கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

brahmins yagnaகுமுகத்தை மதிப்பிடுவது, இலக்கியங்களை மதிப்பிடுவது என எல்லாவற்றிலும் ஓர் அரசியல் பார்வை உண்டு, மதிப்பிடுகிறவர்கள் எத்தகைய குமுக அரசியல் நோக்கங் கொண்டிருக்கிறார்களோ, அதிலிருந்தே மதிப்பீடுகள் அமையும்.

ஆண்டை அரசுக்குச் சார்பானவர்கள் - அத்தகைய சார்பிலேயே அனைத்தையும் மதிப்பிடுவார்கள். அடிநிலை வாழ் மக்களின் உரிமைகளுக்குச் சார்பான கண்ணோட்டமுடையவர்கள் அந்த நோக்கத்தில்தான் அனைத்தையும் மதிப்பிட முடியும்.

அந்த அளவில் வேதங்களை எப்படி மதிப்பீடு செய்வது? பலரும் எவ்வாறு மதிப்பீடு செய்திருக்கிறார்கள்? அத்தகைய மதிப்பீடுகள் சரியானவைதாமா என்பன குறித்த பார்வை தேவை.

இந்தியாவில் சமய நெறிகள் யாவும் வேதங்களை அடியொட்டியவையே எனச் சிலர் பரப்பி வருகின்றனர்.

இந்து மதத்தின் வேரே வேதங்கள்தாம் என்பதும், இந்தியப் பண்பாடே வேத வாழ்வியல் கருத்தாக்கங்களிலிருந்து வளர்ந்தவைதாம் என்பதும் அவர்களின் கருத்துகள்.

இந்தியாவின் சமய நெறிகள் மட்டுமல்ல, இந்திய வரலாற்றின் அடிப்படையே வேதத்திலிருந்தும், வேத காலங்களிலிருந்துமே உயிர்த்தது எனும் வரலாற்றறிஞர்களும் உண்டு.

இந்நிலையில், வேதங்கள் மீதான மிகை மதிப்பீடுகளை மூன்று வகையில் பிரித்துணரலாம்.

முதலாவது கால மிகை மதிப்பீடு, இரண்டாவது திறன் மிகை மதிப்பீடு, மூன்றாவது பயன் மிகை மதிப்பீடு. கால மதிப்பீடு என்பதில் வேதங்களைக் கால மதிப்பீடற்றது என்பதாகவே வைதீக இந்து மதத்தார் கூறிக் கொள்வதுண்டு. அதாவது வேதம், தான்தோன்றியாக (சுயம்புவாக) உருவெடுத்தது என்பதே அவர்களின் கருத்து.

“வேதங்கள் யாராலும் எழுதப்படவில்லை. அதாவது அவை மாந்தர்களால் எழுதப்படவில்லை... முதன்முதலில் யாராவது வேதத்தை வெளியிட்டதாக யாரைப் பற்றியும் கேள்விப்பட்டதே இல்லை.... எது உண்மையானதோ, அது எல்லையற்றதாகவும் என்றும் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையின் ஒரே உரைகல். அது எப்போதும் அழியாமல் என்றும் ஒரே போலவே இருக்கும்.” (ஞானதீபம் - 7 பக். 81-82)

- என்று விவேகானந்தர் சொல்வது போன்றே வைதீக (இந்து) மதப் பரப்புநர்கள் பலரும் கூறி வந்திருக்கின்றனர். பெரும்பாலான வைதீக மதத் தலைவர்கள் கருத்தும் இது போன்றதே.

               “.................................................... வேதம்

               ஆதி அந்தமில் லையது நெறியெனும்

               வேதியனுரை .......................”

- என மணிமேகலை - 27(103-105) காட்டும் பிரம்மவாதி என்னும் வைதீகக் கருத்தாளரின் உரையில்,

“யாதொன்றும் சார்ந்து தோன்றுதல் இல்லாது, தான்தோன்றியாகிய (சுயம்பாகிய) ஆரணமாகிய வேத புருடனுக்குத் தோற்றமும், கேடும் இல்லை”

- எனக் கூறும் வரிகள் இருப்பது கவனிக்கத் தக்கது.

