ஓங்கி உயர்ந்த மலைகள்! அடர்ந்து இருண்ட காடுகள்! அங்கும் இங்குமாகச் சிற்சிலக் குடிசைகள்! அங்கே, நாகரிகத்தின் நகம்படாத ஆதிவாசிகள், சுத்தம் கிடையாது; சுகாதாரம் தெரியாது; வெந்ததைத் தின்று, விதி வந்தால் செத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மருத்துவம் செய்திடவும், உரிமையை உணர்த்திடவும் இருளைக் கிழித்துவரும் எழுஞாயிறு போல் தோன்றியவர்தான் மருத்துவர் பினாயக் சென். அவரது சேவைக் கரங்கள் இருபது கிராமங்களுக்கு நீண்டன. இவர் கிராமப்புற ஏழைகளுக்கு ஆற்றிய அரும்பெருஞ்சேவையைப் பாராட்டித் தங்க விருது வழங்கிக் கௌரவித்தது, வேலூர் கிறித்தவ மிஷன் மருத்துவமனை-2004இல். 

இவை எதையுமே பொருட்படுத்தாமல் சென்-னைக் கைது செய்தது சட்டீஸ்கர் மாநிலத்தை ஆண்ட-ஆண்டுக் கொண்டிருக்கிற-மதவாத பா.ஜ.க. அரசு. அவரது வீட்டையும் பூட்டி முத்திரை வைத்தது. 

மூன்று மாதங்கள் கழித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எழுநூற்றைம்பது பக்கக் குற்றப் பத்திரிகை. சாதாரணக் குற்றங்கள் அல்ல:- சதி செய்தல், துரோகம் செய்தல், தேச விரோத நடவடிக்கைகள் போன்ற குற்றங்கள். நக்சலைட் ஒருவருக்கு மருத்துவம் செய்ததால், சென் ஒரு நக்சலைட் என்ற குற்றச்சாட்டும் உண்டு. 

விருது பெற்றவர் விலங்கிடப்பட்டது ஏன்? அவரது வரலாறு என்ன? சேவை என்ன? சிறைப்பட்ட வரலாறு என்ன? அவர் ஒரு வன்முறையாளரா? இவரிடம் நாம் கற்க வேண்டியது என்ன? விடைகாண வேண்டாமா நாம்? 

யார் இந்த சென்? 

சென் பிறந்த மாநிலம் மேற்கு வங்கம். மூத்த கேம்பிரிட்ஜ் படிப்பை முடிக்கும் போது, அவர் புனாவில் இருந்தார். 

1966ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறித்தவ மி­ன் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் அங்கேயே பட்ட மேற்படிப்புப் படித்தார். (எம்.டி. குழந்தைகள் நலம்) 

1976-78 காலகட்டத்தில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சமூக மருந்து மற்றும் சமுதாய மையத்தில் பல்கலைக் கழகக் கலையியல் உறுப்பினராகப் பணியாற்றினார். அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியை டாக்டர் இலினா - வைத் திருமணம் செய்து கொண்டார். 

பிறகு, மத்தியப் பிரதேச மாநிலம் ஹோ­ங்காபாத் மாவட்டத்தில் மருத்துவப் பணியில் சேர்ந்தார். அது ஒரு சமுதாய அடிப்படையிலான கிராமப்புற சுகாதார மையம் ஆகும். இங்கிருக்கையில் அவர் சமூக மருந்து மற்றும் சமுதாயச் சுகாதாரம் படிப்பில் தேறினார். 

1981ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலம் (அப்போது மத்தியப் பிரதேசம்) டல்லிராஜ்ஹரா- வுக்குக் குடிபெயர்ந்தார். அங்கேதான் பிலாய் உருக்காலை இயங்கி வந்தது. அங்கே, உருக்காலைக்கு உரிய, ஐந்து நட்சத்திர விடுதி போன்ற, மருத்துவமனை உள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களான ஆதிவாசிகள் அங்கே மருத்துவம் செய்து கொள்ள அனுமதி கிடையாது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிவாசி சுரங்கத் தொழிலாளர்கள் தங்களுக்கென தனி மருத்துவமனை திறக்க முயன்றனர்; தொழிற்சங்கத் தலைவர் சங்கர் குகா நியோகி முன்முயற்சியில் நிதி திரட்டினர். அந்த மருத்துவமனையைத் தொடங்கிடவும் நிர்வகிக்கவும் அங்கு வந்தனர் சென்னும் மனைவி இலினாவும். வேறு இரு மருத்துவர்களின் உதவியோடு சென், சட்டீஸ்கர் முக்தி மோர்ச்சா சாகீத் மருத்துவமனையை நிறுவினார். 1994ஆம் ஆண்டில் 60 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக அது வளர்ந்தது. சென் எடுத்துக் கொண்ட மாதச் சம்பளம் வெறும் 600 ரூபாய்தான். 

