marshall_nesamani_380(இந்திய விடுதலைக்குப் பின்னர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழர்களுக்காக வழக்கறிஞர் எ.நேசமணி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. திருவிதாங்கூரில் தமிழர்கள் மிகுதியாக வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கி, தனித் தமிழ் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அங்குத் தமிழே நிர்வாக மொழியாக இருக்கவேண்டும் என்பதும் அக்கட்சியின் தொடக்கக்காலக் கோரிக்கையாக இருந்தது.

1949ஆம் ஆண்டு சமஸ்தான ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு கொச்சி சமஸ்தானத்தைத் திருவிதாங்கூருடன் இணைத்து திருவிதாங்கூர்-கொச்சி மாநிலம் உருவாக்கப்பட்டது.  மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியதை அடுத்து, சென்னை மாகாணத்திற்கு உட்பட்டிருந்த மலபார் பகுதிகளைத் திரு & கொச்சியுடன் இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று மலையாளிகள் வலியுறுத்தத் தொடங்கினர்.  கேரள மாநிலம் உருவாக்கப்படும் நிலையில், அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் தமிழர்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை உணர்ந்து, தமிழர் பகுதிகளை சென்னை மாகாணத்தில் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.

தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம்பீர்மேடு தாலுக்காக்களில் தி.த.நா.காங்கிரஸ் அதிக செல்வாக்குப் பெறத் தொடங்கியது. இந்த மலைப்பிரதேசங்களில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், மலையாளிகளின் குடியேற்றங்களை திரு&கொச்சி அரசு ஏற்படுத்தத் தொடங்கியது. மொழிவழி மாநிலங்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட மாநில புனரமைப்பு ஆணையம், தி.த.நா.காங்கிரஸ் கேட்ட ஒன்பது தமிழ்த் தாலூக்காக்களில் நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய நான்கு தாலுக்காக்களை கேரளத்துடனே இணைக்குமாறு பரிந்துரை செய்தது. 

மாநிலப் புனரமைப்பு ஆணையத்தின் அறிக்கை குறித்து 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.  மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற நாகர் கோவில் தொகுதி உறுப்பினரான எ.நேசமணி டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆற்றிய   தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்கள் குறித்த இந்த உரை, இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் கவனம் பெற வேண்டிய ஒன்றாகும். நேசமணியின் தொலை நோக்காற்றல் இதில் தெளிவுற வெளிப்படுகிறது. தேவிகுளமும், பீர்மேடும் தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டிருந்தால் முல்லைப் பெரியாறுச்சிக்கலே தோன்றியிருக்காதே!)

முதல் பேருரை (1955, டிசம்பர் 14, புதன்)

துணை அவைத் தலைவர் அவர்களே!கன்னிப் பேச்சுக்கு வாய்ப்பளித்தமைக்கு,நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை அவைத் தலைவர் :(குறுக்கிட்டு)பெருமதிப்பிற்குரிய அங்கத்தினர் இவ்வளவு காலம் கன்னியாகவே இருந்து விட்டீர்களா?

நேசமணி:திருவிதாங்கூர்கொச்சித் தமிழ் மக்களுக்காக ஒலிக்கின்ற ஒரே குரல் என்னுடையது.திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் ஒரே பிரதிநிதி நானே! தி.த.நா.காங்கிரசின் கொள்கை முழக்கம் என்னவெனில், “தொன்றுதொட்டுத் தமிழ்மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் திரு&கொச்சியின் ஒன்பது தாலுக்காக்களையும் சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும்”என்பதே அத்தாலூகாக்களாவன: தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை மற்றும் சித்தூர்.

மேற்கூறிய ஒன்பது தாலுகாக்களில் தோவாளை, அகஸ்தீஸ்வரம்,கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டைஆகியஐந்து தாலுக்காக்களை இணைத்திட குழு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.  எஞ்சியுள்ளநான்கு தாலுக்காக்கள் பற்றிய உரிமைக் கோரிக்கையினை எடுத்துரைக்கும் முன்,சில குறிப்பு விளக்கங்களை எடுத்துரைத்த திரு.தாமஸ் அவர்களுக்குப் பதில் சொல்லி முடித்துவிட விரும்புகிறேன்.  அதனை மிக விரைவில் முடித்து விட விரும்புகிறேன். ஏனெனில் அவர் குறிப்பிட்ட குறிப்புரைகள் அதிகக் கவனம் செலுத்தும் தகுதியுடையனவல்ல. 

ஏ.எம்.தாமஸ் :(இடைமறித்து) நீங்கள் (மலையாள எம்.பி.க்களுக்கு) மனதில் கொள்ள வேண்டியது என்னவெனில் திரு.நேசமணி மிகப்புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார்.     

நேசமணி :நீங்கள் திரு&கொச்சி பகுதியையும்,அண்டைப் பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தினையும் சற்று ஒப்பு நோக்க வேண்டும்.

நண்பர் ஆரல்வாய்மொழி வழியாகப் பயணம் செய்திருந்தால் கன்னியாகுமரி முதல் ஆரல்வாய்மொழி வரையிலான 30மைல் அடர்ந்த பகுதி மலையினால் அடைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவரே கண்டு கொண்டிருக்க முடியும்.

