நூல் அறிமுகம்

தூக்குத் தண்டனைக்கு எதிராகத் தமிழ் நாட்டில் மனித உரிமைப் போராளிகள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போராடுகின்றனர். இந்தியாவெங்கும் இப்போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மரணதண்டனைக்கெதிராக எண்ணற்ற கட்டுரைகளும் அரிய நூல்களும் வெளிவந்துள்ளன.இவ்வரிசையில் இப்பொழுது வெளி வந்துள்ள வழக்குரைஞர் திரு.கே.எஸ். இராதாகிருஷ்ணனின் தூக்குக்கு தூக்கு என்ற நூல் மரணதன்டனைப் போராட் டத்திற்குக் கிடைத்துள்ள இன்னும் ஓர் ஆயுதமாகும்.

ks_radhakrishnan_400நீதிபதிகளும் மனிதர்கள்தான்.அவர்களுக்கும் சார்புகள் உண்டு.அவர்கள் தீர்ப்பில் அவை வெளிப்படத்தான் செய்கின்றன. கீழ்நீதிமன்றத் தீர்ப்பு மேலமை நீதிமன்றத்தில் மாற்றியமைக்கப்படுகிறது.உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தில் வேறொரு தீர்ப்பும் வழங்கப்படுகின்றன. இராசீவ் கொலை வழக்கில் சென்னை தடாநீதிமன்ற நீதிபதி 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி கின்னஸ் சாதனை புரிந்தார்.அவர் வழங்கிய தீர்ப்பை நடுநிலையான தீர்ப்பு என எப்படி அழைப்பது?அவர் தீர்ப்பு எழுதும்போது இராசீவ் குடும்பமே அவர் மனதில் நிழலாடிக் கொண்டிருந்திருக்கும். உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பை மாற்றி தூக்குத் தண்டனயை நான்கு பேருக்காகக் குறைத்தது.ஆளுவோரின் கருணையால் நளினியின் தலை தூக்குக் கயிற்றிலிருந்து தப்பித்துள்ளது.இப்பொழுது மூவரின் உயிர் உச்சநீதிமன்றத்தில் தங்கியுள்ளது.

மூவரின் உயிர் மீட்புப் போராட்டத்திற்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.மரண தண்டனை நாகரீக உலகத்திற்குச் சற்றும் பொருந்தாது என்பதைப் பல்வேறு தரவுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார். இன்று உலகில் 1252 பேர் தூக்குத் தண்டனையை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தியாவில் 23 பேரின் உயிர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை எதிர்நோக்கிக் காத்திருக் கின்றன(பக்.13).

நூலிலுள்ள “குலசேகரப்பட்டிணம் கலக வழக்கு”ப் பற்றிய செய்தி சுவையானது.1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒட்டி காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர்.நாடெங்கும் கலவரம் வெடிக்கிறது. குலசேகரப்பட்டிணம் கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை வழக்கில் இராசகோபாலன், காசிநாதன் ஆகிய இருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. வழக்கை விசாரித்த நீபதிகளில் ஒருவரான வரதாச்சாரியார் மட்டும் தீர்ப்பை உறுதிப்படுத்த சாட்சியங்கள் போதவில்லை எனக் கருத்துத் தெரிவிக்கிறார். தூக்குத் தண்டனையை எதிர்த்து பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்ய இராசாசி முயற்சி ஒன்று மேற்கொள்கிறார்.வழக்கு நிதியாய் உரு. 10000திரட்ட கல்கி இதழில்(5-11-1944) ஒரு விளம்பரமும் செய்யப்படுகிறது. ஆக தமிழ் நாட்டில் தூக்குத் தண்டனைக்கெதிரான போராட்டம் அப்பொழுதே தொடங்கியுள்ளது. நம்மை ஆண்ட ஆங்கிலேயன் அவன் நாட்டில் மரண தண்டனையை ஒழித்து விட்டான். ஆனால் அவன் அகன்று பல ஆண்டுகள் ஆகியும் இந்தியத் திருநாட்டில் அச்சட்டம் ஒழிந்தபாடில்லை.

இந்தியத் தண்டனைச் சட்டம், போதைப் பொருள் தடுப்புச் சட்டம், பட்டியல் சாதி மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இராணுவச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், கடற்படைச் சட்டம், பயங்கரவாதம் மற்றும் சீர்குலைப்பு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப் பல சட்டங்களின் கீழ் இந்தியாவில் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. மரணதண்டனை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் நூலாசிரியர் வரிசைப்படுத்தி வழக்குப் பட்டியல் ஒன்றையும் கொடுத்துள்ளார். ஆங்கிலக் கட்டுரைகள் சிலவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

மரணதன்டனை ஒழிப்புப் பார்வையிலும் சரி,மனித உரிமைக் கண்ணோட்டத்தில்ம சரி இந்நூல் ஆழமான கருத்துகளை முன் வைக்கிறது. வழக்குரைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், மரண தண்டனைக்கெதிராகப் போராடுவோர், தமிழ்த் தேசிய விடுதலை கோருவோர் என அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாகும்.

Pin It