சொற்கள் மொழியின் முதன்மையான உறுப்பு. தமிழ் மொழியின் தோற்றம் அது இயங்கும் முறைகளைப் பற்றித் தொல்காப்பியம் முதல் இன்றைய மொழியியல் நூல்கள் வரை விளக்கங்கள் கூறப்படுகின்றன.

ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறிப்பதோடு மட்டுமல்லாது அச்சொல்லை மேலும் பகுத்துப் பார்க்கும்போது, பல செய்திகளைத் தெரிவிக்கின்றன என்று ஒரு கல்லை உவமை காட்டி, மொழியறிஞர் மார்க்சுமுல்லர் கூறுவார்.

பல்வேறு காரணங்களுக்காக நிலம் தோண்டப்படும்போது சிதறும் ஒரு கல்லைப் பள்ளி செல்லும் சிறுவன் எத்திக் கொண்டு செல்வான். அதே கல் ஒரு மண்ணியல் (geologist) அறிஞரிடம் கிடைத்தால் அக்கல்லை உடைத்துப் பார்த்து அதிலுள்ள மாழைகள்; கனிமப் பொருள்கள் மட்டுமல்லாது அது எங்கிருந்து வந்திருக்க வேண்டும் என்பதுடன் அதனுடைய காலம் ஆகியவற்றை அவர் கூறி விடுவார்.

அதேபோல் ஒரு சொல்லைப் பகுத்துப் பார்த்தால் அது தோன்றிய காலம், அக்காலச் சூழ்நிலை அக்கால மாந்தரின் வாழ்முறைகளையும் அறிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

அதை அவ்வாறே உள்வாங்கிக் கொண்டு மொழியாய்வை மாந்தவிய லோடு சேர்த்து ஆராய்ந்தவர் மொழிஞாயிறு பாவாணர். வேர்ச் சொல்லின் மூல ஆய்வின்வழி அவரின் சொற்பிறப்பியல் ஆய்விற்குப் பல கோணங்கள் கிடைத்தன. இன ஆய்விற்கு அவரின் மொழியாய்வு அழைத்துச் சென்றது. பிற மொழிகளில் உருவாக்கப்பட்ட சொற்பிறப்பியல் நெறிமுறைகளைக் கடந்து தமிழ்மொழியின் சொற்பிறப்பியல் பல தரவுகளைக் கொடுத்தது.

தமிழ் மொழியும் தமிழினமும் அந்த அளவுக்கு ஆய்வு செய்யத்தக்க வளங்களையும் தொன்மையையும் பெற்றிருந்தன என்பதும் ஒரு காரணம்.

சொற்களை உடைத்துப் பார்க்கும்போதே அதில் அமைந்துள்ள சொல்லாக்க நெறிகள் வெளிப்படும். அவை மொழிக்குமொழி மாறக்கூடியவை.

மார்க்சுமுல்லர் கூறுவதுபோல், எந்த மொழியிலும் சொற்கள் தனித்துத் தோன்றுவது இல்லை. ஒரு சிறு சொல்லிலிருந்தோ தோன்றுவதற்குமுன் கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்ட வேர்மூலத்தினின்றோ சொற்கள் தோன்ற முடியும்.

அவ்வாறு தமிழ்மொழியின் வேர்மூலங்களை வகைப்படுத்தினார். சொற்பிறப்பியல் நெறிமுறைகளுக்கும் அவர் தம் ஆய்வில் வழிகாட்டி இருந்தார்.

தமிழ்மொழி ஒட்டுநிலை மொழியாக இருந்ததால், கலைச் சொற்களை எந்த நிலையிலும் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வளமும் பெற்று இருந்தது.

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில் உலகில் ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. உலகிலுள்ள ஒவ்வொரு சிறுநாடுகளிலும்கூட அவர்கள் கண்டுபிடிக்கும் ஆய்வு களைப் பதிவு செய்ய ஏராளமான கலைச்சொற்கள் புதிதுபுதிதாக உருவாக்கப்படுகின்றன. அவற்றை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அவர்களே ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே ஆங்கிலத்தில் அவர்களே கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாக்கப் பெறும் கலைச்சொற்கள் அறிவியல் உலகிற்கு அவர்களின் நல்கையாகச் சேர்க்கப்படுகின்றன. அதேநேரத்தில் ஆங்கில மொழிக்கும் அவர்களின் கலைச்சொல்லாக்கம் நல்கையாகச் சேர்கிறது.