உயர்நீதிமன்றம் திரு&கொச்சியில் உள்ளதே என்று அவர் கூறக்கூடும்.நாங்கள் வழக்காடியே வாழ்ந்துகொண்டு இருக்க விரும்பவில்லை.பட்டம் தாணுப்பிள்ளை கொடுங்கோல் ஆட்சி புரிந்து எங்களை நாட்டை விட்டே துரத்த முனைந்த போது இந்திய உச்சநீதிமன்றம் எங்களுக்குப் பாதுகாப்புத் தந்தது. எங்களுக்கு விடுதலை தந்தது மைசூர் உயர்நீதிமன்றம் ஆகும். எனவே திருவிதாங்கூரின் உயர்நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கவில்லை, வழங்காது என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

நாங்கள் உரிமை கோரி, ஆறு முறை உச்சநீதிமன்றத்துக்கு வந்துள்ளோம். எனவே திரு&கொச்சியிலுள்ள உயர்நீதிமன்றம் என் சொந்த ஊராகிய நாகர்கோவிலில் இருந்தால் என்ன? இல்லை எர்ணாகுளத்தில் இருந்தால் என்ன? இல்லை கைலாசத்தில்தான் இருந்தால் என்ன? எங்களுக்கு அதனால் எப்பயனும் இல்லை. விளைச்சல் உபரித் தாலுக்காக்கள் என்று கூறப்பட்டதற்கு நான் கூறும் பதில் என்னவெனில், மாநிலங்கள் சீரமைப்பு ஆணைக்குழுவின் ஆவணங்கள் மற்றும் தெளிவுரைகளிலிருந்து நான்கு தாலுக்காக்களும் உபரி விளைச்சல் பகுதிகள் அல்ல என்பது தெரியவருகிறது.  திரு.தாமஸ் அவருடைய அறியாமையினால் எடுத்துரைத்து உள்ளார். நாங்கள் குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது என்னவென்றால் மக்கள் தொகை அடிப்படையில் எங்களுக்கு ஒருவருக்கு 6 சென்ட் நன்செய் நிலம் வீதமே வருகிறது என்பதாகும். இந்த 6 சென்ட் நிலத்தின் விளைச்சலைக் கொண்டு ஒருவர் ஓராண்டுக் காலம் வாழ முடியாது. இந்த உண்மையினைக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. திருவிதாங்கூரின் நெற்களஞ்சியம் எனப்படும் நாஞ்சில் நாடு உணவு உற்பத்தியில் உபரிப் பகுதியல்லவென்றும் கூறியுள்ளது.

senary-_380கனிவளம் நடுவண் அரசின் துறையாகும். தோரியம், மோனோசைட், சிற்கோன் மற்றும் மணல்படிவங்கள் அங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.  சவறாத் தொழிற்சாலையின் தொழிலாளர்களை வேலை கொள்வதில் பல இடையூறுகள் உள்ளதால் மணல் கனிம வளம் முற்றிலும் பயன்படுத்தப் படவில்லை.

தோவாளைத் தாலுக்காவில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறவில்லையாதலின் தோவாளைத் தாலுக்காவினைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்று சீரமைப்பு ஆணைக் குழுவிடம் வாதிடப்பட்டது என இந்த அவையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தாமசும் எடுத்துரைத்தார்.அந்தத் தொகுதியின் உறுப்பினர் பிரஜா சோசலிஸ்டு கட்சியைச் சார்ந்த திரு.டி.எஸ்.இராமசாமிப் பிள்ளையாவார். அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான ஜெயப்பிரகாஸ் நாராயணனும்,அசோக் மேத்தாவும் அப்பகுதிக்கு வருகை தந்தபோது அப்பகுதி சென்னையுடன் இணைய வேண்டும் என்றே கூறினர்.

தமிழ்த் தாலுக்காக்கள் சென்னை மாநிலத்துடன் இணைய வேண்டும் எனும் கோரிக்கையினை ஆதரிப்பதாகவும், அக்கொள்கையின் அடிப்படையிலேயே தேர்தலில் நிற்பதாகவும் தமது தேர்தல் அறிக்கை மற்றும் தாம் ஆற்றிய உரைகள் முதலிய ஆதாரங்களுடன் திரு.டி.எஸ். இராமசாமிப்பிள்ளையே சீரமைப்புக் குழுவிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.அண்மையில் திரு&கொச்சி சட்டப்பேரவையில் இப்பொருள் பற்றி விவாதம் நடைபெற்றபோது 9தமிழ்த் தாலுக்காக்களும் தமிழகத்துடன் இணையவேண்டுமெனக் கோரினோம் எனவும் கூறினார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான பட்டம் தாணுப் பிள்ளை முதல் அமைச்சராக இருந்தார். அவர் தமிழ்ப்பகுதிகள் பிரிவினை பற்றி இராமசாமிப் பிள்ளைக்கு அளித்திருந்த வாக்குறுதியினைக் காப்பாற்றாததால் திரு.டி.எஸ்.இராமசாமிப் பிள்ளையே பட்டம் தாணுப்பிள்ளை அமைச்சரவை மீது முதலாவதாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். அதனால் பட்டம் தாணுபிள்ளையின் அமைச்சரவையே கவிழ்ந்தது.

து.அ.தலைவர் : (இடைமறித்து) இப்போது அமைச்சரவை மாறிவிட்டது. ஆகையினால் இனி எல்லாம் நன்றாக இருக்கும்.

நேசமணி :ஐயா அப்படியல்ல. அது பற்றி சற்றுப் பின்னால் எடுத்து உரைப்பேன். என் நண்பர் திரு.ஏ.எம்.தாமஸ் இச்சிக்கலை பொறுத்தவரை உண்மை நிகழ்ச்சிகளை உணர்ந்திலர். துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நாங்கள் செய்தது என்ன?

