Ambedkar

சாதி ஒழிப்பிலிருந்தே அம்பேத்கரியல் என்கிற மானுட சமத்துவத்திற்கான தத்துவம் உருப்பெறுகிறது.இந்தியாவின் மிக நீண்டதும் நெடியதுமான சிக்கல்களில் ஒன்று சாதி. கி.மு. 1700 – 1500 க்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய ஆசியாவில் வாழ்ந்த ‘தொல் நோர்த்' இனத்தவரான ஆரியர், இந்தியாவின் சிந்து மற்றும் கங்கைச் சமவெளிகளில் குடியேறினர். ஆரியக் குடியேற்றங்கள் தொடர்ந்து குழுக் குழுவாக நீண்ட காலத்திற்கு நடைபெற்றன. இக்குடியேற்றங்களை ஊடுறுவல் என்று அழைப்பதைவிடவும் படையெடுப்பு என்றே சொல்ல வேண்டும். இப்படிச் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. “ஆரியர்களின் வெற்றி, சிந்து சமவெளி நாகரிக மக்களை கூட்டங் கூட்டமாகக் கொன்று ஒழித்ததிலேயே சாத்தியமாகியுள்ளது. உலகின் மாபெரும் நாகரிகங்களில் ஒன்றை அழித்தொழித்து உருவானதுதான் ரிக் வேதம்” என்கிறார் சர். லெனார்டு உல்லி. பெண்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக் கூடுகளைக் கொண்ட குவியல்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக, ஆய்வாளர்கள் தங்களது அகழ்வாய்வு அறிக்கையில் எழுதியுள்ளனர் (‘இந்தியாவின் அரசியல் வரலாற்றை வாசித்தல்', ஆர்.சி. மஜும்தார், 1976).

ஆரியப் படையெடுப்பிற்குப் பிறகு இம்மண்ணில் சாதி உருவானது. (இச்ண்tஞு' என்ற ஆங்கிலச் சொல்’இச்ண்tச்' எனப்படும் ஒரு போர்ச்சுகீசிய சொல்லில் இருந்து வந்தது. ‘ஜாதி' என்பது வட மொழிச் சொல்லாகும்). சாதிக்கு அடிப்படையாக இருப்பது வர்ணாசிரம தர்மம். நால்வர்ணப் பாகுபாடு. இப்பாகுபாட்டை உருவாக்கியவர்கள் ஆரியர்களே.

அதிகாரம், சமூக மதிப்பு, செல்வங்கள், கல்வி போன்றவை மேல் வர்ணத்தாருக்கு மட்டுமே எப்போதும் கிடைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான ஒரு சுயநலத் திட்டமே வர்ணப் பாகுபாடு. இறுக்கமான விதிகளுடன் உருவாக்கப்பட்ட நால்வர்ணப் பாகுபாடு, இந்தியாவை கைப்பற்றிக் கொண்டது.

சாதி ஒரு கருத்து நிலை. அதற்கு உருவம் இல்லை. அதை நிலைப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களை செயல்படுத்தும்போது அது வடிவம் கொள்கிறது. சாதி காற்றைப் போன்றது. அது எல்லா இடங்களிலும் நுழைகிறது. இந்தியாவின் அன்றாட வாழ்வை, இயக்கத்தை, வளர்ச்சியை, சாதியே தீர்மானிக்கிறது. ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் பிறப்பு முதல் இறப்பு வரை சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் இறந்த பிறகும் அது பின் தொடர்கிறது. ‘இந்தியாவில் சாதி' என்ற ஜே. எச். ஹட்டனின் நூலில், சாதியை விளக்க ஜே. வில்சனின் நூலில் இருந்து ஒரு பகுதி மேற்கோளாகக் காட்டப்படும். அப்பகுதியை இங்கே நாமும் நினைவு கூரலாம்.