இன்றைய உலகில் பல துறைகளிலும் பல்வேறு ஆய்வுக் கண்டு பிடிப்புகளுக்கு நிகராகக் கலைச்சொல் உருவாக்கத்திற்கான கண்டு பிடிப்புகளும் நிறைந்து வருகின்றன.

அவ்வாறு ஆங்கில மொழி, பல மொழிக்காரர்களாலேயே வளர்ச்சி பெற்று மிதமிஞ்சி நிற்கிறது. ஆங்கில மொழிக்காரர்கள் ஒப்பீட்டளவில் அந்த அளவிற்கு எந்த உழைப்பையும் செலுத்துவதே இல்லை.

ஏற்கனவேகூட அவர்கள் பழைய வழக்கிழந்த கிரேக்கம், லத்தீனத்தி லிருந்தும், வழக்கில் உள்ள பிற மொழிகளில் இருந்தும் கைப்பற்றிக் கொண்டதும், களவாடிக் கொண்டதும்தான் அதிகம். இப்போது அவர்களே ஆங்கிலமொழி செல்வத்தில் கொண்டுவந்து சேர்க்கின்ற நிலையாகப் போய்விட்டது.

அவ்வாறு ஆங்கிலமொழிவளர்ச்சிக்கு உலக மக்களே ஆக்கம் செய்து தருவதுபோல், தமிழுக்கு யாரும் உழைக்க முடியாது.

ஆனால் உலகச்செய்திகள் தமிழ் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்றால் அன்றாடம் பல்துறை அறிஞர்களும் இதற்காக உழைக்க வேண்டும்.

சொல்லாக்க நிலைகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலேயர்கள் திரட்டித் தொகுத்த செல்வங்களைக் காத்துக்கொள்ள முறைப்படுத்தி வைத்துக் கொண்டார்கள். உலக மொழிகள் அனைத்தும் அதைச் செய்ய முன்வந்துள்ளன.

தமிழ்மொழியின் சொற்கள் காப்பாற்றப்பட்டன என்றால் அதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை நின்றன. தமிழ்மொழியில் மொழிப் பதிவு வரலாறு மிகத் தொன்மையானது. அதேநேரத்தில் அழிந்ததும் அழிக்கப்பட்டதும் பெருமளவு ஆகும்.

தமிழ் மொழியில் பல பதிவுகள் அழிக்கப்பட்டதற்கு ஆரியர்களின் பங்கு அதிகம் என்று பாவாணர் குறிப்பிடுவார். சமசுக்கிருத வளர்ச்சிக்கும் தமிழ்மொழி அழிப்பிற்கும் ஒரு நேர்த்தகவு உண்டு.

தமிழர்கள், ஆக்கும் திறனுள்ள அளவிற்குக் காக்குந் திறன் குறைந்தவர்களா? அல்லது அவர்கள் அதிகாரத்தைப் பறிகொடுத்தவர்களா? என்றால் இரண்டுமே அதிகம் என்று கூறலாம்.

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றை மொழிமாற்றம் செய்து விடுவதால் அவ் வரலாறு அடுத்த மொழிக்கு மாறி விடுவதில்லை. எனவே ஒரு சொல்லை மொழிமாற்றம் செய்துவிட்டு மூலத்தை அழித்து விட்டால் அந்த மூல மொழியின் சொல்வரலாறு மீளப் போவதில்லை.

ஒவ்வொரு மொழியின் சொற்களையும் முழுவதுமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அகரமுதலிகள் (Dictionary, Lexieon), அகரவரிசை (Glossory) போன்றவை ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் காத்துவிட முடியாது. இவற்றைக் காத்து வைப்பதற்கு ஒரு சொற்களஞ்சியம் தேவை. அதைத்தான் ஆங்கிலத்தில் (Word Corpus) வேர்டு கார்ப்பஸ் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் முதலில் அது உருவாக்கப்பட்டது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் உருவாக்கப்பெறும் சொற்களைக் காத்து வைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு உருவானது.

அதேபோல் தமிழ் வளர்க்கும் அறிஞர்கள் இருக்கும் தமிழுலகில் மொழிப் பதிவு செய்யவும், அதைக் காத்து வைக்கவுமான ஒரு செயற் பாடு தேவையாகிறது தமிழுக்கு இவ்விரண்டு செயற்பாடுகளும் தேவை.