தேவிகுளம் மக்கள் போலீஸ் துறையின் அட்டூழியச் செயல்களினின்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அன்று முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையிடம் தூது சென்றோம். நான் செல்லவில்லை. என் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர். அவர்கள் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளைக் கண்டறிந்து, பின்னர் முதல்வரைச் சந்தித்தனர். ஆனால் அவர் வெறுப்புடன் “எனக்கு உத்தரவு இட வந்துள்ளீர்களா?” என வினாவினார். நாங்கள் அப்போது வேண்டியது தமிழர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த ஒரு காவல்துறை உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதாகும்.பட்டம் தாணு மறுமொழியாக, “நீங்கள் உத்தரவிட நான் கீழ்ப்படி வதற்கில்லை” என்றார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளைத் திருத்திக் கொள்ள அரசினை வலியுறுத்திடவும், மக்களின் ஒருமித்த கருத்தினை வெளிக்காட்டவும் 1954 ஜூன் மாதம் 30ஐத் “தேவிகுளம் தினம்” ஆக அனுசரித்தோம். அரசு செவி சாய்க்கவில்லை. மீண்டும் ஜூலை 4ஆம் தேதி அங்குக் “கோரிக்கை தினம்’’ அனுசரித்தோம்.  முன்னாள் அமைச்சர் ஒருவரும், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் நானுமாகத் தேவிகுளம் சென்று மக்களிடம் உரையாற்றி, கலக்கமுற்றிருந்த மக்களை அமைதிப்படுத்தினோம்.

முன்தேதியிட்ட 144 தடையுத்தரவு எங்களிடம் தரப்பட்டது. பயந்தாங்கொள்ளிகளாக அஞ்சி ஓடுகிறவர்களாக இருப்பது எங்களுக்கு அழகல்ல எனக் கருதினோம்.“அந்த அரசின் உத்தரவு ஒருதலைப்பட்சமானது.சட்ட விரோதமானது”என அறிக்கை வெளியிட்டு நாங்கள் தடையினை மீறினோம். “சட்டவிரோதமான, ஒருதலைப்பட்சமான அரசின் ஆணையினை மீறுவது எங்கள் கடமை” என்றோம். மக்கள் எங்களைப் பின் தொடர்ந்தனர்.  சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், நகர்மன்ற அங்கத்தினர்கள், வணிகப் பெருமக்கள் மற்றும் தமிழகம் தழுவிய தமிழ்க் குடிமக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தந்தனர்.  இதனால் நான் மகிழ்ச்சி கொண்டேன்.

“தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்”என்ற எங்கள் வெளியீட்டினைப் பட்டம் தாணுப்பிள்ளையின் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அரசின் அனைத்து அதிகார இயந்திரங்களும் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன.

நீதியின் ஊற்றுக்கண் கூட மாசுபட்டு விட்டது.  எப்படியெனில் மலையாளிகள் மயமாகிய செயல்வினைஞர்கள், காவல்துறையினர், நீதிபதிகள், நீதிமன்றங்கள் அனைத்தும் ஊழல் பேர்வழிகளாகக் காட்சி அளித்தனர்.

ஏ.எம்.தாமஸ் :(இடைமறித்து)அங்குள்ள நீதித்துறை முற்றிலும் ஊழல் மலிந்தது என மதிப்பிற்குரிய அங்கத்தினர் கூறுவது ஏற்புடையதா?

நேசமணி :திரு&கொச்சி உயர்நீதிமன்றத்தின் வழக்குத் தீர்ப்புகளை எதிர்த்து ஆறு வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றுள்ளோம்.

து.அ.தலைவர்:(குறுக்கிட்டு) இது சற்றுக் கடு மொழியாகும். பொதுவாக எந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதும் அவதூறுகள் தூற்றல் கூடாது.  தமிழ் மக்களுக்குத் திரு&கொச்சி நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லை. அதுவும் பிரிவினை கோருவதற்கான ஒரு காரணம். நீதிபதிகள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் அதற்கு மொழி ஒருதடை போலும். தமிழகத்து நீதிபதிகளினின்றும் திரு&கொச்சி நீதிபதிகள் மாறுபட்டவர்களென்று மதிப்பிற்குரிய உறுப்பினர் கருதுகிறாரா?

நேசமணி :ஆம் ஐயா!குறிப்பிட்ட வழக்குகளைத் திருநெல்வேலியில் விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அரசு வழக்குரைஞரைக் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் “தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் பகைமை ஏற்பட்டுள்ளதால் திரு&கொச்சி அரசிற்கு நீதி கிடைக்காது” என எடுத்துரைத்தார். இறுதியில் சென்னையிலிருந்து வழக்குகள் மைசூருக்கு மாற்றப்பட்டன. அங்கிருந்து உரிமையும் விடுதலையும் பெற்றுக் கொண்டோம்.

சி.கே.நாயர் : (குறுக்கிட்டு) மக்களின் உணர்ச்சியின் விளைவுதானேயன்றி நீதிபதிகள் ஊழல் புரிவோர் என்பதல்ல.

நேசமணி :ஆகையினால்தான் நேர்மையற்றது என்கிறோம். நீதித்துறை பற்றிய என் உரையினை முடித்துக்கொண்டு இனி தேவிகுளம் பீர்மேட்டிற்கு வருகிறேன்.

மலைகள் பற்றியும், ஆறுகள் பற்றியும், குடியேற்றம் பற்றியும் பேசுகின்றனரே அன்றி, மக்கள் தேவைகள் பிரச்சினைகள் பற்றி யாரும் எங்கும் கருத்தில் கொள்ளவில்லை. பட்டம் தாணுப்பிள்ளை அரசின் அடக்குமுறையினை எதிர்த்துத்தான் நாங்கள் தடையினை மீறினோம். சிறை சென்றோம்.  பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருபது பெண்கள் உட்பட 434 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.  தேவி குளத்திலிருந்து 60 மைல்களுக்கு அப்பால் உள்ள மூவாற்றுப் புழையிலும் வேறு சில பகுதிகளிலும் நாள் கணக்கில் ஆடவர்களுடன், கைது செய்யப்பட்டிருந்த 20 பெண்களையும் நீங்கள் சென்று பார்க்க வேண்டும். அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று அவர்களை நேரில் கேட்டறிய வேண்டும்.

நேர்மை எண்ணமும் பகுத்தறிவும் கொண்ட யாரானாலும் இச்செயலை எதிர்க்கவே செய்வர்;  434 பேர்களும் 20 பெண்களும் சிறை செய்யப்பட்ட செயல் மிக அதிர்ச்சி தரக்கூடிய செயலாகும். இவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டபோது, இதனைத் தடுக்க அரசின் மீது நெருக்குதல் தர எங்களால் இயன்றது அனைத்தையும் செய்தோம்.

