தெற்கெல்லைப் போராட்ட நினைவுக் குறிப்புகள்

மலையாளத் திராவிடர்களால் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் மிருகங்களைவிட கேவலமாகத் துன்புறுத்தப்பட்ட காரணத்தால் மார்சல் நேசமணி சமூகநீதி வேண்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை 1945இல் உருவாக்கினார். அதன்பின் 1947 செப்டம்பர் 8இல் சிதம்பரம்பிள்ளை, சிவதாணுபிள்ளை, அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் அதனை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றினார். இதன்வழி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம், சித்தூர், ஆகிய 9 பகுதிகளையும் தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்று போராடினார். 05&11&1949இல் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற வடஎல்லை மாநாட்டில் நேசமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் வடவேங்கடம் முதல் குமரிவரை உள்ள பகுதிகளை இணைத்துத் தமிழ் மாநிலம் அமைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேசமணிக்கு மாவீரன் பட்டத்தை ம.பொ.சி. வழங்கினார். நேசமணி பொறுப்பில் 06&01&1950 தமிழ்நாடு எல்லை மாநாடு குமரி முனையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ம.பொ.சி., பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நேசமணி வரவேற்புரை ஆற்றினார். இதனைத் திருவிதாங்கூரின் வரலாற்றுப் பெட்டகம் என்றே கூறலாம்.

1954இல் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு வெற்றிபெற்றது. இதனால் கோபம் கொண்ட காங்கிரசுக்காரர்களும், பி.எஸ்.பி.அமைச்சரவையும் பொய் வழக்குகளைப் போட்டு 650க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஜாமீன் கொடுக்காமல் துன்புறுத்தியது. ஆகையால் அவர்கள் மூவாற்றுபுழை, பாலாய் முதலிய நகரங்களுக்கு அலைந்து திரிந்தார்கள். பெண்கள் தாக்கப்பட்டனர். சரியான உணவும், தண்ணீரும் இல்லாத காரணத்தினால் பலர் நோய் வாய்ப்பட்டனர். இன்று இலங்கையில் நடப்பதுபோன்று அன்று தேவிகுளம் பீர்மேட்டில் நடந்தது. இந்த நிலையினை எதிர்த்து திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைப்புக் குழுவும் தென்னிந்தியத் தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஊர்வலங்களை நடத்தினர். பொதுக்கூட்டங்கள் கூட்டி பொய்வழக்குப் போட்டதை எதிர்த்துக் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றினர். கடையடைப்பு, வேலை முடக்கம் முதலிய சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளைக் கையாண்டனர்.