“இங்கே பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய அங்கீகாரம், சமூக ஏற்பு, புனிதத்தன்மை, மதச் சடங்குகளை செய்வதற்கான அனுமதி என எதிரும் புதிருமான விதிமுறைகளை சாதி வழங்குகிறது. குழந்தைப் பருவத்திற்கும், மாணவப்பருவத்திற்கும், மனிதனின் முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் சாதி தேவைப்படுகிறது.

“உறிஞ்சுதல், குடித்தல், பருகுதல், உண்ணுதல், கழிவு நீக்குதல் குறித்த செயல் விதிகளை சாதி கொண்டிருக்கிறது. மேலும், துவைப்பது, அலசுவது, எண்ணெய் பூசுவது, வாசனைப் பொருட் களை பூசுவது, உடுத்துவது, ஆடை அணி வது, நகைகளைப் பூணுவது, உட்காருவது, எழுவது, ஓய்வெடுப்பது, நடமாடுவது, பார்øவியிடுவது, பயணம் செய்வது, பேசுவது, படிப்பது, கவனிப்பது, வெளிப்படுத்துவது, தியானம் செய்வது, பாடுவது, வேலை செய்வது, விளையாடுவது, போரிடுவது போன்றவற்றில் அதன் விதிகள் செயல்படுகின்றன. சமூக, மத உரிமைகள், தனிச் சலுகைகள், தொழில்கள் ஆகியவற்றுக்குரிய சட்டங்களை சாதி கொண்டிருக்கிறது.

“விதிமுறைகளை உருவாக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும், கல்வி பெறுவதிலும், அடிபணிவதிலும், கடமையாற்றுவதிலும் பழக்கவழக்கங்களைக் கைக்கொள்வதிலும், புனிதப்படுத்தப்படுவதிலும், அதற்குரிய கடமையாற்றுவதிலும், சடங்குகள் செய்வதிலும் சாதியின் விதிகள் உள்ளன. தவறுகளுக்கும், பாவங்களுக்கும், மீறல்களுக்கும், சாதிகலப்பிற்கும், புறக்கணிப்பிற்கும், சமூக விலக்கத்திற்கும், தீட்டாவதற்கும், புனித நீராடுவதற்கும், தீட்டுக் கழிப்பதற்கும், தண்டம் விதிப்பதற்கும், தண்டிப்பதற்கும், சிறையில் தள்ளுவதற்கும், உருச் சிதைப்பதற்கும், வெளியேற்றுவதற்கும், மரண தண்டனையை வழங்குவதற்கும் சாதிச் சட்டங்கள் உள்ளன.

“எவையெல்லாம் பாவம் என்பதை சாதி வெளிப்படுத்துகிறது. பாவம் சேர்வதை, பாவத்தை அழிப்பதை தெளிவு படுத்துகிறது. மதிப்பு பெறுவதையும், மதிப்பை மீட்பதையும், மதிப்பை இழப்பதையும் குறித்துச் சொல்கிறது. பாரம்பரியமாய் பெறுவதை, இடம் மாற்றுவதை, வைத்திருப்பதை, துறப்பதை சாதி வரையறுக்கிறது. தரகை, லாபத்தை, நட்டத்தை, வீணாவதை வரையறுக்கிறது. மரணத்தையும், பிணம் புதைப்பதையும், எரிப்பதையும்கூட சாதி கையாள்கிறது. நினைவு நாளை, உதவிகளை, மரணத்துக்குப் பிறகான பாதிப்பையும் அது விடுவதில்லை. சுருங்கச் சொன்னால் சாதி – வாழ்வின் எல்லா தொடர்புகளோடும், நிகழ்வு களோடும் ஊடாடுகிறது. கால வரிசையின்படி முந்தச் செய்வதுடன், பின் தொடர்கிறது” (‘இந்தியாவில் சாதி', ஜே.ஹெச். ஹட்டன், 1973).