ஓர் அங்கத்தினர் : இதனை எப்படிச் செய்தீர்கள்?

நேசமணி :     அங்குக் கேரள “ஐஎன்டியுசி”யும்,தமிழ்நாடு “ஐஎன்டியுசி”யும் செயல்படுகின்றன. தென் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் அமைப்பு தமிழ்நாடு “ஐஎன்டியுசி”யுடன் இணைந்துள்ளது.  கோட்டயம் காங்கிரஸ் கமிட்டியினாலும், அரசாலும் ஆதரிக்கப்படும் “ஹைரேஞ்சு”தொழிலாளர் சங்கமும் அங்கு உள்ளது.இன்றைய மதிப்பிற்குரிய தொழிலாளர் துறை அமைச்சர்,முன்பு ஐஎன்டியுசியின் தலைவராக இருந்தபோது ஹைரேஞ்சு தொழிலாளர் சங்கத்தின் ஐஎன்டியுசியுடனான அங்கீகாரத்தைத் தள்ளுபடி செய்தார்.அச்சங்கம் கோட்டயம் மற்றும் உள்ளூர் முதலாளிகள் சிலரின் நலனுக்காக இயங்கி வந்தது.அதன் நோக்கம் தொழிலாளர்களிடையெ ஒற்றுமையைக் குலைப்பதே ஆகும். தலைவர் தள்ளுபடி செய்த பின்பும், இச்சங்கம் காளான் போல இங்கும் அங்கும் முளைக்கிறது.

து.அ.தலைவர் :அரைமணி நேரம், கூட அமரலாமா என்பதை அறிய விரும்புகிறேன்.

பல அங்கத்தத்தினர்கள் : வேண்டாம்

து.அ.தலைவர் : மதிப்பிற்குரிய உறுப்பினர் மேலும் எவ்வளவு நேரம் எடுப்பார்?

நேசமணி :   தலைமை  ஏற்றிருப்பவர் அனு மதிக்கும் நேரம் வரை. ஆனால் என்கருத்துகள் முழுவதையும் எடுத்துரைக்க விரும்புகிறேன். திரு&கொச்சியிலிருந்து தமிழர் நலன் பற்றிப் பேச நான் ஒருவன் மட்டும் இந்த அவையில் உள்ளேன்.

து.அ.தலைவர் : அப்படியானால் உறுப்பினர் நாளை தொடரலாம்.

(மக்களவை  1955, டிசம்பர் 15ந் தேதி 11 மணிக்குக் கூடும் என்ற அறிவிப்புடன் ஒத்தி வைக்கப் பட்டது)

 இரண்டாம் பேருரை

(1955, டிசம்பர் 15, வியாழன்)

அவைத்தலைவர் :   மாநிலங்கள் சீரமைப்புப் பற்றிய நேற்றைய முன்மொழிவு பற்றித் தொடரலாம்.  திரு.நேசமணி நேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே 15 நிமிடம் எடுத்துக் கொண்டுள்ளார். பேச விரும்பும் பிற அங்கத்தினர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க  இயலாததாகிவிடும். ஆதலின் மதிப்பிற் குரிய உறுப்பினர் தம் கருத்துரையினைச் சுருக்கிக் கொள்ள நினைவுபடுத்துகிறேன்.

நேசமணி :திரு&கொச்சி தமிழர் நலன் பற்றி எடுத்துரைக்க நான் ஒரே உறுப்பினன். ஆதலின் அது பற்றிய முழுக் கருத்துக்களும் என்னால் மட்டுமே எடுத்துக் கூற முடியும்.  எனவே எனக்குப் போதுமான சமயம் ஒதுக்கவேண்டும் என நேற்று மதிப்பிற்குரிய துணை அவைத் தலைவரை வேண்டியுள்ளேன்.  தேவையானால் சற்றுக் கால நீட்டிப்புத் தர அவைத் தலைவரின் மனம் இடம் கொடுக்க கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

அ.தலைவர் :அனைத்து மாநில உறுப்பினர்களும் அவரவர் கருத்துகளை எடுத்துரைக்க விரும்புகின்றனர். ஆனால் நேரம் போதுமானதல்ல. மதிப்பிற்குரிய உறுப்பினர் சுருக்கிக் கொள்ளவேண்டும். அதற்காக அவர் காரியக் குறிப்புகளை விட வேண்டா. குறிப்புரைகளையும் வாதங்களையும் குறைத்துக் கொள்ளலாம்.

நேசமணி :நான் நேற்று தேவிகுளம்,பீர்மேடு மக்கள் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தேன்  இது பற்றி வேறு யாரும் எடுத்துரைக்க முன்வரவில்லை. அங்கு நிலவும் போலீஸ் அட்டூழியம் பற்றி எடுத்துரைத்தேன்.  ஐஎன்டியுசி  சங்க அங்கீகாரத்தினை அதன் தலைவரே நீக்கி விட்ட பின்னர் ஹைரேஞ்சு தொழிலாளர் யூனியன் துவக்கப்பட்டுள்ள நிலைமையினையும் விளக்கினேன். அது காளான்கள் போல் முளைத்து, தென் இந்தியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தினரின் ஒற்றுமையினைக் குலைக்க முயற்சி செய்யலாம்.  தி.த.நா.கா. தென் இந்தியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு முழு ஆதரவும் கொடுத்து வருகிறது.

