எல்லைக் காப்புப் போராளிகளை அறிவோம்!

தெற்கெல்லைப் போராட்டத்தின் மக்கள் தலைவர் மார்சல் நேசமணி என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவரைக் குமரி மக்கள் ‘குமரியின் தந்தை’ என்றுதான் இன்றும் அழைத்து வருகின்றனர். திருவிதாங்கூர் சமசுதானத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை, மலையாள மொழித்திணிப்பு, தாயக மண்பறிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழர் விடுதலை காண வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிய பெருமகனார் மார்சல் நேசமணி ஆவார். இவருக்கு எத்தனையோ பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரசாக் சூட்டிய மார்சல் என்னும் பட்டப் பெயரே இவரின் பெயரோடு நிலைத்து விட்டது.

12.6.1895இல் அப்பல்லோசுட், ஞானம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் சொந்த ஊர் கன்னியாகுமாரி மாவட்டம் பள்ளியாடி ஆகும். இவர் நாகர்கோவில் ஸ்காட் உயர்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு, பின்னர் நெல்லை சி.எம்.எஸ்.கல்லூரியில் பட்ட முன்படிப்பில் சேர்ந்து படித்தார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பட்ட மேல் படிப்பைத் தொடர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். கர்நூல், திருச்சியில் ஆசிரியர் பணி புரிந்த நிலையில், பாதிக்கப்படும் மக்களுக்குப் பணியாற்ற விரும்பி திருவனந்தபுரத்தில் சட்டப்படிப்பைக் கற்றார். 1.9.1914இல் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க கரோலின் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.

 1921ஆம் ஆண்டில் நாகர்கோவிலில் வழக்கறிஞர் தொழிலைத் துவக்கினார். அங்கிருந்த நீதி மன்றத்தில் கையுள்ளள நாற்காலிகள் மேல் சாதியாருக்கும்,’ ஸ்டூல்கள்’ ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமரும் நிலை இருந்து வந்தது. இதைக் கடுமையாக எதிர்த்து, முதன்முதலாக்க் கையுள்ள நாற்காலியில் அமர்ந்து தனது எதிர்ப்பபைக் காட்டினார். குற்றவியல் வழக்குகளில் திறம்பட பணியாற்றியதால் மக்களிடையே செல்வாக்குப் பெறத் தொடங்கினார். இதன் காரணமாக 1943ஆம் ஆண்டில் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 திருவிதாங்கூரில் சொத்துரிமை உள்ளவர்கள் சொத்துவரியின் அடிப்படையில் நிர்வாக சபைத் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியும் என்கின்ற நிலையை மாற்றியமைக்கும்படி திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யரிடம் போராடி வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டில் நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றார். முதன் முதலாக கல்குளம், விளவங்கோடு வட்டங்களின் பிரதிநிதியாக திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவிதாங்கூர் சமசுத்தானத்தில் தமிழர்கள் சாதி, மொழி, இன அடிப்படையில் புறக்கணிக்கும் நிலைகண்டு, கொதிப்படைந்து 9.12.1945இல் நெய்யூர் எட்வின் நினைவு அரங்கத்தில் ஒரு கூட்டத்ததை ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் இயக்கமொன்றைத் தொடங்க விரும்பினார். புகழ் பெற்ற வழக்கறிஞர் பர்ணபாசு தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு எனும் சமூக நீதி இயக்கத்தை உருவாக்கினார். பின்னர் திருவிதாங்கூர் தமிழர்களுக்கென்று தனி மாகாணம் அமைத்திட அரசியல் இயக்கம் ஒன்று தேவையெனக் கருதினார்.ஆலன் நினைவு அரங்கத்தில் 8.9.1947ஆம் ஆண்டு சிவதாணுப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை, அப்துல்ரசாக் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திற்குத் தலைமை வகித்து திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார். அது முதல் தமிழர்களின் மத்தியில் இவ்வியக்கம் வீறுகொண்டெழுந்தது.

1947 இல் திருவிதாங்கூர் சமசுத்தானத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சமசுத்தான காங்கிரசுக் கட்சிக்கும் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக்கும் பலத்த போட்டி உருவானது. மாங்காடு கீழ்க்குளம் ஆகிய இடங்களில் தமிழர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வலுத்த எதிர்ப்பிற்கிடையில் 13 இடங்களை தமிழ்நாடு திருவிதாங்கூர் காங்கிரசு கைப்பற்றியது. நேசமணி எதிர்க்கட்சித் தலைவரானார்.