இத்தனை வலிமை கொண்ட சாதியின் தோற்றுவாய், மிகவும் சூக்குமமாக உருவாக்கப்பட்ட வர்ணாசிரம திட்டத்தில்தான் இருக்கிறது. மனிதர்களை மனிதர் ஒடுக்குவதற்கான ஆயுதமாக வடிக்கப்பட்ட ஒரு மாபெரும் செயல் திட்டம் அது. இந்தியாவில் சாதிகளைப் பற்றி பல்வேறு சமூகவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் அது ஒரு புதிராகவும், ஆய்வுக்குரிய ஒரு விந்தையாகவும் இருந்திருக்கிறது. ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. செனார்ட், நெஸ்பீல்டு, ரிஸ்லி, கெட்கர் போன்ற ஆய்வாளர்களின் பெயர்களையும் கருத்துகளையும் அம்பேத்கர் தமது ‘இந்தியாவில் சாதிகள்' எனும் நூலில் பயன்படுத்துகிறார். ஹட்டன் போன்றோரின் நூல்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வு நூல் பட்டியல்கள் விரவிக் கிடக்கின்றன.

இத்தனை ஆய்வாளர்களிலிருந்தும் அம்பேத்கர் மாறுபட்டு நிற்கிறார். சாதியைப் பற்றி ஆராய வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சாதியால் பாதிக்கப்படாதவர்கள். அம்பேத்கர் மட்டுமே சாதியால் பாதிக்கப்பட்டவர். நச்சுப் பாம்பினால் கடிபட்ட ஒருவன், கடித்த பாம்பு எத்தகையது என்பதையும், உயிர் பிழைக்க சிகிச்சையை எவ்வாறு பெற வேண்டும் என்பதையும் ஒருசேர சிந்திக்கிறான். அம்பேத்கரின் ஆய்வுகள் இப்படித்தான் இருக்கின்றன. சாதி – மானுடவியலின் ஒரு புதிர்ப் பாடமாக இருந்தபோது, அம்பேத்கர் அதை பார்ப் பனியத்தின் செயல்திட்டமாக அடையாளப்படுத்தினார். அவரே சாதியின் தோற்றுவாயை இந்து மதத்தோடு இணைத்துப் பார்க்கச் சொன்னவர். சாதியை ஒழிக்க அம்மதத்தை நிர்மூலமாக்கச் சொன்னவரும் அவர்தான்.

இந்தியாவின் தொல்குடிகளான திராவிட மக்களுக்கும், வந்தேறிகளான ஆரிய மக்களுக்கும் நடந்த போர்களை யும், மோதல்களையும் ரிக்வேதம் சொல்கிறது. அந்த நூலில்தான் வர்ணப் பாகுபாடு பற்றிய அறிவிப்பும் இருக்கிறது. பிரம்மாவின் வாயிலிருந்து பார்ப்பனனும், தோள்களிலிருந்து சத்திரியனும், தொடைகளிலிருந்து வைசியனும், பாதங்களிலிருந்து சூத்திரனும் பிறந்தார்கள் என்ற அறிவிப்பு ஆரியர்களின் வெற்றிப் பிரகடனம். தொல்குடி மக்களுக்கான அடிமை சாசனம்.

போரினால் வெற்றி கொள்ளப்பட்ட வர்கள், அடிமையாக்கப்பட்டவர்கள், நிறத்தால், பண்பாட்டால் வேறுபட்டவர்கள், எதிர்த்தவர்கள் ஆகியோரையெல்லாம் ஒருசேர கீழாக்கி விட்டது ஆரியர்களின் வர்ண தத்துவம். ஒரு மனிதன் வீடு பேறு அடைய வேண்டுமெனில், வாழ்வின் பல்வேறு நிலைகளை கடந்து செல்கிறான். அதைப் போன்ற நிலைகளே நால்வர்ண நிலைகள் என்றும், மனிதர்களின் அறிவு நிலை, வேலை செய்யும் திறன், தொழில் விருப்பம் ஆகியவற்றைக் கொண்டு பகுக்கப்பட்டது வர்ணப் பாகுபாடு என்றும் வர்ணப்பாகுபாட்டை நியாயப்படுத்துகிற இந்துக்கள் சொல்கிறார்கள்.

