பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இன்று சந்தைப் பொருளியல் ஆட்சி செய்தால் சமூக அறநெறிகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதாக மாறிவருகிறது. உலகமயம் நடைமுறைக்கு வந்தபின் ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது புதிய சமூக ஒழுக்கமாக நியாயப்படுத்தப்படுகிறது. ஈமுக் கோழி மோசடி இந்த உண்மையை முகத்தில் அறைந்தாற் போல் நமக்குச் சொல்கிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக அரசு ஏற்புப் பெற்று ஈமு மற்றும் நாட்டுக் கோழி ஒப்பந்த நிறுவனங்கள் புற்றீசல் போல் ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள், உழவுத்தொழிலில் புதிய புரட்சியைத் தொடங்கி விட்டதாக விளம்பரங்கள் செய்தன. உருபாய் ஓரிலக்கம் (1,00,000) முதலீடு செய்தால் ஈமுக் கோழி வளர்த்தாலும் வளர்க்காவிட்டாலும் மாதம் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை வளர்ப்புக் கூலி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினர். பல்லாயிரம் பேர் நம்பிப் பணம் கட்டினர். ஆயிரம் கோடி உருபாய்க்கு மேல் இன்று கோழி வளர்ப்பு ஒப்பந்த நிறுவனங்கள் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டன.

இந்தியாவில் 1965களில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. பசுமைப் புரட்சியின் நோக்கமே இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இன மக்களின் வேளாண் தற்சார்பை ஒழித்துக்கட்டுவதுதான்; சொந்த நாட்டு உழவர்களை மாண்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்துவதுதான். உலகமயம் நடைமுறைக்கு வந்தபின் ஆளும் வர்க்கங்களுக்கு இது மிகவும் எளிதானது; பன்னாட்டு நிறுவனங்களின் தங்குதடையற்ற சுரண்டலுக்கு இந்திய உழவர்கள் காவு கொடுக்கப்பட்டனர்.

புதிய வேளாண் கொள்கைகள் நடைமுறைக்கு வரவர இலக்கக்கணக்கான உழவர்கள் கடன் சுமை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தற்கொலை என்பதைவிட இந்திய அரசின் கொள்கைப் பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட உழவர் படுகொலைகள் என்றழைப்பதே சரியானதாகும். உழவர்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் இந்தத் தாக்குதல் குறித்து புகழ் பெற்ற இதழியலாளர் சாய்நாத் அவர்கள் இந்திய அரசு கிராமப்புற மக்கள் மீது ஓர் அறிவிக்கப்படாத போரை நடத்தி வருகிறது எனக் குறிப்பிடுகிறார்.

நெல் விளைந்த வயல்களெல்லாம் இன்று வண்ணக்கல் நடப்பட்டு விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. உழவுத்தொழில் நசிவடைந்து உழவர்கள் திக்கற்று நிற்கின்றனர் . இவர்களைக் குறிவைத்துத் தொடங்கப்பட்டதுதான் ஈமுக்கோழி, நாட்டுக்கோழி ஒப்பந்தப் பண்ணை மோசடி நிறுவனங்கள். வண்ண, வண்ண விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களிலும் அன்றாடம் மாறி, மாறி ஒளிபரப்பாயின. சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் போன்ற திரைப்பட நடிகர்கள் ஈமுக்கோழி வளர்த்தால் ‘ஈசியாக’ முன்னேறலாம் என மக்கள் முன்னேற வழிகாட்டினார்கள். சினேகா தொடங்கி ‘பிரதமர் அலுவலகப் பொறுப்பு அமைச்சர் அணு விஞ்ஞானி’ நாராயணசாமி வரை சுகி ஈமு உணவகங்களைத் திறந்து வைத்தனர். டெல்லியில் சுகி ஈமு உணவகத் திறப்பு விழாவில் பேசிய நாராயணசாமி சுசி நிறுவனர் குரு போன்றவர்கள் தமிழகத்திற்குள் முடங்கி விடாமல் இந்தியாவெங்கும் சென்று தமது திறமையைக் கட்டவிழ்த்து விட வேண்டும் என்று மோசடி சுசி நிறுவன முதலாளிக்குத் தரச்சான்று வழங்கினார்.

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுசி ஈமு உணவகத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு கால்நடைத் துறையின் ஒப்புதலைப் பறைசாற்றினார். அறிவுக் களஞ்சியமாக இருக்க வேண்டிய பல்கலைக் கழகங்கள் உழவர்களை ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளுக்கு முனைவர் (டாக்டர்) பட்டங்களை விற்பனை செய்து பணம் சேர்த்துக் கொண்டன. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் மோசடி நிறுவனங்களிடம் மாதம், மாதம் தங்கள் பங்கைத் தண்டல் செய்து கொண்டனர். (பாசி நிறுனத்தில் ஐ.ஜி. பிரமோத்குமார் உரு.3 கோடி கையூட்டு வாங்கிச் சிறைப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது)

