கடந்த சூலை 6 இந்து நாளேட்டில் தூக்குத் தண்டனை தொடர்பான சிறந்த கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. “மரணப் பட்டியிலிலிருந்து அவர்களை நீக்குங்கள்” என்பது கட்டுரையின் தலைப்பு. கட்டுரையை எழுதியவர் முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசரும் இப்போதைய அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுக் கழகத்தின் தலைவருமான பிரபா சிறீதேவன் அவர்கள் ஆவார். தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்க்கும் செய்திகளை உள்ளடக்கிய கட்டுரை இது.

hanging_281அமெரிக்கா டெக்ஸாஸ் மாநிலத்தில் வேறொருவர் செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்ட கார்லோஸ் டி லூனா பற்றிய குறிப்போடு கட்டுரை தொடங்குகிறது. உண்மையிலேயே குற்றம் செய்தவர் கார்லோஸ் கெர்னான்டெஸ் என்பவர் ஆவார். கொலம்பியா சட்டப் பேராசிரியர் ஒருவரும் அவரது குழுவும் மேற்கொண்ட அதிரடிப் புலனாய்வில் இவ்வுண்மை வெளிவருகிறது. ஆனால் என்ன பயன்? சார்லோஸ் டி லூனாவிற்கு இது மிக மிகக் காலம் தாழ்ந்து வெளி வந்த உண்மையாகிப் போகிறது. ஏற்கனவே அவர் உயிர் தூக்குக் கயிற்றில் பறிக்கப்பட்டிருந்தது.

 டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆள் மாறாட்டத்தில் ஓர் அப்பாவி உயிர் பரிதாபமாகப் பறி போனது. இந்தியாவிலோ தவறான தீர்ப்பினால் பதின்மூன்று பேர்களின் உயிர்கள் தூக்கை எதிர்நோக்கி ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. நீதியரசர் அவ்வுயிர்களின் பட்டியலையும் தருகிறார்: 1.தயாநிதி பிசாய், 2.சாய்பன்னா, 3.ஆங்கஸ் மாருதி சிண்டே, 4.அம்பாதாஸ் லக்சுமண் சிண்டே, 5.பாபு அப்பா சிண்டே, 6.ராஜூ மகாசு சிண்டே, 7.ராஜ்ய அப்பா சிண்டே, 8.சூர்யா என்கிற சுரேஷ் சிண்டே, 9.சாத்தான், 10.உபேந்திரா, 11.சிவாஜி என்கிற தாத்யா சங்கர் அல்காத், 12.பாண்டு, 13.மோகன் அன்னா சவான்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை தவறானது என யார் கண்டு பிடித்தது? அமெரிக்காவைப் போலப் புலனாய்வுக் குழு ஏதாவது கண்டு பிடித்ததா? இல்லவே இல்லை. தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றமே தான் முன்னர் வழங்கிய தீர்ப்புகளைத் தவறெனப் பின்னர் கண்டு பிடித்துக் கூறியுள்ளது. அவ்வாறு தவறாக வழங்கிய தீர்ப்புகளைக் கவனக் குறைவாலோ சட்டத்தை அறியாமலோ வழங்கிய தீர்ப்புகளாக அது அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இத்தவறுகள் எப்படி நேர்ந்தன என்பதைக் கட்டுரையாசிரியரே விவரிக்கிறார். இக்குழறுபடிகளை முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரே சுட்டிக் காட்டுவது சுவை யானதுதான்.

உச்சநீதிமன்ற அரசமைப்பு இருக்கை 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பச்சன்சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் தூக்குத் தண்டனை வழங்க சில நிபந்தனைகளை விதிக்கிறது. அரிதான கட்டாயக் காரணங்கள் இருந்தால் மட்டுமே தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கருத்தறிவிக்கிறது. அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொற்றாடல் இத்தீர்ப்புக்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தது என்பது இங்கே நினைவுகூரத் தக்கது . இந்தியக் குற்றவியல் சட்டம் 302 இன்படி தீர்ப்பு வழங்கும் முன் குறிப்பிட்ட குற்றம் நடைபெற்றதற்கான சூழல்களை மட்டும் முதன்மையாகக் கணக்கில் கொள்ளாமல் குற்றவாளி அக்குற்றம் செய்ய நேர்ந்ததற்கான காரணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என இவ்வழக்கின் தீர்ப்பு அறிவுறுத்தியது. குற்றத்தின் தன்மையை மட்டுமல்ல குற்றவாளியின் சூழல்களையும் மனதில் இருத்தியே தீர்ப்பு வழங்க வேண்டும் என அது தெளிவுபடுத்தியது.