ஆக, வேதம் தான்தோன்றி (சுயம்பு) எனும் கருத்து நெடுங் காலமாகவே ஆரிய வைதீகக் கருத்தாளர்களால் பரப்பப்பட்டு வந்திருப்பதை அறியலாம்.

அதேபோது அக் கருத்து பரப்பப்பட்ட காலம் முதலே அதன் பொய்ம்மைகள் மறுக்கப்பட்டும் வந்திருக்கின்றன.

மணிமேகலை, திருமந்திரம், நீலகேசி எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி பெரும்பாலான தமிழிலக்கியங்கள் வேதங்களைப் பற்றி மட்டுமல்லாது, அது ஒரு தான்தோன்றி (சுயம்பு) என்பதான கருத்தையும் கடுமையாகவே மறுத்திருக்கின்றன.

இருப்பினும் வேதங்கள் தான் தான்தோன்றியானவை (சுயம்பானவை) என்பதான மிகைமதிப்பீடு கால வரலாற்றில் தொடர்ந்து வைதீகர்களால் பரப்பப்பட்டு மக்களை மயக்கப்படுத்தி வந்திருப்பதைக் கவனித்தாக வேண்டும்.

அடுத்து, வேதத்தின் திறன் மதிப்பீட்டுக் கருத்துகளும் அப்படியே.

“வேதங்களில் இல்லாத எந்தப் புதிய மதக் கருத்தும் உலகில் எங்கும் இல்லை”

- என்பதும்,

“வேதங்களில் காணப்படாத உண்மையோ, முறைமையோ (நியதியோ) இல்லை, அவற்றில் ஆராயப்படாதது ஒன்றுமில்லை”

- என்றவாறெல்லாம் விவேகானந்தர் (ஞானதீபம் - 6 (374, 403) குறிப்பிடுவதும்,

“வேதத்திற்கு மாறுபட்ட நூல்கள் நரகத்திற்கே வழிகாட்டிகள், அவையே பொய்யானவை, அழியும்”

- என்றவாறாகவெல்லாம் மனுதர்ம சாத்திரம் உரைப்பதும் வேதங்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளாகவே அறிய வேண்டும்.

அதேபோல் வேதங்களின் பயன் மதிப்பீட்டுக் கருத்தாக,

“வேதங்களே ஐம்(பஞ்ச)பூதங்களைக் காக்கின்றன. வேத மந்திரங்களே ஓமங்(ஹோமங்)களுடன் கதிரவனை அடைந்து மழையைப் பொழிவிக்கின்றன. அதனால் பருவமும், அதனால் உணவும், அதனால் மக்களும் உண்டாகிறார்கள்”

- என்று மனுதர்மமும்,

“வேத ஒலிப்புகள் (சப்தங்கள்) அண்டவெளிச் சூழலில் பரவிக் கொண்டிருப்பதாலேயே உலகத்தில் (லோகத்தில்) அனைத்து வகையிலும் மங்கலம் உண்டாகும். அப்படிப்பட்ட ஆற்றல் (சக்தி) அந்த மந்திரங்களுக்கு இருக்கின்றன”

- என்று காஞ்சி பரம குரு சங்கரனும் கூறிப் பெருமைப்படுத்துவதும், வேதங்கள் தூய்மை (புனித)த் தன்மை வாய்ந்ததாகவும், ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமே அவற்றைப் படிக்கவும், ஓதவும் வேண்டும் என்றும், பிறர் அவற்றைத் தீண்டவும் கூடாது என்றும் தொடர்ந்து ஆரியப் பார்ப்பனர்கள் பரப்பல் செய்து வருவதும்,

“பிராமணன் வேதம் ஓதுகையில் சூத்திரன் அருகே இருக்கக்கூடாது. அருகிலிருந்து வேதங்களைக் கேட்ட சூத்திரனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”

- என்றும்,

“வேதத்தை அறிந்தவனே (பிராமணனே) பாவத்தைப் போக்கவல்லான்

(மனு : 12 : 101), எல்லாரினும் உயர்ந்தவன் (மனு : 12 : 103)”

- என்றுமாகவெல்லாம் வேதம் குறித்து மனுதர்ம சாத்திரம் சொல்லுவதும் வேதங்களின் பயன் குறித்தான மிகை மதிப்பிடல்களே என அறியலாம்.

