தமிழ்ச் சமூகம் ஒரு சாதிய சமூகம். சமூகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் அவர்களுக்குத் தெரியாமலேயே ஏதோ ஒரு சாதியின் உறுப்பினராகவே பிறக்கின்றன. அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களின் கல்வி, வேலை, சமூகக் கடமை போன்றவற்றோடு அவர்கள் தமது வாழ்விடத்தை எங்கே அமைத்துக் கொள்ள வேண்டும்? யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? - என்பவையெல்லாம் 'சமூக ஒழுங்கு' எனும் பெயரில் ஏற்கெனவே தீர்மானிக்கப்படுகின்றன.
இங்குப் பிறக்கின்ற எவரும் சுதந்திரமான மனிதர் இல்லை. பார்ப்பனிய மதத்தின் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் இந்து சமூக ஒழுங்கை கேள்விக்குள்ளாக்குவதும், மீறுவதும் சமூக விரோதச் செயல் என்று அனைத்து சாதியினராலும் நம்பவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே பார்ப்பனியம் ஏனைய சாதி இந்துக்கள் என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தமது ஆதிக்கத்தைக் கட்டமைத்து வருகிறது.
சமூக ஒழுங்கு என்கிற பெயரில் பார்ப்பனிய இந்து மதம் பரந்து பட்ட மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியும், அவ்வகையான ஏற்றத் தாழ்வுகளுக்குத் தங்களது வேத, புராண, இதிகாசப் புனைகதைகளின் மூலம் அங்கீகாரத்தை வழங்கியும், உயர்வு தாழ்வுக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தும் வருகிறது.
பார்ப்பனியத்தின் உயர்வு, தாழ்வு கருத்துகளைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே திருவள்ளுவர் தொடங்கி சித்தர்களும் புலவர்களும் தங்களின் பாடல்களின் வழியாகக் கடிந்து பாடியிருக்கின்றனர். ஒளவையார் போன்ற பெண் புலவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்ததோடு ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்திப் பாடியுள்ளனர்.
சித்தர்களின் தொடர்ச்சியாக வள்ளலார், அயோத்திதாசப் பண்டிதர் போன்ற பல்வேறு தமிழ்ப் பெருமக்களும் அடிப்படையில் சாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டு வந்த முறைக்கு எதிராக எழுதவும், பேசவும் தலைப்பட்டனர்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தனது நெடிய பட்டறிவின் மூலம் சாதியத்துக்கு உரிய தீர்வாகக் கடவுள் மறுப்பை முன் வைத்ததோடு மட்டுமல்லாமல், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நிறுவிடும் நோக்கில் எழுதப்பட்ட வேத, புராணங்களை, புரட்டுகளைத் தமிழக மக்களிடையே அம்பலப்படுத்தினார்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதியத்தை நீட்டிக்கச் செய்து வருகின்ற பார்ப்பனிய இந்து மதத்தின் சாதிகளைப் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். சாதியம் குறித்த அவரது நீண்ட ஆய்வுகள் 'சாதி ஒழிப்பு' எனும் ஆய்வுப் பகுதி சாதியத்தின் இருப்பை அறிந்து கொள்வதற்கான சிறப்பான பகுதியாகும்.
இவ்வாறு நீண்ட காலமாகச் சாதியத்திற்கெதிரான, மானுட விடுதலைக் குரல்கள் எழுப்பப்பட்டு வந்தாலும்கூட அவை அந்தந்தக் காலகட்டங்களில் பார்ப்பனியத்தின் அத்துமீறலுக்கு எதிரான குரல்களாக இருந்தனவே தவிர சாதியை ஒழிப்பதற்கான முழுமையான புரிதலை அனைத்து மக்களுக்கும் வழங்கி அதைப் பேராற்றல் வாய்ந்த பெரும் குரலாக மாற்றுவதில் போதிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையே தொடர்ந்தது.
1990-களில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டைத் தொடர்ந்து சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டு அம்பேத்கரின் பெயரில் சங்கங்கள், மன்றங்கள், அமைப்புகள் எனக் கட்டப்பட்டன என்றாலும் அவை எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களிடையே கல்வி கற்ற அரசு அலுவலகங்களில் பணியாற்றிய அறிஞர்களின் வழிகாட்டலிலேயே கட்டப்பட்டன.
