வரலாறெங்கும் அதிகாரத்தைக் கைப்பற்றவும், கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்க வைக்கவும் அளவற்ற ரத்தம் பரிமாறப்பட்டுள்ளது. மக்களின் ரத்த வெள்ளத்தில் மிதந்து சென்றே மாமன்னர்கள் முடி சூட்டிக் கொண்டனர்.

stalin_220மக்களாட்சி மலர்ந்த பின்னும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை. மக்களின் பெயராலே சூதுகளும் சதிகளும் கொலை வெறியாட்டங்களும் தொடரத்தான் செய்கின்றன.

புரட்சி பூத்த இடங்களிலும் புதுமை எதுவும் பூத்துவிடவில்லை. அங்கேயும் அதிகாரத்திற்கான அடிதடிகளும் தனிநபர் வல்லதிகாரமும் அரங்கேறவே செய்தன. தனிநபர் அதிகார வெறித்தனங்களால் திசைமாறிப் போன புரட்சி இயக்கங்களும் உண்டு.

தத்துவத்திற்குக் கிரேக்கத்தின் கொடை அளப்பரியது. மாபெரும் தத்துவ ஞானிகளை உலகிற்கு வழங்கிய கிரேக்கத் தத்துவக் காலம் முடிவிற்கு வந்ததை மார்க்சு இப்படிக் குறிப்பிடுவார். ‘கிரேக்கத் தத்துவத்தின் வீழ்ச்சி, ஒரு பறவையின் மரணத்தைப் போன்றதல்ல; மாறாக அஃது ஓர் யானையின் மரணத்தைப் போன்றது’. அறிவு வளம் நிரம்பிய அங்கேயும் அதிகாரத்திற்கு நடந்த சதிகள் சுவையானவை.

கிரேக்கத் தத்துவ அறிஞர்களில் தலையாயவர்களில் ஒருவர் அரிஸ்டாட்டில். அவரது மாணவர் அலெக்ஸாண்டர். அலெக்ஸாண்டரை அறியா வரலாற்று மாணவர் இருக்க முடியாது. ஆனால் அவர் அரியணை ஏறிய கதை எப்படித் தெரியுமா? தன் மகனுக்கு முடி சூட்டாமல் மாற்றாந் தாய் மகனுக்கு முடி சூட்டி விடுவாரோ அலெக்ஸாண்டிரின் தந்தை பிலிப்ஸ் என அய்யுற்றார் தாய். மன்னரின் மெய்க்காவலர் ஒருவர் மூலமாக மன்னரைக் கொலை செய்தார்; மகனுக்கு முடி சூட்டினார். அரிஸ்டாட்டில் மாணவனான மகன் அலெக்ஸாண்டரோ ஆதிக்க வெறி பிடித்தவனாய் இந்தியா வரை படையெடுத்துப் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தான். கிரேக்கத் தத்துவத்தால் ஆதிக்க கொலை வெறியைத்தான் உருவாக்க முடிந்தது போலும்.

அரசு அதிகார வெறி அய்ரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. முதலாம் சார்லசு தலை சீவப்பட்டதும் (கி.பி.1649) பதினாறாம் லூயி தலை கில்லட்டினால் கொய்யப் பட்டதும் (கி.பி.1793) இக்காலத்தில்தான். “எமது காலத்தின் சிக்கல்கள் ரத்தத்தாலும் இரும் பினாலும் தான் தீர்க்கப்பட முடியும்” என்ற முழக்கம் கரிபால்டியின் மூலம் வெளிப்பட்டது.

இந்தியத் துணைக்கண்டத்தில் அரச வரலாறு என்பதே சதிகளின் வரலாறாகவே இருந்துள்ளது. தமிழ்நாட்டில் குறுநில மன்னன் பாரியைத் தமிழ் மூவேந்தர்கள் ஒன்றிணைந்து சதியால் கொன்றனர். மூவேந்தர்களுக்கு இடையே நடந்த சண்டைகளைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. வடக்கே நடந்த அரச கொலைகள் ஏராளம். குஷான வம்சத்தின் தலைசிறந்த அரசரான கனிஷ்கர் (கி.பி.78-101) அவரது கூடாரத்திலேயே சதிகாரர்களால் கொல்லப்பட்டார். ஹர்ஷப் பேரரசை உருவாக்கிய ஹர்ஷவர்த்தனர் சொந்த அண்ணனைக் கொன்றவர். மொகலாயர் ஆட்சியில் உறவுக் கொலைகள் இயல்பாய் நடந்தன.

நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறைகள் தோன்றிய பின்னரும் நாட்டாண்மைகள் தொடரவே செய்தன. தனியாள் வல்லாட்சி வலுக்கவே செய்தது. ஜனநாயகப் போர்வையோடு அது வெளிப்பட்டது. முசோலினியும் இட்லரும் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாசிஸ்ட்டுகளாய் உருமாறியவர்கள்தாம்..

‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி’ என்று பாரதி வாழ்த்துக் கூறி வரவேற்ற, பாட்டாளி மக்களின் விடி வெள்ளியாய்த் தோன்றிய உருசியா பொதுமைப் புரட்சி இன்று பழங்கதையாய் வெறுங்கனவாய் முடிந்து போனது. பொதுமைப் புரட்சிப் பொய்த்துப் போனதற்கு, புரட்சியின் நாயகர்களில் ஒருவரான ஸ்டாலின் சர்வாதிகாரியாய் மாறிப்போனதும் முகாமையான காரணங்களில் ஒன்று. உலகையே அடிமைப்படுத்த முனைந்த கொடூரன் இட்லரின் அரக்கப்படையை முறியடித்த பெருமை ஸ்டாலினுக்கு உண்டு. வல்லாதிக்கக் குள்ள நரிகளான அமெரிக்க அதிபர் ட்ருமெனையும், இங்கிலாந்துத் தலைமை அமைச்சர் சர்ச்சிலையும் தம் அரச சூழ்ச்சிகளால் தோற்கடித்தவர்; சோவியத் பொதுமை அரசைக் கட்டியமைத்ததில் ஸ்டாலின் பங்கை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. மக்களிடம் அவருக்கு இருந்த மாபெரும் செல்வாக்கு இயற்கையானது. அதனாலேயே அவருக்கு அதிகார போதை தலைக்கேறியது. உட்கட்சி ஜனநாயகத்தை மறுத்தார். தனிநபர் வழிபாட்டை ஊக்குவித்தார். தமக்குப் போட்டியாளர்கள் என அவர் கருதிய புரட்சியின் முன்னணித் தலைவர்களைப் பாட்டாளி வர்க்கத் துரோகிகள் எனப் பட்டம் சூட்டி அழித் தொழித்தார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற மார்க்சிய கோட்பாடு அவரால் தடம் புரண்டு தனிமனிதச் சர்வாதிகாரமாய்த் திரிந்து போனது. கால ஓட்டத்தில் சோவியத் பொதுமை அரசும் கரைந்து போனது.

இலெனினுக்குப் பின் மார்க்சியத் தத்துவத்திற்கு மாபெரும் பாய்ச்சலைத் தந்தவர் மாவோ ஆவார். பிற்போக்குச் சீனத்தை செஞ்சீனமாய் மாற்றியமைத்த பெருமை அவருக்கே உண்டு. புரட்சியை வழிநடத்தியதிலும், வெற்றியை நோக்கி இட்டுச் சென்றதிலும் மாவோ காட்டிய தலைமைத்துவ வழிகாட்டுதல்கள் இன்னும் நீண்ட காலத்திற்குப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டும் பாடங்களாய் அமைந்திருக்கும். எனினும் அவர் மீதும் உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்காத போக்கு இருந்தது என்ற குற்றத் திறனாய்வு உண்டு. பண்பாட்டுப் புரட்சிப் பாதை மாறிப் போனதற்கு மாவோவைச் சுற்றி நின்ற அதிகார மய்யங்களே காரணம் என்பர்.

புரட்சியாளர்கள் தனிநபர் வழிபாட்டிற்குப் பலியாகி, தங்களை அறியாமலே தங்கள் பலவீனங்களுக்கு இரையாகிப் போவதென்பது பெரும் வரலாற்றுச் சோகமே. ஈடற்ற அவர்களது அறிவாற்றலும் தன்னலமற்ற ஈகமும் வீரமிக்க செயலூக்கமும் அரசியல் துணிவும், இவற்றாலெல்லாம் மக்களிடம் பெருகும் செல்வாக்கும் அவர்களிடம் தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை என்ற பாசிசப் போக்கை உருவாக்கி விடுகிறதோ என்னவோ? ஆழ்ந்த ஆய்வுக்குரியது இது.