மேற்கண்ட வழிகாட்டுதல்கள் பின்னர் வந்த தீர்ப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் சோக வரலாறு. அதை முன்னாள் நீதியரசரே சுட்டிக் காட்டுகிறார். 1996இல் நடைபெற்ற ராவ்ஜி என்கின்ற ராமச்சந்திரா எதிர் ராஜஸ்தான் அரசு வழக்கில் இந்நெறிகாட்டுதல்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டன. கவனிக்க வேண்டியது குற்றவாளியை அல்ல, குற்றத்தின் தன்மையையே எனத் தீர்மானித்து ராவ்ஜி ராவுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதன் பின் 2009 வரை வந்த அனைத்து வழக்குகளிலும் பச்சன்சிங் வழக்கு நெறிகாட்டுதல்கள் புறந்தள்ளப்பட்டு ராவ்ஜி வழக்கே முன்காட்டாகக் கொள்ளப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. கட்டுரையாளர் பட்டியலில் தந்துள்ள பதின்மூன்று பேர்களும் இவ்வடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுத் தூக்கிற்காகக் காத்திருப்போரே ஆவர். ஆனால் ராவ்ஜி வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ராவ்ஜி ராவும், சுர்ஜா ராம் எதிர் ராஜஸ்தான் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சுர்ஜா ராமும் முறையே 1996 மே 4 இலும், 1997 ஏப்ரல்7 இலும் தூக்கலிடப்படுகின்றனர்.

 2009 இல் சந்தோஷ் குமார் பரியார் எதிர் மகாராட்டிரா அரசு வழக்கின்போதுதான் உச்ச நீதிமன்றம் மீண்டும் விழித்துக் கொள்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக ராவ்ஜி வழக்கை அடி யற்றி வழங்கப்பட்ட தீர்ப்புகள் தவறானவை என அறிவித்தது. தீர்ப்புகளை ஒழுங்குபடுத்தும் கட்டாய வழிமுறை தேவையென வலியுறுத்தியது. குற்றவாளியைத் தண்டிக்கும் முன் குற்றவாளியின் கருத்தைக் கேட்க வேண்டும் (குற்ற நடைமுறைச் சட்டம் விதி235,2) என்றும்,குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை என்றால் தீர்ப்பில் அதற்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் (IPC விதி 354,3) என்றும் வற்புறுத்தியது.

மீண்டும் 2010 இல் திலீப் திவாரி எதிர் மகா ராட்டிரா அரசு வழக்கிலும் நடந்துள்ள குற்றம் கொடியதெனினும் ராவ்ஜி முன்காட்டைப் பின் பற்றாமல் பரியார் வழக்கையே முன்காட்டாகக் கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் என்ன, ராவ்ஜியின் உயிரையும், சுர்ஜாவின் உயிரையும் தூக்குக் கயிறு பறித்துக் கொண்டதே! உச்சநீதிமன்றம் அவ்வுயிர்களைத் திரும்பத் தருமா? அவர்களின் உயிர் பறிப்பு கார்லோஸ் வழக்கில் போல் ஆள் மாறாட்டத்தால் நேர்ந்ததன்று; தவறான தீர்ப்பால் விளைந்தது.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பிரபா சிறீதேவன் அவர்கள் பதின்மூன்று பேர்களின் அவலநிலையை உருக்கமாகவே வெளிப்படுத்தியுள்ளார். இவற்றைப் படிக்கும்பொழுது நம்மை அறியாமாலேயே நமக்குப் பாராளுமன்றத் தாக்குதல் வழக்கும், இராசீவ் கொலை வழக்கும் நினைவிற்கு வருகின்றன. இவ்வழக்குகள் நேர்மையாக நடத்தப்பட்டனவா? இவ்வழக்குகளில் பரியார் வழக்கு நெறிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டனவா?

பாராளுமன்றத் தாக்குதல் வழக்கிலும்,இராசீவ் கொலை வழக்கிலும் என்ன நடந்தது? அப்சல் குருவின் குற்றத்தை மெய்ப்பிக்கப் போதிய சாட்சிகள் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் நாட்டின் மன நிறைவிற்காக அவரைத் தண்டிப்பதாக அறிவித்தது. நாட்டின் மன நிறைவிற்கு ஓர் உயிர் தேவைப்படுகிறது. இராசீவ் கொலை வழக்குத் தீர்ப்பில் தடாச் சட்டப் பிரிவுகள் பொருந்தாது என அறிவித்த அதே நீதிமன்றம் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மட்டும் தூக்கை உறுதி செய்தது. பின்னர் நளினி சோனியாவின் அருட்பார்வையால் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்கிறார் என்பது தனிக்கதை.