அத்தகைய அறிஞர்களோ இரட்டை வாக்குரிமை, தாழ்த்தப்பட் டோருக்கான தனித்தேசம், தலித் அரசியல் என மக்களை வழிநடத்தியதோடு, இந்திய அரசியலில் நாட்டம் கொண்டவர்களாகவும் தமிழ்த் தேசிய அரசியலோடு உடன்பாடில்லாதவர்களாகவுமே இருந்தனர்.
அன்றைய பொதுவுடைமைக் கட்சிகளோ (சிபிஐ, சிபிஎம்) சாதி ஒழிப்பு குறித்தும், மொழித் தேச உரிமைகள் குறித்தும் போதிய கவனம் செலுத்தத் தவறி இருந்தன.
வகுப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதைக் காட்டிலும் இந்திய ஒற்றுமையை முகாமையாகக் கருதின. பாட்டாளி வகுப்புக்கு மொழி இல்லை, இனம் இல்லை என்றனர். இன்னொரு பக்கம் பொதுவுடை மைக் கட்சியினர் பலரும்கூடத் தங்கள் சாதி அடையாளங்களை விட்டொழிக்காமல் இருந்தனர்.
கேரளாவின் நம்பூதிரி, நாயனார் என்கிற பெயர்ப் பதிவு மட்டுமல்லாது, அங்கிருந்த கட்சிகளுக்குள் சாதிகளை அடையாளப்படுத்திக் கொண்டன.
தமிழகத்தில் அந்த வகையில் தங்கள் பெயர்களுடன் சாதிப் பெயர்களை ஒட்ட வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் வாழ்வியலோடு சில தோழர்கள் சாதியை ஒட்ட வைத்திருந்தனர்.
வர்க்கப் போராட்டம் நடந்து விட்டால் சாதி ஒழிந்து விடும் என்றும், எல்லாவற்றுக்கும் வகுப்பு எதிர்ப்புப் போராட்டமே ஒரே மருந்து என்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆனால், உழைக்கும் மக்களைத் திரட்டுவதற்கான திட்டமில்லாமல் தோல்வியடைந்து வந்தனர். இனவியல் கூறு கடந்து இந்தியாவிலுள்ள பாட்டாளிகள் ஏன் ஒன்று திரள முடியவில்லை என்று அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.
ஆக, இப்படியான நிலையில்தான் தமிழ்நாட்டுச் சிக்கலுக்கும் சரி, ஈழச் சிக்கலுக்கும் சரி அவர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.
இத்தகைய மூன்று நிலைப்பட்ட அரசியல் வழித்தடங்கள் ஒவ்வொன்றும் ஒரு புள்ளியை நோக்கி நெருங்காமல் திசை விலகிப் போய்க் கொண்டிருந்த அன்றைய சூழலில்தான் இம்மூன்று திசைகளும் ஒன்றிணைய வேண்டிய தேவையையும் கட்டாயத்தையும் முன்னிறுத்தி இயக்கச் செயல்பாடுகள் தேவைப்பட்டன.
இம்மூன்று அரசியல் திசை வழிகள் ஏன் ஒன்று சேர வேண்டும் என்றும் எவ்வாறு ஒன்று சேர வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் ஆய்வுகள் நடந்தன.
தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் உள்ளிட்ட தோழர்கள் த. பொ. க. (ம. இலெ.) வழி முன்வைத்த அறிக்கைகள், குறிப்பாகத் தோழர் தமிழரசன் அவர்களால் 1985 ஆம் ஆண்டு மீன்சுருட்டி சாதி ஒழிப்புக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட 'சாதி ஒழிப்பும் தமிழக விடுதலையும்' எனும் அறிக்கையை அடிப்படையாக வைத்து வெகுமக்கள் அரசியல் செயல்பட வேண்டிய தேவை அமைந்தது.
அத் தேவையை நிறைவு செய்யும் இயக்கமாகவே தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது.
ஓர் இயக்கத்தை அதாவது த.ஒ.வி.இ.-யைத் தொடங்கியது என்பது ஏதோ விருப்பத்தின் பாற்பட்டது அல்லது ஆசையின் பாற்பட்டதும் அன்று. முழுக்க முழுக்கத் தேவையின் பாற்பட்டே தொடங்கப்பட்டது.
சாதி ஒழிப்பு வகுப்பு வர்க்க ஒழிப்பு இலக்குடன் கூடிய தமிழ்த் தேசிய அரசியல் புரட்சிக்கான நோக்கம் கொண்ட நிலையிலேயே த.ஒ.வி.க. தனது அரசியலை அடையாளப்படுத்திக் காட்டியது.
