2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்! ஒணம் பண்டிகை! கடவுள் நாடாம் கேரளத்தில்! பத்து நாள் பண்டிகையின் இறுதிநாள் விழா. இன்று பத்து நாட்களாகத் தன் குடிமக்களைப் பார்வையிட்ட பின் மகாபலி மன்னன் திரும்பும் நாள்! (மகாபலி வேறு யாருமல்ல இரணியன் மகன் பிரகலாதனின் பேரன். இரணியனைக் கொல்ல நரசிம்ம அவதாரம்! மகாபலியைக் கொல்ல வாமன அவதாரம்! மகாபலி ஆட்சிக் காலம் பொற்காலம். மக்கள் சமமாகவும் மகிழ்ச்சியாகவும் துன்பமின்றியும் நோயின்றியும் வாழ்ந்தனர். பொறாமை கொண்ட இந்திரன், திருமாலிடம் முறையிட, அவன் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண்கேட்டு, சூழ்ச்சியால் கொன்று பாதாள உலகத்திற்கு அனுப்பியதாகப் புராணக் கதை கூறுகிறது).

ஓணம் மலையாள ஆண்டின் முதல் மாதத்தில் கொண்டாடப்படும் விழாவும் ஆகும். அதுமட்டுமல்ல மலையாளிகளின் அறுபடைத் திருவிழாவும் இந்த ஓணம்தான். புத்தாடை உடுத்தி, பூக்கோலம் போட்டு 18 வகைக் காய்கறி பாயாசமோடு ‘ஒண சத்யா’ (ஒண உணவு) உண்டு மகிழ்வர். ஆண்கள் புலியாட்டம் ஆடுவர். பெண்கள் கைகொட்டி ‘களி’ எனும் கும்மி நடனமும் ‘தும்பித் துள்ளல்’ எனும் நடனமும் ஆடி மகிழ்வர். மக்கள் அனைவரும் கொள்ளை இன்பத்தில் திளைக்கும் நாள்.

மே, 2001இல் ஆட்சிக்கு வந்த ஏ.கே.ஆண்டனி அரசுக்கு இது முதலாம் ஓணமாகும். ஆரவாரமாகக் கொண்டாட ஆயத்தமானது அரசு. அலங்கார வண்டிகள் திருவனந்தபுரம் மகாத்மா காந்தியடிகள் சாலையில் அணிவகுத்துச் செல்லவுள்ளன.

இத்தனை விழாக் கோலங்களுக்கும் இடையே அதே கேரள மண்ணில் மக்களில் ஒருசாரார் செத்து மடிந்து கொண்டுமுள்ளனர். கேரள தலைமைச் செயலகத்தின் முன்பு, முதலமைச்சர் வீட்டின் முன்பு ஆதிவாசிகளின் அகதிமுகாம் கூடாரங்கள். ஏன் தெரியுமா? இதுவரை 38 பேர்கள் பட்டினிச் சாவு. அதைத் தடுக்க எவ்வழியும் காணாத கேரள அரசை எதிர்த்துத்தான் இந்த அகதி முகாம்கள். கடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாள் முதல் இந்த முகாம் போராட்டம் நடந்து வருகிறது. ஒருவாரம் ஆனபின்னரும் அரசு உருப்படியாக ஏதும் செய்யவில்லை.

“இங்கே பட்டினிச்சாவு! அங்கே பகட்டு வாழ்வா?” என பொங்கியெழுந்தார் ஜானு. இவரது தலைமையில் தான் ஆதிவாசி அகதிமுகாம் நடந்து வருகிறது. ‘ஆதிவாசி தலித் செயல் கமிட்டி’யின் தலைவர் இந்த ஆதிவாசி ஜானு.

‘அலங்கார வண்டிகளின் அணிவகுப்பை ஒரு அங்குலம் கூட நகரவிட மாட்டோம் நாங்கள்’ என ஆவேசமாகத் திரண்ட ஆதிவாசிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை எப்பாடுபட்டும் முறியடித்துவிடுவது எனும் முயற்சியில் இறங்கியது ஆண்டனி அரசு@ காவலர்களைக் குவித்து அரண்போல் நிறுத்தியது.