பார்ப்பனர் வெள்ளை, சத்திரியர் சிவப்பு, வைசியர் மஞ்சள், சூத்திரர் கருப்பு என நிற அடிப்படையில் அன்றைய மக்களை அடையாளப்படுத்த ஏற்படுத்தப்பட்டதுதான் இப்பாகுபாடு. சாதிக்கும் இதற்கும் தொடர்பில்லை என வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். சாதி நல்லது. வர்ணப் பாகுபாடு தேவை யானது என சொல்லி வந்தவர் காந்தி என்பதை நாம் அறிவோம். “வர்ண அமைப்பு முறைக்கும் கல்வி பெறுவதற்கும் தொடர்பு இல்லை. வர்ண அமைப்பு பொருளீட்டும் முறையோடு தொடர்புடையது. அதன் நோக்கம் போட்டியை யும், வர்க்கப் போரையும், போராட்டத்தையும் தடுப்பதே. யார் யாருக்கு என்னென்ன கடமைகள் என வர்ண அமைப்பு நிர்ணயித்து விடுவதால், அம்முறையில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்கிறார் காந்தி.

மனிதர்களின் நிறத்திற்கும் வர்ணத்திற்கும் இன்று தொடர்பே இல்லை. அதைப்போலவே மனிதர்களின் பண்பு நலன் மற்றும் அறிவுத் திறனை அடிப்படையாகக் கொண்டே வர்ணப் பாகுபாடு ஏற்படுத்தப்பட்டது என்ற வாதத் தையும் ஏற்க முடியாது. பிறப்பதற்கு முன்பே ஒரு மனிதனின் அறிவையும் பண்பு நலனையும் தீர்மானிப்பது சாத்தியமில்லாதது. அறிவுக்கு ஒவ்வாதது.

தங்களை விடவும் நாகரிகமானவர்களாயும், வேறு வகையான பண்பாட்டுக் கூறுகளோடும், வேறு நிறத்தோடும், மொழியோடும் தொழிலோடும் இருந்த திராவிட தொல்குடி மக்களை ஆரியர்கள் கடுமையாக வெறுத்து ஒதுக்கினர். வேட்டையாடும் சமூகமான அந்த நாடோடிகளுக்கு, வேளாண்மையை அடிப்படை யாகக் கொண்ட திராவிடர்களின் உயர்ந்த நாகரிகம் பகைமையுணர்வையே உருவாக்கியிருக்கும்.

ஆரியர்களின் மூளையில் உதித்த வெறுப்பும் பகைமையும் வர்ணப் பாகுபாடாய் வெளிப்பட்டது என்றே சொல்லலாம். ஆரியர்கள் உருவாக்கிய வர்ண சட்டகம், தொழில்களின் அடிப்படையில் தனிக் குழுக்களாக இயங்கத் தொடங்கியிருந்த மக்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தியது. ‘சொல்லப் போனால் வர்க்கமும் சாதியமும் அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டுக்காரர்கள். அவற்றைப் பிரித்து நிற்பது மிகச் சிறிய இடைவெளி. சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே என்கிறார் அம்பேத்கர் (‘இந்தியாவில் சாதிகள்', டாக்டர் அம்பேத்கர்).

வர்ணப்பாகுபாடு புரோகிதம், ஆட்சி அதிகாரம், வணிகம், தொண்டூழியம் என்ற வேலைப் பாகுபாடுகளின் அடிப்படையாகக் கொண்டதாக உருவாக்கப்பட்டதுதான் அத்திட்டத்தின் ஆதாரமான சூட்சுமம். உடல் உழைப்பு சார்ந்த எல்லா தொழில்களுமே கீழாக்கப்பட்டுவிட்டன. அது சூத்திரர்களுக்கு என்றாக்கப்பட்டுவிட்டது. அறிவு சார்ந்த செயல்பாடுகளும், ஆளும் அதிகாரமும் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கும் என்றாக்கப்பட்டுவிட்டது. வைசியர்கள் வணிகத்துக்கு உரியவர்களாக்கப்பட்டனர்.

