(மாலை நேரம்; கல்லூரி முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அமுதனும் அல்லியும் பேசிக்கொண்டே நடந்து வருகின்றனர்.)

அல்லி: என்ன அமுதன், வேகம் வேகமா நடக்கத் தொடங்கீட்டே? வீட்லே ஏதாவது தலை போற வேலையா?

அமுதன்: அதெல்லா ஒண்ணுமில்லே, வழக்கமான என்னட நடைதா. ஏதோ உங்கிட்டே முக்கியச் சேதி இருக்கும்போலே, என்ன அது?

அல்லி: இன்னைக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாயிருக்கே, பார்க்கிலியா?

அமுதன் : அட அதுவா? வாத்தியார் புள்ளதான் மக்குன்னு சொல்லுவாங்க. இப்போது புதுமொழி வந்தாச்சு, வாத்தியாரெல்லாம் மக்குன்னு ஆசிரியர் தகுதித் தேர்வு சொல்லுதே! அது சரியா அல்லி?

அல்லி : ஆறு லட்சம் பேருக்கும் மேல தேர்வு எழுதினாங்க. அதுல வெறும் ரெண்டாயிரம பேர்தான் தேர்ச்சின்னு சொன்னா, அது எப்படி சரின்னு சொல்லமுடியும் அமுதா?

அமுதன் : அப்படின்னா.. ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான தேர்ச்சியா அல்லி?

அல்லி : அதைத் தேர்ச்சின்னு சொல்ல முடியாது. தோல்வின்னுதான் சொல்லணும்.

அமுதன் : தேர்வு எழுதிய ஆசிரியரெல்லாம் தேர்வே கொளறுபடிதான்னுதான் சொல்றாங்க.

அல்லி : இல்லையா பின்னே! திட்டமே சூழ்ச்சி யானது, அதுக்குத்தான் இந்தக் கொளறுபடியும்.. மத்திய மாநில அரசின் கூட்டுக்களவுத் திட்டம்தான் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு அமுதா...

அமுதன் : அப்படீன்னா, வெளங்கலியே, இன்னும் கொஞ்சம் வெளக்கமா சொல்லு அல்லி!

அல்லி : அமுதா... ஆசிரியரெல்லாம் பாடம் நடத்தப் பயிற்சி எடுத்தவங்க. படிச்சுப் பட்டம் வாங்கியவங்க! இன்னொரு தேர்வு எதுக்கு அமுதா? ஆசிரியர் பணி இடம் காலியா இருக்குன்னா. உடனே பணியில அமர்த்துவதுதானே அரசு செய்ய வேண்டியது? அரசுப் பள்ளியிலே படிக்கிற மாணவனுக்கு ஆசிரியர் இல்லாக்குறையைப் போக்கத்தானே அரசும் நிருவாகமும்?

அமுதன் : நீ சொல்றதைப் பாத்தா வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிஞ்சு இருக்கிறவங்களுக்குப் பதிவு மூப்பின் அடிப்படையிலே ஆசிரியர் பணி வாய்ப்புக் கெடைக்கணுங்கிற, அதுதானே அல்லி!

அல்லி : அதுதான் தகுதி, சமூக நீதி அமுதா!

அமுதன் : தகுதி இல்லேன்னு சொல்ல ஒரு தகுதித் தேர்வை அரசு எதுக்கு நடத்தணும் அல்லி?

அல்லி : மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் பெருநிதியை வாங்கத்தான் தமிழக அரசு இந்தத் தகுதித் தேர்வை நடத்தியது அமுதா!

அமுதன் : அப்படின்னா? கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றவா இந்தத் திட்டம்? அப்ப அதோட கதி?

அல்லி : ஆசிரியரே இல்லையாம்! அப்புறம் என்ன, அதுவும் ஏமாற்றுத்தானா? அதோகதி தான் போ.., சட்டம், திட்டம் எல்லாம் தள்ளிப்போகும். தகுதித் தேர்வு, எல்லோருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துக்கே எதிரானது அமுதா...

அமுதன் : அப்படின்னா... இலவசக் கட்டாயக் கல்வி வெறும் கனவா?

அல்லி : எல்லா உன்னையும் என்னையும் ஏமாற்றத்தா. கல்வி, அது வணிகம் ஆகிப்போச்சே அமுதா...

அமுதன் : வெளிநாட்டுக் கல்வியும் இந்தியாவுக்குள்ளே இறக்குமதி ஆகுதாமே அல்லி?

அல்லி : இந்தக் குமாஸ்தாக் கல்விக்கே கொட்டி அழ வேண்டியதா இருக்கு. வெளிநாட்டுக் கல்வின்னா எதை அடகு வைக்க?ஆனா,ஒண்ணு உண்மை. ஆளறவனுக நம்மையெல்லா வெளிநாட்டுக்கு அடகு வெச்சுருவாங்க.

அமுதன் : கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம், கல்வி கடைத்தெருவில் விக்குதடா, ஐயோ பாவம்! காசிருந்தால் வாங்கலாம், ஐயோ பாவம்! கல்வி கடைச்சரக்கா ஆகிப்போச்சே, ஐயோ... பாவம், கல்வி ஐயோ பாவம்...!