               “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

               வகுத்தலும் வல்லது அரசு”

என்று வள்ளுவர் கூறிய பொருள் இயற்றலையும் காத்தலையும் மட்டும் செய்யாமல் மொழி இயற்றலையும் காத்தலையும் செய்தது தமிழ் அரசுகள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சொற்குவை தோன்றிய வரலாறு

“சொற்குவை” என்ற சொல் தோன்றிய வகை என்பதைக் காணுமுன் இக் கருத்தின் வளர்ச்சி வரலாற்றுக்கு வருவோம்.

ஆங்கிலத்தில் “Word Corpus” (வேர்டு கார்பஸ்) என்ற கருத்து தோன்றி, ஆங்கிலச் சொற்கள் அனைத்தையும் தொகுத்துவைக்கும்முறை உருவாக் கப்பட்டது. அதை மொழியியல் கண்ணோட்டத்தில் கண்ட தமிழ் நாட்டு மொழியியல் அறிஞர்கள் இதைத் தமிழ்மொழியிலும் கொண்டு வரவேண்டும். அதுதான் மொழி வளர்ச்சியும் காப்பும் என்று கருதினர்.

இதை முதலாகவும் முன்னோடியாகவும் தமிழில் கொண்டு வர வேண்டுமென்று முனைந்தவர் நம் மதிப்பிற்குரிய மொழியறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள்.

சொற்பிறப்பியல் வகையில் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய முது செம்மொழிஞாயிறு பாவாணர் என்று கூறினால் மொழியறிஞராக இருந்து நிறுவனப்படுத்திச் செயற்படுத்தும் ஆற்றல் படைத்தவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் என்று கூறலாம். அவர்களை அடையாளம் கண்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவவும் அதை, தொடங்கவும் வ.அய்.சுப்பிரமணியத்தைத் தேர்ந்தெடுத்த அன்றைய தமிழக முதல்வர் ம.கோ.இரா அவர்கள். அவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ் வளர்ச்சிக்கு முதன்மையாக உதவக்கூடியது “சொற்பிறப்பியல் அகரமுதலி” என்ற வகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நாம் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கியிருந்த களஞ்சிய நடுவத்தின் ஒரு பிரிவான அறிவியல் களஞ்சியத்தில் பணியாற்ற விரும்பி விண்ணப்பம் அனுப்பி இருந்தோம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருந்த வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் நம்மை இயற்பியல் பிரிவில் பணியாற்றத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் பணியாற்றிக் கொண்டிருக் கும்போது ஒரு களஞ்சியம் (Encyclopedia) பற்றிய கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதில்தான் (Word Corpus) பற்றிய விளக்கத்தையும் அதன் பயன்பாட்டையும் தெரிவித்தார்கள். அது நடந்த காலம் 1983 சூன் - ஆகத்து மாதங்களில்... அதற்காகத் தமிழக அரசுக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அலைந்தார்கள். அப்போது அக் கருத்து மிகுதியாக நம் மனதில் பதியவில்லை. ஒருவேளை அப்போது அது அமைந்திருந்தாலும் அது சிறப்பாக அமைந்திருக்காது. ஏனெனில் இன்றைய கணிப்பொறி, இணைய வளர்ச்சி அன்றைக்கு இல்லை. அதிகமான மாந்த உழைப்பையே அது உள்வாங்கி இருக்கும் என்பதே நம் கருத்து. ஆனால் அச்சொல் “வேர்டு கார்பஸ்” என்பதும் அதன் பயன்பாட்டில் சிறிதே மனத்தில் பதிவாகி இருந்தது. அன்றைய நாளில் அது ‘சொல்தரவகம்’ - என்ற மொழிபெயர்ப்பில் அறிமுகமாகி இருந்தது.

2011-இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் தொகுதிகள் முழுவதுமாக முடிந்த நிலையில் அதன் திருந்திய பதிப்பும் பிற தமிழ் அகரமுதலிகள் செய்ய முனைந்து இருக்கும்போது அரசியல் வானில் நாளரு திடீர் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. திரு பாண்டியராசன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். தான் பொறுப் பேற்ற துறைகளைக் காணும் முகத்தான் தமிழ் வளர்ச்சித் துறைக்குக் கீழ் இருந்த துறைகளைப் பார்வையிட, பொறுப்பேற்ற அந்த நாளின் பிற்பகுதியிலேயே வந்திருந்தார்.

தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் இயக்ககம் என அனைத்துத் துறைத் தலைவர்களையும் பொறுப்பாளர் களையும் ஒருங்கே சந்தித்தார்.