வர்ணத்தின் குழந்தைகளான சாதிகள் அகமணத்தை மேற்கொள்கிற மூடுண்ட சமூகங்களாக நாளடைவில் மாறிவிட்டன. “இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமுமே ஆகும். ராணுவத் தொழில் தன்னைத்தானே நுண்ணிய பகுதிகளாக்கிக் கொள்ள இடமளிக்காமையால், சத்திரிய வர்க்கமானது வீரர்களாகவும் நிர்வாகிகளாகவும் ஆன உட்பகுதிகளாக ஆகி நிற்கிறது” என்கிறார் அம்பேத்கர் (‘இந்தியாவில் சாதிகள்', டாக்டர் அம்பேத்கர்)

சாதியின் அடிப்படைச் சட்டமான அகமண முறையை உடைக்கிற மாதிரி புறமண முறையைப் பின்பற்றிக் கொண்டு இருந்த கோத்திரங்களும் சாதிக்குள் ளேயே அடக்கப்பட்டுவிட்டன. கோத் திரங்கள் பார்ப்பனச் சமூகத்தினைப் பார்த்து பிற சாதிகளால் பின்பற்றப்பட்டவை என்கிறார் ஹண்டர். பிரம்மனின் ஏழு மகன்களான காசியபர், வசிஸ்டர், அகத்தியர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், அத்ரி, விஸ்வாமித்திரர் ஆகியோருக்குப் பிறந்த பிள்ளைகள் மூலம் உருவான சந்ததிகளே கோத்திரங்களாகச் சொல்லப்படுகின்றன. வர்ண மாற்றம் என்பது இயல்பானது. ஒரு வர்ணத்தில் இருப்பவர் பிறிதொரு வர்ணத்திற்குப் போகும் வழக்கங்கள் இருந்ததாக இந்து மத அறிவு ஜீவிகள் சொல்வதை கேட்டிருக்கலாம். இந்து மதப் பழங்கதைகளிலிருந்து இப்படியான வர்ண மாற்றத்திற்கு சில எடுத்துக்காட்டுகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

சத்திரியர்களான விஸ்வாமித்திரரும், பிரவாரா முனிவரும் பார்ப்பனர்களாகி இருக்கிறார்கள். வைசியர்களான நாபாகரிஷ்டாவின் இரண்டு மகன்கள் பார்ப்பனர்களாகி இருக்கிறார்கள். சூத்திரர்களான ராஜபுதன போகர் சேவகர், வங்கத்தின் விபாசோக்தர் பார்ப்பனர்களாகி இருக்கின்றனர் என்று இந்து பழங்கதைகள் (புராணங்கள்) கூறுகின்றன. ஆனால் இவை பழங்கதைகளே. விதிவிலக்குகளாகக் கூட கருத முடியாதவைதான் இவை. சாதி பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக அகமண முறை மூலம் மாற்றப்பட்ட பிறகு சாதி மாற்றத்துக்கு வழியில்லை என்றாகிவிட்டது வெளிப்படை.

