வினா - விடை
அகமணமுறை என்றால் என்ன?
பல தலைமுறைகளாக, பரம்பரை பரம்பரையாக ஒரே ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு வரும் முறைதான் அகமணமுறை எனப்படும்.
குலதெய்வ வழிபாட்டுக்கும் அகமணமுறைக்கும் என்ன தொடர்பு?
தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, பார்ப்பனர்களோ - எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் ஒரு ஜாதிக்குள் திருமணம் என்று முடிவுசெய்துவிட்டால், அந்தத் திருமணத்தில் மாமன், மச்சான் முறை - பங்காளி முறை என அடையாளம் பார்ப்பதற்கு அடிப்படையாக இருப்பது குலதெய்வங்கள் தான். குலதெய்வம் என்ன? என்னசாமி கும்பிடுவீங்க? என்ன கோயில் கும்பிடுவீங்க? என்று கேட்டுத் தெரிந்து, உறுதி செய்த பிறகு, அதன் அடிப்படையில் தான் உறவுமுறையை உறுதிசெய்து திருமணங்கள் நடைபெறுகின்றன.
கருப்புச்சாமி, கருப்பணசாமி இவையெல்லாம் நமது தெய்வங்கள் தானே? இந்தத் தெய்வங்கள் எல்லோரும் நமது குடும்பங்களின் முன்னோர்கள் தானே? இவை பார்ப்பன, ஆரிய தெய்வங்கள் இல்லையே?
கருப்புச்சாமியோ, கருப்பணசாமி, அய்யனாரோ, பட்டத்தரசியோ, காமாட்சியோ எந்தக் குல தெய்வமாக இருந்தாலும், அவை எல்லாம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்தே பார்ப்பனக் கடவுள்களான சிவன், விஷ்ணு, பார்வதி இவர்களோடு கலந்துவிட்டன. இந்தக் குலதெய்வங்களின் கதை என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
குலதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு கூறப்படுகிறது?
சிவனே அய்யனாரை மகனாக ஏற்றுக்கொண்டார் என்று திருஞானசம்பந்தர் தேவாரத்திலேயே பதிகம் பாடப்பட்டுள்ளது. சிவன், விஷ்ணு, பார்வதி இவர்களின் காவல்தெய்வங்கள் தான் இந்த அய்யனார், கருப்புச்சாமி, சோனையா, சங்கையா, முனியாண்டி போன்ற குலதெய்வங்கள் என்றும் அனைத்துத் தெய்வங்களின் புராணங்களும் கூறுகின்றன.
இந்திரனின் மகள்களான பூரணை, புட்கலை இருவரையும் அய்யனார் திருமணம் செய்து கொண்டார் என்று கூறி அய்யனாருக்கு இருபுறமும் இரு மனைவியரின் சிலைகளையும் சேர்த்து வைத்து வழிபடும் பழக்கம் பலநூற்றாண்டுகளாக நம்மிடம் உள்ளது.
பார்ப்பனர்கள் எப்படிக் கதை கட்டினாலும் அந்தத் தெய்வங்கள் நமது முன்னோர்கள் தானே?
இருக்கலாம். இந்த நமது என்பது யார் யாரையெல்லாம் குறிக்கும். யார் யாரெல்லாம் இதில் அடங்குவார்கள் என்பதில்தான் ஜாதி ஒளிந்திருக்கிறது. எந்தக் குலதெய்வமாக இருந்தாலும் அந்தக் குலதெய்வத்தை ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஒரு குறிப்பிட்ட உட்பிரிவுதான் வணங்குகிறது. நமது முன்னோர் என்றால், நமது ஜாதியில் இருந்த முன்னோர் என்பது தான் பொருள். ஜாதியின் அடிப்படையில்தான் நமது முன்னோர் வழிபாடுகள் இருக்கின்றன.
நமது முன்னோர்கள்களான குலதெய்வங்களைப் பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்படியானால் அந்தத் தெய்வங்கள் பார்ப்பனர் அல்லாத நம் குலத்தின் முன்னோர்கள் தானே? அவர்களை வணங்குவதன் அடிப்படையில் திருமணங்களை நடத்திக்கொள்வது எந்த வகையில் தவறாகும்?