இதனால், தொண்டர்களும், தலைவர்களும், குண்டாந்தடியால் தாக்கப்பட்டார்கள். சிலர் காயப்பட்டார்கள். பல தலைவர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புக் குழுத் தலைவர் சுப்பையா நாடார், மற்றொருவர் துரைப்பாண்டி நாடார் (வண்டிப்பெரியார்),ஆவார். தொழிற்சங்கச் செயலர் ஆர்.குப்புசாமி என்ற இளைஞரை அடித்துத் துன்புறுத்தியதில் அவரது செவிப்பறை கிழிந்துவிட்டது. நிரந்தரமாகவே அவர் செவிடராகிவிட்டார். மூணாறு நகரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அவருக்கும் சுப்பையா நாடாருக்கும் கைவிலங்கு மாட்டிக் கொட்டும் மழையில் கடைவீதியிலே நடத்திக்கொண்டு போகப்பட்டார்கள். இதைக் கண்ணுற்ற தமிழ் மக்கள் கலக்கமுற்றார்கள். சிலர் மதுரை மாவட்டச் சிற்றூர்களுக்கு ஓடினார்கள். தங்கள் நிலைமையைத் தலைவர் நேசமணிக்குத் தெரிவித்தார்கள். நிலைமையைச் சீர்படுத்த தலைவர் நேசமணியும், ஜனாப் அப்துல்ரசாக்கும் தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களுக்கு உடனே புறப்பட்டுச் சென்றனர். பீர்மேடு, வண்டிப்பெரியார், வண்டல்மேடு, மூணாறு ஆகிய பகுதிகளுக்குச் சென்று கூட்டங்களில் பேசினர். கூட்டத்தில் தலைவர் நேசமணி பேசும்போது “போலீஸ் ஜவான்கள் வன்முறையில் இறங்குவது கண்ணாடிக் கூண்டில் இருந்து கல்வீசும் மடத்தனமாகும்” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய ஜனாப் அப்துல்ரசாக் “போலீஸ்காரர்கள் தங்களுக்குத் தோன்றியவாறு நடந்துகொண்டால் அது அத்துமீறல் ஆகிவிடும்” என்று விளக்கிச் சொன்னார். அப்படி விதிமுறைகள் மீறப்படும்போது அது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ஜவான்களுக்கும் ஆபத்தாகும். அப்படி அத்துமீறும்போது போலீஸ் ஜவான்கள் கண், தலை தெரியாத சண்டியர்கள் ஆகிவிடுவார்கள். அப்படிப்பட்டவர் கையில் தோக்குகளை (துப்பாக்கிகளை) விட்டு வைப்பது மிக மிக ஆபத்து” என்று வலியுறுத்திக் கூறினார். மார்சல் நேசமணியும், அப்துல்ரசாக்கும் பேசியதை மலையாளப் பத்திரிகைகள் எழுதிப் பெரிய பரபரப்பை உண்டு பண்ணிவிட்டன. குறிப்பாகக் கோட்டயம் மாவட்ட நாளிதழான மலையாள மனோரமா, நேசமணியும், அவர்தம் கூட்டாளிகளும் தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் உள்ள காவல் நிலையங்களை வளைத்துப் பிடிக்கத் திட்டமிடுகிறார்கள் என்று கூப்பாடு போட்டது. அந்த மலை மேட்டிலிருந்து தலைவர்கள் 1954 ஏப்ரல் 8இல் அடிவாரத்திற்கு வந்தனர். “கொல்லம், திருவனந்தபுரம் இதழ்கள் சில எங்கள் பேச்சைக் கண்டனம் செய்தன. ‘மலையாளி’ என்ற இதழ் எங்கள் பேச்சை அரசாங்கத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு ‘வெல்லுவிளி’ என்று வர்ணித்தது. ‘கேரளக்கோமதி’ என்ற இதழ், ‘நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி?’ என்று ஏளனம் செய்தது. ‘பௌரத்தொனி’ என்ற புரட்சி இதழ் எங்களை வன்முறையில் இறங்க வேண்டாம் என்று அறிவுரை செய்தது” என்கிறார் அப்துல்ரசாக்.

தலைவர்கள் ஊர் திரும்பியதும், மலையாளத் தொழிலாளர்களைத் தூண்டி விட்டு, தமிழ்த் தொழிலாளர்களைத் தாக்க வைத்தனர். போலீஸ் ஜவான்களும் ஆயுதப் போலீஸ் படையினர் சிலரும் ஊடே புகுந்து வேட்டையாடினர். தொழிற்சங்கத் தலைவர் குப்புச்சாமி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேசமணி தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கச் சென்னை சென்றார். நேசமணி, காங்கிரசுக் கட்சிச் பொதுச்செயலாளர்களான பலவந்தராய் மேத்தாவுக்கும், ஸ்ரீநிவாச மல்லையாவுக்கும் அடிக்கடி நெருக்குதல் கொடுத்து வந்தார். தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் காமராசரையும், மூதறிஞர் இராசாசியையும் சந்தித்து தேவிகுளம், பீர்மேடு மக்களின் நிலையை எடுத்துக் கூறினார்.

1906&1954இல் திருவிதாங்கூர்தமிழ்நாடு காங்கிரசு செயற்குழு கூடி, தேவிகுளம் பகுதியில் நடந்துவரும் காவல்துறை வெறியாட்டத்தை ஆழ்ந்து கவனித்து இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றின. 1954 சூன் 30ஐத் திருவிதாங்கூர் தமிழகம் எங்கும் “தேவிகுளம் நாளாகக்” கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், பட்டணங்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அத்தீர்மானங்களாகும்.

