கவிஞர் குயில்தாசன் வேண்டுகோள்

       கடந்த 20 ஆண்டுகளாக மிதிபட்டு வலியால் துடித்து அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையைக் காப்பாற்ற வேண்டுகிறேன். ஆம்! பேரறிவாளன் என்னும் குழந்தையைத்தான் குறிப்பிடுகிறேன். என் தந்தை காலம் தொட்டு திருவள்ளுவர் வழியிலும் பெரியார் வழியிலும் 70 ஆண்டுகளாக, தங்களைப் போல் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுத்தோம். ஆனால் இராசீவ் காந்தி கொலை வழக்கில் இனப் பகைவர்கள் “தம் இன எதிர்ப்புக் கொள்கைகளில் வாழும் குடும்பம் ஒன்றை பழிவாங்கக் கிடைத்தான் ஒரு பேரறிவாளன். அவர்களைச் சார்ந்துள்ள கட்சி, கேட்பார் மேப்பார் இல்லாதது. ஆகவே இவர்களின் மகனைப் பிடித்துத் தூக்கில் போட்டால் பெரியார் பெயரைச் சொல்ல ஆள் இருக்காது, அஞ்சி அடங்கி விடுவார்கள்” என்று திட்டமிட்டு, மகனை எங்களிடமிருந்து அழைத்துச் சென்று தூக்குத் தண்டனை விதித்துத் தாகம் தணித்துக் கொண்டனர்.

‘தடா’ என்ற சட்டத்தைப் பின்னிக் கொண்டு 60 நாள்கள் என்னென்ன சித்ரவதைகள் தெரியுமோ அத்தனை வதைகளையும் செய்து வெற்றுத் தாள்களில் (வாக்குமூலம்) கையொப்பமிட வைத்து, குற்றப் பத்திரி;க்கை தயாரித்து ஒப்பேற்றி விட்டார்கள்.

அதில், “பேரறிவாளன், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேசன் படித்தவர். (சாதாரண) கடையில் இவர் வாங்கிக் கொடுத்த (9 வாட்) பேட்டரி செல்லால்தான் குண்டு வெடித்தது.” என்று புனைந்தனர்.

“குற்றப் பத்திரிக்கையில் மட்டும் இருந்தால் நீதிமன்றத்தைக் கவராது. ஊடகங்களின் ஊடாகப் பரப்பினால், வெற்றிகரமாக அரங்கேறும்” என்று… இந்தியா டுடே முதலான ஏடுகளுக்கு…

“பேரறிவாளன் குண்டு செய்வதில் நிபுணன். அந்தக் குண்டால்தான் இராசீவ் காந்தி கொல்லப்பட்டார்” என்றும், 19 வயதை 26 என்று திருத்திச் சொல்லியும் பரப்பினர். ‘தி இந்து’ ஏட்டில் என்னைக் குறித்து “Who is Kuyildasan?” என்று தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினார்கள். இதுபோல் வேறு எவரையும் விளம்பரப் படுத்தவில்லை. இதன் காரணத்தைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

தீர்ப்புச் சொல்லித் தண்டித்து, 18 ஆண்டுகள் கடந்த பின்பு, அந்த வழக்கின் புலனாய்வுக் குழுத் தலைவர் (சி.பி.ஐ.) திரு இரகோத்தமன், இராசீவ் கொலை வழக்கின் புலனாய்வு குறித்து தாம் எழுதிய புத்தகத்தில் பேரறிவாளனைப் பற்றி மூன்று பக்கங்களில் மட்டும் குறிப்பிடுகிறார்.

ஒரு பக்கத்தில் எவரெவரைக் குற்றவாளி பட்டியலில் சேர்த்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பக்கத்தில் “பேரறிவாளனின் பெற்றோர் திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள், பேரறிவாளன் குடும்பம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், வேறோரு பக்கத்தில், எவரெவருக்குத் தண்டனை வழங்கப்பட்டன என்ற பெயர் பட்டியலை மட்டும் குறிப்பிடுகிறார். வேறு எந்தவித செய்தியும் பேரறிவாளனைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.

திரு.இரகோத்தமன் ஜூனியர் விகடன், குமுதம் ஆகிய இதழ்களுக்குப் பேட்டி அளிக்கையில், “இராசீவ் காந்தியைக் கொல்ல ‘தனு’ கட்டியிருந்த வெடிகுண்டைச் செய்தது யார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதை ஆய்விற்கும் அனுப்பவில்லை” எனப் பதிவு செய்துள்ளது.

இந்தக் கருத்துக்களால்...... பேரறிவாளனுக்குத் தண்டனை வழங்கக் கற்பிக்கப்பட்ட காரணங்கள் பொய்யாக்கப்பட்டு விட்டதே! இது பொறுப்புள்ளவர்களுக்குத் தெரியாதா? ஏன்? எதற்காகத் தண்டித்தார்கள்?