நாம் வணங்குவது, பார்ப்பனத் தெய்வமோ, தமிழ்த் தேசியஇனத் தெய்வமோ, திராவிடர் மரபினத் தெய்வமோ எதுவாக இருந்தாலும் அந்தத் தெய்வங்கள் முழுக்க முழுக்க ஜாதிக்கு ஒன்றாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஜாதிக்குள்ளேயே பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே ஜாதிக்குள்ளேயே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து திருமணங்கள் நடந்து வருவதற்கு அடிப்படைக் கருவிகளாகக் இருக்கின்றன. அகமணமுறையின் அஸ்திரவாரங்களாக உள்ளன. அந்த அஸ்திவாரத்தை அடித்து நொறுக்க வேண்டியது ஜாதி, மத ஒழிப்புச்சிந்தனை உள்ளவர்களின் முதல் கடமை.
பல ஜாதிகள் ஒன்றாகக் கும்பிடும் குலதெய்வங்கள்கூட இருக்கின்றனவே?
பல ஜாதிகள் ஒன்றாகக் கும்பிட்டால், அது குலதெய்வம் என்ற வரையறைக்குள் எப்படி வரும்? அப்படி இருந்தால் அது நாட்டார் தெய்வம் அல்லது பொதுத் தெய்வம் அல்லது கிராமதெய்வம் என்று கூறலாம்.
மூங்கிலணைக்காமாட்சி அம்மன் என்ற தெய்வம் பல ஜாதிகளுக்கும் குல தெய்வமாகவே இருக்கிறது. கன்னடச் செட்டியார், தெலுங்கு நாயக்கர், தேவர், வன்னியர் என பலருக்கும் குல தெய்வமாக இருக்கிறது. அந்த வழிபாட்டை எப்படி ஜாதிவழிப்பட்ட வழிபாடு என்று கூறமுடியும்?
வன்னியர் ஜாதியில் காமாட்சி அம்மனைக் குலதெய்வமாக வணங்குபவர்களுக்கு, கருப்புச்சாமி என்ற குலதெய்வத்தை வணங்குபவர்கள் மாமன், மச்சான் முறையாக வருவார்கள். எடுத்துக்காட்டாக, வன்னியர் ஜாதியில் உள்ள கருப்புச்சாமியை வணங்கும் ஒருவர், நாயக்கர் சமுதாயத்தில் காமாட்சி அம்மனை வணங்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா? கள்ளர் சமுதாயத்தில் சோனைக் கருப்புவை வணங்கும் ஒருவர் பார்ப்பன இனத்தில் காமாட்சி அம்மனை வணங்கும் பார்ப்பனப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா? எனவே, பல ஜாதிகள் ஒன்றாக ஒரு தெய்வத்தைக் குலதெய்வ மாக வணங்குவதாகக் கூறுவது தவறு. அவை பொதுத் தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் என்ற நிலையில் உள்ளவைதான்.
இதுபோல பலஜாதிகள் வணங்கும் மூங்கிலணைக் காமாட்சி, சோனை முத்தையா போன்ற தெய்வங்களின் கோவில்களில் பிடிமண் எடுத்துக்கொண்டுபோய், அவரவர் வசிக்கும் ஊர்களில் வைத்து, அங்கு சிறிய அளவில் ஒரு கோவிலைக்கட்டி வழிபட்டு வருகின்றனர்.
எந்த ஜாதி பிடிமண் எடுத்துப் போய் எந்த ஊரில் வைத்துக் கும்பிடுகிறதோ, அந்தப் பகுதியில் அந்த ஜாதிக்கு அது குலதெய்வமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பொதுத்தெய்வமாக அறியப் பட்டாலும், அது ஜாதித்தெய்வமாக மாற்றப்பட்டு வணங்கப்படுகிறது.
அப்படியானால், இது தெய்வத்தின் குற்றமோ, வழிபாட்டு முறையின் குற்றமோ அல்ல. மனிதர்களின் குற்றம் தானே? மனிதர்களைத் திருத்தினால் போதுமே? எதற்காக வழிபாட்டு முறையையே அழிக்க வேண்டும்?