                தேவிகுளம் மக்கள் சிக்கலை நேரில் காண 02071954 பிற்பகலில் நாகர்கோவிலிருந்து தலைவர் நேசமணியும் ஜனாப் அப்துல்ரசாக்கும் முன்னாள் அமைச்சர் சிதம்பரநாதனும் மூணாறு சென்றனர். அப்போது அங்குத் தடை ஆணை போடப்பட்டிருந்தது. தலைவர்கள் தடையை மீறினர். பி.சி.அலெக்சாண்டர் அங்குக் காவலரோடு வந்து நின்றார். “பக்கத்தில் இருந்த ஒரு மண்திட்டில் ஏறி நின்று மார்சல் நேசமணி முழங்கத் தொடங்கினார். “இங்கு ஆட்சியிலிருப்பது ஒரு ஜனவஞ்சக சர்க்கார் “என்று தொடங்கி அத்தொடரை அவர் முடிப்பதற்கு முன்னரே பி.சி.அலெக்சாண்டர் முன்வந்து, “நான் உங்களைக் கைது செய்கிறேன்” என்றார். உடனே மார்சல் அவரை நோக்கி ஓரடி முன் வைக்க அவர் கைது செய்யப்பட்டார்.

அடுத்து நடந்ததை அப்துல்ரசாக்கே விவரிக்கிறார்: “நான் மார்சல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். ‘அந்த சர்க்காரை நாம் சட்டை செய்ய வேண்டியது இல்லை’என்று நான் முடித்ததும் என்னையும் கைது செய்தனர். மூன்றாவதாக சிதம்பரநாதன், “அந்த சர்க்காரை நாம் எதிர்ப்போம்”,எனத் தொடங்கி முடிப்பதற்குள் அவரும் கைது செய்யப்பட்டார்” என்கிறார் ஜனாப் அப்துல்ரசாக் அவர்கள். மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் கைது செய்யப்பட்டு மூணாறு அரசினர் விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சிறிது நேரம் தங்க வைக்கப்பட்டுப் பிறகு கோட்டயம் ஜில்லா மாஜிஸ்டிரேட் நீதிபதியிடம் கொண்டு போகப் பட்டோம். அவர் 05&07&1954 வரை கோட்டயம் காவல் நிலையத்தில் இருக்குமாறு பணித்தார்.

“ கோட்டயம் நிலையத்தில் பி.சி.அலெக்சாண்டர் எங்களுக்காக்க் காத்திருந்தார். இரவு தரப்பட்ட போஜனத்தை முடித்துக் கொண்டு நாங்கள் வராண்டாவுக்கு வந்தபோது எங்கள் அறைக்கு வழி காட்டினார். வராண்டாவில் எங்களை நிறுத்திவிட்டு நேசமணி மட்டும் அறைக்குச்சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்து விடவும் செய்தார். அலெக்சாண்டரைப் பார்த்து அந்த அறைக்குள் படுக்க முடியாது என்றும், அவருக்கு எங்களிடம் அவநம்பிக்கை இருந்தால் எங்களைக் கைவிலங்கு மாட்டி வராண்டாவிலே போட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். எங்களுக்காகப் பாய், தலையணை சேகரிக்கவும் ஆரம்பித்தார். அப்போது அங்கு ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. தமிழ்ப் பெண்ணின் அலறல் அது. தாய்மை அடைவதற்காகத் தவிக்கிறாள் என்பதை நாங்கள் தொரிந்து கொண்டோம். அரை மணிநேரத்தில் மீண்டும் அலற ஆரம்பித்தாள். அவள் பிரசவித்துவிட்டாள். காவல்நிலைய ஊழியர்கள் பெயர் தேடி அலையவில்லை. உடனே முழங்கிவிட்டனர். ‘நேசமணி ஜனிச்சு’. மார்சல் நேசமணிக்கு காவல்நிலையத்தில் இப்படியும் ஒரு பாராட்டு” என்கிறார் ஜனாப் அப்துல்ரசாக்.

“ மறுநாள் ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம் . தடைமீறலை நாங்கள் ஒப்புக்கொண்டோம். அதற்கான சூழ்நிலையைச் சுருக்கமாக விளக்கிப் பேசினார் நேசமணி. அவரைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் அவரை வழி மொழிந்தோம். ஆறுவார சிறைத்தண்டனை தந்து திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு எடுத்துவரப்பட்டோம். பொன்னப்ப நாடார், குஞ்சன் நாடார், மாங்கரைக் கூட்டத் தலைவர் ஏ.ஆர். சைமன், மு.ராஜாபிள்ளை ஆகியோர் எங்களை வந்து பார்த்தனர். எங்கள் உதவியாள்கள் அனைவருமே கைதிகள். அதிலும் குற்றவியல் கைதிகள். கொடூரக் குற்றங்களுக்காக நீண்ட நாள்கள் தண்டிக்கப்பட்டவர்கள். உணவு ஒத்துக் கொள்ளவில்லை. படுக்கை சரியில்லை. தூக்கம் சரியில்லை. படிப்பதற்கு ஒரு நூலும் கொண்டுவரவில்லை” என விவரிக்கிறார் அப்துல்ரசாக்.

