித்ததை வைத்து சொல் அரசியல் பேசும் இவர்கள், ராசபக்சேவினை இலங்கையில் எப்படி விளித்தார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஒருவேளை அ.மார்க்ஸ் உள் மனச்சான்றோடு  ராசபக்சேவினை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தால் அவரது இலங்கைப் பயணம் இவ்வளவு இலகுவானதாக இருந்திருக்காது; அவர் திரும்பி வந்திருக்கவும் முடியாது. அங்கு வாய்மூடி, 'மெளனம் சம்மதம்' என்று வந்துவிட்டு இங்கு பம்மாத்து வேடங்களைக் காட்டுவது அ.மார்க்ஸின் தற்போதைய பாணி. 

இவரைப் போன்றவர்கள் போராளிகளை அழித்த பிறகான சிங்கள அரசின் தலைவர் ராசபக்சேவின் நடவடிக்கைகள் - இன்றளவும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லீம்களுக்கு எதிராகவும் இருப்பது குறித்து வாய்மூடி கள்ள மெளனம் காக்கிறார்கள். சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இழைத்து வரும் கொடுமைகளை முஸ்தீன் அவர்கள் கீற்று இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது இச்சமயத்தில் கவனிக்கத்தக்கது. தமிழனின் அறிவுசார் பெருஞ்சொத்தான யாழ்ப்பாண நூலகம் அழிவிற்கும், எண்ணற்ற இளைஞர்களும், இளம் பெண்களும் விடுதலைப்புலிகளாக கருதப்பட்டு முள்வேலி வதை முகாம்களில் அடைக்கப்படிருப்பதற்கும், உலக மகா போர்குற்றங்களுக்கும் காரணமான ராசபக்சே  பற்றி இவர்கள் பேசுவதில்லை. காஷ்மீருக்குச் சென்று மனித உரிமை ஆய்வு செய்யும் இவர்கள் இலங்கைக்குச் சென்று விட்டு வந்து சிங்கள பேரினவாதத்தினைப் பற்றி பேசாமல் தன்னின விடுதலைக்காக போரிட்டு வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளை  இன்றளவும் வன்மத்துடன் திட்டித் தீர்க்கிறார்கள். காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான விடுதலை வீரர்கள். ஆனால் இவர்களோ… அறிவுஜீவிப் போர்வையில் புத்தகம் போடவும், கூட்டம் நடத்தவும் தன்னையே விற்று, வார்த்தை அரசியல் பேசும்  பிழைப்புவாதிகள்.

                ஏற்கனவே தோழர் கார்க்கி அவர்கள் அ.மார்க்ஸ்க்கு எழுப்பிய வினாக்களுக்கு இதுவரை பதிலளிக்காமல் கள்ள மெளனம் காத்து… கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் வாந்தி எடுக்கும் அ.மார்க்ஸின் போலி முகமூடி மேன்மேலும் கிழித்தெறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள AICUF அரங்கில் ஈழத்தினைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய அ.மார்க்ஸினை நோக்கி அந்த அரங்கில் இருந்த உணர்வுமிக்க  தோழர்கள் சிலர் ஜனநாயக முறையில் வினாக்களை முன் வைத்தனர். வளர்மதி என்ற தோழர்  மேடைக்குச் சென்று அ.மார்க்ஸின் பேச்சுக்கெதிரான தனது வினாவினை முன்வைத்தபோது, எவ்வித பதிலும் தெரிவிக்காத அ.மார்க்சும், அந்தக் கூட்டத்தினை நடத்தியவர்களும் வளர்மதியை தடுத்து சட்டையைப் பிடித்து இழுத்து மேடையை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளனர். இது தான் அ.மார்க்ஸ் பேணி வரும் கருத்துச் சுதந்திர லட்சணம்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கெதிரான அவதூறுகளைப் பரப்பும் அ.மார்க்ஸுற்கு எதிராக அவர் கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் தமிழின உணர்வாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் ஆற்றும் எதிர்வினைகளை - முஸ்லீம்களுக்கு எதிரான ஒன்றாக - அ.மா மிகவும் விஷமத்தனமாய் கற்பிதம் செய்கிறார். அ.மாவிற்கு எதிராக நிகழும் எதிர்வினைகள் - சிறுபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அவரின் நடவடிக்கைகளுக்கானதில்லை. மாறாக அவர் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக ஆதரவாளராய், ஊதுகுழலாய் மாறி செய்யும், பரப்பும் செயல்களுக்கானது. இது போன்ற நடவடிக்கைகள்தான் சென்னை AICUF அரங்கில் நடைபெற்றது. ஆனால் அ.மார்க்ஸ் தன்னையும், சிங்களப் பேரினவாதத்தினையும் எதிர்த்தால் உடனே அதனை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மாற்றி மோசடித்தனம் செய்கிறார்.
 
தமிழர்கள் மீது நிகழ்ந்த பெருங்குற்றங்களைக் கேட்காத அ.மார்க்ஸ் - தான் தோழனாக காட்டிக் கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்துக்கூட ராஜபக்சேவினைத் தாக்கிப் பேசவில்லையே.. ஏன்..? இலங்கையில் முஸ்லிம்களை வாழ்விடங்களை விட்டு அகற்ற முக்கியக் காரணமாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றவர்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த அ.மார்க்ஸ், இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டில்… இதுவரை பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்கப்படாத ஒரு பூமியில்.. எல்லாவித சுதந்திரத்தோடு வலம் வருகிறார் என்றால்.. யாருடன் கூட்டு… எந்த குரலுக்காக இந்த ஒத்து ஊதும் பாட்டு என்று தெரியாமலா இருக்கிறது..?
 
 நாம் தமிழர் போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் அ.மார்க்ஸினை மிரட்டுவதாக அவரே கதை கட்டிக் கொண்டு.. இனம் சார்ந்த பிரச்சனையை மதம் சார்ந்ததாக ஆக்க முயற்சிக்கும் அ.மார்க்ஸின் அரசியல் அருவருப்பானது. சிங்களப் பேரினவாதத்தினை தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்த்துப் பேசினால் அ.மார்க்சுக்குப் பொறுக்காது. உடனே தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம்களைத் திருப்பி விடும் விஷமத்தினை அவர் செய்யத் துவங்குவார். தமிழர்கள் எதன் பொருட்டும் ஒன்றாகக் கூடாது.. மதம், சாதி என அவர்கள் வேறுபட்டு நிற்கவேண்டும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் ஆசையின் வடிவமாய் அ.மார்க்ஸ் செயல்படுகிறார். எனவே தமிழ்த் தேசிய சிந்தனை மரபிற்கு முரணான சமூகமாய் முஸ்லிம்களை முன்நிறுத்தும் அ.மார்க்ஸ் போன்றவர்களின் போக்கு கற்பிதமாகப் புனையப்பட்டவை ஆகும். இயல்பான  தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத சக்திகளாய் தமிழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
 
நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்களான முஸ்லிம்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து இந்து மத மேலாதிக்கத்தினை விரட்டும் படையாக செயல்படும். இந்த மண்ணின் பூர்வகுடித் தமிழர்களான முஸ்லிம் பெருமக்கள் இதுபோன்ற சதிகளை முறியடித்து மத மேலாதிக்கத்தினைத் தகர்க்கும் பணியினை இனத் தன்னுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்து வரும் தமிழ்த் தேசிய சிந்தனை மரபினை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில்தான் எதிர்கால தமிழ் இனத்தின் மேன்மையும், பெருமையும் அடங்கியிருக்கிறது.        

- மணி.செந்தில் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)