ஆக, அவ்வாறு அவர்களால் பரப்பப்பட்டு வந்ததற்கும், வடக்கே மனு தர்மத்தின்படி அத்தகைய உயர்மதிப்பீடுகளின்படி வேத ஆட்சி நடத்தப் பட்ட குப்தர்கள் காலம் ‘பொற்காலம்’ என்று அவர்கள் சொல்லிக் கொண்டதற்கும் அத்தகைய மிகை மதிப்பீட்டின் துணையோடு ஆளுமைப் போக்கு வெறித் தாண்டவம் ஆடியதே காரணங்களாக இருக்கலாம்.

வேதங்களைப் படிப்பதும் பாராமல் ஓதுவதும் ஆரியப் பார்ப்பனர்க்குரிய கடமைகளில் முதன்மையானதாக அவர்கள் சொல்லிக் கொண்டனர். பழந்தமிழகத்தில்கூட பல்லவர் காலங்களில் வேதங்கள் ஓதிவந்த ஆரியப் பார்ப்பனர்களுக்கே ஏராளமாக நிலங்களைக் கொடைகளாக அளித்தனர். அவ்வாறு தரப்பட்ட கொடைகளுக்குப் ‘பாடகம்’ என்று பெயரிட்டு அழைத்தனர்.

தொடர்ந்து பிற்காலச் சோழர்களான முதலாம் இராசராசன், இராசேந்திரன் காலங்களிலும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் நிலங்கள் கொடைகளாக அளிக்கப்பட்டன. அவ்வாறு கொடைகளாக அளிக்கப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆரியப் பார்ப்பனர்கள் வேதங்களையும், மந்திரங்களையும் நன்கு கற்றவர்களாக இருந்திடல் வேண்டும் எனும் நெறியே மிகக் கண்டிப்புடன் கடைபிடிக்கப் பட்டிருக்கிறது.

இவ்வாறெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேலாண்மை செய்து வருவதோடு வேதங்கள் தூய்மையான (புனிதமான)வை என்று எண்ணங்கொள்ளும் வகையில் ஆரியப் பார்ப்பனிய நிறுவனங்கள் தொடர்ந்து கருத்துப் பரப்பிச் செயலாற்றி வந்திருக்கின்றன.

அவ்வகையில், மனுதர்மம் மட்டுமன்று, ஆரியத்திற்கு அடிபணிந்த அரசர்கள் தொடங்கி, இக்காலக் காஞ்சி சங்கராச்சாரிகளும் இப்போதைய இந்திய ஆட்சியாளர்களும், அன்றைய இராசாசி தொடங்கி பிந்தைய ‘சோ’, குருமுர்த்தி போன்ற இளைய குடுமிகள் வரையிலும் வேதங்களைத் தெய்வத் தன்மை கொண்டவையாகப் போற்றுவதும், புகழ்வதும், பேணுவதும், பரப்புவதும் தொடர்கின்றன.

வேதங்கள் பற்றிய உயர் மதிப்பீட்டை ஆரியப் பார்ப்பனியக் கருத்தாளர்கள் மட்டுமே கொண்டிருக்கவில்லை. அப் பார்ப்பனியக் கருத்துகளுக்கு அடிமைப்பட்டவர்களும் வேதங்களை உயர்வாகவே மதிப்பிட்டிருந்தனர் - என்பதைப் பார்த்தோம்.

மார்க்சியக் கண்ணோட்டம் உடையவராகக் கருதப்படுபவரும், மார்க்சிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், கேரளத்தின் முதல் அமைச்சராக நீண்ட காலம் இருந்தவருமான இ.எம்.எசு. நம்பூதிரிபாடுவின் கருத்துகள் இவ்வகையில் கவனிக்கத் தக்கன.

அவர் போன்ற கருத்துடையவர்களாகவே இந்திய மார்க்சியர் பலரும், இந்திய வரலாற்றைச் சிறப்புக்குரியதாகக் கருதி மயக்கங் கொண்டோராக பலரும் இருப்பதினால் அவரின் கருத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது சரியானதாக இருக்கும்.

அவர் மலையாளத்தில் எழுதிய ‘இந்திய வரலாறு’ - எனும் நூல் 1975-இல் வெளிவந்தது. தோழர் பி.ஆர். பரமேசுவரனால் அந் நூல் தமிழில் மொழிபெயர்த்து 98-இல் வெளியிடப்பட்டது.