ஒடுக்கப்பட்டோர் என்பது சமூக, அரசியல், பொருளியலால் ஒடுக்கப்பட்டோர் என்று விளக்கப்படுத்தியது.
தேச விடுதலை என்பது ஏதோ மொழி விடுதலை மட்டுமன்று, இனவிடுதலையும் மட்டுமன்று, அது தமிழக மக்கள் குமுக விடுதலை அரசியல் பொருளியல் விடுதலை தேவையுடையது. ஆக, மக்கள் குமுக விடுதலை அரசியலை முன் நிறுத்தாமல் தமிழ்மொழி தமிழ் இனம் விடுதலை அடைய வேண்டுமென்றால் அது எப்படி என்று கேள்வி எழுப்பியது.
கூண்டுப் பறவையைத் திறந்து விடுவது போன்றதன்று விடுதலை; அது நிலத்தை உழவுக்குப் பயன்படுத்துவது போன்ற செயலாழம் கொண்டது.
பன்னாட்டு முதலாளிகளிடமும் இந்திய வல்லரசியத்திடமும் சிக்குண்டு கிடக்கிற தமிழகத்தை மீட்டு ஒரு மக்கள் அரசை உருவாக்கும் திறன் கொண்டது. பொருளியலை மக்கள் பொருளியலாக மாற்றும் வலிமை கொண்டது. மக்களைக் கூறு பிரித்திருக்கும் சாதியம் உள்ளிட்ட சமூகக் கொடுமைகளை வேரறுப்பது.
அத்தகைய வலிமை கொண்ட அரசியலையும் அதற்குகந்த செயல் திட்டத்தையும் கொண்டதாகவே த.ஒ.வி.இ. தன்னை அணியப்படுத்திக் கொண்டது.
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் எந்த ஓர் தனிமனிதத் தலைவருக்காகவும் எந்த ஒரு தனிச் சாதி அமைப்பிற்காகவும் எந்த ஓர் அரசியல் சாயம் இல்லாமலும் முழுக்க முழுக்கப் புரட்சி இலக்கு கொண்ட, சாதி ஒழிப்பு நோக்கம் கொண்ட, இந்தியப் பார்ப்பனிய எதிர்ப்பு கொண்ட, வல்லரசு எதிர்ப்பு நோக்கம் கொண்ட தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்திக் கொண்ட ஓர் இயக்கமாகவே தொடங்கியது வளர்ந்தது, வளர்ந்து வருகிறது.
தொடக்கம் முதலே அது எதிர்கொண்ட நெருக்கடிகள் பல.
தமிழ்த்தேசிய அரசியலாளர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதி அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்ட போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களால் இது ஒரு தமிழ்த் தேசிய அமைப்பு என்று பரப்புரை செய்யப்பட்ட போதும் சாதிய ஒடுக்கு முறைகளின் போது ஒடுக்கப்பட்ட மக்களோடு களத்தில் நின்று போராடியும், தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்காகவும் தொடர்ந்தது செயல்பாடுகளை முன்னெடுத்தியிருக்கிறது. முன்னணி அமைத்து சாதி ஒழிப்பு நிலையில் தொடர்ந்து நடையிடவும் செய்கிறது.
உலகத் தமிழ் இன சிக்கல்களில் பாரிய பங்காற்றி, தமிழ்த் தேசிய அரசியலில் மார்க்சிய - லெனினிய வழிபட்ட அமைப்பு எனும் தனிச்சிறப்போடு பயணிக்கிறது.
அதேபோது, தமிழகத் தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி, தமிழ்த்தேசிய முன்னணி, தமிழக மக்கள் முன்னணி எனும் முன்னணி முயற்சிகளோடும் அண்மை ஆண்டுகளாய்ப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பிலும் இணைந்து இயங்குகின்றது.
அவ்வகையில் அக் கூட்டமைப்பு முன்னெடுத்திடும் அனைத்து முயற்சிகளிலும் தோளடு தோள் நின்றிருக்கிறது.
அவ்வகையில், நீலச் சட்டைப் பேரணியுடன் சாதி ஒழிப்பு அரசியலை அதன் வழிபட்ட விடுதலையை வென்றெடுப்பதற்கு இது போன்ற சாதி ஒழிப்பு மாநாடுகள் வழி ஊக்கத்தையும் உறுதியையும் பெறுவோம்!
- நிலவழகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்