சாகீத் மருத்துவமனைக்கு சென் தலைமை தேவைப்படாத நிலை வந்தவுடன் அங்கிருந்து நகர்ந்தார். ‘டில்டா’ எனும் ஊரில் உள்ள மி­ன் மருத்துமனையில் சேர்ந்து, குழந்தைகள் நலத்துறையில் பணியாற்றினார். இந்தச் சமயத்தில் சென்னின் மிக நெருங்கிய நண்பர் சங்கர் குகா நியோகி இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. பிரிவாற்றாமையால், அங்கிருந்து குடிபெயர்ந்து தலை நகர் ரெய்ப்பூர் சென்று விட்டார். 

1991இல் சென்னும் மனைவி இலினாவும் இணைந்து ‘ருபன்டார்’ எனும் அரசு சாரா அமைப்பைத் தொடங்கினார்கள். அப்பகுதியிலுள்ள மலைவாழ் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும் இது. இருபது கிராமங்களை உள்ளடக்கிப் பணி நடைபெற்றது. 

இவ்வமைப்பில் பணியாற்றிய பெண்கள் சிலரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி தந்து கிராமங்களுக்கு அனுப்பினார்கள். ஆதிவாசிகளால் பின்பற்றப்படும் அபாயகரமான மருத்துவ நடைமுறைகளை எடுத்துக் கூறி அவர்களைத் திருத்துவது இதன் நோக்கமாகும். இவர்கள் ‘மிட்டனின்’ என்றழைக்கப்பட்டார்கள். அபாயகரமான நடைமுறைகளில் ஒன்று: பிள்ளை பெற்றத் தாய் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு உணவுண்ணக் கூடாது. அதன் பிறகு பசு அல்லது ஆட்டினுடைய சீம்பாலைக் கொடுப்பார்கள். இந்த ஒரு வாரப் பட்டினி தாளாமல் தாயும் இறப்பாள், குழந்தையும் இறந்து போகும். மிட்டனின் பணியாளர்கள் தக்கமுறையில் பிரச்சாரம் செய்து இம்மாதிரி கொடிய நடைமுறைகளைச் சீர்திருத்தி வந்தனர். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு சட்டீஸ்கர் அரசு மிட்டனின் திட்டத்தை அங்கீகரித்தது; அதன் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக சென் சேர்க்கப்பட்டார். அரசும் மக்களும் கூட்டாகச் சேர்ந்து 2000ஆவது ஆண்டில் மிட்டனின் முறையைச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். இதன் பலனாக 2002ஆம் ஆண்டில் 1000க்கு 85ஆக இருந்த குழந்தை மரணம், 2005ஆம் ஆண்டில் 64ஆகக் குறைந்தது. வயிற்றுப் போக்கும் குறைந்துவிட்டது. 

‘மிட்டனின்’ மகளிர், சுகாதாரப் பணியோடல்லாமல் சமூக நடவடிக்கைகளிலும் இறங்கினார்கள்; அங்கன்வாடிகளின் பரிதாப நிலைபற்றிப் புகார் செய்தார்கள். சென்னும் மனித உரிமைக்காகச் செயல்படத் தொடங்கினார். அவர், இப்போது சட்டீஸ்கர் மாநில மனித உரிமைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்; அனைத்திந்தியத் துணைத் தலைவரும்கூட. காவல் சாவு, போலி துப்பாக்கிச் சண்டை, பட்டினிச் சாவு, தொற்றுநோய், ஊட்டச் சத்தற்ற உணவு போன்ற மனித உரிமை மீறல்களை சென் கண்டித்தார். இவை பற்றிய உண்மை அறியும் முகாம்களை அமைத்திட அவர் உதவி செய்தார். சல்வஜூடம் ஆதிவாசிகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஆதிவாசி களையேத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி தந்து ஆயுதம் கொடுத்து அமைப்பாக்கியது சட்டீஸ்கர் அரசு. அதன் பெயர் ‘சல்வஜூடம்’. தன் கையை எடுத்துக் கண்ணைக் குத்துவது போல் மாவோயிஸ்டுகளுடனும் இவ்வமைப்பு மோதும். தோற்றாலும் வென்றாலும் பாதிக்கப்படுவோர் மலைவாழ் மக்களே! அரசு ஆதரவுடன் மலைவாசி மக்களைக் கொல்வதை, பாலியல் வன்கொடுமை செய்வதை, உலக அளவில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் சென். 