அதிகப் பரப்பினைக் கொண்ட தேவிகுளம் பீர்மேடு இரு தாலுக்காக்களிலும் ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளிதான் உண்டு.  அதுவும் கண்ணன் தேவன் கம்பெனியாரின் நிர்வாகத்தில் உள்ளது.பட்டியல் இனம் மற்றும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சார்ந்த சுமார் 300 மாணவர்கள் உண்டு.அவர்கள் மே1954வரை பள்ளிக்கூட கட்டணச் சலுகைகள் அனுபவித்தனர். இந்தக் கல்வியாண்டிலிருந்து அச்சலுகைகள் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. இவ்வேழை மாணவர்களுக்குச் சலுகை அளிக்கப்படவில்லையெனில் அவர்கள் படிப்பை விட்டுவிட வேண்டியதுதான். இச்செயல் அப்பகுதிகளில் பரம்பரையாகவே வாழ்ந்து வரும் 63000ற்கும் அதிகமான தமிழ் இனத்தவரின் எதிர்கால வாழ்வை வெகுவாகப் பாதிக்கும். அத்தகையோரின் வாழ்க்கைச் சீரமைப்பிற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது.  ஆனால் திரு&கொச்சி அரசு உதவ முன்வரவில்லை.  அவர்களுடைய எதிர்காலச் சந்ததியினருக்கும் உதவ மறுக்கிறது. இதுபோன்ற அநியாய நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

(சர்தார் ஹ¨ச்சிம் சிங் தலைவர் ஆசனத்தில் அமர்கிறார்)

நேசமணி :தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் எங்கும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதெனவும், தமிழர் நலன் புறக்கணிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருவதாயும் பத்திரிக்கைச் செய்திகள் மூலமாகவும் பிறவகைகளிலும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.  எனக்கு அளிக்கப்பட்டுள்ள சமயம் மிகச் சுருக்கமாதலின் தமிழர்க்கு எதிரான நிகழ்ச்சிகளை சூழ்ச்சிகளை மேலும் விளக்க விரும்பவில்லை! தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவது யாதெனில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணையவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம் என்பதாகும்.

சென்னை சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது நிதியமைச்சர் திரு.சுப்பிரமணியம், திருகொச்சியில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் 9 தாலுக்காக்களையும் (தேவிகுளம் பீர்மேடு உட்பட) தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என மாநிலங்கள் சீரமைப்புக்குழுவிடம் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாய்த் தெரிவித்துள்ளார். திரு&கொச்சியின் முன்னாள் முதல்வர் திரு.பட்டம் தாணுப்பிள்ளை எர்ணாகுளத்தில் பேசியபோது,             “மத்திய அரசு என்று ஓரமைப்பு இல்லாதிருந்தால் காமராஜ் நாடாரும், சுப்பிரமணியமும் கேரளத்துடன் போர் தொடுத்திருப்பர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்கவேண்டும் என்று சென்னை மாநில் அரசு கோரியதன் மீது திரு&கொச்சி அரசு கொண்டிருந்த மனப்பான்மை மேற்கூறிய பட்டம் தாணுவின் கருத்தேயாகும்.

இப்போதைய கோரிக்கைதான் என்னவென்று பார்ப்போம். உண்மைக்கும், வரலாற்றிற்கும் மாறுபட்ட மாபெரும் கோரிக்கை இதுவெனப் பொருள் கொள்ளப்படுகிறது. இதுபற்றி நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், தேவிகுளம் பீர்மேடு பகுதி கி.பி.1889 வரை திருவிதாங்கூர் நாட்டைச் சார்ந்த பகுதியல்ல. திரு&கொச்சி சட்டமன்றத்தில் பதிலுரையாக திரு.நடராஜபிள்ளை அறிக்கை செய்துள்ளதாக திரு.ஏ.எம். தாமஸ் குறிப்பிட்டார். அவ்வுரையில் பூஞ்சார் ராஜா பாண்டிய மரபினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.  திருவிதாங்கூர் நாட்டுக் குறிப்பேடு டி.கே.வேலுப்பிள்ளை என்பவரால் தயாரிக்கப்பட்டதாகும்.

மீனச்சல் கொடுக்காப்பள்ளி : (குறுக்கிட்டு) பூஞ்சார் ராஜா திருவிதாங்கூர்க்காரர் ஆவார்.

நேசமணி :    இக்கூற்று அரசுக் குறிப்பேட்டின் படியானதாகும். ஆனால் திரு&கொச்சியின் வரலாற்று ஆசிரியர்கள் பூஞ்சார் மன்னன் பாண்டிய மரபினன் என்றும், அவன் “மீனாட்சி சுந்தரம்” என்றே ஒப்பமிடுவதாகவும், குறிப்பிட்டுள்ளனர்.  மனாதிகள்  என்றழைக்கப்பட்ட குறுநிலத் தலைவர்கள் மூலம் பூஞ்சார் ராஜாகரம்(தீர்வை)தண்டியுள்ளான்.அவ்வாறு தண்டிய பற்றுச் சீட்டுகள் அனைத்திலும்,‘மதுரை மீனாட்சி துணை’என்ற முத்திரை காணப்படுகிறது.பாண்டிய மன்னரின் கீழ் மதுரை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே தேவிகுளம் பீர்மேடு இருந்து வந்தது.  1889 வரை அது திருவிதாங்கூரின் பகுதியே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும். கண்ணன் தேவன் மலை விளைபொருள் உற்பத்திக் கம்பெனியாரின் முன்னோடிகள் 1879இல் பூஞ்சார் இராஜாவுடன் உடன்படிக்கை செய்தனர்.1885இல் பெரியாறு நீர்த்தேக்கத் திட்ட ஒப்பந்தத்தினைப் புதுப்பித்தபோது இந்திய அரசின் செயலர் திருவிதாங்கூர் மன்னருடன் ஒப்பந்தம்செய்துள்ளார்.1879க்கும்,1889க்கும்இடைப்பட்டகாலத்தில்மாற்றம் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.