நீதியரசர் குறிப்பிடும் பரியார் வழக்கு முன்காட்டு பதின்மூன்று பேர்களுக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்கு இல்லையா? இப்பதின்மூன்று பேரும் மக்களால் அறியப்படாதவர்கள், அதனால் யாரும் கண்டு கொள்ளவில்லையென நீதியரசர் கவலைப் படுகிறார். ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்ட வர்கள் எளியவர்கள், அதனால் இவ் வழக்குகள் திரும்பத் திரும்ப அலசப்படுகின்றன. இதுவே உண்மை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஊரறிந்தவர்களாகவும், அதிகாரப் பீடத்தைச் சேர்ந்தவர்களாகவும், குற்றம் நாட்டின் ஆன்மாவை உலுக்குவதாகவும் இருந்தால் நீதிதேவதை கண்ணை இறுக மூடிக் கொள்கிறாளே? இவ்வழக்குகளின் நியாய அநியாயங்களைப் பற்றி பெரும்பாலான சட்டமேதைகளும் நீதிமான்களும் பேச மறுக்கின்றனரே! அது ஏன்?

மேற்கண்ட வழக்குகளில் குற்றத்தின் பயங்கரம் மட்டுமே பார்க்கப்படுகிறது. குற்றத்தால் பாதிக்கப் பட்டவர்களின் பேருரு அனைவரின் மனச்சாட்சியையும் சாகடித்து விடுகிறது. குற்றம் நடந்ததற்கான காரணங்கள், குற்றவாளியின் சூழல்கள், குற்றத்தை செய்ய நேர்ந்ததற்கான காரணங்கள் வழக்கின் பொழுதும் பெரிதாக விவாதிக்கப்படுவதில்லை; தீர்ப்பின் பொழுதும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

பரியார் வழக்கில் விரிவாக விவாதிக்கப்பட்ட IPC விதி 235(2) உம், IPC விதி 354(3) உம் பாராளுமன்றத் தாக்குதல் வழக்கிலும் இராசீவ் கொலை வழக்கிலும் செயல்படாதா? இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உயிரை எப்படி வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாமா?இவர்களுக்கு அரசமைப்பு விதி 14 உம்(சட்டத்தின் முன் அனைவரும் சமம்), விதி 21 உம் (உயிருக்கும் உரிமைக்குமான பாதுகாப்பு) பொருந்தி வராதா? நாட்டின் எளிய குடிமகன்களாக இருந்து இந்தக் கேள்விகளைச் சட்ட வல்லுனர்களை நோக்கியும் நீதியரசர்களை நோக்கியும் நாம் ஓங்கி உரக்கக் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நீதிமன்றக் கட்டடங்களையும் சட்ட வட்டங் களையும் தாண்டி வெளியே மக்களிடையே இவ்வுரையாடல்களை விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வகையில் சிறப்பான பெரும் பணியாற்றிய மறைந்த மனித உரிமைப் போராளிகளான பாலகோபாலையும் கண்ணபிரானையும் நாம் என்றென்றும் நினைவிற் கொண்டு போற்ற வேண்டும்.நீதியரசர்களான கிருஷ்ணய்யர், சுரேஷ் போன்றவர்களும் போற்றுதல்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் உரியவர்கள். இவர்களைப் பின்பற்றி இப்பணியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மரணதண்டனை முடிவுக்கு வரும் வரை நம் போராட்டம் ஓய்ந்து விடக் கூடாது.

இறுதியாக நீதியரசர் பிரபா சிறீதேவன் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தவறான தீர்ப்புக்கு உள்ளாகி தூக்குக் கயிற்றின் அச்சத்தில் உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் பதின்மூன்று பேர்களுக்குக் குரல் கொடுப்பதோடு நின்று விடாதீர்கள். தவறான தீர்ப்பில் தூக்குக் கயிற்றின் கீழ் போராடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கும் குரல் கொடுங்கள்; போராடுங்கள்.

இங்கே இன்னொன்றையும் கண்டிப்பாகப் பதிவு செய்தாக வேண்டும்.மூவருக்குக் குரல் கொடுக்கும்பொழுது நம் மீது ஒரு குற்றச் சாட்டை வீசி எறிவோர் உண்டு. மூவர் தமிழர் என்பதால் இவர்கள் இப்படிக் கூக்குரல் இடுகிறார்கள், மரண தண்டனை ஒழிப்பு என்ற கோட்பாட்டு அடிப்படையில் போராடுவதில்லை என்பதே அக்குற்றச்சாட்டு. அய்யா கனவான்களே, இம்மூவர் எங்கள் ரத்தத்தின் ரத்தம், சதையின் சதை, உயிரின் உயிர். தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே! எங்கள் பிள்ளைகளுக்குக் குரல் கொடுக்கும்போது அக்குரல் ஓங்கிய குரலாகவும் உயிர்த் துடிப்புள்ள குரலாகவும் இருக்கத்தானே செய்யும். அதுதானே இயல்பு. ஆனால் தமிழர்கள் தன்னலவாதிகள் அல்லர். தூக்குக் கயிற்றின் நிழலில் பரிதவிக்கும் அனைவருக்கும் குரல் கொடுப்போம், மூவருக்கு ஓங்கிக் குரல் கொடுப்போம். மரண தண்டனை மாண்டொழிக!!

Pin It