அவ் வெளியீட்டில், பி.ஆர். பரமேசுவரன் தன் குறிப்புரையில்,

“இந்திய வரலாறு பற்றி, மார்க்சியக் கண்ணோட்டத்துடன் தமிழில் வெளிவரும் முதல் நூல் இது என்று கருதுகின்றேன்”

- என்பதாகக் குறிப்பிடுகிறார்.

அதாவது இதற்கு முன்னர் வெளிவந்த இந்தியாவைப் பற்றிய வரலாற்று நூல்களெல்லாம் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு வந்தவையல்ல என்பதும், இதுவே மார்க்சியக் கண்ணோட்டத்தோடு வந்த முதல் நூலாகும் என்பதும் பி.ஆர். பரமேசுவரனின் கருத்து. பி.ஆர். பரமேசுவரனின் இந்தக் கருத்து 98-ஆம் ஆண்டின் கருத்து. அதாவது அதுவரை இந்திய வரலாறு பற்றிய நூல் எதுவும் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு வரவில்லை என்பதே அவரின் கருத்து என்பது கவனிக்கத் தக்கது.

அடுத்து அந்த நூலில் இ.எம்.எசு. நம்பூதிரிபாடு குறிப்பிடும் கருத்துகள் மேலும் அதிகப்படியான கவனத்திற்குரியன.

“சிந்து, மகத நாகரிகங்களைப் போல பௌதிகத் தடயங்களோ, வேத உபநிடதங்களோடு ஒப்பிடக்கூடிய இலக்கியங்களோ தென்னிந்தியாவில் கண்டெடுக்க முடியாதது..”                                                      (பக். 49)

“வட இந்தியாவைவிட உயர்வு அடைந்திருந்த நாகரிகம் வளர்ந்திருந்த சமுதாய அரசியல் அமைப்பை தென்னிந்தியர்கள் உருவாக்கியிருந்தனர் என்றும், அது வட இந்தியாவினுடையதைவிட புராதனமானது என்றுமுள்ள வாதத்தை அங்கீகரிக்கக்கூடிய எந்த ஓர் ஆதாரத்தையும் விஞ்ஞான வரலாறு அளிக்கவில்லை...”                                                                      (பக். 51)

“வேதங்கள், உபநிடதங்கள், புராண இதிகாசங்களில் பெரும்பாலும் ஜைன, புத்த போதகர்களின் நூல்கள், அர்த்த சாஸ்திரம் முதலியவை எல்லாம் எழுதப்பட்ட காலத்தில் அவற்றுக்குச் சரிநிகராகக் கருதக்கூடிய ஒரு நூலும் தென்னிந்தியாவில் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றுக்கெல்லாம் பிறகு நீண்ட காலம் கடந்த பின்தான் சங்க நூல்கள் இயற்றப்பட்டன.”                  (பக்.51)

- என்றவாறான இ.எம்.எசு. நம்பூதிரிபாடுவின் மேற்படி கருத்துகள் எந்தளவுக்குக் குறைபாடுடையன என்பதைச் சற்று ஆழ்ந்து வரலாற்றாய்வு செய்வோர் அனைவரும் உணர முடியும்.

ஆரியப் பார்ப்பனியச் சார்பு நிலையில் மட்டுமல்லாது, இல்லாத இந்திய வரலாற்றை இருந்ததாகவும், இருப்பதாகவும் புனைவுபடுத்துவோர் மட்டுமே இ.எம்.எசு. நம்பூதிரிபாடுவின் கருத்தை ஒப்புவர். ஆனால் அறிவியல் முறைப்படி, குமுக இயங்கியல் நெறிப்படி தமிழக வரலாற்றையும், ஆரியப் பார்ப்பனிய வாழ்முறை வரலாற்றையும் ஆய்வு செய்வோர் எவராலும் அக் கருத்துகளை ஏற்க இயலாது.