விளைவு, சென் கைது செய்யப்பட்டார்! 

சென் கைது 

14.05.07 அன்று சென் கைது செய்யப்பட்டார் - இரண்டு சட்டங்களின் கீழ்: 1. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (1967), 2. சட்டீஸ்கர் மக்கள் பாதுகாப்புச் சட்டம் (2005). 

15.05.07 உள்ளூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார். நீதிமன்றக் காவலுக்கு ஆணையிடப்பட்டது. 

16.05.07 ‘அனைத்து நாடுகள் பொதுமன்னிப்பு’அமைப்பு சென்-ஐ விடுதலை செய்யச் சொல்லி கோரிக்கை வைத்தது. 

18.05.07 தலைநகர் ரெய்ப்பூரில் உள்ள மாவட்ட அமர்வு நடுவர் மன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார். 

22.05.07 பிணை மறுக்கப்பட்டது. காவலில் வைக்கப்பட்டார். 

25.05.07 மீண்டும் பிணை மறுக்கப்பட்டது. 

23.07.07 பிலாஸ்பூரில் உள்ள சட்டீஸ்கர் உயர்நீதி மன்றத்தில் பிணை கோரி விண்ணப்பிக்கப் பட்டது. பிணை மறுக்கப்பட்டது. 

03.08.07- 750 பக்கக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

21.04.08 சென் சிறையிலிருக்கும் போதே அவருக்கு ‘ஜோனதன் மான்’ விருது அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள சென்-னை அனுமதிக்கக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமர், சட்டீஸ்கர் மாநில முதல்வர் ஆகியோருக்கு உலக சுகாதாரக் கழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்ட போதிலும் அனுமதி மறுக்கப்பட்டது. 

30.04.08 கைது செய்து ஓராண்டு காலங்கடத்திய பின் விசாரணை தொடங்கியது. 

01.05.08 சட்டீஸ்கர் அரசின் ‘சல்வஜூடும்’ மக்கள் படையை ஏற்படுத்தியது நியாயமற்றது என்று இந்தியத் திட்டக் குழுவின் வல்லுநர்குழு கண்டனம் தெரிவித்தது. 

04.05.08 நெஞ்சு வலியால் அவதிப்படும் சென்-னுக்கு உரிய மருத்துவம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சட்டீஸ்கர் அரசுக்கு அறிவிக்கை விடுத்தது. 

25.05.09 சென் உடல்நிலை வரவர மோசமாகிக் கொண்டே இருந்தது. இதனால், நீதியரசர்கள் மார்க்கண்டேய கட்ஜூ-வும் தீபக் வர்மா-வும் உச்ச நீதிமன்ற விடு முறைக் கால அமர்வில் சென்-னுக்குப் பிணை வழங்கி ஆணையிட்டார்கள். 

பிணையில் சென் விடுதலை ஆனாரே தவிர அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன - வழக்கு திரும்பப் பெறப்படவில்லை. 

ஒரு சிறப்பு மருத்துவர் சொந்த இன்ப துன்பங்களையயல்லாம் மறந்து இப்படிச் சிறைப்பட்டு உழல நேர்ந்த காரணம் சட்டீஸ்கரில் நிலவிய மக்கள் வாழ்நிலையும் அவரது மென்மையான இரக்க உள்ளமும்தாம். முதற்கண், மக்களின் பரிதாப வாழ்நிலையைக் பார்ப்போம். 