ஆனாலும் அஞ்சவில்லை ஆதிவாசிகள்! அமைச்சர்கள் பார்வையிடுவதற்காக அமைக்கப் பட்டிருந்த சாலையோர மேடையை அலங்கார வண்டிகள் கடந்த உடனேயே காவலர்கள் தடியடி நடத்தினார்கள். பதிலுக்கு ஆதிவாசிகள் கல்லெறியலானார்கள். பிற்பகல் மணி 2.30க்கு மேல் கலவரம் தீவிரமாகியது. மாலை 5.20 மணிக்குச் சாலையை மறித்து ஜானு படுத்தார். காவலர் தாக்கியதில் ஜானுக்குக் காயங்கள்@ அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

எந்த ஆதிவாசிப் பெண்ணை அடித்து உதைத்து கைது செய்தார்களோ, அதே ஆதிவாசிப் பெண்ணுடன், 2001 அக்டோபர் 16 ஆம் நாள் அன்றைய முதலமைச்சர் ஏ.கே.ஆண்டனி எழுத்து வடிவ ஒப்பந்தம் செய்துகொண்டார் என்றால் நம்மால் நம்பமுடியவில்லை.

கேரளத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கிய இந்தத் தீரமிகு போராட்டத்தை நடத்திய பெண் ஜானு, ஒரு சாதாரண எழுத்து வாசனையே அறியாத ஆதிவாசிப் பெண் என்றால்; அவரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? அவரைப் பற்றியும், ஆதிவாசிகளின் பிரச்சனைகள் என்ன என்பதைப் பற்றியும், அவர்கள் சம்மந்தப்பட்ட சட்ட சிக்கல்கள் பற்றியும், முன் சொன்ன திருவனந்தபுரம் அகதிமுகாம் பற்றியும், வயநாடு நிலமீட்புப் பற்றியும், பல்வேறு போராட்டங்கள் பற்றியும், ஆட்சி செய்து வரும் இரு கூட்டணிகளின் நரித் தந்திரங்கள் பற்றியும், தீர்வு பற்றியும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். அப்போதுதான் நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பற்றி நாம் கணிப்பீடு செய்ய உதவியாக இருக்கும். இங்குள்ள பல தலைவர்கள், ‘மைக்’கைப் பிடித்து மனோகரா வசனம் பேசி மக்கள் மயக்குனர்களாக உள்ளனர்@ மக்களுக்கு நன்மை பயக்குநர்களாக இல்லையே என்கிற தவிப்பில் புறநானூறு படித்தறியாத போர்க்குணம் மிக்க ஜானுவைப் பற்றி எழுதத் துணிந்தோம்.

யார் இந்த ஜானு?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திரிசிலேரி எனும் ஊரின் ஒரு பகுதிக்குச் சேக்கோட்டை என்று பெயர். அங்கேதான் ஜானு பிறந்தாள். அவளுக்குப் பிறந்த தேதி எது என்று கூறமுடியில்லை. பிறந்த தேதி, மற்றவர்களுக்கு மட்டுமல்ல ஜானுவுக்கே கூட தெரியாது. தேதி, மாதம் மட்டுமல்ல@ ஆண்டும் கூடத் தெரியாது. ஒருவேளை 1966 அல்லது 1967 ஆக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இவளது தந்தை கரியன்@ தாய் வெளுப்பி. ஆதிவாசிகளுக்குள்ளும் சாதிப் பிரிவுகள் உண்டு. பிரிவுகள் கொஞ்சமல்ல் முப்பத்தி ஆறு சாதிகள்: அடியா, பனியன், மலைக் குரவன், உரலி, அரன்டன், காட்டுநாயக்கன், காடர், குறுமான், புலையன், குறிச்சியன் இப்படிப் பல. (கேரளத்தின் மொத்த ஆதிவாசிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆதிவாசிகள் வயநாடு மாவட்டத்தில் மட்டுமே உள்ளனர்.) அவற்றில் மிகவும் பின் தங்கிய சாதிகள் மூன்று. அவை அடியா, பனியன், காட்டுநாயக்கன். ஜானு, அடியா (அடிமை)ச் சாதியைச் சேர்ந்தவள். தந்தை கரியன் கொஞ்சம் மதிக்கப்படக் கூடிய ‘மூப்பன்’ பதவி வகித்தவர். கிட்டத்தட்ட நம்மூர் நாட்டாண்மை மாதிரியான பதவி அது.

