மும்பை மராத்திய மாநில பீமா கோரேகாவ் சரித்திரப் பின்னணியை முன்வைத்து இந்துத்துவ அரசியலின் வரலாற்று திரிபுகளை நிகழ்கால அரசியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.

2018, ஜனவரி 01 இல் பீமா கோரேகாவ் வெற்றித் தூணின் 200 ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் இதை வெளிச்சமாக்குகின்றன. சாதியத்தைக் கடுமையாக தங்கள் ஆட்சியில் கடைப்பிடித்த பேஷ்வா அரசுக்கு எதிராக இச்சம்பவத்தை மகர்கள் கொண்டாடுகிறார்கள் . மராட்டிய மாநில ஒடுக்கப்பட்ட மக்களான மகர்கள் சத்ரபதி சிவாஜி காலத்திலிருந்தே படைவீரர்களாகவும் நகரக் காவலர்களாகவும் இருந்தவர்கள் என்பது வரலாறு.

ஆனால் பேஷ்வா மன்னர்கள் மகர்களின் வீரத்தைக் கொண்டாட முன்வராதது மட்டுமல்ல, தங்கள் படையில் மகர்களைச் சேர்த்து கொள்வதையும் தங்களுக்கு இழுக்கு என்று நினைத்தார்கள்.

ஆனால் அதே மகர்களின் போர்ப்படை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பேனி படையின் சார்பாக போரிட்டு பேஷ்வாக்களை அடிபணிய வைத்தது வரலாறு. இந்த வரலாற்றின் இன்னொரு பக்கமாக விரிவது, பார்ப்பனிய பேஷ்வாக்களை வெற்றி கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வீரமும் விவேகமும்தான்.

இதுவே இந்துத்துவ அரசியலுக்கு நெருடலாக இருக்கிறது. ""பேஷ்வாக்களின் ஆட்சியில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மகர் இனத்திற்கு இந்த வெற்றி என்பது மிகவும் முக்கியமான வரலாற்று நிகழ்வு” என்பார் வரலாற்று ஆய்வாளர் சரத்தா கும்பஜ்கர் (shraddha kumbhojkar ) பீமா கோரேகாவ் வெற்றித் தூணில் பொறிக்கப்பட்டிருக்கும் 49 வீரர்களில் 22 பேர் மகர் இனத்தவர்கள். இந்த வரலாற்றை மறைக்காமல் பொறித்து வைத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

01 ஜனவரி 1927 பீமா கோரேகாவ் 109 ஆவது நிறைவு நாளில் அண்ணல் அம்பேத்கர் அப்பகுதிக்கு சென்றார். அவருடைய வட்டமேஜை மாநாட்டு உரையில் மகர்களின் படைவீரம் ஆங்கிலேயப் பேரரசுக்கு உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால் 200 ஆவது நினைவு நாளில் கலகம் வெடித்தது. ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழுந்தார்கள். பேரணிகள் நடந்தன. பெரு நகரம் மும்பை ஸ்தம்பித்தது. ஏன்? இது 200 ஆண்டுகால பீமா கோரேகாவ் மகர்களின் வெற்றி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இதன் பின்னணியாக இருக்கும் இன்னொரு சரித்திரமும் மீண்டும் எழுச்சியுடன் பேசப்பட வேண்டியதாகிறது.

இந்துத்துவ அரசியலைக் கொண்டாடும், முன்னிறுத்தும் மராட்டிய அரசியலுக்கு சத்ரபதி சிவாஜிதான் மூல புருஷனாக இருக்கிறார். மராத்தியர்கள் சிவாஜியையும் அவர் இசுலாமிய பேர ரசின் மன்னராக டில்லியில் இருந்து ஆட்சி செய்த ஒளரங்கசீப்புக்கு எதிராக நடத்திய கெரில்லாப் போர்கள் எல்லாம் வீரம் செறிந்த இந்து அரசனின் பெருமையாகக் கற்பிக்கப்படுகின்றன.

இன்னொரு வகையில் சொல்லப் போவதானால் இசுலாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அரசை நிறுவிய முதல் அரசனாக சத்ரபதி சிவாஜியை மராட்டிய அரசியல் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின் அரசியலுக்கு எதிராக இருக்கும் அனைத்து வரலாற்று ஆவணங்களையும் துடைத்து எடுப்பதில் இந்துத்துவ அரசியல் தன் அதிகாரத்தை முன் நிறுத்தி சரித்திரத்தை மாற்றி எழுத முனைகிறது.

இந்துத்துவ அரசியலுக்கு எதிரான சரித்திரம் என்ன? அந்த நிகழ்வு ஏன் தங்கள் அரசியலுக்கு வேட்டு வைக்கும் என்று நினைக்கிறார்கள்? இதன் சரித்திரம் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக இருப்பதும் இந்துத்துவ அரசியலின் மராத்தாக்களுக்கு அந்த நிகழ்வு எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை என்பதும்தான் காரணம்.

பீமா கோரேகாவ் ஊருக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் வாடு புட்ருக் (wadhu budruk). பீமா கோ ரேகாவ் வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் வாடு புட்ருக்கில் இருக்கும் இருவர் சமாதிக்கும் செல்கிறார்கள். சிவாஜி மகாராஜாவின் மகன் சம்பாஜி மகாராஜாவின் சமாதி. அத்துடன் சம்பாஜி மகாராஜாவுக்கு இறுதிச்சடங்கை செய்த வீரமிக்க கோவிந்த் கோபால் கெய்க்வாட் சமாதி.

