(இந்து 2009 சூலை 21 இதழில் முல்லைப் பெரியாறு அணை குறித்து மாண்புமிகு அறவாணர் திரு வி.ஆர். கிருஷ்ணய்யர் எழுதிய கட்டுரைக்கு ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் (பொதுப் பணித் துறை) திரு ஆர்.வி.எஸ். விஜயகுமார்  எழுதிய மறுப்பை இங்கு வெளியிடுகிறோம்.)

உச்ச நீதிமன்றத்தில் திருப்புமுனைத் தீர்ப்புகள் வழங்கியமைக்காக நினைக்கப்படும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய முதுபெரும் சட்ட அறிஞரே கூட முல்லைப் பெரியாறு அணை எந்த நேரமும் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதாக நம்ப வைக்கப்பட்டுள்ளார் என்பதில் வியப்பில்லை.

முல்லைப் பெரியாறு தொடர்பாக இயற்கைப் பேரழிவு நிகழக் கூடிய வாய்ப்பை எதிர்த்து நாடே குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் எழுதுவதிலும் வியப்பில்லை. ஏனென்றால் பெரியாற்றுப் பள்ளத்தாக்கில் அணைக்கு கீழே வாழும் அப்பாவி மக்களிடையே பீதி கிளப்புவதற்காகக் கேரள அரசு விரிவான அளவில் காட்டுத்தனமாகச் செய்து வரும் விளம்பரம் அத்தகையது. இயற்கைப் பேரழிவு நிகழக் கூடிய ஆபத்து நெருங்கி விட்டது என்ற முடிவுக்கு வந்து, இந்த ஆபத்துக்கு எதிராக நாடே குரல் கொடுக்க வேண்டும் என்று எச்சரிப்பதன் மூலம் அறிவார்ந்த நீதிபதி அவர்களும் இந்தப் பரப்புரையில் சேர்ந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

“இயற்கை என்ன செய்யும் என்று சொல்வதற்கில்லை, வல்லுநர்களின் எதிர்பார்ப்பு களும் கணக்குகளும் பொய்யாகிப் போகலாம்” என்று அறிவார்ந்த நீதிபதி அச்சப்படுகிறார்.

ஒவ்வொருவரும் சந்தேகப் பிராணி ஆகி விட்டால் இதற்கு முடிவே இல்லை. நாம் வீட்டில் அமைதியாக வாழ்வது கூட முடியாத காரியம் ஆகி விடும். ஏனென்றால் வடிவமைப்பு வல்லுநரான பொறியாளர் தவறு செய்து விடக் கூடும், வீடு எந்த நேரமும் இடிந்து விழுந்து விடக்கூடும். அறிவார்ந்த நீதிபதி அவர்கள் சுற்றுச்சூழல்  மற்றும் வளர்ச்சி பற்றிய ஐ.நா. மாநாடு (1992) வெளியிட்ட ரியோடிஜெனிரோ சாற்றுரையை எடுத்துகாட்டுகிறார்.

இந்தச் சாற்றுரை, இன்றும்கூட பொருத்தப்பாடு கொண்டதே. நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சியை அடையும் பொருட்டு வளர்ச்சித் திட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைந்திட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

ஆனால் இது கேரள அரசினர்க்குத்தான் பெரிதும் பொருந்தக் கூடியது. ஏனென்றால் அவர்கள்தாம் தங்கள் மாநிலத்தில் மட்டுமல்லாமல், நடுவணரசிலும் கூட தலைமை அமைச்சர் வரைக்கும் பெரும் கூக்குரலிடத் தொடங்கி உள்ளார்கள். அவர்கள்தாம் ஆற்றோட்டத்தின் கீழ்ப் பகுதியில் புதிய அணை கட்டப் போவதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். புதிய அணை கட்டுவது சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடாகவே அமையும். சுற்றுச் சூழல் தொடர்பான சிக்கல் ஏற்படுமேயானால் புதிய அணை கட்டுவது பற்றி எண்ணிப் பார்க்கவும் முடியாது என்று முந்தைய அரசினில் அமைச்சராய் இருந்த ஒருவர் கூறியதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே இருந்து வரும் இப்போதைய முல்லைப் பெரியாறு அணை அங்கே சுற்றுச் சூழலை மேம்படுத்தியுள்ளது. மாண்புமிகு அறவாணர் ஒய்.கே. சபர்வால் தலைமையிலான உச்ச நீதி மன்ற ஆயம் 27.2.2006இல் வழங்கிய தீர்ப்பில் இதனைக் குறிப்பிட்டது.