 1949 இல் திருவிதாங்கூர் கொச்சி சமசுத்தானங்கள் இணைக்கப்பட்டன. ஐக்கியக் கேரள அமைப்பிற்கு இது முதல்படியாக அமைந்தது. மொழிவழி மாகாணக் கோரிக்கையை முன்னெடுத்து முழங்கிய தெலுங்கர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகளை இணைத்து ஐக்கியக் கேரளம் அமைத்தது சரியென்று வாதிட்ட நேசமணி அதே வேளையில் தமிழ்ப் பகுதிகளை ஐக்கியக் கேரளத்திடமிருந்து நீக்க விட வேண்டும என்று சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய மாநாட்டுக் கூட்டத்தில் முழங்கினார். 1952இல் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு பிளவுபட்ட நிலையில் நடைபெற்ற தேர்தலில் 8 இடங்களில் நேசமணி வெற்றி பெற்றார். இது அவருக்கு மக்களிடமிருந்த செல்வாக்கை மெய்ப்பித்தது. இதை உணர்ந்து பிரிந்து போன தாணுலிங்க நாடார் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஓரணியில் இணைந்தபோது நேசமணி தாயுள்ளத்தோடு ஏற்றுக்கொண்டார். அப்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் நேசமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1954இல் திருவிதாங்கூர் கொச்சியில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது தலைமை அமைச்சர் நேரு கேரள காங்கிரசு கட்சிக்கு ஆதரவாகவும், நேசமணிக்கு எதிராகவும் தமிழர் பகுதிகளில் பரப்புரை செய்தார். தமிழர்களோ திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசு கட்சியை 12 இடங்களில் வெற்றி பெறச் செய்து நேருவின் முகத்தில் கரியைப் பூசினர்.

காங்கிரசு ஆதரவோடு பட்டம் தாணுப்பிள்ளை தேவிகுளம், பீர்மேடு வாழ் தமிழர்கள் மீது அடக்கு முறையை ஏவினார். அம்மக்களுக்கு ஆதரவாக மூணாறு சென்ற நேசமணி, சிதம்பரநாதன், அப்துல்ரசாக் ஆகியோரை கைது செய்து ஆறு வார காலம் சிறையிலடைத்தார். 1954 ஆகஸ்ட் 11ஆம் நாள் நடந்த ‘விடுதலை நாள்’ போராட்ட அறிவிப்பால் திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளில் வேலை நிறுத்தம், கடையடைப்பு, சாலை மறியல் நடந்தது. அப்போது நடத்தப்பட்ட மலையாள காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு 11 பேர் மாண்டனர். ‘கண்டால் அறியும் புள்ளி’ என்ற கொடிய சட்டத்தினால் தமிழர்களின் வீடுகள், கடைகள், அடித்து நொறுக்கப்பட்டன; சொத்துகள் சூறையாடப்பட்டன. அய்யத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் கடும் சித்திரவதைக்குள்ளாயினர். அவப்பெயர் வருவதைக் கண்ட பின்னரே பிரசா சோசலிசுட் கட்சியின் தலைமை, பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்கு முறையைக் கண்டித்து பதவி விலகும்படி கூறியது. அவரும் வேறு வழியின்றி பதவி விலகினார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட நேசமணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் அளித்தும், சட்டப்படி அம்மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளுக்குத் தானே நேரில் வாதாடி விடுதலையும் பெற்றுத் தந்தார்.

பசல் அலி தலைமையிலான புனரமைப்புக்குழு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைக் கேரளவோடு இணைத்ததை எதிர்த்து நாடாளுமன்றத்தில் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14,15,16 ஆகிய மூன்று நாள்கள் அவர் ஆற்றிய எழுச்சியுரை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 1956இல் சென்னை மாகாணத்தோடு திருவிதாங்கூர் தமிழர் பகுதிகள் கன்னியாகுமாரி மாவட்டம் பெயரில் இணைக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு சனவாரி 26ம் நாள் காமராசர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரசில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை இணைக்க பெரும்பாலனோர் ஒப்புக்கொள்ளவே, வேறு வழியின்றி நேசமணி அதனோடு இணைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் கிள்ளியூர் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்று காலடி வைத்தார்.

 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் மண்ணைக் கவ்வியது. ஆனால் குமரி மாவட்டத்தில் அது 6 இடங்களில் வெற்றி பெற்றது. இது நேசமணியின் தனிப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்தியது. அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டுமொரு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஒரு முறைகூட மக்களால் தோற்கடிக்கப்படாத மாபெரும் தலைவர் மார்சல் நேசமணி அவர்கள் நேரு, காமராசர் சூழ்ச்சியால் கவரப்பட்டு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்காமலே 1.6.1968இல் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

Pin It