தமிழர்கள் அடிமைப்பட்டிருக்கிறார்கள்; தாங்கள் அடிமைப் பட்டிருக்கிறோம் என்பதைக் கூட உணர இயலாத அடிமைத் தனம். ஒரு குமுகம் விடுதலை அடைய வேண்டும் என்றால், அந்தக் குமுகம் எந்த வகைகளில் எல்லாம் அடிமைப்பட்டிருக்கிறது என்று முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களால் உரிமையாகச் சிந்திக்கவும் இயலவில்லை, செயல்படவும் இயலவில்லை. தமிழர்கள் எவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டும் என்றும், எவ்வாறெல்லம் செயல்பட வேண்டும் என்றும் இந்திய அரசும் பன்னாட்டு நிறுவன வல்லரசுகளுமே. தங்கள் அதிகாரங்களைக் கொண்டு ஆளுமை செய்து தமிழர்களை அடக்கி வைத்திருக்கின்றன. தாங்கள் என்ன மொழியினர் என்று பதிந்து கொள்ள முடியாத நிலையில் ஓர் இனம் இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இனம் என்றுதான் முதலில் சொல்ல வேண்டும். உலகிலுள்ள மிகப்பழமையான இனமக்களுள் முதன்மையானவர் களான தமிழர்களுக்குத் தங்கள் தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பு இருந்திடவில்லை.

pozhilanதங்கள் தாய்மொழி தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை.

வழக்கு மன்ற வழக்காடல்களில் தமிழ்மொழி இல்லை.

ஆட்சிமொழியாகவோ அலுவல் மொழியாகவோ தமிழ் இல்லை. தமிழ்நாடு என்று ஒரு மாநிலத்தை அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்த அவர்களால் வலுவான ஓர் அரசு அதிகாரத்தை அமைத்துக் கொள்ள முடியவில்லை. அதிகாரமற்ற அரசை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக் கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிச் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாமல், தமிழ்நாட்டு மக்களின் தேவைக்குரிய தொழில் வளத்தை உருவாக்கிக் கொள்ளவோ பெருக்கிக் கொள்ளவோ முடியாமல் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டு விளைச்சல் பொருள்களுக்கு விலையை உறுதிப் படுத்துகிற அதிகாரம்கூட இல்லாது அடிமைகளாய் இருக்கின்றனர். தமிழர்களால் தாங்கள் விரும்புகிற கல்வியைப் பயில இயலவில்லை. தாங்கள் விரும்புகிற தொழில்களைச் செய்ய இயலவில்லை. தங்கள் தங்கள் தாய்மொழியில் படித்தால்தான் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும் என்று உலகி லுள்ள பெரும்பான்மை இன மக்கள் தங்களின் தாய்மொழி வழியிலேயே படித்து விளங்கிக் கொண்டு தங்கள் தாய்மொழி வழிக் கல்வி அறிவு பெறுவது மட்டும் அல்லாது தொழில்கள் பணிகள் வழியே வாழ்கின்றனர். ஆனால் தமிழர் களுக்கோ தங்கள் தாய் மொழியில் படிக்கவும் வழியிருப்பதில்லை, வேலை செய்யவும் வழி அமைவதில்லை. அப்படியெல்லாம் ஏன் செய்ய முடியவில்லை என்று எண்ணிப் பார்ப்பதுமில்லை? சிலர் நினைக்கின்றனர் இக்கால் உள்ள அறிவியலை யெல்லாம் தமிழில் படித்திட முடியாது. அந்த அளவில் நம் தாய்மொழி வளமான மொழியில்லை என்று நினைக்கின்றனர். தாய் மொழி தமிழ் வழியில் இக்காலத்தின் அறிவியலை, பொறியியலை, பிற துறை அறிவாக்கங்களை எல்லாம் பயில முடியுமா? முடியாதா?

அவ்வாறு பயில இயலாது என்று கருது வீர்களானால், அவற்றுக்கான காரணங்கள் என்ன? தமிழ்வழியில் படிக்கின்ற அளவிற்குத் தமிழ் தகுதியுடையதாக இல்லையா? அல்லது தமிழர்கள் தகுதியுடையவர்களாக இல்லையா? அல்லது தமிழர்களைத் தமிழ் வழியில் பயில வைக்கின்ற அளவிற்குத் தமிழக அரசு தகுதி உடையதாக இல்லையா? தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி

மூலச்சொற்களை ஏராளமாகப் பெற்றிருக்கிற மொழி.

இன்றும் வெகுமக்கள் அளவிலும், இலக்கியப் பயன்பாடுகளிலும் வழக்கில் உள்ள மொழி.

அறிவியல் தன்மையுள்ள இலக்கணச் சிறப்பைக் கொண்ட மொழி.

மிக விரிந்த இலக்கியச் சிறப்பும், பரப்பும் கொண்ட மொழி.