முன்பே குறிப்பிட்டது போல், 1979இல் தான்  அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. எனவே நீர் மட்டத்தை உயர்த்துவது தாவர இனத்தையோ, விலங்கினத்தையோ பாதிக்காது. உண்மையில் சுற்றுச் சூழல் மேம்படவே செய்யும் என்பதை இங்கே முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் காட்டுகின்றன.

இயற்கை பேரழிவு நிகழ்ந்தாலும் நிகழலாம் என்று முடிவுக்கு வரும் முன்னர் அறிவார்ந்த நீதிபதி அவர்கள் புலனாய்வு செய்யவும், சான்று திரட்டவும், தம் முடிவின் விளைவுகளை ஆராயவும் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நானும் இதையே எதிர்பார்க்கிறேன்.

1979ஆம் ஆண்டிலே அணையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக புதிய அணையைக் கட்டுவது பற்றிய சிக்கல் எழுந்த போது அறிவார்ந்த நீதிபதி அவர்கள் எம்மாநிலத்தைச் சேர்ந்தவரோ அம்மாநிலத்தைச் சேர்ந்த நடுவண் நீர்வள ஆணையத் தலைவர்தாம் அணையை நிகழ் தராதரங்களுக்கு வலுப்படுத்தும் வழியைத் தேர்ந்தெடுத்து, புதிய அணை கட்ட முற்படும் எண்ணத்தையே கைவிட்டார் என்பது நீதிபதி அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

தொடக்கத்திலிருந்தே அணையை சீரமைப்பதற்கான தேவைப்பாடுகளையும் திட்ட அறிக்கையையும் வடிவமைத்து அணியப்படுத்து கையில் நீதிபதி அவர்களின் மாநிலத்தைச்சேர்ந்தவரான நடுவண் நீர்வள ஆணையத்தின் உயர்நிலை வடிவமைப்பியல் பொறியாளரே விவரமான திட்ட அறிக்கை வழங்கினார் என்பதும், அணையை வலுப்படுத்தும் அந்தச் செயல்முறையில் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையையே கண்டிப்பாக வரிக்கு வரி கடைப் பிடித்தது என்பதும் அறிவார்ந்த நீதிபதி அவர்கள் அறிந்திராத செய்திகளாக இருக்கலாம்.

அணையை வலுப்படுத்துவதற்கான வடிவமைப்பை இறுதியாக்கி அதற்கு இசைவளிப்பதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் முழுமையாக ஈடுபட்டிருந்தனர் என்பதையும் குறித்த காலத்திற்கு ஒரு முறை பணிநிறைவேற்றத்தை மேலாய்வு செய்து கொண்டிருந்தனர். மேலும் அணையை வலுப்படுத்தும் வழிமுறைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக நடுவண் நீர்வள ஆய்வகம் கூட்டிய கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்று வந்தனர் என்பதும் அறிவார்ந்த நீதிபதி அவர்கள் அறிந்திராத செய்திகளாக இருக்கலாம்.

