சனவரி 26,2013 தமிழ்த்தேசிய விடுதலை வரலாற்றில் கருப்புநாள்! என்றுமே மறக்க முடியாத துக்க நாள்! நம் தலையில் இடி இறங்கிய கொடிய நாள்! வஞ்சகத்தால் நம் தோழர் மோகன்ராசு வீழ்த்தப்பட்ட நாள்! தோழரின் அரத்தத்தால் இம்மண் சிவந்த நாள்!

பல்வேறு அரசியல், தொழிற்சங்கப் பணிகளுடன் நூலகப் பணியையும் தம் தலையாய பணிகளுடன் ஒன்றாக ஏற்றிருந்தார் தோழர். தொழிலாளர் குழந்தைகள் நன்கு கற்றுத் தம் அறிவை அகல ஆழப்படுத்தி அறிவுலகை ஆள வேண்டும் என்பது அவரது பேரவவாக இருந்தது. “பாட்டாளிகள் படிப்பகம்” என்ற பொருத்தமான பெயரையே நூலகமும் பெற்றிருந்தது. பாட்டாளிகள் படிப்பகத்தை ஆய்வு நூலகமாகவும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கனவும் அவரிடம் இருந்தது. போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நூலகத்தில் பயிற்சி தர வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் விருப்பப்பட்டார். நம் குழந்தைகள் அதிகாரப் பீடங்களையும் அழகுபடுத்த வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு அது.

எதை மறந்தாலும் ஒவ்வொரு நாளும் நூலகம் செல்வதைத் தோழர் மறக்கவே மாட்டார். அது அவரது அன்றாடப் பணிகளில் ஒன்றாக மாறியிருந்தது. தம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்வதும் அங்குச் செல்வதின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அன்றும் அவர் அவ்வாறுதான் சென்றிருந்தார். அது மாலை நேரம். மணி ஆறைக் கடந்து ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கமாகப் படிக்க வரும் படிப்பாளர்கள் வெளியேறி இருந்தனர். அதுவரை உடனிருந்த தோழர் விசயக்குமார் அப்பொழுதுதான் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். தோழர் செல்லமுத்து மட்டும் உடனிருந்துள்ளார். நேரம் பார்த்துக் காத்திருந்த கொலையாளிகள் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்களைப் பார்த்த செல்லமுத்து அவர்கள் வருவதைத் தோழரிடம் தெரிவித்துள்ளார். கொலையாளிகளின் சூழ்ச்சி நோக்கம் அறியாத நம் தோழர்,”வாங்க தம்பீ” என்றுதான் எப்பொழுதும் போல் அப்பொழுதும் அழைத்துள்ளார்.

நேற்றுவரை தோழனாக உடனிருந்தவர் கொலையாளியாக மாறுவான் என்பதை ஈ, எறும்புகளுக்குக் கூடத் தீங்கு நினைக்காத அன்பையும், பாசத்தையும் தவிர வேறெதையும் அறியாத அந்த அன்பு நெஞ்சம் நினைத்துப் பார்த்திருக்கவே வழியில்லை. உள்ளே நுழைந்தவுடன் கொலையாளிகள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கருவிகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. முதல் தாக்குதல் நடுத்தலையில் என்று சொல்லப்படுகிறது. அந்தத் தாக்குதலே அவரைக் கீழே சாய்த்து விட்டதாகத் தெரிகிறது. அவர் சமாளித்து எழ முடியாமல் அடுத்தடுத்துப் பலமாக வெட்டுகள் விழுந்துள்ளன. கொலையாளிகள் கொடுந்தாக்குதலைக் கண்டும் மிரட்டலை அடுத்தும் வெளியே ஓடி வந்து செல்லமுத்து பதற்றத்தோடு தோழர்களுக்குச் செய்தியை கைபேசியில் தெரிவித்ததாகத் தெரிகிறது. தோழர் அரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் கொலைக்கருவிகளை அங்கேயே விட்டுவிட்டு கொலையாளிகள் வெளியேறியுள்ளனர்.

செய்தி அறிந்து தோழர்கள் நகரச் சாலையில் போக்குவரத்து நெருக்கடியில் விரைந்து வருவதற்குள் தோழரின் அரத்தம் நிறைய வெளியேறி விடுகிறது. முதலில் தோழர் தமிழழகன்தான் உள்ளே நுழைகிறார். குழந்தைப் பருவத்திலிருந்து நகமும் சதையுமாய் ஒன்றாக வளர்ந்த தோழர்கள்; அரசியலானாலும் தனிவாழ்வானாலும் ஒருவரோடு ஒருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்பவர்கள். துடித்துப் போகிறார் தமிழழகன். தன் உயிர்த் தோழனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற துடிப்பில் அரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த மோகன்ராசை ஒரே தூக்காகத் தூக்குகிறார். அதற்கு முன்னரே அங்கு வந்து விட்ட காவல்துறை அதன் பின்னர்தான் உள் நுழைகிறது.