சட்டீஸ்கர் மக்களின் துயர் 

மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து அதன் கீழ்க் கோடியில் ஒரு பகுதியைப் பிரித்து 2000 நவம்பர் முதல் நாள் உருவாக்கப்பட்டதுதான் சட்டீஸ்கர் மாநிலம். பரப்பளவில் தமிழ்நாட்டை விட சற்றே கூடுதலானது; ஆனால் மக்கள் தொகையோ தமிழ்நாட்டை விட மிகவும் குறைவு-மூன்றில் ஒரு பங்கு தான். அதே சமயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் சதவீதமோ தமிழ்நாட்டைப் போல் இரண்டு மடங்கு. நகரங்கள் 97 தாம்; கிராமங்க¼ளா 19,744. 80% மக்கள் விவசாயிகள். சட்டீஸ்காரி மொழியும் இந்தி மொழியும் பேசப்படுகின்றன. தலைநகர் ரெய்ப்பூர். பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் டாக்டர் இராமன் சிங்; 2008 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு என்று சொல்லப்படும் மாவோயிஸ்டுகள் ஒரு சக்தியாக உள்ளனர். இவர்களில் மலைவாழ் மக்கள் கணிசமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களால் சட்டீஸ்கர் அரசுக்குத் தலைவலி. பாதுகாப்புப் படைக்கும் அரசு மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் போது இருதலைக் கொள்ளி எறும்பாக மத்தியில் மாட்டிச் சீரழிபவர்கள் மலைவாழ் மக்களே; கொல்லப்படுபவர்களும் அவர்களே. சென் இந்த வன் முறையைப் பற்றிக் குறிப்பிடுங்கால்: 

“இப்படிப்பட்ட கொலைகள் மிகவும் தீய பேறாகும். இது நிறுத்தப்படவேண்டும். இரு சாராரும் உட்கார்ந்து பேசி அமைதிக்கு ஒரு வழி காண வேண்டும்” - என்றார் (ஃபிரன்ட்லைன் - நாள் மார்ச்சு, 11-24, 2006) 

ஆயுதம் ஏந்திய அரசுப் படையும் ‘சல்வஜூடும்’ படையும் அப்பாவி மலைவாழ் மக்களைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொண்டுவந்து தற்காலிக (வதை) முகாம்களில் அடைத்து வைத்து விடுகிறார்கள் - முகாம்கள் வைக்கப்படுவது பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும். இதனால், மலைவாழ்மக்கள் தங்கள் குடிசைகளை விட்டு - நிலத்தை விட்டு - தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறித் துன்புறும் நிலை ஏற்படுகிறது; வேறு வழியின்றி முகாம்களுக்கு அருகில் மிகக் குறைந்த கூலிக்கு தொண்டூழியம் செய்ய நேர்கிறது. போதிய ஆவணமில்லாத அவர்களது நிலங்களையும் இழந்து விடுகின்றனர். முகாம் வைத்ததால் பள்ளிகளும் மருத்துவ மனைகளும் நடைபெறுவதில்லை. 

முகாம்களின் நெரிசலாலும் குடிநீர்ப் பற்றாக்குறையினாலும் ஊட்டச் சத்துக் குறைவான உணவினாலும், கழிப்பிட வசதியின்மையினாலும் வயிற்றுப் போக்கு, தட்டம்மை போன்ற நோய்களுக்கு அவர்கள் ஆட்படுகின்றார்கள். இவற்றையயல்லாம் பார்த்துப் பார்த்து சென்னின் இரக்க உள்ளம் வெதும்பியது. 

மலைவாழ் பெண்களின் நிலைமை சொல்லொணாதது. நிலைமையை அறியும் பொருட்டு, மகளிர் வன்முறைக்கெதிரான ஓர் அமைப்பு உண்மையறியும் குழுவை நியமித்து அனுப்பியது. அக்குழு கண்ட உண்மைகள் வருமாறு:- 

21 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் மூவரின் மார்பகங்களும் பிறப் புறுப்புகளும் நாசப்படுத்தப்பட்டிருந்தன. கும்ப லாகச் சேர்ந்து கற்பழிப்பு செய்யப்பட்டவர்கள் 37 பேர். இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் ‘சல்வஜூடும்’ அமைப்பைச் சேர்ந்த உதவாக் கரைகள். 