அல்லி :எதுக்கு இத்தனை ஐயோ பாவம்? சாராய வியாபாரி, அரசியல் ரவுடி, முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள் இவங்களெல்லாம் கல்வி வள்ளல்களாவும், கல்வித் தந்தையர்களாகவும் விளம்பரம் செஞ்சு சுரண்டுறாங்களே, அது தெரியாதா உனக்கு?

அமுதன்: காசு நிரந்தரமா கொட்டணும்னா கல்விக்கடை வெச்சா போதுங்கிறே, அப்படித்தானே அல்லி!

அல்லி: காசை அள்ளிக் குவிக்கலாம். வேற தொழில்னா இழப்பு வர வாய்ப்பு இருக்கு. இதுல லாபம் மட்டும்தா. அதனாலதான் அரசுக் கல்வித்திட்டம் எல்லாம் உருண்டு பள்ளத்துக்கே போவுது. மேடேறாது... இப்பப் புரியுதா அமுதா...

அல்லி: காசு பாக்குற தனியார் கல்வி நிறுவனங்க மனித உயிர்கள மதிக்கவே இல்லையே? அமுதா...

அமுதன்: ஆமா அல்லி. ஓட்டைப் பேருந்துல அந்த இளந்தளிர் அநியாயமா தன் உயிரக் கொடுத்துடுச்சே! அந்த நிருவாகத்தின் அலட்சியம் வாழ வேண்டிய சுருதி என்னும் பூவை நசுக்கிக் கொன்னு போட்டுச்சே! ஆவேசப்பட்ட மக்கள் அந்தப் பேருந்தை மட்டுந்தானே எரிச்சாங்க... அப்புறம் நடந்ததுக்கெல்லாம் என்ன நடந்துச்சு? எல்லாம் வெறும் சேதியாகப் போச்சு...மக்களும் அவுங்க வேலையைப் பாக்கப் போயிட்டாங்க!

அல்லி: சீயோன் மெட்ரிக் பள்ளித் தாளாளர் விஜயன் உள்பட ஏழு பேர் சிறைக்குப் போனாங்க. அரசு ஒரு குழு போட்டுச்சு. அதோட கொலை தடுக்கப்பட்டுச்சா அமுதா?

அமுதன்: இல்லையே அல்லி! பத்மா சேசாத்திரி பாலபவன் சீனியர் பள்ளி வளாகத்துக்குள்ளேயே நீச்சல்குளத்துல ரஞ்சன்னு இன்னொரு தளிரு கொல்லப்பட்டிருக்கே? அந்த நிருவாகத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கு? கைது பன்னின மறுநொடியே எல்லாரும் வெளியே வராங்க. ஒருநாள் சிறை கூட அந்தப் பள்ளி உரிமையாளருக்கு அரசு கொடுக்க விரும்பலையே! உயிர் இவங்களுக்கெல்லாம்....?

அல்லி: உன்னுடைய கோபம் சரிதான் அமுதா. அந்தப் பத்மா பள்ளிக்கும் பார்ப்பனக் கும்பல் சோ, சு.சாமிகளுக்கும் உள்ள நெருக்கம்தான் அதற்குக் காரணம். குருதி உறவு குடுமி உறவுன்னா சும்மாவா?

அமுதன்: ஜெவுக்குந்தான் உறவு. அதனாலதான் அந்தப் பள்ளி உரிமையாளரைச் சமச்சீர் கல்வி ஆய்வுக் குழுவிலே உறுப்பினரா போட்டாங்க.அது தெரியுமில்லே உனக்கு? குடுமி உறவு மட்டுமில்ல, கொண்ட உறவும் உண்டுதான் அல்லி!

அல்லி: கல்விய இலவசம் ஆக்குங்கன்னு சிலர் குரல் எழுப்புறாங்க.

அமுதன்: அது சரியான கோரிக்கைதானே, அல்லி?

அல்லி: ஆமாம் அமுதா... ஆனா அது போதாது. தமிழ்நாட்டுல எல்லாக் கல்வியும் தமிழ்வழிக் கல்வியாகத்தான் இருக்கணும். அப்பத்தா எல்லாக் குழந்தைகளும் சரிசமமா கல்வி கற்று முன்னேற முடியும். சமச்சீர்க் கல்வியினா அதுதானே? இலவசக் கட்டாயக் கல்வியை அரசே கொடுக்கணும். கல்விக்கான உயர்ந்த இடத்துல எல்லாக் குழந்தைகளும் அமர்ந்து அமைதியா, சமமாப் படிக்கணும். அறிவைப் பெறணும், அற உணர்வைப்பெறணும், அமுதா

அமுதன்: அதுக்கு மாணவர்களாகிய நாமெல்லா போராடணும். சரி நேரமாகுது வரட்டுமா,அல்லி?

அமுதன்: சரி அமுதா,போய் வா. நானும் வர்றேன். (இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து சென்றனர்.)

Pin It