இந்திய ஒன்றியத்தில் பல நூற்றாண்டுகளாகச் சாதிய அமைப்பு எவ்வாறு நீடித்து வருகிறது என்கிற ஆய்வைச் சூழலியலாளர் மாதவ் காட்கிலும் மானுடவியலாளர் கைலாஷ் மல்கோத்ராவும் மேற்கொண்டனர். ஏறத்தாழ 12 ஆண்டுக்காலம் மகாராட்டிரா பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடந்த ஆய்வில் இயற்கைவள பயன்பாடு எவ்வாறு சாதிய அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.

அவ்வகையில் சூழலியல் சாதியத் தொடர்பை வெளிக்கொணர்ந்தனர். ஒரு சூழல்வெளியும் (Ecological Space) அதன் மூலவளமும் (Natural Resources) ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கட்டுப்பாட்டிலேயே வெகுகாலமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு நாம் பார்ப்பனர், சத்ரியர், வைசியர் என்று வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும் "ஆரியர்' என்று அதைச் சுருக்க முடியும். இயற்கை வள துய்ப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மண்ணின் மைந்தர்கள் சூத்திரர்களாகவும் சண்டாளர்களாகவும் மிலேச்சர்களாகவும் சபிக்கப்பட்டதே வரலாறு.

கி.மு. 1000 - 500களில் வேதகால மக்கள் சிந்துகங்கை ஆறுகளின் இடைப்பட்ட வண்டல் நிலத்தில் குடியேறியதில் இருந்து இது தொடங்கி விடுகிறது. அதற்கு முன்பு "விரிஜனா' என்றழைக்கப்பட்ட மேய்ச்சல் வெளிகள் இலவசப் பயன்பாட்டில் இருந்தன. பின்னர் கங்கைச் சமவெளியில் இருந்த காட்டு மரங்களின் கனிகளும் வேர்களும் பார்ப்பனர்களின் சொத்தாக மாறின.

அவற்றின் முதல் உரிமை பார்ப்பனர்களுக்கே என்று "சாந்தி பர்வா' சட்டம் வகுத்தார். எதிரிகளிடமிருந்து பறிக்கப்பட்ட பசுக்களின் பாலை பார்ப்பனர்கள் குடிக்கலாம் என்பதால் அவற்றையும் அவர்களுக்கே உரிமையாக்கி சட்டம் இயற்றினார். சாணக்கியர் இன்னும் ஒருபடி மேலே சென்றார். சோமபான உற்பத்திக்காகப் பார்ப்பனர்களுக்குக் காடுகளை வழங்க வேண்டும் என்றார் அவர்.

எவ்வளவு நாள்தான் சோமபானம் குடித்துக் கொண்டிருக்க முடியும்? உண்ணுவதற்கு உணவு வேண்டாமா? வேளாண் நிலத்தை விரிவாக்க காடுகள் எரிக்கப்பட்டன. "சதபதா பிராமணா' என்பவர் "விதேக மாதவ' எவ்வாறு காடுகளை எரித்துக் கொண்டே முன்னேறி வடக்கு பீகாரிலுள்ள "சடனிரா' வரை சென்றடைந்தனர் என்பதைக் குறிப்பிடுகிறார்.

தம் வாழ்விடமான காட்டிலேயே பல பழங்குடிகளும் உயிரினங்களும் உயிரோடு எரிக்கப்பட்டனர். வாயு புராணமும் ஆரியர்கள் வன்முறையின் மூலம் ஆறுகள், நிலங்கள், குன்றுகள், மரங்கள், தாவரங்களை தமதாக்கிக் கொண்டனர் என்று ஒப்புக்கொள்கிறது.

நிலம் கைவசமானதும் ஆரியரின் புவியியல் எல்லையைத் தீர்மானிக்கிறார். மனு அதற்கு "ஆர்ய வர்த்தம்' என்று பெயரிடுகிறார். அது கிழக்கு கடலுக்கும் மேற்கு கடலுக்கும் இடையேயும், வடக்கே இமயத்துக்கும் தெற்கே மால்வா மலைகளுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகவும் அமைந்தது. கிருஷ்ணசாரம் எனும் கறுப்புக் கோடுகள் கொண்ட மான்கள் உலாவும் இந்த இடம்தான் வேள்விகள் செய்வதற்கு மிகச் சிறந்த இடமாகும். (ஏனெனில் இந்த மானின் தோல்தான் அன்றைக்குப் பார்ப்பனர்களின் மேலாடை) மற்றவை மிலேச்ச தேசம் எனப்பட்டது (மனு: 2223).