அணையை வலுப்படுத்தும் வழிமுறைகளில் இப்போதுள்ள அணையின் மேல்பகுதியில் திண்ணியமான புதிய பெரும் ‘காங்கிரீட்’ கவிப்பு அமைத்தல், பெருமளவிலான கருங்கல் அடித்தளத்தோடு சேர்த்துக் கட்டிய சிறப்பு நங்கூரக் கம்பிகளைக் கொண்டு அணை முழுவதையும் இணைத்துப் பிணைத்தல், கூடுதலாய் 10 மீட்டர் காங்கிரீட் முட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கும் என்பது அறிவார்ந்த நீதிபதி அவர்கள் அறிந்திராத செய்திகளாய் இருக்கலாம்.

கேரளப் பொறியாளர்களுக்கு முழுக்கத் தெரிந்து இந்திய அரசின் நடுவண் நீர்வள ஆணையம் இறுதியாக்கிய வெள்ளப் பெருக்கிற்கான வடிவமைப்பை அடியயாற்றி வெள்ள நீரை வடிப்பதற்கான மூன்று பெரும் மதகுகளைக் கட்டுவதும் இவ்வழிமுறைகளில் அடங்கும். பிந்தைய ஆண்டுகளில் இடையூறு செய்து அணையை வலுப்படுத்தும் வேலையைத் தடுத்து நிறுத்தியது கேரளம்தான், வனச் சட்டத்தின் விதிகளை வலியுறுத்துவதன் பெயரால் சிற்றணையை வலுப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கும், வன விலங்கு சரணாலயத்தின் தேவைகளின் பெயரால் இடது கரையில் கரை கட்டுவதற்கும் இடையூறு செய்ததும் கேரளம்தான் என்பதை அவர் அறியாதிருக்கலாம். இதனால்தான் மாண்புமிகு உச்சநீதிமன்றம் அதன் ஆணையில் குறிப்பாக இப்படிக் கட்டளையிட்டது:

“...நடுவண் நீர்வள ஆணையம் தெரிவித்துள்ள ஆலோசனையின்படி அணையை வலுப்படுத்தும் வழிமுறைகளை நிறைவேற்றுவதற்குக் கேரள அரசு இடையூறு செய்யக் கூடாது என்று கட்டளை இடுகிறோம். கேரள அரசு எவ்வித இடையூறும் செய்வதற்குக் காரணம் ஏதும் இருப்பதாக நாம் கருதவில்லை.”

மேற்கண்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மறைமுகமாய்ச் சவால் விடும் வகையில் கேரளச் சட்டப் பேரவை உடனடியாக 15.3.2006இல் ஒரு திருத்தச் சட்ட முன் வடிவை நிறைவேற்றியது என்பது அறிவார்ந்த நீதிபதி அறிந்திராத செய்தியாக இருக்கலாம்.

இப்போது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கி விட்ட தீர்ப்பில் நீதிக்காக மன்றாடி உச்ச நீதிமன்றத்தை அணுகும் விசித்திர நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது.அறிவார்ந்த நீதிபதிஅவர்கள் வறியவர் பாலும் நலிந்தவர்கள் பாலும் பரிவு கொண்டவர் என்பதை அனைவரும் அறிவோம்.மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வழங்கும் போதெல்லாம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று தனி அக்கறை செலுத்தியவர் அவர்.

ஆனால் உரிய சட்ட நடைமுறை களுக்குப் பின் பெறப்பட்ட பெரியாற்று நீர் ஆணை மறுக்கப்படுமானால் எத்தனை ஆயிரம் வறிய உழவர் குடும்பங்கள் இன்னலுற நேரிடும் என்பது மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

இதனால் 5 மாவட்டங்களில் 10 இலட்சம் மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு ஆபத்து வரும் என்பது மட்டுமல்ல, 6 மாவட்டங்களில் 60 இலட்சம் மக்களுக்கான உணவுப் பாதுகாப்பும், குடிநீரும், அண்டைப் புறத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் கூட ஆபத்துக்குள்ளாகும்.