மலைவாழ் இளைஞர்களிடம் மாதச் சம்பளம் தரப்படும் என்று பொய் சொல்லி, நிரந்தரக் காவல ராக்கி சி.ஆர்.பி.எஃப் மற்றும் நாகா படைப்பிரிவுக்குப் பதவி உயர்வு அளிக்கப்படும் என்று ஆசைகாட்டி பா.ஜ.க அரசால் சேர்க்கப்பட்ட ஓர் அமைப்புதான் ‘சல்வஜூடும்’ படை. மலைவாழ் மக்கள் கிளர்ந்தெழும் போதெல்லாம் அவர்களை நசுக்கி மிதிப்பதற்கு ‘சல்வ ஜூடும்’ பயன்படுத்தப்பட்டது. அதாவது அவர்கள் கையை எடுத்து அவர்கள் கண்களையே குத்திக் குருடாக்கும் தந்திர நடவடிக்கை இது. மாவோயிஸ்டுகளுக்கும் காவல் படைக்கும் மோதல் ஏற்படும் போது ‘சல்வ ஜூடும்’ படையைக் கேடயமாக நிறுத்தி பலிகடா ஆக்குவார்கள். 

காஷ்மீரில் போலித் துப்பாக்கி மோதல் நடந்தால் பாதிக்கப்பட்டவரின் தாய் அல்லது மனைவி நீதி கேட்டு உரிமைக் குரல் எழுப்ப முடியும். அது உலகத்தார் செவியைத் தொடும். ஆனால் சட்டீஸ்கரில் தாயும் மனைவியும் சக்தியற்றவர்கள்; படிப்பு வாசனை அற்றவர்கள்; கிட்டத்தட்ட புழு, பூச்சி போன்றவர்கள். அப்படி ஒருவேளை. நீதி கேட்டுக் குரல் கொடுத்தாலும், அது அந்த அடர்ந்த காடுகளைத் தாண்டி ஒலித்திட அனுமதிக்கப்படுமா என்ன? காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் வழக்குப் பதிவது கிடையாது. எருதுப் புண் காக்கை அறியுமா? 

இவர்களுக்கு நீதி கேட்டுக் குரல் கொடுக்க ‘நானிருக்கிறேன்’ என்று முன்வந்தார் சென். மனித உரிமைக் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் என்ற முறையில் அரசுக்குத் தன் நியாய உணர்வை வெளிப்படுத்தினார். அப்பாவி மலைவாழ் மக்கள் வேட்டையாடப்படுவதை உண்மை அறியும் குழுக்கள் மூலம் உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். உடனே, சட்டீஸ்கர் பா.ஜ.க. அரசு, சென் ஒரு வன்முறையாளர் என்று முத்திரை குத்தியது.  

சென் வன்முறையாளரா? 

அல்லர்! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் போன்று அருள் உள்ளம் கொண்டவர் சென். இளமையிலிருந்தே இரக்கவுணர் வுடன் வளர்ந்தவர். அவர் சிறுவனாக இருந்த போது, ஒருவன் பறவை ஒன்றைச் சுட்டுத் தள்ளினான். அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு ஒரு கவிதை (ஆங்கிலத்தில்) எழுதினார். தமிழில் இதோ:- 

கண்டேன் பறவையைக் காலைக் கருக்கல் தன்னில்  

இறக்கை யடித்துமே ஏறிப் பறந்தது விண்ணில் 

மாந்த னொருவன் சுட்டுத் தள்ளினான் மண்ணில் 

அந்தோ அழுதிட லானேன் நீரென் கண்ணில் 

வளர வளர சென்னின் இரக்கவுணர்வும் வளர்ந்தது - அருளும் கருணையும் உடையவராக உயர்ந்தார். டல்லி ராஜ்ஹாராவில் முக்தி மோர்ச்சா ஷாஹீத் மருத்துவமனையை உருவாக்கிட அல்லும் பகலும் உழைத்தார் என்றாலும் தனக்கு வெறும் 600 ரூபாய் மாதச் சம்பளம் மட்டுமே எடுத்துக் கொண்டார். 

‘சல்வ ஜூடும்’ மலைவாழ் மக்கள் படையை ஏற்படுத்தி அந்த மக்களை இரு கூறாகப் பிளந்து அவர்களுக்குள்ளேயே முட்டிமோதி வெட்டிக் கொன்றிட வைத்து விட்டார்களே என்று மிகவும் கவலைப்பட்டார் சென். 

“அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அதிகரிக்க நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும். மக்களை இரு வகையினராக உருவாக்க முடியாது. வளர்ச்சியிலிருந்து மக்களை அந்நியப்படுத்துவது என்பது மால்த் தூஸ் (மால்தூஸ், தாமஸ் ரோபர்ட் - (1766-1834): பிரிட்டனைச் சேர்ந்தவர். திருச்சபை சமய குரு, பொருளியலறிஞர். மக்கள் தொகைக் கோட்பாடு பற்றிக் கட்டுரைகள் (1798-1803) எழுதினார். உணவு உற்பத்தி கூட்டுவிகித வளர்ச்சியில் இருக்கும்; மக்கள் தொகை உற்பத்தியோ பெருக்கு விகித வளர்ச்சியில் இருக்கும் என்பது அவர் கோட்பாடு. எனவே, குடும்பக் கட்டுப்பாடு மூலம் பிறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

கூட்டுவிகித வளர்ச்சி :- 2,4,6,8,10....... இப்படி 

பெருக்கு விகித வளர்ச்சி:- 2,4,8,16,32,64........ இப்படி. சொன்ன முறையில் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது - நாட்டில். இதைப் பற்றி ஒவ்வொருவரும் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் வெகுவிரைவில் காலங் கடந்து விடும்” என்று ஒரு பத்திரிகையாளரிடம் கருத்துச் சொன்னார் சென். அனைத்து மக்களும் பசியின்றி பிணியின்றி வாழ வேண்டும் என்பதில் அவருக்கு அவ்வளவு அக்கறை. 

சென் அமைதியை ஆதரிப்பவர்; வன்முறையை வெறுப்பவர். அவர் ஒருபோதும் மாவோயிஸ்டுகளின் வன்முறையை அங்கீகரித்ததில்லை. “தெஹல்கா பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தபோது, நான் ஒருபோதும் மாவோயிஸ்டுகளின் வன்முறையை மன்னித்ததில்லை. மாவோயிஸ்டு இயக்கம் செல்லத்தக்கதல்ல, மேலே கொண்டு செலுத்த முடியாத ஒன்று என்று கூறினார். 

இவர் வன்முறையாளரா என்பதைப் பற்றி, வாழ்நாள் முழுவதும் அவரோடு கூட இருந்து சேவையாற்றிய அவர் மனைவி சொல்வது: 

“என் கணவர் மிகவும் எளிமையானவர். அவர் முழுக்க முழுக்க ஒரு அஹிம்சாவாதி. ஒரு பூனையையோ ஒரு நாயையோ கூட துன்புறுத்த மாட்டார்... ஒரு வன்முறை இயக்கத்தோடு அவர் பெயரைத் தொடர்புபடுத்தியிருப்பது நடக்கமுடியாதது ஆகும்.” 

சென் சட்டத்தை மதித்து நடப்பவர். இவரைக் கைது செய்யவிருந்த செய்தி முன்கூட்டியே பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இதை அறிந்த அவரது தம்பி திபங்கர் சென் தான் இருக்கும் பெல்ஜியம் நாட்டிற்கு வந்து விடுமாறு அண்ணனை அழைத்தார். பிநாயக் சென் மறுத்துவிட்டார்! உள்நாட்டிலேயே கூட அவர் ஓடி ஒளியவில்லை! தேடி வந்த காவர்களிடம் அமைதியாகக் கைதானார். 

அவரால் அநியாயத்தைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. பிணையில் வெளிவந்த போது அவரது உடல் தளர்ந்திருந்ததே தவிர உள்ளம் தளரவில்லை; நியாய உணர்வில் மிகவும் உறுதியான வராகவே இருந்தார். 

“சிறையில் மனித உரிமை என்பதே கிடையாது... இதற்கு முன் இப்படி மோசமான காட்சிகளை நான் கண்டதில்லை... உப்புப் பெறாத தவறுகளுக்காக பத்துப் பதினைந்துபேர்கள் சேர்ந்து கொண்டு கைதிகளைக் கம்பால் அடிப்பதையும் கால்களால் உதைப்பதையும் பார்த்தேன்” எனக் குமுறினார். 

மொத்தத்தில் சென் மிகவும் இரக்கக் குணமுடையவர், மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வை வெறுப்பவர், பிணி நீக்கும் அருளாளர், மனித உரிமைக்குக் குரல் கொடுப்பவர், சட்டத்தை மதிப்பவர். சட்டீஸ்கர் பா.ஜ.க. அரசுக்கு வேண்டுமானால் சென் ஒரு குற்றவாளியாகப்படலாம். ஆனால், உலகம் அவரைப் போற்றியது; ஆதரவுக் கரங்கள் நீட்டியது. எப்படி? 