உண்மையில் மத்திய ஆசியாலிருந்து தொடர்ந்து மாடு மேய்த்து வந்த இடங்கள் அனைத்தையும் உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஆரியரின் "அகண்ட பாரதம்' கனவு. அவர்களுடைய தொடக்க நூல்களும் அக்கனவையே தூண்டின. 'பிருது' என்கிற அரசனின் பெயருக்கே "அகலமானது' என்பதுதான் பொருள்.

இச்சொல்லின் பெண்பால் வடிவம்தான் "பிருத்வி', அதாவது "நிலம்'. ஐரோப்பாவின் ஆரிய வெறியர்களான நாஜிகளும் "லெபன்ஸ்ரோம்' (வாழுமிடம்) என்கிற பெயரில் தம் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி அகண்ட நிலம் தேடியதை இத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம் என்கிறார் டோனி வெண்டிகர்.

இவ்வாறு சொத்து உருவானதும் வர்ணமுறை கெட்டிப்படுத்தப்பட்டது. "புனித ஞானத்துக்குச் சொந்தமானவர்கள் "பார்ப்பனர்' ஆயினர். வேட்டையாடுபவர்கள் மற்றும் அழிவை ஏற்படுத்துபவர்கள் "சத்ரியர்கள்' ஆயினர். உழவர்கள் "வைசியர்கள்' ஆனார்கள் (அப்போது வணிகம் தொடங்கப்படவில்லை). துயரம் தாங்காது ஓடியவர்களும் உடல் உழைப்பாளிகளும் இழிவானவர்களும் பலவீனமானவர்களும் "சூத்திரர்' என வகுக்கப்பட்டதாக வாயு புராணம் கூறுகிறது என்பார் ஆர்.எஸ்.சர்மா.

வண்டல் மண், இரும்புக் கலப்பை கூட்டணி ஆரிய வர்த்தத்தின் தானிய உற்பத்தியைப் பெருக்கியது. நாற்றுப் பிடுங்கி நடும் முறை உருவானதும், விளைச்சல் இருமடங்காகி உபரி பெருகிற்று. இதனால் ஆடம்பரமான வேள்விகள் நடத்தி பார்ப்பனர்கள் "பலி' பெற்றனர். பலி என்பது காணிக்கை.

பார்ப்பனர்களோடு சத்ரியர்களும் இவ்வகை அன்பளிப்புகளைப் பெற்றனர். இதனால் உழைக்கும் மக்கள் பாதிப்படையத் தொடங்கினர். கி.பி. 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூத்திரர்களும் வைசியர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய மறுத்தனர். இதுவே சமஸ்கிருத அறிஞர் ஆர்.சி.ஹஸ்ரா என்பவரால் "கலிகாலம்' என அழைக்கப்பட்டது.

தொடக்க யுகமான கிருதயுகம் ஆரியர்களால் "சத்ய யுகம்' எனப் புகழப்பட்டது. காரணம் அக்காலத்தில் அவர்கள் உழைக்கவில்லை, நூற்கவில்லை. நிலம் தானாகவே வேண்டியதை எல்லாம் வழங்கியது அடுத்தடுத்த யுகங்களான திரேத, துவாபர யுகத்தில் நிலைமை படிப்படியாக வீழ்ந்து கலவரமான கலியுகம் பிறந்துவிட்டது. இதற்குமேல் விட்டுவைக்க முடியாது.