எந்த வகையிலும் வரலாற்றுப் பதிவு இல்லாத ஆரியப் புனைவுக் கருத்துகளை வரலாறு என ஏற்றுக் கொள்வதும், அவர் தன்னளவில் மதிப்பீடு செய்கிற கால அளவீடுகளை அப்படியே ஒப்புக் கொள்வதும் எந்த வகையில் மார்க்சிய வழிகாட்டலாக இருக்க முடியும்?

வேதங்களின் புனைவுகளையும், இட்டுக் கட்டல்களையும் அறிவியல் நெறிப்படி விளங்கிக் கொள்ளுகிற ஒருவர் அவற்றின் காலங்களை கி.மு.விற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாக எப்படிக் கருதவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும்? ஆனால், தான் மார்க்சிய வழியானவர்கள் என்பதைக் காட்டிலும், வைதீக வழியினராகவும், இந்திய வழியினராகவும் மூழ்கிச் சிந்தித்துப் பழகியதால்தான் இ.எம்.எசு. நம்பூதிரிபாடு அவர்களாலும், அவர் போன்றவர்களாலும் வரலாற்றை இயங்கியல்படி உணரவோ, ஆய்வு செய்யவோ முடியவில்லை.

இந்திய வரலாற்றை இந்தப்படியாக எழுதிக் காட்டிய அவர்தான் - இந்தியாவை ‘வேதங்களின் நாடு’ - என்பதாக மதிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

‘வேதங்களின் நாடு’ - என்ற தலைப்பில் மலையாள மொழியில் இ.எம்.எசு. நம்பூதிரிபாடு எழுதிய நூலை, அதே பெயரில் பி.ஆர். பரமேசுவரன் தமிழில் மொழிபெயர்த்து 1987-இல் குறிப்பு எழுதி 2007-இல் பாரதி புத்தகாலயத்தின்வழி முதல் பதிப்பாகக் கொண்டு வரப்பட்டது.

அந்த மொழிபெயர்ப்புக் குறிப்பிலும் பி.ஆர். பரமசுவரனின் கருத்து அதே தன்மையுடையதே.

“வேதங்களின் நாடு - என்ற தலைப்பில் தோழர் இ.எம்.எசு அவர்கள் மலையாள மொழியில் எழுதியுள்ள இச் சிறு நூல் மார்க்சியப் பார்வையில் இந்தியாவின் சமூகக் கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கிறது. இந்திய சமூகத்தை மார்க்சிய அடிப்படையில் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் விரும்புவோருக்கு இந் நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”

- என்பது பி.ஆர். பரமேசுவரனின் கருத்து.

வேதங்களின் நாடு - என அடையாளப் படுத்துவதே எந்த அடிப்படையில் மார்க்சிய பார்வையுடையதாக இருக்க முடியும்?

வேதங்களின் பண்பாட்டை ஆரியப் பண்பாடு எனப் பெருமைப்பட்டு அடையாளப்படுத்த விரும்புகிற நம்பூதிரிபாடு அவர்கள், அதை சிந்து சமவெளிப் பண்பாட்டிற்கோ, திராவிடப் பண்பாட்டிற்கோ காலத்தால் பிந்தையது என்று கருதுதல் கூடாது என்கிறார்.

“சிந்து கலாச்சாரத்திற்கும் தென்னிந்தியாவின் திராவிடக் கலாச்சாரத்திற்கும் உள்ள மேன்மையை மிகைப்படுத்துவதோ, ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட வைதீகக் கலாச்சாரத்தின் மேன்மையைக் குறைத்துப் பார்ப்பதோ தவறானதாகும்”                                                             (பக். 9)

- என்று நம்பூதிரிபாடு கருத்துக் கொண்டிருந்தார்.

“ஆரிய - திராவிட உறவுகள் மிக முக்கியமான மாறுதல்களை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவின் செல்வாக்கு வடக்கிலும், வடக்கின் செல்வாக்கு தெற்கிலும் பரவத் தொடங்கியது. இதில் முதலாவதுடன் ஒப்பிட்டால் இரண்டாவது அதிக வலுவானதாக இருந்தது”                                       (பக். 10)

இவ்வகையில் நம்பூதிரிபாடு - அவர்களுக்கு வடக்கத்திய இருப்புகளின் மீது பெருத்த மதிப்பீடும், மயக்கமும் இருந்ததை உணர முடியும்.