அகிலமெங்கிருந்து ஆதரவுக் கரங்கள் 

சென் கைதான இரண்டாவது நாளே உலகப் பொது மன்னிப்பு அமைப்பு, “தெளிவான குற்றங்கள் சாற்றப்படவில்லை. சென்-ஐ உடனே விடுதலை செய்யுங்கள்,” என்று சட்டீஸ்கர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. 

ஒரு மாதம் கழித்து, 16.6.2007இல், மொழியறிஞர் நோம் சோம்ஸ்கி முதலான பல பெரியோர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். அதில், “... மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனித உரிமைக் கூட்டமைப்பையும் சனநாயகக் குரல்களையும் பயமுறுத்தும் முயற்சிதான் மருத்துவர் சென் கைது செய்யப்பட்ட செயலாகும்...” என்று குறிப்பிட்டிருந்தார்கள். 

மனித உரிமைக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சட்டீஸ்கர் மாநில இராமன் சிங்கைச் சந்தித்தது. எவ்விதப் பயனுமில்லை. 

சென் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ரெய்ப்பூர், டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய இந்திய நகரங்களிலும் லண்டன், பாஸ்டன், நியூயார்க் போன்ற வெளிநாட்டு நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. 

உலகெங்குமுள்ள நோபெல் பரிசு பெற்றோர் 22 பேர் சேர்ந்து கையயாப்பமிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், சட்டீஸ்கர் அரசு அதிகாரிகள் ஆகியோருக்குக் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தில், 

“அமைதியான முறையில் தனது மனித உரிமைகளை நடைமுறைப்படுத்திய ஒரே காரணத்திற்காக மருத்துவர் சென் சிறைவைக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்த எங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்க விரும்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நோம் சோம்ஸ்கி, நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ‘மாக்செசாய்’ விருது பெற்ற அருணா ராய், ‘புக்கர்’ விருது பெற்ற அருந்ததிராய், மற்றும் பலர் சென் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தனர். 

அசைந்து கொடுக்கவில்லை சட்டீஸ்கர் பா.ஜ.க. அரசு! உச்ச நீதிமன்றம் சற்றே அசைந்து கொடுத்தது! இரண்டே நிமிடத்தில் பிணை வழங்கியது, சென்னுக்கு. இரண்டு நிமிடத்தில் பிணை வழங்கக் கூடிய எளிய வழக்கில் மாட்டி இரண்டாண்டு காலம் சிறையில் சீரழிந்தார் பிநாயக் சென். ஆனால், உலகமோ அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி உச்சி மோந்தது. 

சென் பெற்ற விருதுகள் 

பால் ஹாரிசன் தங்க விருது: வேலூர் கிறித்துவ மி­ன் மருத்துவக்கல்லூரியால், முன்னாள் மாணவர்களுக்கு, அவர்களது பணியை - கிராமப்புற ஏழைகளுக்கு ஆற்றிய வாழ்நாள் பணியைப் பாராட்டி அளிக்கப்படுவது. 2004-ஆம் ஆண்டு இத் தங்க விருது சென்னுக்கு அளிக்கப்பட்டது. 

ஆர்.ஆர். கெய்த்தான் தங்க விருது: இந்தியச் சமூக அறிவியல் கல்விக் கழகத்தின் சார்பில் 31-12-2007 அன்று சென்னுக்கு அளிக்கப்பட்டது. இந்தியாவின் ஒப்பற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர் பினாயக் சென் என்று பாராட்டிதழ் வழங்கப்பட்டது. 

ஜோனதன் மான் விருது: உலகளாவிய சுகாதாரச் சேவையையும் மனித உரிமைச் சேவையையும் பாராட்டி வழங்கப்படும் விருது. அமெரிக்கா அளிக்கும் மிக உயரிய விருது இது. அமெரிக்க மருத்துவக் கல்லூரிகளாலும் மருத்துவர்களாலும் தேர்வு செய்யப்படுவது. தொலைதூரத்தில் - உள்ள டங்கியப்பகுதியில் உள்ள ஏழைமக்களுக்கு சென் ஆற்றிய நீண்ட காலப் பொதுப் பணியை அங்கீ கரித்து வழங்கப்பட்ட விருதாகும் இது. 2008ஆம் ஆண்டுக்கான இவ்விருது, உலக சுகாதாரம் குறித்த அனைத்து நாடுகள் மாநாட்டில் (35-ஆவது ஆண்டு மாநாடு, 29.05.2008) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அமைப்பு இந்திய அரசையும் சட்டீஸ்கர் அரசையும் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டது, சென்-ஐ அனுப்பி வைக்குமாறு. மறுத்து விட்டனர் பாவிகள். இவ்விருது பெறும் முதல் இந்தியர் பிநாயக் சென் தான்! 