சட்டங்களை இறுக்கி, "தண்டநீதி' தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. வர்ணக் கடமையை மீறுபவர்களை அடக்க சத்திரியர்கள் அணியமாகினர். வாயு புராணத்தின்படி பிரம்மன் சத்திரியர்களுக்கு போர் செய்வதைத் தொழிலாகப் பரிந்துரைத்தார்

ஆரியவர்த்தம் முழுமையும் கட்டுக்குள் கொண்டுவர நால்வர்ணக் கொள்கைகள் நான்கு திசைகளுக்கும் விரிவடைந்தது. இதற்கு இராமாயணம், மகாபாரதக் கதைகள் உதவின. மகாபாரதத்தின் புவியியல் அச்சுக் கிழக்கு மேற்காகவும், இராமாயணத்தின் புவியியல் அச்சு வடக்கு தெற்காகவும் அமைந்திருந்தன. பஞ்சாப்பையும் வங்காளத்தையும் இணைத்த கிழக்கு மேற்காக அமைந்த "உத்தரபாதா' வணிக வழியும், தெற்கு நோக்கி சென்ற தட்சிணபாதா வழியும்தான் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளான NH2 மற்றும் NH7 ஆகியவை. இவை இரண்டும் சந்திக்கும் புள்ளியே காசி நகரம். காசி என்ற பழங்குடியினர் வாழ்ந்த அந்நகரம், அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு சூத்திரர்கள் ஆக்கப்பட்ட பின்னர் "வருணை ஆறும் அசி ஆறும் (இன்றைக்குச் சாக்கடையாக ஓடுவது) இணையும் "வாரணாசி' ஆக்கப்பட்டது. காசி எனும் பழங்குடி யினப் பெயர் மறக்கடிக்கப்பட்டது.

நால்வர்ணத்தாரின் பிணத்தைப் புதைக்கும் இடுக்காட்டின் திசைகளும் தீர்மானிக்கப்பட்டது. சூத்திரர்களுக்குத் தென்திசை ஒதுக்கப்பட்டது (மனு. 5:92; அர்த்த சாஸ்திரம். 2:4). தெற்கே விந்தியமலை இருந்ததே காரணம். ஆரிய நாகரிகம் விந்தியத்துக்குத் தெற்கே நுழையாத மிகப்பழையக் காலத்தில் "தக்கிணப் பாதம்' நாடு கடத்தப்பட்டோர்களின் இடமாகக் கருதப்பட்டது என்பது மெக்டொனால்ட் மற்றும் கெய்த் ஆகியோரின் கருத்தாகும். எனவே சதுர்வர்ணம் தென்னிந்தியாவில் எக்காலத்திலும் நடைமுறையில் இருந்ததில்லை என்பார் பி.டி. சீனிவாச அய்யங்கார்.

விந்திய மலையைக் கடந்து ஊடுருவாதபடி அங்கு வசித்த பழங்குடிகள் ஆரியர்களைத் தடுத்ததால் தெற்கு யமனின் திசையாகக் கருதப்பட்டது. அகஸ்தியரை விழுங்கிய வாதாபியின் கதை இதைதான் தெரிவிக்கிறது. இதனால் பழங்குடிகள் வசித்த அப்பகுதியில் (நிஷாட தேசத்தில்) புண்ணிய நதிகளும் இல்லாது போயிற்று.

இதற்கு எதிர்நிலையில் தெற்கில் வசித்தவர்கள் வினையாற்றினர். தமிழ்நாட்டின் பெரும்பாலான நாட்டார் தாய்த் தெய்வங்கள் தொன்னூற்று ஒன்பது விழுக்காடு தம் நிலத்துக்கு ஆபத்தைக் கொண்டுவரும் திசையான வடக்கு நோக்கியே வீற்றிருந்து காத்து வந்தனர் என்கிறார் தொ. பரமசிவன் தமிழர்களின் கூட்டு நனவிலி மனதில் இன்றைக்கும் வடக்கு ஆகாத திசைதான்.