ஜாதி என்றால் என்ன? அது செங்கல் சுவரா? கற்கோட்டையா? இரும்புக் கோட்டையா? எதாவது ஊரில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறதா? வேறு ஏதாவது ஒரு தனிவடிவத்தில் அது இயங்குகிறதா? அப்படி இருந்தால் அதைத் தேடிப்போய் அழித்துவிட்டு வரலாம்.
ஜாதி ஒரு மனநிலை. ஒரு கருத்து. ஒரு கருதுகோள். அந்த மனநிலையை உருவாக்கும் எவையாக இருந்தாலும் - அந்த மனநிலையை நினைவுபடுத்தும் எவையாக இருந்தாலும் - அந்த மனநிலையைப் பயிற்றுவிக்கும் - நடைமுறைப்படுத்தும் எவையாக இருந்தாலும் அவை அனைத்தையும் அழிக்காமல் அந்த மனநிலை எப்படி மாறும்? மறையும்? எனவே, ஜாதியை நினைவூட்டும், நடைமுறைப்படுத்தும், பயிற்றுவிக்கும், பயன்படுத்தும் எவையாக இருந்தாலும் அவற்றின் அழிவுதான் ஜாதியின் அழிவு.
குலதெய்வங்கள் அழிந்துவிட்டால், எதன் அடிப்படையில் திருமணங்களை முடிவு செய்வது? யார் பங்காளி முறை? யார் மாமன் முறை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
முதற்கட்டமாக, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மாமன் மச்சான் முறை என்று வைத்துக்கொள்ளலாம். அதில்கூட ஜாதிப் பெயரெல்லாம் பார்க்காமல், எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி என்று நான்கு பிரிவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு - பி.சி, எம்.பி.சி பட்டியலில் உள்ள எல்லோரும் எஸ்.சி, எஸ்.டி பட்டியலில் உள்ள மக்களுடன் பெண் எடுப்பது, பெண் கொடுப்பது என கொள்வினை, கொடுப்பினைகளை நடத்திக்கொள்ளலாம். காலப்போக்கில் இந்தப் பிரிவுகளும் மாறி அப்போதைக்கு எது அறிவியல்பூர்வமான முறையோ அதைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளட்டும்.
திருமண உறவுகளை ஜாதி கடந்து நடத்துவோம். அகமணமுறையை அழிப்போம். ஆரோக்கிய மான தலைமுறையை உருவாக்குவோம் என்ற சிந்தனைகளைக் கொண்டவர்களுக்குக் குலதெய்வங்கள் தேவையில்லை. தனக்கு ஜாதி அவசியம் வேண்டும். அதுவும் மற்ற ஜாதிகளை ஆதிக்கம் செய்துகொண்டு இருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் குலதெய்வங்களைக் காப்பாற்றவே முனைவார்கள்.
மூத்த சங்கராச்சாரியார் பார்வையில் குலதெய்வ வழிபாடு
“நம் முன்னோர்கள் வணங்கிய தெய்வம்தான் நம் குலதெய்வம். முன்னோர்கள் என்றால், நம் தந்தை வழி முன்னோர்களையே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘கோத்திரம்’ என்னும் ரிஷியின் வழிவழிப்பாதை இதுவே. பெரும்பாலும் நம் பாட்டிகள் வேறு கோத்திரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அதனால் ஆண்வழியாகவே குலதெய்வம் அறியப்படுகிறது. இந்த ரிஷி பரம்பரை ஒரு சங்கிலித் தொடர் போல அறுபடாமல் இருக்கும். குலதெய்வத்தை வணங்கும்போது மற்ற எல்லா கோயில்களுக்குச் சென்று வழிபட்டும் கிடைக்காத பலன்கள் கிட்டும்.” - இரா.செந்தில் குமார், www.vikatan.com
இதுதான் பார்ப்பனர் வழிபாட்டுமுறைகளுக்கு எதிரானதாகச் சொல்லப்படும் குலதெய்வ வழிபாட்டின் நிலை.