அவர் கூறியது இதுதான். “தமிழ் வளர்ச்சித் துறையில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது நான் பொறுப்பில் இருப்பேன். அதற்குள் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப் பணியாகப் பெயர் சொல்லும்படியான திட்டங்களைக் கூறுங்கள். நான் செயல்படுத்துவேன்” என்றார்.

ஒவ்வொரு துறையினரும் அவரவர்களுக்குத் தங்கள் துறைக்குத் தேவையானதை உள்ளடக்கிய திட்டங்களைக் கூறினர். அத் துறைகளில் மிகவும் சிறிய துறை “அகரமுதலி” துறைதான். நமக்கு ஒரே திட்டமாக நம் காதில் ஒலித்துக் கொண்டிருந்த வ.அய்.சுப்பிரமணியம் ஐயாவின் குரலில் (Word Corpus) ஒன்றைத்தான், நமக்கு வந்த வாய்ப்பில் அதைப்பற்றி வலுவாகக் கூறினோம்.

அது அவரை மிகவும் கவர்ந்தது; புதிய கோணத்திலும் இருந்தது. அதைச் செயற்பாட்டுக்கு அரசு எடுத்துக் கொண்ட வகையில் தமிழக முதல்வர் அதற்கு ஆண்டுதோறும் தொடர் செலவுத் தொகை உருவா “ஒரு கோடி” ஒதுக்கினார்கள்.

அது செயல்பாட்டிற்கு வந்தது. அதன் பெயரைத் தரவகம் என்ற சொல்பற்றி பலவாறு கலந்து கொண்டு அன்றைய அகரமுதலித் துறை இயக்குநர் திரு. செழியன் சொற்கள் என்ற பொருளில் உள்ள “சொற்குவை” என்ற பெயரைச் சூட்டினார்.

அனைவருக்கும் அது பொருத்தமாகப்பட்டது. அந்தச் சொற்குவையின் இயங்குதல், பயன்படல் பற்றி இனிக் காண்போம்.

‘சொற்குவை’ என்பதற்கு முந்தையப் பெயர்கள் ‘சொல் தரவகம்’ ‘சொற்களஞ்சியம்’ என்பனவாகும். ஒரு மொழியிலுள்ள அத்தனைச் சொற்களையும் ஒருங்கு திரட்டி வைத்த ஓர் வைப்பகமாகும்.

தமிழ்மொழி தோன்றிய காலத்திலிருந்து இலக்கிய வழக்கு, தொழில்நுட்பச் சொற்கள், அனைத்து நிலைகளிலும் வழக்கிலிருக்கும் மற்றும் வழக்கிழந்த சொற்கள் முதல் இன்றைய அளவில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள சொற்கள்வரை மேலுயர்த்தம் செய்யும் செயற்பாட்டு வைப்பகமே சொற்குவை.

உலகம் முழுவதும் பரந்துபட்ட தமிழர்கள் எந்தத் துறையினராக இருந்தாலும் அவர்கள் இந்தச் சொற்களைத் தங்கள் ஏந்திற்கேற்பக் கையாளலாம். தங்களுக்குத் தகுந்தாற்போல் புதுக்கிக் கொள்ளலாம். புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றையும் இந்தத் தொகுப்பில் சேர்க்கலாம். ஆனால் யாரும் இதிலிருந்து அழித்துவிட முடியாது. சேர்க்க மட்டுமே முடியும். தவறான பொருளுடைய சொற்களையும் சேர்த்துவிட முடியாது. இது நெறியாளுகைக்குட்பட்டது.

இந்தச் சொற்குவையை இப்போது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் கையாளுகிறது. இதுவரை வந்த அகரமுதலிகளின் சொற்கள் அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு 2 இலக்கம் சொற்கள் அகரமுதலிகளிலிருந்து இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இணையக் கல்விக் கழகம், மற்றும் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழி சொல்லாய்வு அறிஞர் அருளி அவர்கள் தொகுத்த அருங்கலைச் சொற்கள் இரண்டரை இலக்கம் என நான்கரை இலக்கம் சொற்களில் கிட்டத்தட்ட 4 இலக்கம் சொற்கள் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகில் யாரும் SORKUVAI.COM என்று இணையதளத்தைத் திறந்தால் 4 இலக்கம் கலைச் சொற்களைப் பயன்பாட்டுக்குப் பார்க்கலாம். பயன்படுத்திக் கொள்ளலாம். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களும், தமிழ்க்கலைச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் நொடியில் கிடைக்கும். ஒருவேளை தளத்தில் உருவாக்கப்படாத சொற்களாக இருந்தால் இதில் காணப்படாது.