சென்-னின் வாழ்க் கையும் சேவையும் நமக் கெல்லாம் நல்ல பாடமாகும். நாமும் ஏன் சேவை செய்யக் கூடாது? மருத்துவராக இருந்தால் தான் சேவை செய்ய முடியும் என்று நினைத்து விட வேண்டாம்.  

சேவைக்குக் கல்வித் தகுதி இன்றியமையாததா என்றால் இல்லை. கேரளத்தில், மலைவாழ் மக்கள் தங்களுக்கு நிலம் ஒதுக்கித் தருமாறு 2003ஆம் ஆண்டு மாபெரும் கலகம் செய்தனர். வயநாடு முத்துங்கா காடுகளை வளைத்துக் கையகப்படுத்தி விட்டார்கள். அரசு (காங்கிரசு) திகைத்தது; மாநிலமே மலைத்துப் போனது. இந்தப் போருக்குத் தலைமை தாங்கியவர் எழுத்தறிவற்ற ஒரு ஆதிவாசிப் பெண்! பெயர் ஜானு. 

பதிமூன்று வயதுவரை பத்துப் பாத்திரம் தேய்த்து வயிற்றைக் கழுவியவர். எழுத்தறிவு கிடையாது. உலகம் தெரியாதவர். உயர் சாதியில் பிறக்கவில்லை. நல்லதொரு கலாசாரப் பாரம்பரியம் கிடையாது. சொத்து வசதியும் கிடையாது. இப்படி எதுவுமே இல்லாத ஓர் ஆதிவாசிப் பெண் எப்படி இவ்வளவு பெரிய நில உரிமைப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார்? 

கேரள மாநிலம் முழுவதும் காடுகளுக்கிடையே சிதறிக் கிடக்கும் மலைக் கிராமங்கள் அனைத்தையும் ஜானு சுற்றிவந்தார். அங்கே விலங்குக¼ளாடு விலங்குகளாக உழலும் மலைவாழ் மக்களின் கண்களைத் திறந்தார்; தட்டி எழுப்பினார்; உரிமைத் தீ மூட்டினார். அவர்களை அணிதிரட்டிப் போர்தொடுத்தார். அதுதான் மேற்சொன்ன போர். 

இதிலிருந்து நாம் அறிவதென்ன? நலிந்தோர்க்கு சேவை செய்வதும், அநீதியை எதிர்த்து மக்களை அணிதிரட்டுவதும், ஆதிக்கத்தைச் சாய்க்கப் போர் தொடுப்பதுமான காரியங்களை ... படித்து சென்-னும் செய்யலாம், படிக்காத ஜானுவும் செய்யலாம் என்பது தானே. உங்களாலும் செய்யமுடியும். அதற்கு என்ன வேண்டும்? இலட்சிய எண்ணம் வேண்டும். எண்ணியதில் திண்ணம் வேண்டும். இவ்விரண்டும் இல்லாமல் நாம் நமக்கென்ன என்றி ருந்ததன் விளைவுதான்-சற்றே கண்ண யர்ந்ததன் விளைவு தான் - நம் மண்ணை இழந்தோம். கறக்காத பசுவும் சுமக்காத எருதும் இந்நாட்டைப் பட்டா போட்டு மேய்ந்து வருகின்றன. நாம் ஒவ்வொரு வரும் இமைகளைத் கொஞ்சம் திறந்தால் போதும்! விழிகளைச் சற்றே திருப்பினால் போதும்! நம் பார்வையில் மாநிலம் அறுந்து மடியில் விழும்! 

“ஒவ்வொருவரும் மிக உயர்ந்த மாந்தனாக முடியும்... ஏனென்றால் யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம். நீங்கள் சேவை செய்யக் கல்லூரிப் பட்டம் பெற்றிருக்க வேண்டியதில்லை. சேவை செய்வதற்கு எழுவாயும் வினைச் சொல்லும் ஒத்துப் போக வேண்டியதில்லை...” - மார்ட்டின் லூதர் கிங். 

Pin It