ஆற்றோட்டத்தின் கீழ்ப் பகுதியில் நீர்மின் திட்டமாக அமைந்துள்ள இடுக்கி அணையை வடிவமைத்தவர்கள் ஆசையை மட்டுமே அளவாகக் கொண்டு ஒரு பெரிய நீர்த் தேக்கத்தை உருவாக்கி இருக்கலாம் என்ற செய்தியும் அறிவார்ந்த நீதிபதி அவர்களுக்குச் சொல்லப்படாது போயிருக்கலாம். இந்த இடுக்கி அணை நிறையவில்லைதான். புதுமக் காலத் தராதரங்களுக்கு ஏற்பச் சிறப்பாகச் சீரமைக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்வதுதான் இந்த நீர் இருப்பைச் கொண்டு போய் இடுக்கி நீர்மின் திட்டத்தின் நீர் இருப்பைப் பெருக்குவதற்கு ஒரே வழி என்று யாராவது கருதினால், அது தீய நோக்கம் என்பதில் ஐயமில்லை.

ஒரு மோசமான அணைக்கு நல்ல அணை என்று சான்று கொடுத்து கீழே கரையில் வாழும் மக்களின் பாதுகாப்பைப் புறந்தள்ள வேண்டும் என்று யாரும் வாதிடவில்லை, தமிழ்நாடு அரசும் அப்படிச் சொல்லவில்லை. முல்லைப் பெரியாறு அணை வெடித்துச் சிதறுதல் என்பது முழுக்க முழுக்க ஊகம் தொடர்பானது, அப்படி எதுவும் ஒருநாளும் நிகழாது. வலுப்படுத்தப்பட்ட அணையானது 1895 முதல் 1979 வரை 85 ஆண்டுகள் 152 அடி நீர் தேக்கி நின்ற பென்னி குக்கின் பழைய அணையை விடவும் பன்மடங்கு வலுவானது.

அரசியல்வாதிகளின் கொடிய ஆசைக்கு இணங்க அப்படி ஒரு விபத்து நிகழ்ந்தாலும் கூட வெள்ள நீர் முழுவதும் ஆற்றுப் போக்கில் ஓடி விடும். முல்லைப் பெரியாறு அணையைப் போல் ஏழு மடங்கு பெரியதான இடுக்கி அணை இந்தத் தண்ணீருக்கு எளிதில் இடம் அளிக்கும், அல்லது விடுவித்துவிடும்; வழிநெடுக உயரத்தில் வாழும் மக்களின் உயிருக்கோ உடைமைக்கோ ஆபத்து ஒன்றும் இல்லை.

அரசியல் கண்ணோட்டத்தில் மாநிலங் களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பூசல் பொருளற்றது என்று அறிவார்ந்த நீதிபதி அவர்கள் கருதுவது சரியானது.

ஆகவே இப்போது எழுந்துள்ள பூசல்கள் அரசியல் நோக்கம் கருதியவையா அல்லது மெய்யானவையா என்பதை, மேலே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள உண்மைகளிலிருந்து அவர்தாம் ஆய்ந்தறிய வேண்டும்.

இதில் தொடர்புடைய சிக்கல்களை முற்றச் செய்து ஊடகங்கள் வழியாகவும் வேறு வழிகளிலும் பொதுமக்களின் அச்சத்தைக் கிளறி விடுவதை விடுத்து, ஏற்கெனவே இப்பூசலைக் கையிலெடுத்திருக்கும் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்காகக் காத்திருக்கும்படி மாண்புமிகு நீதிபதி அவர்கள் இரு தரப்பினருக்கும் அறிவுரை கூறலாம்.

இந்த மறுப்பை வெளியிடுவதற்காக 22.7.09 இந்து நாளேட்டிற்கு அனுப்பி வைத்தேன்; ஆனால் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதற்கான காரணங்களை அனைவரும் நன்கறிவோம். ஆகவே இதனை நேராக மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கே அனுப்புவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

 

Pin It