தோழர். மு.மோகன்ராசு ஈரோட்டில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல இடங்களில் சமீப காலமாகப் பேசப்பட்ட பெயர்.

மார்க்சீயம் மண்ணிற்கேற்ப விதைக்கப்படும்போதும் வளர்க்கப்படும்போதும்தான் வீறு கொண்டு வளரும் என்பதை நடைமுறையில் நிரூபித்த இயக்கத்தின் செயல் தலைவன் மு.மோகன்ராசு.

தொழிலாளி வர்க்கத்தின் தத்துவம் மார்க்சீயம். அதன் அடிப்படையை உள்வாங்கித் தலைவர்களாகப் பரிமாணித்தவர்கள் சிலரே. அதில் மோகன்ராசுவும் ஒருவர்.

தொழிலாளி வர்க்கம் தன் அடிமைத் தளைகளை உணர்ந்து கொண்டே இதர அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத் தளைகளை முறித்து ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலெனினியக் கோட்பாடுகளைச் சுவீகரித்துச் சொல்லாலும் செயலாலும் தமிழக மண்ணில் பாடுபட்டவர்தான் மு.மோகன்ராசு.

தொழிலாளி வர்க்கத்துக்கு அரசியல் மட்டுமல்ல, அதற்கு மொழி, வாழ்விடம், தேசியம் உண்டு. அதனைப் புறக்கணித்து, வெற்றுப் பொருளாதாரப் போராட்டம், வர்க்கப் போராட்டத்தை உருவாக்காது என்பதை ஈரோடு மண்ணில் நடைமுறைப்படுத்திய பெருமை தோழர் மு.மோகன்ராசுக்கு உண்டு.

90களுக்குப்பின் உலகமயம், தனியார் மயம், தாராளமயம் உலகின் பல பாகங்களில் தனியுடைமைச் சுரண்டலை நிறுவனப்படுத்தி, நிதி மூலதனத்துடன் சேர்ந்த பன்னாட்டு மூலதனப் பேட்டைகளை உருவாக்கி வந்தபோது, இந்திய அரசும் அதற்குப் பட்டுக்கம்பளம் விரித்தது. தொழிற்சங்க உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய வரலாறு காணாத போராட்டங்களின் வெற்றிகளைச் சுதந்திரமாகப் பறிக்கும் நிலை ஏற்பட்டது, நம் தமிழ்மண்ணில் உட்பட.

இந்த நிலையில்தான் ஈரோட்டில் ஓன்கார் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தம் தோள்களில் தாங்கிய தொழிற்சங்கப் போராளியாய் தோழர் மு.மோகன்ராசுவை நான் சந்தித்தேன்.

ஈரோட்டில் மிகப்பெரும் பஞ்சாலைகளில் நடந்த தொழிற்சங்க உரிமைப் போராட்டங்கள், முதலாளிகளின் சதியால், கருங்காலிகளால், அரசின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு நீதி கேட்டு வழக்கு மன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்ற நிலையில், மோகன்ராசுவின் தலைமையில் நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டம் ஆவேசத்துடன் எழுந்தது. தொடர் அடக்குமுறை, பழிவாங்குதல், சிறை, கொலை வழக்கு, கருங்காலிகளின் துரோகங்கள் ஆகியவற்றை கட்டுப்பாடாய்ச் சந்தித்து வெற்றி கண்டது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி மீண்டும் பணியமர்த்திய வரலாறு தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் புதிய சரித்திரம் ஆகும்.

வேலை உத்திரவாதம், பொருளாதாரக் கோரிக்கை ஆகியவை வெற்றி கண்டவுடன் அத்துடன் வழக்கமான தொழிற்சங்கப் பணிகளில் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், தொழிலாளி வர்க்கத்தை அரசியல்படுத்தத் தமிழக தொழிலாளர் முன்னணி கண்டு, மடித் தொழிலாளர்கள், பெட்ரோல் பங்க் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு, தொடர் முயற்சியால் ஒப்பற்றத் தொழிற்சங்க முன்னோடிகள் சிங்காரவேலர், வ.உ.சி, ஜீவா, அம்பேத்கார் ஆகியோரின் பெயர்களில் சங்கங்கள் கண்டு அனைவரையும் இணைத்து ஈரோட்டில் புதிய அரசியல் களத்தை உருவாக்கிய பெருமை தோழர். மோகன்ராசுவையே சேரும்.

மேதினி போற்றும் மேதினப் பேரணி சடங்காகச் சுருங்கிக் கொண்டிருந்த காலத்தில் ஈரோட்டில் பெண் தொழிலாளர்களை உட்படுத்திய பெரும் செம்படைப் பேரணி நடத்தி அதன் வரலாற்றை இன்றைய தேவையுடன் பொருத்தி எழுச்சி ஏற்படுத்தினார். அக்காலத்தே தமிழ்த்தேசிய அரசியலை உள்வாங்கி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் செயல்வடிவம் கொண்ட தமிழக இயக்கமாக மாற்றிய போராளி மோகன்ராசு ஆவார்.

இதர உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரித்தும், மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுத்தும், ஈழப் பிரச்சனைக்கு ஈடற்ற முறையில் இயக்கங் கண்டும், கூடன்குளம் போரட்டத்தில் உழைக்கும் மக்களுடன் சென்று களம் கண்டும், இதர இயக்கங்களை இணைத்தும் ஈரோட்டிலும், தமிழகத்திலும் ஒரு தலைவருக்கு உரிய தகுதியோடு பணியற்றிய மோகன்ராசுவை நான் என் இனிய தோழராய் இன்முகத்தோடு எதனையும் சந்திக்கும் தலைவராய்ப் பார்த்துப் பூரித்துப் போனவன்.

தமிழகத்தின் இன்றைய தேவை களப்பணியுடன், மக்கள் எழுச்சியுடன் எல்லோரையும் இணைத்து இயக்கம் காணும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உள்ள தமிழ்த்தேசிய அரசியல். அதன் உருவமாய், உள்ளடக்கமாய் உருவான இளம் தலைவரான தோழர், தான் உருவாக்கிய படிப்பகப் பாசறையில் செங்குருதி சிந்தி வீழ்ந்ததை ஏனோ மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

தமிழகத்தில் 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவான மக்கள் தலைவர்களில் கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் சுப.உதயகுமாருக்கு அடுத்துத் தமிழ்த்தேசிய அரசியல் தலைவராக உருவாகிய செயல் போராளி, கூட்டுத் தலைமைக்கும் மக்கள் போராட்டத்திற்கும் தலைமை தாங்கும் மோகன்ராசுவை உடலால் இழந்திருக்கின்றோம்.

அவர் கொள்கைகளையும், இயக்கத்தையும் முன்னெடுத்துச் செல்வதே நாம் அனைவரும் அவருக்குச் செய்யும் செவ்வணக்கமாகும்.

- மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

Pin It