அதேபோல ஆரியப் பண்பாடுதான் இந்தியப் பண்பாட்டின் அடிப்படையாக இருக்கிறது என்பதாகச் சொல்வதோடு அதை அப்படியே ஏற்றுக் கொள்பவராகவும் நம்பூதிரிபாடு இருந்துள்ளார்.

“சமுதாயத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வந்த வளர்ச்சி மற்றவர்களைக் காட்டிலும் உயர்வான கலாச்சார நிலைக்கு இட்டுச் சென்றது. அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்வான ஒரு மொழியை உருவாக்கினர். இவ்வாறு ஓர் உன்னத நிலையை அடைந்த ‘ஆரிய மொழி’ என்று அறியத் தொடங்கியது. பின்னர்ச் சமஸ்கிருத மொழியாக வளர்ச்சி யடைந்தது.” (பக். 14)

ஆக. நம்பூதிரிபாட்டிற்குச் சமசுக்கிருதம் உயர்ந்த மொழி என்ற மதிப்பீடு இருந்ததையும் அறிய முடிகிறது. அம்மொழி உன்னத மொழியாக உயர்த்திக் காட்டப்பட்டது என்று அல்லாமல் அதுவே உன்னத மொழி என்பதான வல்லதிகாரக் கருத்தை அவர் கொண்டிருந்ததை அறிய முடிகிறது.

சமசுக்கிருத மொழியைப் பற்றிய கணிப்பில் மட்டுமல்லாது, வேதங்கள் பற்றிய கணிப்பிலும் நம்பூதிரிபாடின் கருத்து பிழைபாடானது மட்டுமன்று, ஆரியப் பார்ப்பனியச் சார்பானதாகவே இருப்பதை ஆய்ந்தோர் அறிய முடியும்.

“வேதங்கள் சமசுக்கிருத மொழியில்தான் எழுதப் பட்டன” (பக். 16)

என்று அழுத்தம் கொடுக்கும் நம்பூதிரிபாடு,

“வேதங்கள், உபநிஷத்துகள், பல்வேறு விஞ்ஞானத் துறைகள் குறித்து எழுதப்பட்ட நூல்கள், புராண இதிகாசங்கள், காவிய நாடக இலக்கிய நூல்கள் ஆகியவற்றின் மூலமாக மனித சமூகத்தின் கலாச்சார வளர்ச்சிக்கும் விலை மதிக்க முடியாத பங்கு செலுத்த ஆரியச் சமூகத்தினால் முடிந்தது”

- என்று ஆரியக் குமுகத்தினை இட்டுக்கட்டிப் பெருமைப்படுத்திக் காட்டுகிறார்.

வேதங்களிலோ, பிற ஆரியச் சார்பு இலக்கியங்களிலோ உள்ள உள்ளடக் கங்கள் என்ன வகையின என முந்தைய பகுதிகளில் விரிவாக விளக்கி யிருப்பதால் இங்கு அவை குறித்து விளக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவற்றால்தாம் மாந்தக் குமுகத்தின் பண்பியல் வளர்ச்சிக்கான பங்கு நிறைய கிடைத்ததாக நம்பூதிரிபாடு கூறுவதின் இட்டுக்கட்டலை ஆழ்ந்து பயின்றோர் உணர்ந்தாக வேண்டும்.

வேதங்களையும், ஆரியத் தொன்மங்களையும் அவர் உயர்வாக மதிப்பிட்டுக் கொள்வது மட்டுமன்று, அவற்றுக் கெதிரானவற்றை எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என இலைமறை காயாகச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

“வேதங்களின் நாடு, என்ற பெயர் சுட்டிக்காட்டுவது போல புனிதத் தன்மையின் போர்வையணிந்து இந்தியாவின் சரித்திரத்தையும் சமூகத்தையும் பார்க்கக்கூடிய எந்த முயற்சியும் நாட்டை எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளுக்குப் பரிகாரமாகாது.

நமது கடந்த காலப் பாரம்பரியத்தில் நாம் பெருமைப்படக் கூடியவை என்பது போலவே அதற்கு மாறான அம்சங்களும் உண்டு. இரண்டாவது அம்சம்தான் இந்தியா பிரிட்டீசு ஆட்சிக்கு அடிமைப்படவும் ஒன்றரை நூற்றாண்டுக் காலம் அந்த ஆதிக்கம் நீடிப்பதற்கும் காரணமாக இருந்தது.

