முகம் திருப்பிக் கொண்டு
செல்கிறார்கள்
மரியாதை நிமித்தம்கூட
வணக்கமோ கை குலுக்கலோ இல்லை
கவனமாய் என் பெயர் தவிர்க்கும் போது
கள்ளக் கண்கள் அவர்களுக்கு
விருதுக்கு என்னை அடையாளம் காட்ட
ஒரு போதும் அவர்கள்
ஞானம் அனுமதிப்பதில்லை
கை தட்டிக் கொண்டிருந்தவரை
நானும் நல்லவன் தான்
கவிதையோடு என் பெயரும்
வெளி வரத் தொடங்கிய பிறகுதான்
சல்லித்தனங்கள் அவர்களுக்குப் பழகின
வேண்டுமென்றே என் படைப்புகளை
ஒதுக்கும் மனநிலை தீண்டாமைக்கு
நிகர் தான்
எனைக் குத்தி கிழிக்கும் கண்களை
நான் சிரித்துக் கொண்டே ரசிக்கிறேன்
மொக்கை மீம்ஸ்களோடு வாழப்
பழகியவர்களுக்கு வாழ்வின் தீரா
பக்கங்களை எழுதுபவனை ஒதுக்குவது
சுலபம் தானே
வாய்ப்பு கிடைத்தால் என்னைக்
கொன்று போடும் பின்னூட்டங்களோடு
அலைபவர்களுக்கு சொல்லிக்
கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை
ஆனால் இன்னும் கொஞ்சம் எழுத
கவிதை இருக்கிறது...!

- கவிஜி

Pin It