செம்மொழி என்று உலக மொழியியல் அறிஞர்கள் பலரும் மதிப்பிடும் வகையில் சிறப்புள்ள தமிழுக்கு எல்லா வகைத் தகுதி களும் உண்டு. அப்படியான நிலையில். புதியதாக வளர்ந்திருக்கின்ற அறிவியலையும் வளர்ந்து வருகின்ற அறிவியலையும் தமிழில் வழங்கும் அளவிற்குத் தமிழ்மொழி ஆற்றல் கொண்ட மொழியியல் அடித்தளங்களைப் பெற்றிருக்கிறது. என்னவகைக் கருத்துகளையும் செய்திகளையும் வெளிப்படுத்திக் காட்டுகிற வகையில் வளமான சொற்கள் தமிழில் உண்டு அல்லது சொற்களை உருவாக்கிக் கொள்ளும் மொழி வளம் தமிழுக்கு உண்டு. அப்படியான தகுதி தமிழுக்கு உண்டு என்பது போலவே தமிழரும் அந்த அளவில் மேம்பட்ட அறிவியலை வளப்படுத்தி அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற குமுகப் பின்னணியைக் கொண்டவர்கள். அதற்குக் காரணம் பழந்தமிழ்க் குமுகம் வேளாண் வளர்ச்சியை, ஆற்றல் பெற்ற தொழில் வளர்ச்சியை, கடல் கடந்து செல்லும் திறன் வளர்ச்சியை அதற்குரிய அறிவைப் பெற்று இருந்த குமுகமாக வளர்ந்து இருந்தது என்பதே ஆகும்.

இன்றைய அளவில் கணிப்பொறி அறிவியலிலும், வானியல் அறிவிலும், மருத்துவ - தொழில்நுட்ப அறிவியலிலும் தமிழர்கள் உலகளவில் மேம்பட்ட நிலையில் இருப்பதே இதற்கெல்லாம் சான்று. ஆக, தமிழ்மொழியும் தமிழர்களும் இவ்வாறு ஆற்றல் கொண்ட நிலையில் இருந்தும் அந்த ஆற்றல்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய அரசதிகாரம் இல்லாததால் தான் தமிழ் தமிழர்களின் கல்வி மொழியாக, அரசு மொழியாக, அலுவல் மொழியாக, நயன்மை(நீதி) மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கோலோச்ச முடியாமல் இருக்கிறது. தமிழ் மொழியை இந்த நிலை களின் பயன்பாடுகளிலிருந்து நீக்கி அங்கு ஆங்கிலத்தையும் இந்தியையும் சமசுக்கிருதத்தையும் கட்டாயப்படுத்தித் திணிக்கின்ற வேலைகளையே இந்திய அரசும் பன்னாட்டு முதலீட்டு அதிகார வெறிப் போக்குகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே தமிழில் கல்வி பயில்வது இல்லாமல் ஆகி வருகிறது. ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் தமிழ் இருக்க வேண்டிய நிலையை இழந்திருக்கிறோம். வழிபாடுகளை, சமயச் சடங்குகளை, குடும்ப நிகழ்வுகளைத் தமிழில் செய்ய மறுக்கப்படும் நிலையில் இயலாமல் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இத்தகைய போக்குகளை மாற்ற வேண்டுமானால் தகுதியான தமிழ்மொழியையும் தகுதியான தமிழ்க் குமுகத்தையும் பெற்றிருக்கிற தமிழர்கள் தகுதியான அதிகாரங்களையும் பெற்றாக வேண்டியவர்களாக இருப்பது கட்டாயமாகின்றது. அந்நிலையில், தகுதியான அதிகாரங்களைப் பெற்றிருக்கிற வகையில் தமிழக அரசு தகுதி உடையதாக இருக்கிறதா என்று கருதுவோமானால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

ஏன் அவ்வாறு தகுதியுடையதாக இல்லை? - மேற்சுட்டப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளைச் சற்று ஆழ்ந்து நாம் ஆய்வு செய்து உணர்வோமானால், பல உண்மைகள் நமக்குத் தெரியவரும். ஆங்கிலேயன் வந்து அவன் ஆட்சி அதிகாரத்திற்கென உருவாக்கப் பட்டதே இந்தியா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பு இந்தியா என்ற ஒன்று இருந்து விடவில்லை. அந்தந்தப் பகுதிகளை ஆண்ட அரசர்களின் பெயர்களிலேயே. அந்தந்த அரசப் பகுதிகள் அழைக்கப்பட்டன. ஆங்கிலேயனே அனைத்துப் பகுதிகளையும் இணைத்து இந்தியா என்ற ஒன்றை உருவாக்கினான். தமிழ்நாடும் அவன் உருவாக்கிய அந்த இந்திய ஆட்சிப் பகுதிக்குள் அடக்கப்பட்டது.