பூஞ்சார் இராஜாவிடமிருந்து குத்தகை அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் பெற்றுக் கொண்டார் எனத் தெரியவருகிறது. அது எப்படியாயினும் 1935 வரை தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குத் திருவிதாங்கூரிலிருந்து சென்று சேர பாதையே இல்லை. இவ்விவரம் 1951இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தின் வழியாகத் தேவாரம், குமுளி, போடிநாயக்கனூர், கம்பம் மற்றும் சிறுமலைக் கணவாய்கள் வழியாகத்தான் தேவிகுளம் பீர்மேட்டிற்குச் செல்லமுடியும்.இக்கணவாய்கள் வழியாகத்தான் வாணிகம் ஓங்கியது. இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  இவ்வாறு சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் மக்கள் வந்து குடியேறி வாழலாயினர்.

ஆணைக்குழுவானது “அப்பகுதியின் மக்கள் குடியேறியவர்கள்” என்றும்’ “வந்தும் சென்றும் இருப்பவர்கள்”என்றும் தெரிவித்துள்ளது. இக்குழுவின் முன்னால் யாரால் இந்த வாதம் எடுத்துரைக்கப்பட்டது என்ற செய்தி கூறப்படவில்லை என்பதை ஆணித்தரமாகக் கூற விரும்புகிறேன்.இப்புள்ளி விபரங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தன என்று அறிக்கைகளில் கூறப்படவில்லை. பிற காரியங்களைப் பொறுத்த வரையில் இன்ன இன்ன மாநிலங்கள் கூறின,இன்ன இன்ன அமைப்புகள் தெரிவித்தன என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.தமிழ்த் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டித் தமிழ்ச் செல்வந்தர்களாகி விட்ட சில முதலாளிகளும்,அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த தமிழரை வெறுக்கும் பிரஜா சோசலிஸ்ட் அரசும் இது போன்ற கருத்துகளைக் குழுவிடம் கொடுத்திருக்கக் கூடுமோ, என நாங்கள் நம்ப வேண்டியிருக்கிறது.

கடலோரப்பகுதிகளின் மக்கள் நெருக்கத்தை இது குறைக்கும் எனக் கூறுகின்றனர். தற்போது கேரளத்தின் பரப்பளவு கூடியுள்ளது.  தற்போதைய பரப்பு 1408 சதுர மைல்களாகும் திரு&கொச்சியின் பரப்பு 9154 சதுர மைல்கள். மேலும் 5000 சதுர மைல் பரப்பு கேரளத்திற்குக் கூடச் சேர்க்கப்பட்டுள்ளது.தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் குடியேற்றத்திற்கு வசதியில்லை.தேவிகுளத்தின் வடபகுதி அஞ்ச நாடாகும்.அஞ்சநாடானது மறையூர், கீழுந்தூர், கோட்டைக் கோம்பர், வட்டவாடா, கந்தலூர், நாச்சிவயல் ஆகிய பகுதிகளைக் கொண்டது. அதன் பரப்பளவு 112 சதுர மைல்.

கண்ணன் தேவன் கம்பெனி 215சதுர மைல்,ஏலக்காய்த் தோட்டம் 215சதுர மைல், வனவிலங்கு சரணாலயம் 305சதுர மைல்,தேயிலைத் தோட்டங்கள் 97சதுர மைல், பெரியாறு நீர்த்தேக்கப் பரப்பு 13 சதுர மைல், பெரியாறு நீர்த்தேக்கத்தின் நீர்வடிப் பரப்பு 305 சதுர மைல் (இது வனவிலங்கு சரணாலயமும் ஆகும்). சிறு அளவிலான காடுகளும் புல்வெளிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே கரையோர மக்களின் நெருக்கத்தைக் குறைக்க இப்பகுதி உதவும் என்னும் வாதம் முற்றிலும் ஆதாரமற்றதும் அறியாமையின் பாற்பட்டதுமாகும்.

மறையூர் பகுதிவாழ் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கென்றே பிரஜா சோசலிஸ்ட் அரசு குடியேற்றக் காலனிகளை அப்பகுதியில் தொடங்கியுள்ளது.  கல்லாறு ஏலக்காய்த் தோட்டப் பகுதிகளிலும் குடியேற்றக் காலனிகளை அரசு அமைத்து வருகிறது.  தமிழ் மக்களை அங்கிருந்து துரத்திவிட வேண்டும் என்பதே அரசின் குறியாகும்.

முன்னாள் திரு&கொச்சிமுதலமைச்சர் திரு&கொச்சி சட்டமன்றத்தில் பேசுகையில், “பிரஜா சோசலிஸ்ட் அரசின் குடியேற்றக்காலனித் திட்டங்களை விரைவுபடுத்தி இருந்தால் காமராஜ் நாடார் இப் பகுதிகளைக் கோரியிருக்க மாட்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என் வாதத்தை உறுதிப்படுத்தும்.

அன்றைய பிரஜா சோசலிஸ்ட் அரசின் கோட்பாடு அதுவேயாகும். இது இத்துடன் நின்றுவிடவில்லை.  மாநில சீரமைப்புக் குழுவின் அறிக்கை பற்றி மாநிலங்கள் அவையில் ஆலோசிக்கையில் பட்டம் தாணுப்பிள்ளை கூறியது என்னவெனில், “மதுரையினின்றும் வந்துள்ள தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும், இன்று மட்டுமல்ல நிரந்தரமாகவே தடுத்தாக வேண்டும். ஏனெனில் மலையாளிகளும் திருகொச்சி மக்களும் அங்கு வேலைபெற வேண்டும்”என்பதாகும்.  அனைத்திற்கும் பின்னால் மறைந்திருக்கும் நோக்கம் அதுவேயாகும். தேவிகுளம் பீர்மேட்டினைக் கோருவதற்கு அவர்களைத் தூண்டியது மேற்கூறிய நோக்கமே ஆகும்.