ஜானுவுக்கு இரண்டு வயது. வெளுப்பியின் வயிற்றில் பெண்சிசு. அப்போது குடும்பத்தில் பெரும் புயல் வீசத் தொடங்கியது. அப்பா கரியன், கர்ப்பினி மனைவியையும் மகள் ஜானுவையும் நிர்கதியாக விட்டுவிட்டு வேறொரு பெண்ணை மனைவியாக்கிக் கொண்டான். அனாதைகளாக விடப்பட்ட வெளுப்பியும் இரண்டு பெண் குழந்தைகளும் வயிற்றுப் பாட்டுக்காகப் பட்டத் துன்பங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை.

கரியனின்; இரண்டாவது மனைவி பெயர் கொளும்பி. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த இரண்டாவது மனைவியையும் மகனையும் நட்டாற்றில் விட்டுவிட்டான் கரியன். மீண்டும் மூன்றாவது ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துவிட்டான். மூன்றாவது மனைவிக்குப் பிள்ளை கிடையாது. இதைவைத்தே ஆதிவாசிப் பெண்களின் நிலையை நாம் அறியலாம்.

ஆதிவாசிகளின் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றது கிடையாது. அவர்களைப் பள்ளியி;ல் சேர்ப்பதற்கு நாட்டுவாசிகள் யாரும் அவர்களிடம் சென்றதும் கிடையாது. அப்படி யாரேனும் முயற்சி எடுத்து ஆதிவாசிகள் வாழும் பகுதிக்குச் சென்றால் குழந்தை குட்டிகளெல்லாம் தலைதெறிக்க ஓடி காட்டினுள் புகுந்து ஒளிந்து விடுவார்கள். காரணம் வேறொன்றுமல்ல! அந்தக் குழந்தைகள் இந்த மாதிரி நாட்டு மனிதர்களை பார்த்தது கிடையாது. இன்னொரு காரணமும் உண்டு. இந்த, நாட்டு நாசுக்கான மனிதர்கள் எருமைக் கிடா கறியையும் காளை மாட்டுக் கறியையும் சாப்பிடுவார்கள் என்று சொல்லி அவர்களது பெற்றோர்கள் அவர்களை பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஜானுவும் இப்படி ஒடி ஒளிந்தவள்தான்@ அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது!

பிள்ளைகள் வளர வளர வெளுப்பிக்குத் தொல்லைகளும் அதிகரித்தன. எனவே, ஜானுவை யார் வீட்டிலாவது வேலை செய்ய விட்டு விட முடிவெடுத்தாள். பாவம் ஜானு! அப்போது அவளுக்கு வயது ஏழு அல்லது எட்டுதான் இருக்கும். ‘வெல்லமுண்ட’ எனும் ஊருக்கு ஜானுவை அழைத்துச் சென்று ஆசிரியை மேரிக்குட்டி வீட்டில் விட்டாள் வெளுப்பி. வழி நெடுக பார்த்த காட்சிகளெல்லாம் ஜானுவுக்கு நம்பமுடியாதவைகளாக இருந்தன. அது போன்ற மனிதர்களையும் சாலைகளையும் வீதிகளையும் ஜானு அதுவரை பார்த்ததில்லை.