 108 ஆம்புலன்சில் தன் மடியில் தோழனைப் படுக்க வைத்தவாறே மருத்துவமனைக்கு விரைகிறார் தமிழழகன். தலையிலும் மார்பிலும் வயிற்றிலும் எனத் தாறுமாறான பன்னிரண்டு ஆழ்வெட்டுக் காயங்கள்; அளவுக்கு மீறி வெளியேறி விட்ட அரத்தம்; உயிர் என்னமாய்த் துடித்திருக்கும்? கற்பனையே செய்து பார்க்க முடியாத கொடிய நிலை. அந்த நிலையிலும் “எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடடா, நமக்கு நிறைய அரசியல் பணிகள் உள்ளன” என்றுதான் நண்பனின் மடியில் படுத்தவாறே வேண்டியிருக்கிறார் மாவீரன் மோகன்ராசு. ஆனால் தோழரின் உயிர் மருத்துவமனையை நெருங்கும் முன்னரே விடை பெற்றுக் கொள்கிறது.

செய்தி பரவப்பரவ தோழர்கள் மருத்துவ மனையில் வந்து குவிந்து விடுகின்றனர். தோழர்கள் கொளத்தூர் மணி, கண.குறிஞ்சி, பொன்னையன் உட்படத் தோழர்கள் பலர் வந்து விடுகின்றனர். நடந்த நிகழ்ச்சியை எவராலும் நம்ப முடியவில்லை. எல்லோரும் பதறிக் கலங்கிப் போகின்றனர். ஒவ்வொரு தோழரின் கண்களுமே கலங்கியிருந்தன. சிலர் தாங்க முடியாமல் வாய்விட்டுக் கதறி அழவும் செய்தனர். எல்லோருடைய நெஞ்சங்களையும் அன்பால் நிறைத்திருந்த தோழரின் இழப்பை எப்படித் தாங்கிக் கொள்வது?

அடுத்த நாள் காலை, மருத்துவமனையிலிருந்து உடலைப் பெற மணி பத்துக்கு மேல் ஆகிவிடுகிறது. போராட்ட ஊர்வலங்கள் பலவற்றிற்குத் தலைமை தாங்கி நடத்திய வீரப் போராளியின் உடல் வண்டி ஒன்றில் கிடத்தப்பட அவரது இறுதி ஊர்வலம் ஈரோடு அரசு மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாய் நடந்து வந்தனர். முன்னும் பின்னும் காவல்துறையினர் அணிவகுப்பு; மேட்டூர் சாலை,பேருந்து நிலையம்,திருநகர் காலனி வழியாகச் சென்ற ஊர்வலம் அவரது இல்லம் சென்றடைந்தது. அங்கு உற்றார் உறவினர் உட்படப் பலர் தோழருக்கு இறுதி வணக்கத்தைச் செலுத்தினர். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் மூத்த தோழர் வேலிறையன் பீறி வரும் அழுகையை அடக்கியவாறே இயக்கக் கொடியைப் போர்த்தி இறுதி வணக்கம் செலுத்தினார். தோழரின் துணைவியாரும் அவரது அன்புக் குழந்தைகளும் கதறிக் கதறி அழுதது அனைவரின் நெஞ்சங்களையும் பிழிந்தது. யார்தான் அவர்களுக்கு ஆறுதல் கூற முடியும்? என்னதான் ஆறுதல் கூறுவது?

மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் அவர் தம்மிரு கண்கள் போலப் போற்றி வளர்த்த இறுதியில் அவரின் கொலைக்களமாயும் அமைந்து விட்ட பாட்டாளிகள் படிப்பகத்தைக் கடந்த பொழுது அனைவரின் உள்ளங்களும் கனத்தன. இறுதியாக ஊர்வலம் இடுகாட்டை அடைந்த பொழுது இரண்டு மணியைக் கடந்திருந்தது. ஆற்றாத் துயரத்தோடு உடலை மின்தகனத்திற்கு ஒப்படைத்த பின்னர் அங்கிருந்த மண்டபத்தில் தோழர்கள் தம் இறுதி வீரவணக்கத்தைச் செலுத்த அமர்ந்தனர். தோழர் பொன்னையன் நிகழ்விற்குத் தலைமை தாங்க தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், ப.ப.மோகன், நிலவன், கண.குறிஞ்சி, ச.பாலமுருகன், என்.கே.நடராசன், பாவேந்தன், வழக்குரைஞர் இராதாகிருட்டிணன், மெய்யப்பன், செல்வமணி, விசயக்குமார், தாராபுரம் ராசாமணி உட்பட அனைத்து அமைப்புத் தோழர்களும் தோழர் மோகன்ராசுவின் சிறப்பியல்புகளையும், ஈடிணையற்ற ஈகத்தையும் வியந்துரைத்து இரங்கலுரை ஆற்றினர். “கொலையாளிகள் வெறும் அம்புகளே, கொலைக்குப் பின்னால் ஆதிக்க ஆற்றல்களின் கைகள் இருக்கவேண்டும்” என்ற கருத்தை அனைவருமே குறிப்பிட்டனர். இறுதியாக இயக்கத் தோழர் வேலிறையன் உரையோடு இரங்கல் நிகழ்வு நிறைவுற்றது.

அரசின் அடக்குமுறைகளுக்கோ ஆளும் வர்க்கத்தின் மிரட்டல்களுக்கோ எள்ளளவும் அஞ்சாமல் வீரப் போராளியாக உலவி வந்த தோழர் மோகன்ராசு இறுதியில் வஞ்சக வலையில் வீழ்ந்து விட்டாரே என்ற தாங்க முடியா வருத்தமே அனைவரின் மனதையும் நிறைத்திருந்தது.

Pin It