விளக்கு அணைக்கப்பட்ட அறைக்குள்
பூச்சிகளின் சத்தங்கள்
கேட்காதபடிக்கு
இரைச்சலூடே சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி
சாளரத்தின் வழி உள்வரும்
ஈரக்காற்று சொல்கிறது எங்கோ பெய்யும் மழையை
மீன்கள் பூக்காது அடர் இருளைப்
பூசியிருக்கிற வானம்
இங்கேயும் பொழியலாம்
புழுக்கத்துடன் நகர்கின்ற இவ்விரவில்
அடுத்தடுத்தாய் உதிர்கிறது பூ
ஆயிரம் களிறுகள் நெஞ்சில் மிதிக்கும் இரணத்தை உணர்த்த
புரண்டு புரண்டு
நீண்டு கொண்டே இருக்கிறது.

                            ***

புத்தகங்கள் கணக்கும் பையை ஏந்தியபடி பிஞ்சுகள்
கனவுகளை அள்ளி திணிக்கிறேன் பாரமென அழுத்த
விரைகிறார்கள் பள்ளிக்கு
சுருக்கிட்ட நீண்ட மாயக் கயிறொன்று தொங்குகிறது
ஸ்டெதஸ்கோப் என நம்ப
எழுத்துருக்கள் ஒவ்வொன்றும் மிரட்சி செய்கின்றன
பொம்மைகளின் தாம்பை பிடித்தபடி தேசாந்திரிகள்
ஓடிக் கலைத்த அதன் தலையிலடிக்க
எழுதுபலகையின் கீழ்
உதிர்ந்து கிடக்கின்றன எதிர்காலம்
சுண்ணக் கட்டியின் துகள்களென

- சிவ.விஜயபாரதி

Pin It