மேரிக்குட்டி ஆசிரியைக்கு ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதும், பாத்திரங்களைக் கழுவுவதும், கால்வாய்க்குச் சென்று துணிமணிகளைத் துவைத்துக் காயவைப்பதும், வீட்டிற்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஜானுவின் வேலைகளாகும். ஏழு எட்டு வயதுச் சிறுமிக்கு இவ்வளவு வேலைகளா என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இப்படி மூன்று நான்கு ஆண்டுகள் கழிந்தன. மேரிக்குட்டி ஆசிரியைக்கு வேலை மாற்றல் ஆணை வந்தது. அதனால், ஜானுவின் வயிற்றில் மண் விழுந்தது. அவளது வாழ்க்கை ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்றானது. அதாவது சேக் கோட்டைக்குத் திரும்பி வந்துவிட்டாள்.

அப்போது ஜானுக்கு பத்து அல்லது பதினோறு வயதிருக்கலாம். இனி விவசாய வேலைதான். அதிகாலையில் வயலில் இறங்கினால் இருட்டும் வரை வேலை செய்ய வேண்டும். மழை பெய்தால் கமுகு மட்டையைத் தலையில் கவிழ்த்துக் கொள்வார்கள். ஆடை நனைந்துவிட்டால் ஈர உடையோடுதான் வேலை செய்ய வேண்டும். மாற்று உடை கிடையாது. உடம்புச் சூட்டிலேயே ஆடை உலர்ந்துவிடும். மாடுகளைப் பூட்டி பெண்களே ஏர் பிடித்து உழுவார்கள். மாடுகள் இல்லாதபோது பெண்களே நுகத்தைக் கழுத்தில் ஏந்தி கலப்பையை இழுத்துச் செல்வார்கள். வேலை கிடைக்காத போது சிறுமிகளுடன் சேர்ந்து மீன் பிடிக்கப் போவாள். வயலின் கரைகளில் நண்டு பிடிப்பாள். காரப் பழம், முத்தங்காய் பழம், குன்னிப் பழம் பறித்து சாப்பிடுவாள்@ கிழங்கு தோண்டிச் சாப்பிடுவாள். இப்படித்தான் அவளது வாழ்க்கை நகர்ந்தது. ஆதிவாசிகளின் குடிசைகளில் வெளிச்சத்திற்கு விளக்கு கிடையாது@ மண்ணெண்ணெயும் கிடையாது. அவர்கள் தீப்பெட்டியைப் பார்த்ததில்லை. மூட்டிய தீக்கனலை அணையாமல் பார்த்துக் கொள்வார்கள். அடுப்புப் பற்றவைக்க வேண்டுமென்றால் அத்தீக்கனலில் இருந்துதான் நெருப்பு எடுத்துக் கொள்வார்கள்.

 எழுத்தறிவு இயக்கத்தினர் சேக்கோட்டைக்கு வந்து பெயர்களைச் சேர்த்தார்கள். அதில் ஜானுவும் ஒருத்தி. பதிவேட்டில் பதியும்போது சேக்கோட்டுக் கரியன் ஜானு என்று பெயர் பதிந்தார்கள். அது முதல் ஜானுவின் பெயருக்கு முன்னே சி.கே. என்ற முன்னெழுத்துகள் ஒட்டிக் கொண்டன.

இப்போது அவளுக்கு 17 அல்லது 18 வயது இருக்கலாம். இந்த வயதில் ஜானுவின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடந்தன. ஆதிவாசிகளின் வழக்கப்படி திருமணம் நடந்தது. கணவன் அதே ஊரைச் சேர்ந்த சேக்கோட்டைக் குள்ளன் என்பவர். ஜானுக்கு ஆதிவாசி மனிதர்களின் மீது ஒரு வெறுப்பு இருந்து வந்தது. மணவாழ்க்கை பிடிக்காமல் கணவனிடமிருந்து பிரிந்து தன் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டாள். அறிவொளி இயக்க ஆட்கள் வந்து ஜானுவையும் சில பெண்களையும் சேர்த்தார்கள். கொஞ்சம் கொஞ்சம் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டாள்.

       மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தாள். அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் (கேரள கர்ஷகத் தொழிலாளி யூனியன்) உறுப்பினராகப் பணியாற்றினாள்.

கொஞ்சம் தையல் கலையும் கற்றுக் கொண்டாள். சில ஆண்டுகள்தாம் ஜானுவால் மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியில் செயல்பட முடிந்தது@ அதிருப்தியும், வெறுப்பும் ஏற்படலாயிற்று. கட்சி உறுப்பினர்களும் தலைவர்களும் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்தே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆதிவாசிகளின் பரிதாப நிலை குறித்தோ, அவர்களது பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி குறித்தோ கட்சியினர் கவலைப்படவுமில்லை, அக்கறை காட்டவுமில்லை என்று ஜானு கருதினாள். கட்சிக் கூட்டங்களில் நிறைய விடயங்களை ஜானு விவாதத்திற்கு வைத்தபோது, அதைக் கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, ஜானுவின் கோரிக்கைகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றினர். ஆதிவாசி மக்களுக்கு எவ்வித உதவியும் செய்யாத கட்சி, தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் அணுகி, வாய்ஜாலம் செய்து ஏமாற்றி வந்தது. இது சற்றும் பிடிக்காத ஜானு மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்தும் விவசாயத் தொழிலாளர் சங்கத்திலிருந்தும் விலகி அவற்றுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள்.

கட்சியிலிருந்து விலகிய பின் ஒரு தெளிவான திடமான முடிவு எடுத்தாள் ஜானு. ஆம். இனி ஆதிவாசிகள் பிரச்சனைகள் மட்டுமே கையிலெடுப்பது என்று தீர்மானித்தாள். கட்சியின் ஆதிவாசித் தலைவர்களும், உயர்சாதித் தலைவர்களைப் போலவே, தம் இன மக்கள் மீது அக்கறையற்றவர்களாக இருந்தனர். ஆகவே, தன்னந்தனியாக தம் இன மக்களுக்கு முன்கையெடுப்பதுவே சரி என்று தீர்மானித்துக் கேரளம் முழுவதும் சுற்றுப் பணயம் மேற்கொண்டாள். ஆதிவாசிகளின் அனைத்துக் குடியிருப்புக்களுக்கும் சென்று பிரச்சனைகளைப் பேசினாள். அவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்டாள். அவர்களிடமிருந்து பாடங் கற்றாள். அவர்களை அணி திரட்டினாள்@ இயக்கமாக்கினாள்.

1992 ஆம் ஆண்டு ‘பழங்குடி இன உழைப்பாளிகள் முன்னேற்ற இயக்கம்’ (ஆதிவாசி விகாசன ப்ரவர்த்தக சமிதி) உருவானது. ஜானு இப்படிக் கூறிக்கொண்டாள்: “எனக்கு எந்தத் தலைவனும் கிடையாது@ எந்தக் தத்துவமும் கிடையாது. அனுபவமே எனது வழிகாட்டி”. இதே ஆண்டு ஜூன் மாதத்தில் ‘தென் மண்டலப் பழங்குடியினர் சங்கம்’ (தட்சின மேகல ஆதிவாசி சங்கமம்) என்ற ஒன்றை ஏற்படுத்தினாள். ஆதிவாசி இயக்கம் மென்மேலும் வளர்ந்து வலுப்பெற்றது.

ஆதிவாசிகளை ஒடுக்குவதற்காகக் கேரள அரசு 1996இல் கொண்டுவந்த சட்டத்தை ஜானுவின் அமைப்பு எதிர்த்தது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காததால், அதே கேரள அரசு 1999ஆம் ஆண்டு சட்டத்தைக் கொண்டு வந்தது. இதையும் ஜானு அமைப்பு எதிர்த்தது. இச்சட்டத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள முத்தங்கா காடுகளை அரசு கைப்பற்றி அங்கிருந்த ஆதிவாசிகளை வெளியேற்றியது. இதனால் அந்த மக்கள் வறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுப் பட்டினி கிடந்து செத்தார்கள். 38 பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. இதைப் பொறுக்கமாட்டாத ஜானு ஆகஸ்டு 30, 2001ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் வீட்டின் முன்பாகவும் தலைமைச் செயலகத்தின் முன் பாகவும் குடிசைகளைப் போட்டு முகாம் அமைத்துப் போராடினாள். நாற்பத்து எட்டு நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் போராட்டம் வெற்றியடைந்தது. அந்நாள் முதல்வர் ஏ.கே.ஆன்டனியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டாள்.