எதிர்காலத்திலும் அன்னிய ஆதிக்கம் உட்பட வெட்கக்கேடான பல நிலைமைகளையும் தாங்க நாம் நிர்பந்திக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நம்முடைய கடந்த காலப் பாரம்பரியத்தில் பெருமைப்படக் கூடியவையாக உள்ளவற்றைப் போற்றக்கூடிய நேரத்திலேயே அவற்றுக்கு மாறானவற்றுக்கு எதிராக உறுதியாக நின்று போராடவும் வேண்டும். அப்போது தான் பண்டைய கால பாரதத்திற்கு அன்றைய உலகில் இருந்தது போல இன்றைய இந்தியா நவீன உலகத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.”

- என்று தன் கருத்தை மிகத் தெளிவுபட முன்வைத்திருக்கிறார் நம்பூதிரிபாடு.

இதில் அவரின் தெளிவான கருத்து எது என்பதை ஒரு முறைக்கு இருமுறை மேற்கண்ட பத்திகளைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவுக்குரிய பழமை தொன்மப் பெருமைகளுக்கு, வேதங்கள் உள்ளிட்ட சிறப்புகளுக்கு எதிரான கருத்துகள்தாம் பிரிட்டீசார் இந்தியாவை அடிமைப்படுத்தக் காரணமாய் இருந்ததாக நம்பூதிரிபாடு கருதுகிறார்.

எனவேதான் கடந்த கால இந்தியச் சிறப்புகளைக் கண்டு பெருமைப் படுகிற அதே நேரத்தில் அவற்றுக்கு எதிரானவற்றுக்கு உறுதியாக நின்று போராடவும் வேண்டும் என்கிறார் நம்பூதிரிபாடு.

அப்போதுதான் பண்டைய பாரதத்திற்கு உலகில் இருந்தது போன்று இப்போதும் தலைநிமிர்வு இருக்குமாம்.

ஆக, முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனிய முடைநாற்றம் வீசுகிறபடி யான அவரின் கருத்தைக் கொண்டு, அவரும், அவரைப் போன்ற மார்க்சியர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்ட, காட்டிக் கொண்டிருக்கும் ஆரியச் சார்பு வெறியர்களையும் இனங் கண்டாக வேண்டும்.

பழங்காலப் பாரதப் பெருமை என்று எந்த அளவில் பார்ப்பனிய முடைநாற்றத்தைப் பெருமைக்குரியதாக நம்பூதிரிபாடு கூறிக் கொள்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவிற்குள் அடக்கி அமிழ்த்தப்பட்டிருக்கும் பல்வேறு மொழித் தேசிய இனங்களின் வாழ்க்கையை, பண்பாட்டை, இலக்கியங்களை, அறிவாக்கங்களை எல்லாம் நசுக்கி மேலேழுந்து கொக்கரிக்கிற வெறி பிடித்த ஆதிக்கத்தைத்தான் பாரதப் பெருமை என்று நம்பூதிரிபாடு(கள் போன்றோர்) எக்காளமிட்டுக் கொள்வார்கள் எனில், அந்த ஆளுமை வெறிப் பெருமைகளை அழித்து ஒழிப்பதும், அவற்றை வீழ்த்தி ஒவ்வொரு தேச உரிமை வாழ்வையும் மிளிரச் செய்வதிலும்தான் ஒடுக்கப்பட்ட தேசங்களின், மக்களின் பெருமை உள்ளது என்று நாம் போர்ப்பறை எழுப்பியாக வேண்டும்.

ஆரியச் சார்பினர்களுக்கு வேதங்களும், இந்தியாவும் பெருமைப்பட்டுக் கொள்வதற்கானவையாக இருக்கலாம். ஆனால் நமக்கு வேதங்களும், இந்தியாவும் அதிகார வெறி படைத்ததாகவே உள்ளன.

எனவே, ‘வேதங்களின் நாடு’ - இந்தியா என்று அவர்கள் பெருமைப்படுவார்களெனில், வேத வெறி நாடே இந்தியா என்று முரசறைந்து நாம் அடையாளப்படுத்திட வேண்டும்.

- பொழிலன்