2009 ஆம் ஆண்டு இறுதியில் இராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனக்குச் சிகிச்சையளிப்பதில் நம்பிக்கையின்றி ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்கள் இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் வாரத்தில் புத்தகக் கண்காட்சியை ஒட்டி சென்னை வந்த தோழர் விடியல் சிவாவும் தோழர் கல்யாணியும் மருத்துவமனையில் வந்து என்னைப் பார்த்தனர்.

vidiyal_siva_501“இந்த மருத்துவமனையையும் உங்களையும் பார்த்தால் எனக்கு மயக்கமே வந்து விடும் போலிருக்கிறது இராதா, ஒரு நாள் கூட மருத்துவமனையில் படுக்காமல், மருத்துவர்களிடம் சிக்காமல் இறந்து போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று அன்று கூறிய சிவா இன்று மருத்துவமனையிலேயே கடுமையான நுரையீரல் புற்று நோயாலும் அதைவிடக் கொடுமையான கீமோ சிகிச்சையாலும் துன்புற்று மரணத்தைத் தழுவ நேர்ந்தது மிகப்பெரிய துயரமாகும்.

நாற்பதாண்டுக் காலமாக நான் நினைவோடிருந்த ஒரு நொடி கூட வாதநோயின் வலியின்றி இருந்ததில்லை. ஆனால் எனது நாற்பதாண்டு வலியையும் வேதனையையும் நான்கைந்து மாதங்களில் அவர் அனுபவித்து இறந்து போக நேர்ந்ததை எண்ணி எண்ணிக் கலங்குகிறேன். நோய்களுக்குத்தான் எத்தனை பாரபட்சம்.! அன்று தனியார் மருத்துவமனையில் சேர்த்து எனக்குச் சிகிச்சையளிக்க தோழர்கள் எடுத்த முயற்சிக்கு பெரிய அளவில் துணை நின்ற சிவாவை நான் மருத்துவ மனையில் சென்று பார்க்கக் கூட இயலாத அளவுக்கு உடல்நலக் கேட்டுடன் இருந்ததை எண்ணி எண்ணி என்னை நானே நொந்து கொள்வதைத் தவிர ஏதும் செய்ய இயலவில்லை.

முன்னதாக இந்த ஆண்டு மார்ச்சில் தோழர்கள் தமிழழகன், மோகன்ராசு, அன்பன் ஆகியோரும் மற்றும் சிலரும் என்னையும் தோழர் வசந்தகுமாரையும் அழைத்துச் செல்ல நாங்கள் சிவாவை அவரது இல்லத்தில் சென்று பார்த்தோம்.

“மாடியில் இருந்து குதித்து விடலாமா? இறந்து போகாமல் கைகால் ஒடிந்து மட்டும் போய்விட்டால்...மின்விசிறியில் தொங்கி விடலாமா.? அது எடை தாங்காமல் உடைந்து போனால், கத்தியை எடுத்துக் குத்திக் கொள்ளலாமா? உயிர் போகாமல் இருந்து விட்டால்...இதுதான் பொதுவாகப் புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சை தோற்றுவிக்கும் எண்ணங்கள். ஆனால் நமக்கு வேறு கடப்பாடுகள் இருப்பதால் எப்படியாவது மீண்டு விடவேண்டும் என்ற எண்ணமே என்னை இத்தனைத் துன்பத்தையும் தாக்குப் பிடித்திருக்கச் செய்கிறது. ஐந்து கீமோ ஆயிற்று, மொத்தம் பன்னிரண்டு முறை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள், அதைத் தாக்குப் பிடித்துவிட்டால் ஐந்து ஆண்டுகள் தப்பித்துக் கொள்ளலாம். அதற்குள் நான் ஓரளவுக்கு எனது கனவுகளை நிறைவேற்றி விடுவேன். அதன் பிறகு சாவது பற்றிக் கவலைப் படமாட்டேன்.” என்று நோயின் துன்பத்துக்கிடையே மிகுந்த நிதானத்துடன் ஒவ்வொரு சொல்லாகப் பேசினார். அவர் படும் துன்பத்தை நாங்கள் நன்கு உணர முடிந்தது.

“ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை முடிக்கவேண்டும், உலக வரலாற்றை முடிக்கவேண்டும் சேகுவேரா பற்றிய அருமையான நூல் ஓன்று இருக்கிறது, அதையும் நீங்கள்தான் செய்யவேண்டும், உங்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இடைவிடாமல் செய்வதற்கு வேலை இருக்கிறது”

“மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஆகஸ்டில் கொண்டுவந்து விடலாம் அதிகாலைப் பெருவெள்ளம் என்ற பெயரில் ஒரு மார்க்சிய லெனினிய விவாதக் களத்திற்கான இதழைத் தொடங்க வேண்டும். பன்மொழி நூலகப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். அதுவரையிலாவது நான் தாக்குப்பிடிக்க வேண்டும்” என்று மேலும் தொடர்ந்தார்.