தன்னைச் சுற்றி எந்த ஓர் ஒளிவட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளாமல் மக்கள் விடுதலைக்காகவே வாழ்ந்து மறைந்த மாபெரும் புரட்சியாளர்களும் நம்மிடையே உண்டு. அர்சைண்டீனாவில் பிறந்து அடிமைப்பட்ட அனைத்து மக்களின் விடுதலைக்காகவே தன்னை ஈந்து கொண்டவன் மாமனிதன் செகுவேரா. உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் மீது அவன் கொண்டிருந்த காதலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மக்கள் விடுதலைப் போரில் தன்னை முழுமையாய்க் கரைத்துக் கொண்டவன். கியூபா விடுதலைக்குப் பின்னர் பட்டங்களும், பதவிகளும் அவரைத் தேடி வந்த போதிலும், அவற்றையெல்லாம் துறந்துவிட்டு, புரட்சித் தீயைக் கையிலேந்திப் புறப்பட்டவன். பொலிவீயாவில் அத்தீயிலேயே வெந்து போனவன். அவன் மீதும் குற்றத் திறனாய்வுகள் உண்டு. அவனுடைய வழிமுறைகள் தவறானவை. நிலவிய அரசியல் சூழல்களை, சுற்றியிருந்த மெய் நடப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் செயல்பட்டவன் என்று சொல்வோரும் உளர். ஆனால் புகழுக்கும் பதவிக்கும் மயங்கி அதிகாரத்தைத் தன்னுள்ளே நிறைத்து வீங்கிப் போனவன் அல்லன் அவன்; உழைக்கும் மக்கள் விடுதலையைத் தவிர அவன் வேறெதையும் நினைத்துப் பார்த்ததில்லை; உதடுகள் உச்சரித்ததும் இல்லை. புரட்சியாளர்களுக்கு அவனைத் தவிர வேறெவர் வழிகாட்டியாய் இருக்க முடியும்?

இன்னொருவரும் உண்டு. அவர் மீதும் குற்றச் சாட்டுகள், குற்றத் திறனாய்வுகள் உண்டு. சேறுவாரி இறைப்போரும் உளர். அவர் உயிரோடு உள்ளாரா இல்லையா என்று விவாதித்து போராட்டத்தைத் திசை திருப்புவோரும் உள்ளார்கள். அவர்தாம் மாவீரன் பிரபாகரன். ஈழ விடுதலை ஒன்றையே தம் உயிர் மூச்சாய்க் கொண்டவர். அதற்காகவே படை கண்டவர். பாசமிகு மனைவி, மகள், மகன் ஆகியோரை விடுதலைப் போருக்கே ஈந்தவர். அறவொழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டவர். வீரத்திற்கும் ஈகத்திற்கும் அவரும் அவரது படையுமே ஈடில்லா எடுத்துக்காட்டுகள்; விடுதலைக்காய் தம்மையே ஈந்துகொண்ட தற்கொடை மாவீரர்கள். பிரபாகரனின் ஈகமும் வீரமும் ஈழ விடுதலையை வென்றெடுத்தே தீரும். எதிர்வரும் விடுதலைப் போராட்டங்களுக்கும் அவர் வழிகாட்டும் ஒளிவிளக்காய்த் திகழ்வார்.

வரலாறு கற்றுத் தரும் பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. அதிகாரப் போதையில் அழிந்து போனவர்கள் பலர். தனிநபர் வழிபாடு மிக மிக ஆபத்தானது. அது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. பழைய நிலவுடைமைக் காலப் பண்பாடு அது. அது பாசிஸ்டுகளையே உருவாக்கும். விடுதலை இயக்கங்களையும் போரட்டங்களையும் சிதைக்கும்; புரட்சியைக் காட்டிக் கொடுக்கும்.

தனிநபரா கட்சியா முதன்மையானது என்றபோது கட்சியே முதன்மையானது என்று கூறிய மாவோ, கட்சியா அரசியலா என்றபோது அரசியலே முதன்மையானது என்றார்.

தனிநபர் வழிபாட்டை முறியடிக்க வேண்டியது புரட்சியை நாடும் அனைவரதும் கடமையாகும். அதுவே வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடமாகும்.

Pin It