சாதி, மதத்தோடு பிணைக்கப்பட்டதில்தான் அதன் வெற்றியும் நிலைத்தன்மையும் இருக்கிறது. ஆரியர்கள் இந்திரன், வருணன், வாயு, அக்கினி போன்ற கடவுளர்களையே வணங்கினர். சிவன், முருகன், மாயோன் எனப்படும் விஷ்ணு, அவனுடைய அவதாரங்களாகச் சொல்லப்படும் ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுளர்களை அறியாதவர்கள், அவர்கள் இந்தியாவில் அவர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கியபோது, இங்கிருந்த கடவுளர்களையும் தம் கடவுளர்களாக உள்ளிழுத்துக் கொண்டனர். ஏழு பிறப்பு கருத்துருவும், சடங்குகளும், வேள்விகளும் வலியுறுத்தப்பட்டன. தீட்டு எனும் ஒதுக்குமுறை கோட்பாடு உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது. வர்ண பிரிவை ஆசிரம தர்மமாக மாற்றினர். சாதியை ஏற்கச் செய்ய ஸ்மிருதிகளும், உபநிடதங்களும், புராணங்களும் எழுதப்பட்டன. இந்து மதத்தின் அடிப்படை நூல்களாகச் சொல்லப்படும் சுருதிகள் என்கிற நான்கு வேதங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சாகைகள் மற்றும் உபநிடதங்கள், முப்பத்து ஆறு ஸ்மிருதிகள், இரண்டு இதிகாசங்கள், எண்ணற்ற புராணங்கள் மற்றும் ஆகமங்கள், ஆறு தர்சனங்கள் ஆகிய அனைத்துமே சாதியை மிக இறுக்கமாக மக்களின் மனதில் பிணைத்து வைப்பதற்கே எழுதப்பட்டிருக்கின்றன.

மிகப் பரந்த நிலப்பரப்பையும், மக்களையும் கொண்ட இந்தியாவில் இருந்த எந்த வகையான வழிபாட்டு முறையையும் இவர்கள் விடவில்லை. சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைணவம், சக்தியையும் பிற பெண் கடவுளர்களையும் வணங்கும் சாக்தம், கணபதியை வணங்கும் காணபத்தியம், முருகனை வணங்கும் கவுமாரம், சூரிய வழிபாட்டை மேற்கொள்ளும் சவுரம் (ஆதி சங்கரன் வகைப்பாடு) என எந்த வழிபாட்டுமுறையையும் ஆரியர்கள் விடவில்லை. இவை அனைத்துமே சாதியப் பாகுபாட்டை ஏற்றுக் கொண்டன.

வர்ணம் என்பது பண்பு மற்றும் உடல் கூறுகளால் உருவாக்கப்பட்ட குணமாகும். சாத்வா (உயர்நிலை வெண்மை), ரஜா (செயல்நிலை / சிவப்பு) தமஸ் (செயல் அற்ற நிலை / கருப்பு) ஆகிய வர்ண நிலைகளை ஓர் ஆன்மா ஒவ்வோர் பிறப்பிலும் தனது கர்ம வினைகளால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. எனவே வர்ணம் என்பது மனிதனுக்கு மட்டுமின்றி கடவுளர்களுக்கும், விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும், பொருட்களுக்கும் கூடப் பொருந்தும். ஒரு பிறவியில் ஓர் ஆத்மா தனது கர்ம வினைகளால் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வர்ணத்தை, வர்ணத்துக்கு உரிய ஆசிரம தர்மங்களான வாழ்வியல் கடமைகளை நிறைவேற்றி மேலேறி உயர்நிலைக்கு வரவேண்டும் என்று பார்ப்பனர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.

தூய்மையாகவும் பணிவுடனும் இருந்து, உயர் வகுப்பாருக்கு ஊழியம் செய்து, இனிமையாகப் பேசி, கோபப்படாமல், எப்போதும் பார்ப்பனர்களிடம் அடைக்கலம் தேடும் சூத்திரன் ஒருவன், அடுத்த பிறவியில் உயர் குலத்தில் பிறப்பான் என்று பார்ப்பனர்கள் சொன்னதை சூத்திரர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இவ்வளவு நுட்பமாக உருவாக்கப்பட்ட வர்ணமும் சாதியும் வர்ணாசிரமப் படிநிலையில் மேல்நிலையில் தம்மை இறுத்திக் கொண்ட பார்ப்பனர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இந்த சாதிய செயல்திட்டமே பார்ப்பனியம். பார்ப்பனியம் இந்து மதத்தினை தனது போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டது. ‘பார்ப்பனியம் தன்னுடைய சுயநல அரசியலை மறைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு முக்காடே மதமாகும்' என்கிறார் அம்பேத்கர்.

- அழகிய பெரியவன் 

Pin It