ஐக்கியக் கேரள இயக்கத்தினர்,ஐக்கியக் கேரளக் கோரிக்கையினை எழுப்புவதற்குக் காரணம் என்ன என்பதனைச் சற்று விளக்க விரும்புகிறேன். ஐக்கியக் கேரளக் கமிட்டியும், கேரளக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான நமது நண்பர் கேளப் பனும் மொழிவழி மாநில அமைப்புக் குழுவிடம் வினாப் பட்டியல்களுக்கு விளக்க மனு கொடுத்துள்ளனர். அம்மனுவில் சில பகுதிகளைச் சுட்டிக் காட்டுகிறேன். அவை தமிழ் மக்கள் மீது கேரளியர் எத்துணை வெறுப்புக் கொண்டிருந்தனர் என்பதைத் தெளிவாய்க் காட்டும்.

மனுவின் சில வரிகள் பின்வருமாறு :

“மெட்ராஜ் பிரசிடென்சி”என்றழைக்கப்படும் பன் மொழிக் கதம்பத்தினைக் கலைத்து விடவேண்டும்,இது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் எதிர்பாரா இடர்ப்பாடாகும்.  பாராளுமன்ற அமைப்பிலான தன்னாட்சி அரசு அமைப்பதற்கென கருதப்பட்ட பகுதி அல்ல அது. பாராளுமன்றத் தன்னாட்சி முறையின் ஒவ்வாத தன்மையினை அண்மைக் கால வரலாறு நமக்குப் புகட்டும். மொழிக் குழுக் களிடையே போட்டி மனப்பான்மை மிகுந்து எல்லாக் கட்சிகளிடையேயும் ஊடுருவி கட்சிகளின் திறமைக்கும் பயனுக்கும் ஊறு விளைவிக்கின்றது.கேரள மக்களின் தலைவிதிகளை நிர்ணயிக்கின்ற நடுவர்களாகத் தமிழர் பெரும்பான்மை” என்றும் தொடரக்கூடாது.

மேற்காட்டிய மன எழுச்சிதான் குடியேற்றக் காலனிகள் அமைப்பதிலும் தேவிகுளமும் பீர்மேடும் கேரளத்துடன் இணைக்கப்படவேண்டும்என்றுகோருவதிலும் நிறைந்திருப்பதைக் காணலாம்.

“தேவிகுளமும் பீர்மேடும் நீக்கப்பட்டால் கேரளம் தனித்து வாழும் தகுதி படைத்த மாநிலமாக இருக்காது”என்றும்கூறியுள்ளனர்.“பொருளாதாரத்தில்பின்னடைந்த பற்றாக்குறை மாநிலமாகவே இருக்கும்” என்றும் குறித்துள்ளனர்.

திரு&கொச்சிக்கு இப்போது வகுக்கப்பட்டுள்ள ஐந்தாண்டுத்  திட்டத்தின்படி வருவாய் மிச்சம் 14.7 கோடி ரூபாயாகும்.  தனித்தியங்க இயலாதது பற்றாக்குறை மாநிலம் என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் ஆதாரமற்றவை என்று நான் கூறுகிறேன்.இவ்விரு தாலுக்காக்களிலும் உள்ள இருபகுதிகள் இப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகத் தேவையானவை எனத் தி.த.நா.காங்கிரஸ் மனதாரத் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் சீரமைப்புக் குழுவிடம் நாங்கள் கொடுத்திருந்த மனுவின் ஒரு பகுதி இப்போது எங்களுக்கு எதிரான வாதமாகத் திருப்பப்பட்டுள்ளதால், எங்கள் மனுவிலிருந்து ஒரு சில வரிகளை இங்கே எடுத்துக்காட்ட என்னை அனுமதிக்க வேண்டுகிறேன்.  அவை பின்வருமாறு:

தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியானது, தேவி குளம் தாலுக்காவில் நீர் மின்சாரத் திட்டப்பகுதியான பள்ளிவாசல் பகுதியும் பீர்மேடு தாலுக்காவில் மிகுதியும் சிரியன் கிறிஸ்தவர்களுக்கு உரிமையான ரப்பர் தோட்டங்களைக் கொண்ட முண்டக்கயம் நகரியப் பகுதிகளை உள்ளடக்கிய பெருவந்தளம் பகுதியும் நீங்கலான (இரு தாலுக்காக்களில் இரு கிராமங்கள் நீங்கலான) இரு தாலுக்காக்களுமாகும்.  தமிழகத்துடன் இணைக்கவேண்டும் என்று கோருகின்ற இரு தாலுகாகக்களிலும் இருந்து மேற்கூறிய இரு கிராமங்களையும் விலக்களித்து விடுவதில் தி.த.நா.கா.விற்கு ஆட்சேபணை இல்லை.

அமைக்கப்படக் கருதியுள்ள கேரள மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இப்பகுதிகள் இன்றியமையாத தேவையென நாங்களே அனேகமாக விட்டுக் கொடுத்து விட்டோம் என எங்கள் கோரிக்கைக்கு எதிரான வாதமாக,மாநிலங்கள் சீரமைப்புக் குழு மேற்காட்டிய எங்கள் மனுவின் பகுதியினைப் பற்றுக்கோடாக எடுத்துக் கொண்டு உள்ளது.நாங்கள் குழுவிடம் கொடுத்த கருத்துக்களை உண்மைக்கு மாறாகத் திரித்து விடுகிற செயல் இது என்பதைப் பணிவுடன் எடுத்துக் காட்டுகிறேன். தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் சென்னை மாநிலத் திட்ட வளர்ச்சிக்கு மிகவும் தேவையாகும்.