"வடக்கே தலை வைத்துப் படுக்காதே' என்கிற சொற்றொடரின் உளவியலும் இதுதான். இதை மறைப்பதற்காகவே இன்றைய இந்துத்துவா அறிவியல் "காந்தப்புலம்' போன்ற கதைகளை உருவாக்கி அளிக்கிறது. காற்றைப் பற்றி சங்க இலக்கியம் விரிவாகப் பேசியுள்ளது. கொண்டல், கோடை, தென்றல், வாடை என்று அனைத்து திசைகளிலிருந்தும் வரும் காற்றை வரவேற்கும் அது வடக்கிலிருந்து வரும் "வாடை' காற்றை மட்டும் பல இடங்களில், "இரக்கமில்லாதது, கொடியது' என்று கடிகிறது. தமிழர்களுக்கு வடக்கிலிருந்து காற்று வந்தால்கூடப் பிடிக்கவில்லை. பின், வடக்கிலிருந்து கருத்தியல் வந்தால் பிடிக்குமா? 

அனைத்தையும் மீறி பார்ப்பனியம் தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் அது உடன் அழைத்துவந்த சாதிய அழுக்கு தமிழகத்தின் திசைகளில் படிந்தது. தமிழக நில அமைப்பு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவதாகும். மேற்கு மேடான பகுதி, கிழக்கு தாழ்வான பகுதி என்கிற இயற்கை அமைப்பையே அவர்கள் உயர்வுதாழ்வு என்கிற சாதியக் கருத்தியலாக மாற்றினர்.

இதனால் சேரியின் திசை கிழக்கு என்றானது. "கீழத்தெரு, கீழ்குடி போன்ற சொற்கள் சாதியச் சொற்களாக மாறிவிட்டன . குறி ப்பாக டெல்டா மாவட்டங்களில் இந்நிலைமையைக் காணலாம்.

இதனை ஒட்டி நீர்த் தீண்டாமையும் தொடர்ந்தது. ஊரின் மேட்டுப்பகுதியில் அதாவது மேற்கு பகுதியில் வசித்த உயர்சாதியினர் புழங்கிய நீரைதான் பள்ளப்பகுதியில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்துமாறு வசிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் அடுத்த ஊர் அமைந்திருக்கும்போது, முதலாவது ஊரிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் புழங்கிய நீர்தானே அதற்கடுத்த ஊரின் மேட்டுப்பகுதிக்குச் செல்லும்? அங்குள்ள உயர்சாதி மக்கள் அதைதானே பயன்படுத்த வேண்டும்? இதை யோசித்தார்களா எனத் தெரியவில்லை. சாதியம் அந்தளவுக்கு அறிவை மழுங்கடித்திருந்தது. ஆகவே, திசைகளில் படிந்திருக்கும் சாதிய அழுக்கைக் கழுவி துடைப்பதும் நம் பணியே.  

நெறித்துணை நூல்கள்:

  1. அய்யங்கார், பி.டி. சீனிவாச, (1989), தமிழில்: புலவர்.கோவிந்தன், தமிழர் வரலாறு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் லிமிடெட், சென்னை.
  2. அர்த்த சாஸ்திரம், (2017), உரை அன்னை ஸ்ரீஆனந்த நாச்சியாரம்மா, ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ், பத்தாம் பதிப்பு, சென்னை.
  3. கோசாம்பி, டி.டி. (2017), தமிழில்: ஆர்.எஸ்.நாராயணன், பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும், என்சிபிஎச், நான்காம் பதிப்பு, சென்னை.
  4. சஞ்சீவ் சன்யால், (2016), தமிழில்: சிவ.முருகேசன், ஏழு நதிகளின் நாடு, சந்தியா பதிப்பகம், சென்னை.
  5. சர்மா, ஆர்.எஸ். (2017), தமிழில்: பாரதி, சுவிதா முகில், பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம், புதுமை பதிப்பகம், மூன்றாம் பதிப்பு, சென்னை.
  6. பரமசிவன், தொ. (2012), தெய்வம் என்பதோர், மணி பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, பாளையங்கோட்டை.
  7. மனுதர்ம சாஸ்திரம், (2009), இராமானுஜச்சாரியார், திராவிடர் கழகம்,, மூன்றாம் பதிப்பு, சென்னை.
  8. மனுதர்ம சாஸ்திரம், (2017), உரை அன்னை ஸ்ரீஆனந்த நாச்சியாரம்மா, ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ், நான்காம் பதிப்பு, சென்னை.
  9. வெண்டி டோனிகர், (2016), தமிழில்: க.பூரணச்சந்திரன், இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி.

- நக்கீரன்

Pin It