ஆங்கிலேயே அரசுக்கு அந்த வகையில் அடிமைப்பட்டு இருந்ததால் தமிழர்கள் ஆங்கிலேயப் பொருளியலுக்கும் ஆங்கிலேய அரசியலுக்கும் அடிமைப்பட்டது போல ஆங்கில மொழிக்கும் அடிமைப்பட்டுப் போயினர். ஆட்சி மொழியும், அலுவல் மொழியும், நயன்மை (நீதி) மொழியும் ஆங்கிலமாகவே ஆக்கப்பட்டது. ஆங்கிலேயன் தன் ஆட்சி அதிகாரங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியப் பார்ப்பனிய அதிகார வகுப்பினர்களிடம் கையளித்து விட்டுச் சென்றபின், இந்திய அதிகார வகுப்பினரின் அரசியல் அதிகாரமே கோலோச்சத் தொடங்கியது.

பன்னாட்டு முதலாளிகளின் உறவோடு இந்தியப் பார்ப்பன மார்வாடி பனியா பெருமுதலாளிகளின் பொருளியலும் அரசியலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி இன மக்களையும் அடக்கி ஆண்டது. ஆங்கிலமொழிக் கல்விக்கும் அரசு நடைமுறைகளுக்கும் ஏற்கனவே அடிமைப்பட்டிருந்த மக்கள் இந்தியப் பார்ப்பனிய அதிகார வகுப்பின் அதிகாரத்தின் காரணத்தால் சமசுக்கிருதத்துக்கும் இந்திக்கும் அடிமைப்படத் தொடங்கினர். இத்தகைய அடிமைத்தனங்களால் ஒவ்வொரு மொழித் தேச மாநிலங்களும் தங்களின் அரசியல் அதிகாரத்தை, பொருளியல் உரிமைகளை மட்டுமன்றி வரலாற்றை, பண்பாட்டை இழந்து வருவதோடு, மொழி உரிமைகளையும் பெரும்பகுதி இழந்துவிட்டன.

தமிழ்வழியில் கல்விபெற முடியவில்லை என்பது மட்டுமன்று, கல்வி உரிமையையே தமிழ்நாட்டிடமிருந்து 1970 ஆம் ஆண்டுகளின் நெருக்கடிநிலைக் காலங்களில் இந்தியப் பார்ப்பனிய அரசு பறித்துக் கொண்டது. மொழித் தேச மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை வேண்டும் என்பது மொழித் தேசங்களின் கோரிக்கையாக இருக்க, இந்தியப் பார்ப்பனிய அரசு அதைப் பொருட்படுத்துவதில்லை. தமிழ்நாடு என்னும் இன்றைய தமிழ்மொழித் தேசத்திற்கு உரிய மாநில அரசு தன் பொருளியலை, அரசியலை, வரலாற்றை, பண் பாட்டை என அனைத்து நிலைகளையும் காத்துக் கொள்ளவும் அவற்றின் மீதான எல்லா வகை வெறியாட்டங்களையும் விரட்டியடிக்கவும், தன் விடுதலைக்காகவும் பெருமளவில் உழைக்க வேண்டியுள்ளது. அப்படியான போராட்டங்களில் தமிழ் மொழியின் உரிமைப் போராட்டம் முதன்மையானதாகின்றது.

தமிழ் மொழியில் கல்வி, தமிழ்மொழியில் வழிபாடு, தமிழ்மொழியில் அரசாட்சி, தமிழ் மொழியில் அலுவல்கள், தமிழ் மொழியில் நயன்மை (நீதி) என்கிற வகையில் தமிழ் மொழிப் பயன்பாட்டைத் தமிழர்கள் நடைமுறைப் படுத்திடவில்லை யென்றால், தமிழர்கள் மட்டுமல்லர் தமிழும் அழிக்கப்பட்டுவிடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் . எனவே அவ்வகையில் தமிழ்மொழிக் காப்பின், மீட்பின் தேவையை உணர்ந்தாக வேண்டும். அதன் வெளிப்பாடாய் முதலில் தமிழர்கள் அனைவரும் சமசுக்கிருதக் கலப்பற்ற தமிழில் தங்கள் பெயர்களைச் சூட்டிக் கொள்ள வேண்டும். தமிழர்களின் குடும்ப, குமுக வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தையும் தமிழிலேயே நடத்திட வேண்டும். தமிழ் வழியிலேயே கல்வி கற்றிட வழி அமைத்திடல் வேண்டும், அத்தகைய நடைமுறைகளே தமிழ்க் காப்பின் முதற்கட்டப் பணிகள் என்று உணர்ந்தாக வேண்டும். தமிழ் என்பது மேடை அழகுக்கோ, இலக்கிய அடையாளத்துக்கோ மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்வியல் அடையாளத்திற்குமானது. தமிழர்களின் உரிமைப் போராட்ட எழுச்சிக்கு மானது. தமிழைக் காப்போம்! தமிழரை மீட்போம்!!

- பொழிலன்