அதை நிறைவேற்றாததால் வயநாடு முத்தங்கா வனப்பகுதியை ஆதிவாசிகள் 2003ஆம் ஆண்டு ஆக்கிரமித்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. ஜானு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு ஆதிவாசியும் ஒரு காவலரும் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் தொடர்கின்றன. ஒன்பது முறை ஜானு தாக்கப்பட்டாள். இது ஒரு பக்கம்.

மறுபக்கம் ஜானுவின் புகழ் இந்தியாவெங்கும் ஏன் உலகமெங்கும் பரவியது. கோரிக்கைகளை நிறைவேற்றாத கேரள அரசு 1994ஆம் ஆண்டு ஜானுவுக்கு “சிறந்த பழங்குடி இன உழைப்பாளர்” என்ற விருது வழங்க முன்வந்தது. ஜானு, அதை ஏற்க மறுத்துவிட்டார்@ கொள்கை வழி நின்றார். ஆனால் நமதூர் தமிழறிஞர்கள்? கோவைச் செம்மொழி மாநாட்டில் 'மைக்' தருகிறேன் என்று சொன்னவுடன் அடித்துப் பிடித்து ஓடி கலந்து கொண்டார்களே அதை என்னென்பது. இதுவே தமிழக அரசு 'விருது' தருவதாகச் சொல்;லியிருந்தால்?!

அய்.நா.சபையின் சார்பில் ஜெனிவாவில் பழங்குடி மக்களின் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவின் சார்பாக ஒரே ஒருவர்தான் அனுப்பப்பட்டார் - அது ஜானு மட்டுமே!

1999 ஆம் ஆண்டு 'உலக மக்கள் செயல்பாட்டு இயக்கம்' என்ற இயக்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அய்ரோப்பாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அது மூவர் குழு. அந்த மூவரில் ஜானும் ஒருவர்@ அவர் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து 120 இடங்களில் சொற்பொழி வாற்றினார்.

 காடுகளில் புழு பூச்சியைப் போல் முடங்கிக்கிடந்தவள். நாட்டு மனிதர்களைப் பார்த்தால் ஓடி ஒளிந்து, வெளிச்சத்திற்கு விளக்கின்றி இருளில் மூழ்கிக் கிடந்த, பற்றுப் பாத்திரம் கழுவி வயிற்றைக் கழுவிக் கிடந்த ஒரு ஆதிவாசிப் பெண், விமானத்தில் ஏறி உலகை வலம் வந்து உரையாற்றினார் என்ற உண்மை நமக்கெல்லாம் வியப்பினும் வியப்பே. இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக அய்.நா. மன்றத்திற்கு அனுப்பப்பட்டார் ஜானு என்பது நம்பக் கூடியதாகவா இருக்கிறது!

இதற்கெல்லாம் காரணமென்ன? ஜானுவின் ஓய்வறியா உழைப்பும், தளர்வறியா சேவையும், நிலைகுலையா வீரமும், களங்கமிலா இலட்சியப் பற்றும் தான் காரணம் என்பதைக் கூறவும் வேண்டுமா! விருது பெற மறுத்த அவரது வைராக்கியத்தை என்னென்பது!

ஆதிவாசிகளின் - குறிப்பாகக் கேரள ஆதிவாசிகளின் பிரச்சனைகள் என்னென்னவென்று அடுத்துக் காண்போம்.

                            வரும்

Pin It