தென்எல்லைக் காவலன் நேசமணியையும் உடன்சிறை சென்றவர்களையும் விடுதலை செய்யவும் தேவிகுளம், பீர்மேடு மக்களை மலையாள அரசு துன்புறுத்துவதைத் தடுத்து நிறுத்திடவும் திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதி முழுவதும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஏ.குஞ்சன் நாடார் (சர்வாதிகாரி), எம்.வில்லியம், டி.டி.டானியல்,. பி.தாணுலிங்கம் நாடார், ஆர்.பொன்னப்பன் நாடார், பி.இராமசாமி பிள்ளை, எஸ்.எஸ்.சர்மா, எம்.டி.அனந்தராமன், சி.கோபாலகிருஷ்ணன், என்.நூர்முகமது,. ஏ.எம்.சைமன், ஏ.காந்திராமன், வி.அருளப்பன் போன்றோர் தலைமை ஏற்றுச் சிறை சென்றனர்.

மறியல் போராட்டத்தில் ஏ.அருளப்பன், புதுக்கடை,முத்துச்சாமி நாடார், கிள்ளியூர், எம்.குமரன் நாடார், தோட்டவாரம், எம்.செல்லப்பா பிள்ளை, புதுக்கடை, ஏ.பீர்முகமது, தேங்காய்பட்டினம், சி.பப்புப் பணிக்கர், தொடுவெட்டி, எஸ்.இராமைய்யன் நாடார், நட்டாலம், ஏ.பொன்னப்பன் நாடார், தோட்டவிளை, மணலி, எம்.பாலையன் நாடார், தோட்டவிளை, மணலி ஆகியோர் தம் இன்னுயிரை ஈந்தனர்.

மேலும் இப்போராட்டத்தில் சங்கரன் நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். ஒருவர் வண்டியேற்றிக் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுடடு வீழ்த்தப்பட்டார். மடிச்சல் சங்கு நாடார் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் போடப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாகச் சான்றுகள் உள்ளன. மேலும் பல தியாகிகள் சிறை சென்றனர்.                 இவர்களுக்கு முன்னரேயே 1948 பெப்ரவரி 8இல் தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இருவரும் திருவிதாங்கூர் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடித் தம் இன்னுயிரை ஈந்துள்ளனர் என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

அங்குள்ள மக்களின் துன்பங்களைப் பற்றி மார்சல் நேசமணி, “தேவிகுளம், பீர்மேடு தாலூக்காக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்லமுடியாத இந்த மலைமுகடுகளில் ஏல விவசாயம் வளர்த்த பெருமை முழுவதும் தமிழனுக்கே உரியதாகும்” என்று குறிப்பிடுகிறார்.

ஏன் தேவிகுளம், பீர்மேடு தமிழகத்தோடு இணையவில்லை?

மார்சல் நேசமணி அவர்கள் தம் நாடாளுமன்ற உரையில் தேவிகுளம்,பீர்மேடு பகுதிகள் தமிழ் நாட்டிற்குச் சொந்தமானவை என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கிறார். முல்லைப் பெரியாறு அணையும் நமக்குரியதே என ஆதாரங்களை அடுக்குகிறார்.(பார்க்க:’சமூகநீதித் தமிழ்த்தேசம்’,டிசம்பர் 2012). “திருவிதாங்கூர்” (கேரளம்) தமிழர் போராட்டம் நடைபெற்றபோது கேரள அரசியல்வாதிகள் ஒன்றாக இணைந்து நின்றனர். ஆனால், தமிழக மக்களிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் அப்போராட்டத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பாராளுமன்றத்தில் நேசமணி 9 தாலுக்காக்களுக்காகவும் பெரியாறு அணைக்காகவும், வாதாடியபோது எல்லாக் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தனர். ஆனால் தமிழகத்து உறுப்பினர் ஒருவர் கூட ஆதரவு காட்டவில்லை.