       உச்சீதிமன்றத் தீர்ப்பில்… இந்த வழக்கிற்குத் ‘தடா’ சட்டம் பொருந்தாது என்று நீதி அரசர்களே சொல்லிவிட்டு, தண்டனையை உறுதி செய்தார்களென்றால் உள்நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும்? அன்பு கூர்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

மற்ற வழக்குகளுக்கு உள்ளது போல் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வாய்ப்புகள் இதில் மறுக்கப்பட்டன. பிணையிலும் விடவில்லை. மூடிய அறையில் இரகசியமாக விசாரிக்கப்பட்டார்.

நீதிபதியிடம் அழைத்துச் செல்வதற்கு முன் சி.பி.ஐ.யினர் “நாங்கள் சொன்னதுபோல் தான் நீ சொல்ல வேண்டும். வேறு ஏதாவது சொன்னால் உன்னைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடும்போது சுட்டோம் என்று சொல்லிவிடுவோம். உன் அக்கா திருமணத்தை நினைத்துப் பார். ஒழுங்கா சொன்னா நீ வீட்டுக்குப் போகலாம்…” என்று மிரட்டியும் ஆசை காட்டியும் உள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் நாங்கள் முறையிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவையெல்லாம் தமிழினத் தலைவர்களுக்கும், உணர்வாளர்களுக்கும் தெரியும். என் சொத்து பங்கு தகராறுக்காகவோ, வேறு சொந்த விவகாரத்திற்காகவோ என் மகன் தண்டிக்கப் பட்டானா? இன விடுதலைப் போரில், இனப் பகைவர்களால் பழி வாங்கும் விதமாக சுமத்தப்பட்ட தண்டனைதானே? ஆனால் அவன் விடுதலைக்காகத் தொடர்ந்து காத்திரமான போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. இந்தப் போக்கில்தான், நம் மீனவர் படுகொலைகளிலும், இலட்சக்கணக்கான தமிழீழ இனப் படுகொலைகளிலும் இனத்தை இழந்து வருகிறோம் என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பார்ப்பனர்கள் தம் இனத்தார்க்கு ஒன்றென்றால் எப்படி ஒன்றுபட்டு நிற்பார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் தரமுடியும். ஆனால் நாம்…? இனப் பற்றாலும், போர்க் குணத்தாலும் உலகில் பல இனங்கள் விடுதலை பெற்று வாழ்கின்றன... தமிழினத்தைத் தவிர!

ஐயா, எவரும் எமக்கு வேண்டாதவர் அல்லர். மொழி, இனம், பகுத்தறிவு, மனிதம் ஆகிய கொள்கைகளுக்காக எவரெல்லாம் உழைக்கின்றார்களோ அவர்களுடனெல்லாம் நட்பு பாராட்டித் துணை நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். கடந்த 20 ஆண்டுகாலமாகத் தாங்கள் ஆற்றுப்படுத்தி உதவி செய்துள்ளீர். சிறிய உதவி செய்தவர்களைக் கூட நன்றி பாராட்டி வருகிறோம்.

ஒவ்வொரு நாளும் எவராவது என் மகன் விடுதலைக்கு உதவமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் பலரின் வாயிற்படிகளில் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக் கின்றோம். அதைக் கண்டு தங்கள் கட்சிப் போட்டி சிந்தனையில் “இவர்கள் அவர்களிடம் செல்கின்றனர். நாம் ஏன் இவர்களுக்கு உதவிட வேண்டும்?” என்னும் குறுஞ் சிந்தனை தங்களின் தூய உள்ளத்தில் தோன்றாது என்று உறுதியாக நம்புகிறோம்.

உங்களைப் போல் நாங்களும் தமிழர்கள். உங்களைப் போல் நாங்களும் தமிழுக்காக, தமிழீழ விடுதலைக்காகத் தொண்டாற்றினோம். போராடினோம். அதற்கான தண்டனையா? எங்கள் ஒரே மகனை 20 ஆண்டுகாலமாகத் தூக்கு என்னும் பலிபீடத்தில் நிற்பதைப் பார்த்து ஒட்டுமொத்த குடும்பமே, நாளையோ, மறுநாளோ என்று ஒவ்வொரு நாளும், ஊமையர் கண்ணீர்போல் உதிர்ந்து விடுகிறோம்.

இறுதியாக எனக்குச் சாதி மத பின்னணியோ, அரசியல் பதவி, பணம் முதலான பின்னணியோ இல்லை. உங்கள் மனித நேயமும், தோழமையுமே என் பின்னணியாக நம்புகிறேன். என் மகனை விடுவிக்க முனைப்புடன் உதவ வேண்டுகிறேன். மாறாக தங்களுக்கு என் இன உணர்வு குற்றமாகத் தோன்றுமாயின் உடனே என் குடும்பத்தைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவாவது அரசுடன் போராட வேண்டுகிறேன். அன்பு கூர்ந்து இரண்டில் ஒன்றை உடனே செய்து உதவ வேண்டுகிறேன்.

              நன்றி !

               குயில்தாசன்

Pin It