ஈமுக் கோழி ஒப்பந்தப் பண்ணை நிறுவனங்களைப் போலவே நாட்டுக் கோழி வளர்ப்பு, கொப்பரைத் தேங்காய் உடைப்பு, அகர் மரம் வளர்ப்பு என்கின்ற பெயர்களில் அரசு ஏற்புடன் புற்றீசல் போல அன்றாடம் பல புதிய நிறுவனங்கள் கிளம்பி மக்களிடம் பணம் பறித்து வருகின்றன. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கில் தமிழகமெங்கும் வளர்க்கப்பட்ட ஈமுக்கோழிகள் கொள்முதல் செய்வாரின்றித் தேங்கிவிட்டன. கோழித் தீவனத்திற்கும், மாத ஊதியத்திற்கும் பணம் கொடுக்க முடியாமல் முதலில் சுசி ஈமு நிறுவனம் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டது. மாத ஊதியம் கிடைக்காத முதலீட்டாளர்கள் பெருந்துறையிலுள்ள சுசி ஈமு நிறுவனத்தை முற்றுகையிட்டனர். தனது பித்தலாட்டம் இனியும் எடுபடாது என்று தெரிந்துகொண்ட சுசி ஈமு நிறுவன அதிபர் குருவும் அவரது கூட்டாளிகளும் தப்பி ஓடிவிட்டனர். மக்களையே கவனிக்காத அரசு அதிகாரிகள் கோழிகளைக் கவனிப்பதாக நாடகமாடினார்கள். சுசி ஈமுவைத் தொடர்ந்து எல்லா மோசடி நிறுவனங்களும் ஒவ்வொன்றாக ஓட்டம் பிடித்தன. ஈமு மோசடி குறித்து முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டு, பணம் பறி கொடுத்தவர்களுககு ஆறுதல் சொல்லப்பட்டு விட்டது.

ஈமுக் கோழி வளர்ப்பு மோசடி பற்றிச் சமூக ஆர்வலர்களும், உழவர் இயக்கங்களும் தொடக்கம் முதலே அரசிற்கு எச்சரிக்கை செய்து வந்தனர். மாதந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் வேளாண் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு உழவர் இயக்கங்கள் இம்மோசடி குறித்து இடைவிடாமல் எடுத்துக்கூறி தடுத்து நிறுத்த வேண்டின. பல்வேறு இதழ்களிலும் இந்த மோசடித் திட்டம் பற்றிக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டேயிருந்தன. இவ்வளவையும் மீறி அன்றாடம் புதிய, புதிய மோசடி நிறுவனங்கள் தொடங்க அரசு ஏற்பு வழங்கியே வந்தது. பலரும் எடுத்துக் கூறியது போல் மோசடி அம்பலமானவுடன் அரசு புகார் மனு வாங்கி நாடகம் நடத்துகிறது. ஈமுக்கோழியில் முதலீடு செய்தால் வாழ்க்கை வளம் பெருகும் என்கின்ற விளம்பரங்களில் தோன்றி மோசடிக்குத் துணைபோன திரை நடிகர்கள் ‘தொழில் தர்மப்படி’ நடந்து கொண்டதாக ஆணவம் பேசுகின்றனர். மோசடி நிறுவனங்களின் விளம்பரங்களை அன்றாடம் பக்கம் பக்கமாக வெளியிட்டுப் பணம் சேர்த்த அதே முதலாளிய ஏடுகள் ஏமாந்த மக்களின் துயரக் கதையை எழுதிப் பணம் பார்க்கின்றன.

நடந்து கொண்டிருக்கும் இந்த மோசடிக் கூத்துகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதன்மைச் செய்தி ஒன்று உள்ளது. இன்றைய அரசு ஒரு மக்கள் நல அரசல்ல, மாறாக மக்கள் விரோத அரசு என்பதே அது. ஆறுகளை அழிக்கும் மணற்கொள்ளை, மலைகளை அழிக்கும் கிரானைட் கொள்ளை, இயற்கை வளங்களைச் சூறையாடும் நிலக்கரிக் கொள்ளை, கண்ணுக்கே தெரியாத அலைக்கற்றைக் கொள்ளை எனப் பஞ்சபூதங்களையும் சூறையாடி இலக்கக்கணக்கான கோடி உருபாய்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்களின் உள்ளூர் வாரிசுகள்தான் இந்த ஒப்பந்தப் பண்ணை மோசடிப் பேர்வழிகள். மொத்தத்தில் மேலிருந்து கீழ் வரை சமூகமே ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கிக்கொண்டுள்ளது.

நமது அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தேவைகளை இந்த ஆட்சியாளர்கள் பாதுகாப்பார்கள் என இனியும் நாம் நம்பிக்கொண்டிருக்கக்கூடாது. மோசடிக்காரர்களுக்காக மோசடிக்காரர்களே நடத்தும் இந்த உளுத்துப்போன ஆட்சி முறைக்கு முடிவு கட்டித் தமிழ் மக்களுக்காகத் தமிழ் மக்களே நடத்தும் ஒரு தமிழ்த் தேசியக் குடியரசை அமைக்க நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. தமிழர்களே! புதிய விடியலுக்குச் சிந்திப்போம்; பாதை காண்போம்.

Pin It