அவைமட்டுமல்லாமல் தமிழ்ச் சொற்களுக்கு அகரமுதலிப் பொருள் எடுத்துக்காட்டுகள், வேர் மூலங்கள், இனச்சொற்கள் இவையனைத்தும் நொடியில் பெறலாம்.

சொற்பிறப்பியல் அகரமுதலிப் பணியாளர்களால் திங்கள்தோறும் புதிய 1000 கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உலகில் எங்கிருந்தாலும் பயன்பாட்டாளர் பயன்படுத்தும் வண்ணம் இது செயற்படுகிறது. இணையதளத்தைப் பயன்படுத்தத் தெறியாதவர் களோ, தாங்கள் பார்க்கப் புகும் சொல் அதில் இடம்பெறவில்லை யென்றாலோ எந்தத் தொலைபேசி வழியாகவும் ‘14469’ எண்ணுக்குத் தொலைபேசி செய்தும் சொற்களுக்கு விளக்கம் கேட்கலாம். அதற்கு இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் எந்தத் தொலைபேசியிலும் கேட்பதற்குக் கட்டணம் இல்லை.

இந்த ‘அழைநடுவம்’ அலுவல் நேரத்தில் மட்டும் பதியாற்றுகிறது. 24 மணி நேரமும் கேட்குமளவிற்கும், உலகத்தில் எந்த மூலையிலிருந் தும் இலவயமாகக் கேட்டுக்கொள்வதற்குமான ஏந்துகள் விரைவில் விரிவுபடுத்தவிருக்கின்றன.

14.4.1969ஆம் நாள்தான் தமிழ்நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய ஆணை வந்த நாள். அந்த எண்ணே அந்த நடுவத்திற்கு அழைப்பு எண்ணாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன்வழி தமிழ்மொழிச் சொற்களை என்றும் அழியாமல் காத்துக் கொள்ள முடியும். சொற்கள் என்பவை வெறும் ஒலிக்குறிப்புகள் அல்ல. அது வரலாற்று, தொழில்நுட்பப் பதிவு. ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு.

தமிழர்கள் தொழில்கள் பலவற்றையும் வாழ்முறையில் பயன்படுத்தி வந்தனர். தொழில்நுட்பங்கள் அவர்கள் வாழ்வில் இடம்பெற்றிருந்தன. மருத்துவம், உழவு, கப்பல் கட்டுதல், கடற்செலவு, கடல் தொழில்கள், கால்நடை வளர்த்தல், பேணுதல் எனப் பல்தொழில்கள் இருந்ததாக இலக்கியமும் கூறுகிறது. சொற்களிலும் பதிவாகியுள்ளன. அவற்றின் கலைச் சொற்களே மொழியில் பணிவாகியுள்ளன.

நிலத்தைத் தோண்டுவதும், பண்படுத்துவதும், உழுவதும், விதைப்ப தும், பயிர் வளர்ப்பதும், விளைவிப்பதும், அவர்களின் பரவலான அடிப்படைத் தொழில்கள் உழவு செய்யும் குமுகாயம்.

‘தொல்லுதல்’என்றாலே தோண்டுதல்;

               தொல்லு       x          தோண்டு

               தொல்லில்   x          தொழில்

               பள்ளுதல்     x          பள்ளம் தோண்டுதல்

               செய்நிலம்

               செய்தல்

               உழு > உழை > உழைப்பு (Hardwork)

               விளைதல் > விளைவி (effect)

               வளர் > வளர்ச்சு (Development)

இந்தச் சொற்கள் அனைத்தும் உழவு சார்ந்தவை. உழவுக் குமுகாயம் என்பதைத்தான் காட்டுகிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் பின் வரலாறு உண்டு என்பதை விளக்குகிறது.

இவற்றை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் காப்பாக பதிவும் செய்து விட்டால் உலகமுள்ளவரை இவ்வினத்தின் வரலாறு பதிவாகியிருக்கும். இது ஒரு கோணத்தில் உண்மையான மொழிப் பாதுகாப்பும், மொழி வளர்ச்சியும் ஆகும்.

தளம் அந்நிலையில் ‘சொற்குவை’ - எனும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தளம், தமிழ் வாழ உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தளமும் ஆகும்.

முனைவர் மா. பூங்குன்றன்

Pin It