தோழர் கல்யாணி சிவாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார். இடையிடையே சிவாவைப் பார்க்க வரும் தோழர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். தோழர்கள் சௌந்தர், விஜயகுமார் இராசாராம் ஆகியோர் அவரைத் தொடர்ந்து நன்கு பார்த்துக் கொண்டனர். நாங்கள் சென்றிருந்த போது சுவிட்சர்லாந்திலிருந்து ஈழத் தோழர் இரவி வந்து சிவாவுடன் தங்கி அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

தான் இறந்து விட்டாலும் விடியலைத் தொடர்ந்து நடத்துவதற்கான அறக்கட்டளையையும் அதற்கு ஓர் ஆலோசனைக் குழுவையும் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார்.

ஏறத்தாழக் கால் நூற்றாண்டைக் கடந்து மேலும் சில ஆண்டுகள் ஆகிவிட்ட எங்கள் தோழமை உறவை எண்ணிப் பார்க்கிறேன். 1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலகட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் மார்க்சிய லெனினிய இயக்கம் மக்கள் திரள் பாதையில் ஒரு உத்வேகத்துடன் தனது பயணத்தைத் தொடங்கி இருந்தது. அந்தக் கட்டத்தில்தான் தோழர் சிவஞானமும் அந்தப் பயண அணிவகுப்பில் சேர்ந்து கொண்டிருந்தார்...மார்க்சிய லெனினிய இயக்கத்தின் பல்வேறு போக்குகளின் இடையே தத்துவார்த்த நடைமுறைச் சிக்கல்களில் கடும் விவாதங்கள் அப்போது நடந்து கொண்டிருந்தன.

ஒரு வளமான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் தோழர் சிவஞானம் தொழிலாளர் வர்க்க அரசியல் அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு விசாரணை, சிறைவாசம் எனப் பல துன்பங்களைத் துணிவுடனும் மகிழச்சியுடனும் ஏற்றார். இயக்கப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்காகப் புத்தக விநியோகத்தை ஏற்றார். விடியல் பிறந்தது. முற்போக்கு அரசியல், கலை இலக்கியப் படைப்புகளைப் புரட்சிகர அணிகளிடம் கொண்டு சேர்ப்பதில் அயராது உழைப்பவரானார். சிறிது காலம் ஒரு கூட்டு முயற்சியான ‘விளிம்பு டிரஸ்ட்’ மூலம் புத்தக வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டார். அந்த முயற்சி அவர் எதிர்பார்த்த பயனைத் தராததால் பின்னர் தனது விடியல் வெளியீடுகளைத் தொடர்ந்தார். விடியல் சிவா என்றே அனைவராலும் அழைக்கப்படும் அளவுக்கு அதனுடன் ஒன்றிப்போனார்

மார்க்சிய லெனினிய இயக்கத்தின் வேறு வேறு முகாம்களில் இருந்த நாங்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டிருந்தாலும் 1980 களின் இறுதி வாக்கில் இராஜீவ் காந்தியின் ஈரோடு, கோவை வருகையை ஒட்டி இருவரும் தடுப்புக் காவலில் கோவை சிறையில் அடைக்கபட்டிருந்தபோதுதான் எங்களுக்குள் தோழமை உறவு நெருக்கமானது. அப்போதிருந்து அவர் நோய்வாய்ப்படும் வரை ஏறத்தாழ மாதம் ஒருமுறையாவது ஈரோடு வந்து என்னைச் சந்தித்துச் செல்வார். தோழர்கள் வசந்தகுமார், இராமச்சந்திரன் மற்றும் அவ்வப்போது குறிஞ்சி, ஓடை, பின்னர் தங்கராசு ஆகியோர் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். புரட்சிகர இயக்கச் சூழல், வெளிவரும் நூல்கள், வெளிவர வேண்டிய நூல்கள் பற்றி எங்கள் விவாதம் இருக்கும். அந்த விவாதங்களே எனக்கு மொழிபெயர்ப்பில் பெரிதும் ஊக்கம் தந்தன. புரிதலில் தெளிவைத் தந்தன.

மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை எதிரிகளாகப் பார்க்கும் ஒரு மனநிலை சிலரிடம் வளர்ந்திருந்தது. ஆனால் தோழர் சிவஞானம் அனைவரிடமும் நட்புடனேயே பழகினார். குறுகிய குழுவாதப் பண்பு அவரிடம் இல்லை. விவாதங்களில் விட்டுக் கொடுக்காதவராக இருந்தபோதும் பழகுவதில் தோழமை அன்பைப் பேணினார், திருமணமே செய்துகொள்ளாமல் மார்க்சியப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவருக்கு தோழர்கள் தண்டபாணியும் கல்யாணியும் மற்றும் பல தோழர்களும் பெரிதும் துணை நின்றனர்.  

மார்க்சியத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அவற்றின் பன்முகத் தன்மைகளையும் வெளிக்கொணரும் பல்வேறு அரிய நூல்களை வெளியிட்டார். அண்மையில் இணைய தளம் ஓன்று மார்க்சிய அடிப்படை அறிவுத் தெளிவைப் பெறுவதற்கு உதவும் நூல்கள் என்று ஏறத்தாழ 40 நூல்களைப் பரிந்துரைத்திருந்தது..அவற்றில் மிகுதியாக இடம் பெற்றிருந்த நூல்கள் விடியல் சிவா வெளியிட்டவையாகும். பதிப்பாளர் எழுத்தாளன் என்ற உறவுக்கு அப்பாற்பட்டு படைப்பாளிகளோடும் எழுத்தாளர்களோடும் அவர் தோழமை அன்புடன் உறவு பேணினார். அவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்.

யேன் மிர்தாலின், ‘இந்தியா காலத்தை எதிர்நோக்கி’, சுனிதி குமார் கோஷின், ‘இந்தியப் பெரும் முதலாளி வர்க்கம்’, ‘இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்’, மர்ர்கோசின், ‘சியாபாஸ்’, ‘மால்கம் எக்ஸ்’, ‘சே குவேரா வாழ்வும் மரணமும்’, பனானின், ‘ஒடுக்கப்பட்டவர்கள்’, அரவிந்தின், ‘உலகமயமாக்கல்’, ‘சீனாவும் சோசலிசமும்’, தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு, சாதியும் வர்க்கமும், பெரியாரும் சமதர்மமும், மாவோவும் சீனப்புரட்சியும் பற்றிய ஹான் சுயினின் ‘அதிகாலைப் பெருவெள்ளம்’, ‘கோபுரத்தை உலுக்கிய காற்று’, அந்தோனியோ கிராம்சி, டிராட்ஸ்கி பற்றிய நூல்கள், மார்க்சும் சூழலியலும், அம்பேத்கரின் முக்கியப் படைப்புகள் ஆகியனவும் இன்னபிறவும் அவர் வெளியிட்ட நூல்களில் முக்கியமானவையாகும். அவை மார்க்சியப் பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகங்களாக இடம் பெறக் கூடியவை ஆகும்.

மேலும் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை அலைகள் பதிப்பகத்துடன் சேர்ந்து வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தார்..அவற்றில் இரண்டு தொகுதிகளை (4, 7) மொழிபெயர்க்கும் வாய்ப்பையும் எனக்குக் கொடுத்தார். அவற்றை ஒரு பெரிய விழாவாக நடத்தி வெளியிட ஏற்பாடு செய்வது அவரது கனவாக இருந்தது. மேலவளவு கொலைவழக்கின் தீர்ப்பையும் அது தொடர்பான சில ஆவணங்களையும் என்னிடம் மொழிபெயர்க்கக் கொடுத்த போது, சாதிச் சிக்கல் தொடர்பான தனது சொந்த அனுபவங்களையும் குறிப்புகளையும் தொகுத்து நூல் வடிவில் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

தனது புரட்சிகர இயக்க அனுபவத் தொகுப்பு, .சாதியம் குறித்த தனது ஆய்வுக் குறிப்புகள் வெளியீடு, மார்க்சிய லெனினியத் தத்துவார்த்த நடைமுறைச் சிக்கல்களின் விவாதக் களமாக ஒரு காலாண்டு இதழ் வெளியீடு ,கோவையில் ஒரு மாபெரும் பன்மொழி நூலகம் ஆகியவை அவர் இடை விட்டுச் சென்ற பணிகளாகும் .

அவர் இடைவிட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றும் முயற்சியில் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதே அவரது நினைவுக்குச் செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

சமூக நீதியிலும் சமநெறிக் கொள்கையிலும் சமூக முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் அவருடைய இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாததாகும். தனிப்பட்ட முறையிலும் அவரது மறைவு எனக்குப் பேரிழப்பாகும். என் ஒவ்வொரு விடியலும் அவருடைய நினைவோடு தான் பிறக்கும்.

Pin It