பசல்அலி தலைமையிலான புனரமைப்பு ஆணைய உறுப்பினர்கள் மூவரில் ஒருவராக சர்தார் கே.எம். பணிக்கரை இந்திய அரசு அமர்த்தியது. இவர் ஒரு மலையாளி, மலையாளிகளுக்கு சாதகமாகவே நடந்தார். நேருவின் அந்தரங்கச் செயலாளர் எம்.ஓ.மத்தாயி, பட்டேலின் செயலாளர் வி.பி.மேனன், இராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன், காங்கிரசுப் பொதுச்செயலாளர் மாதவன் நாயர், வெளிநாட்டு இணை அமைச்சர் திருமதி.லெட்சுமி ஆகியோர் தில்லி அதிகாரத்தில் இருந்த மலையாளிகள். எதிர்கட்சித் தலைவராக ஏ.கே.கோபாலன் இருந்தார். சீன, அமெரிக்கா, உருசியத் தூதர்கள், குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர்களில் மூன்றில் இரண்டு பேர் எனஅதிகார வட்டத்தில் மலையாளிகள் நிரம்பி இருந்தனர். இவர்கள் செல்வாக்கால் தமிழனின் தேவிகுளம் பீர்மேடு மீட்பு கனவானது.

போராட்டத்தின் உச்சநிலையில் தலைவர் நதானியேல், திரு.ஆர்,கே.ராம், திரு.பி.எஸ்.மணி போன்றவர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு வேறு கட்சிகளில் இணைந்தனர். நதானியேல் பட்டம் தாணுப்பிள்ளை கட்சியில் சேர்ந்தார். தோவாளையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளர் வெற்றி பெற்றதே இல்லை. பட்டம் தாணுப்பிள்ளை கட்சி வேட்பாளர்தான் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் மொத்தப்பகுதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மார்‘ல் நேசமணியேஆவார்.

இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு சதி தமிழகத்தில் நடந்தது. சென்னை மாகாணத் தலைவர் செயலாளராக இருந்த திரு.வர்கீஸ் என்ற மலையாளி தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைப் பற்றிய சிக்கல் எழுந்த போது யாரிடமும் ஆலோசிக்காமல் அப்பகுதிகளைக் கேரளாவுக்குக் கொடுக்கலாம் என்க் கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சதியே தேவிகுளம், பீர்மேடு நம்மை விட்டுப் போவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.

மேற்கூறிய காரணங்களினால் தமிழகத்தோடு தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய ஐந்து தமிழ்ப் பகுதிகளே இணைந்தன. முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம் நம்மை விட்டுக் கேரளாவுக்குச் சென்றது. தமிழன் தன் மண்ணில் இன்று தாகத்திற்குத் தண்ணீரின்றித் தவிக்கிறான்.

முல்லைப் பெரியாறு, நெய்யாறு ஆகிய சிக்கல்கள் தீரவேண்டுமானால் தென்எல்லைக் காவலன் நேசமணிகேட்ட ஒன்பது தாலுக்காக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க, கட்சிச் சார்பு நிலையின்றி எல்லாத் தமிழர்களும் ஒன்றிணைந்து போராடி அவற்றைத் தமிழகத்தோடு இணைத்தால் மட்டுமே தமிழகத்தின் உயிர்ச் சிக்கலாகிய தண்ணீர்ச் சிக்கல் நீங்கும்.

தமிழக அரசியல்வாதிகள் வெற்று அறிக்கை விடாமல் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து போராடினால் தமிழக முதல்வரும் பச்சைக் கொடி காட்டினால் தேவிகுளம், பீர்மேடு மீண்டும் தமிழகத்தோடு இணைய வாய்ப்பு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை, நெய்யாறு அணை ஆகியவை கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் வரை நமது தண்ணீர் ச் சிக்கலுக்குத் தீர்வு என்பது பகல் கனவு. பாண்டிய மன்னருக்குச் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதியைத் தாய் தமிழகத்தோடு இணைப்பது ஒன்றே தீர்வுக்கான ஒரே வழி.

(தென்னெல்லைப் போராட்டத்தை விரிவாக அறிந்து கொள்ள படிக்க வேண்டிய நூல்கள்:

1.’நேசமணி வரலாற்றில் ஒரு திருப்புமுனை’ (“Nesamony-A Turning Point in History”) ஏ.அப்துதுல்ரசாக்

2.’மார்சல் நேசமணி குமரியின் தந்தை’

கிடைக்குமிடம் பேரா. Dr.M.ஆல்பென்ஸ் நதானியேல், M.A.,B.O.L.,Ph.D.., 545,1கி சார்லஸ் தெரு, வெட்டூர்ணிமிடம், நாகர்கோவில்3. செல்:9442338637)

Pin It