நான் ஏற்கனவே முன் வைத்துள்ளது போல் பெரி யாறு நீர்த் தேக்கத்திற்கு நீர்ப்பிடிப்புப் பரப்பு 13 சதுர மைல்களும் நீர் வடிப்பரப்பு 305சதுர மைல்களும் உள்ளன. இப்பகுதி சென்னை மாநிலத்திற்குஇன்றியமையாததேவை.ஏனெனில்பெரியாறு நீர்த்தேக்கத்தினின்றும் மதுரை மாவட்டத்தில் 190,000ஏக்கர் நன்செய் நிலங்களுக்குத் தண்ணீர் செல்கிறது. அத்தண்ணீருக்கு இறைவரியும் கொடுக்கப்படுகிறது.பெரியாற்று நீரைப் பயன்படுத்தி பெரியகுளத்திற்கருகே நீர் மின்சார நிலையம் அமைக்கத் தமிழக அரசு திடடமிட்டது. ஆனால் அன்றைய பிரஜா சோசலிஸ்ட் அரசு மின் உற்பத்திக்கு மேலும் வரிப்பணம் தேவையெனக் கூறி அனுமதியளிக்க மறுத்துவிட்டது.  பெரியகுளத்தில் பெரியாறு நீர்மின் திட்டம் அமைக்க அடிக்கல் ஏற்கனவே நாட்டப்பட்டுள்ளது.  சென்னை அரசின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உட்படுத்த மேலும் இருதிட்டங்கள் அங்கே உள்ளன.

7.75 கோடிக்கான பெரியாறு மேல்மட்ட அணைத் திட்டம் 14.5 கோடிக்கான பம்மையாறு திட்டம், ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 7.98 கோடிக்கான பெரியாறு நீர்மின் திட்டம் ஆகியவை சென்னை அரசின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. அன்றியும் 13.2கோடிக்கான பரம்பிக்குளம் மேல் ஆழியாறு திட்டமும் அமைந்துள்ளது.தமிழகப் பகுதியிலேயே மேல் ஆழியாறு அணைக் கட்டுவதற்குத் தமிழக அரசின் பொறியாளர்கள் சர்வே செய்திட நீர் வடிப்பரப்பு அடங்கிய திரு&கொச்சி பகுதிக்குள் நுழையவும் திரு&கொச்சி அரசினர் அனுமதிக்க மாட்டார்கள் என அறிகிறேன். மாறாக அப்பகுதிகளிலிருந்து கீழ்நோக்கிப் பாயும் ஆறுகளைப் பயன்படுத்த எந்தவொரு திட்டமும் திரு&கொச்சி அரசின் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதைக் காண்கிறேன். இவ்வாறாகத் தேவிகுளம் பீர்மேடு, ஆகிய இருதாலுகாக்களும் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டியது இன்றியமையாத தேவையாகும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் குறிப்பிட்டவற்றுள் மேலும் இரு தாலுக்காக்கள் உள்ளன.கோயம்புத்தூர் மாவட்டத்தினால் சூழப்பட்டுள்ள தமிழ்ப்பகுதியாகிய சித்தூர், அப்பகுதி மக்களின் சார்பில் தமிழகத்துடன் இணைக்கக் கோரியிருந்தோம். ஆனால் குழுவின் அறிக்கையில் அப்பகுதி கேரளத்தின் பகுதியாகவே இருக்க வகை செய்யப்பட்டுள்ளது.நெய்யாற்றின் கரைத் தாலுகாவைப் பொறுத்தவரை அங்கு ஒரு தொகுதியில் எங்கள் தமிழ்க் கட்சி உறுப்பினரே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அங்குப் பெரும்பான்மை ஊராட்சி மன்றங்களை எங்கள் கட்சியினரே,தமிழர்களே ஆட்சி செய்கின்றனர்.1951இன் ஜனத்தொகைக் கணக்கினை நாங்கள் எதிர்த்துள்ளோம்.தேர்தலின்போது எங்கள் மக்களுக்குக் கொள்கை விளக்கம் செய்தோம். அப்போது எங்கள் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.அப்பகுதியில் அரசின் செயல்பாடு மேற்காட்டிய நிலையில் உள்ளது. எனவே நெய்யாற்றின் கரையின் தமிழ்ப் பகுதி உள்ளிட்ட தாலுக்காக்களையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இறுதியாக எங்கள் பகுதிகளில் மனிதாபிமானப் பிரச்சனைகளைப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.தேவிகுளத்திற்குச் சென்று தேயிலைக் காடுகளைக் கேளுங்கள். தமிழ்மக்கள் நெற்றி வியர்வை சிந்தி தமிழர்களின் குருதியால் வளர்க்கப்பட்டவை என்றும் தமிழ் முன்னோர்களின் எலும்பும் அவர்கள் சாம்பலும் தேயிலைச் செடிகளுக்கு உரமாயின என்றும், தமிழ்  இளவல்களின் பிஞ்சுக்கரங்களால் நட்டு வளர்க்கப்பட்டவை அவை என்றும்  வரலாறு கூறும் அச்செடிகள். அச்செடிகளும் அவ்வூர் மக்களும் கூறுவர் இது தமிழ்நாடுதான் என்று!

தென்பகுதித் தாலுகாக்களைப் பொறுத்தவரை என் நண்பர் தாமஸ் கூறினார். “தோவாளைத் தொகுதியில் தி.த.நா.கா.வின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெறவில்லை”என்று.ஆனால் உண்மைஎன்னவென்றால்தோவாளைசட்டமன்றத்தொகுதியும்,நாகர்கோவில்நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்ததாகும்.தோவாளைப் பகுதியிலும் மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இங்கு வந்துள்ளேன்.தி.த.நா.கா.விற்கு எதிராகத் தோவாளையில்கூட நிறுத்திப் போட்டியிட நண்பர் தாமசிற்கோ, அவர் கட்சிக்கோ ஓராள்கூட கிடைக்கவில்லையே! எனவே, நான் வேண்டிக் கொள்வதெல்லாம் எங்கள் வழக்கு மக்கள் பிரச்சினையாகும்.வழக்கின் உண்மை நிலையினை உணர்ந்து அதற்கேற்பத் தீர்ப்பு வழங்குமாறு இந்த அவையை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி : ‘சிலேட்’ & இதழ்

Pin It