சிவாஜியின் வீரம் போற்றப்பட்ட அளவுக்கு சிவாஜியின் மகனான சம்பாஜியின் வீரமும் வீரமரணமும் போற்றப்படவில்லை. சம்பாஜி இசுலாமிய அரசால் தோற்கடிக்கப்பட்டவர். வரலாறு எப்போதுமே வெற்றி பெற்றவர்களை மட்டுமே கொண்டாடும் என்பது புதிதல்ல.

1689 இல் அவுரங்கசீப் படையால் தோற்கடிக்கப்பட்ட சம்பாஜி மகாராஜாவின் உடலை அவர்கள் வெட்டி துண்டுகளாக்கி நதியில் வீசினார்கள். ""அந்த உடல் துண்டுகளை யார் எடுக்கிறார்கள் பார்ப்போம்? யார் இந்த உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வார்கள், அதையும் பார்த்துவிடுவோம்..'' என்று அதிகாரத்தின் முகம் கொக்கரித்தப்போது அதை எதிர்க்கும் துணிச்சல் ஒரு மகர் வீரனுக்கு மட்டுமே இருந்தது.

அவர் தான் புட்ருக் பகுதியில் வாழ்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட். கோவிந்த் கெய்க்வாட் குத்துச்சண்டை வீரர். குத்துச்சண்டை பயில்வான் என்று அறியப்பட்டவர். அவர் மட்டும் பேரரசனின் ஆணையை அதிகாரத்தை மீறும் துணிச்சலுடன் நதியில் வலையுடன் இறங்கி துண்டுகளாக வீசப்பட்ட தங்கள் அரசனின் உடல் பாகங்களைச் சேகரித்து ஒன்றாக்கித் தைத்து அந்த உடலுக்கு இறுதிச்சடங்கும் செய்தார்.

அவரை அவுரங்கசீப் படை பலிவாங்கியது என்பதும் வரலாறு. கோவிந்த் கெய்க்வாட்டின் வீரத்தைப் பாராட்டும் வகையிலும் அவருடைய சமாதி மன்னர் சம்பாஜியின் சமாதி அருகில் தன் அடையாளத்தை தன் வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இதுதான் இந்துத்துவ அரசியலுக்கும் இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் மராத்தாக்களுக்கும் பெரும் தலைவலியாக மாறுகிறது.

இந்து ராஷ்டிரத்தை நிறுவ எண்ணிய சத்ரபதி சிவாஜியின் மகனைக் கொன்றது இசுலாமிய அரசு என்ற வரலாற்றின் ஒரு பக்கத்தை தங்கள் அரசியல் இலாபமாக்க முனைகிறார்கள். அதாவது சம்பாஜி என்ற இந்து அரசனைக் கொன்ற இசுலாமியர் என்பதாக மடைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள்.

ஆனால் சம்பாஜிக்கு இறுதிச்சடங்கு செய்தவர் ஒரு மகர் இனத்தைச் சார்ந்தவர் என்ற உண்மையும் அந்த வரலாறும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிக்கு ஆதரவாகவும் இருப்பதால் வரலாற்றின் பக்கங்களை எரிக்கிறார்கள். சுவடுகள் இல்லாமல் அழித்துவிட நினைக்கிறார்கள். அரசியல் இலாபத்திற்கு கோவிந்த் கெய்க்வாட்டின் சமாதியைச் சிதைக்கிறார்கள்.

வரலாறு

மராத்திய அரசன் சம்பாஜியின் இறுதிக்காலம் பற்றியும் மரணம் பற்றியும் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் அனைத்திலும் இசுலாமிய படையிடம் சம்பாஜி தோற்றுப்போனதும் சம்பாஜியை இசுலாமிய அரசன் அவுரங்கசீப்பின் ஆணைப்படி சித்திரவதை செய்ததும் மறுக்கப்படவில்லை. 1687 இல் நடந்த ""வய் சண்டையில் "" (BATTLE OF WAI) மராத்தா படைகள் தோற்கடிக்கப்பட்டன. தப்பியோடிய சம்பாஜியும் அவருடைய 25 வீரர்களும் சம்பாஜியின் உறவினர்களே காட்டிக் கொடுத்ததால் முகலாய படையால் சிறை ப் பிடிக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி, 1689 இல் சோமேஸ்வரில் முகரப் கான் (Muqarrab khan) என்ற அவுரங்கசீப் தளபதியால் சிறைப்பிடிக்கப் படுகிறார். சம்பாஜியை இசுலாம் மதத்திற்கு மாறச்சொல்லி கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. சம்பாஜி மறுத்துவிட் டதாகவும் அதனால் சம்பாஜியின் நாக்கைத் துண்டித்து விட்டார்கள். மீண்டும் மீண்டும் சம்பாஜி இசுலாம் மார்க்கத்தை ஏற்க வேண்டும் என்று சித்திரவதை செய்து சம்மதிக்க வைக்க திட்டமிடுகிறார்கள்.

இதைப் பற்றி எழுதி இருக்கும் டெனிஷ் கிங்கெய்ட் (Dennis Kincaid & The Grand Rebel. Pg 317) நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பேச முடியாத சம்பாஜி எழுதிக்காட்டியதாகவும் அதில் ""மன்னர் தன் மகளையே விலையாகக் கொடுத்தாலும் நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்'' ( Not even if the Emperor pribed me with his daughter) என்று எழுதியதாகவும் பதிவு செய்கிறார்.

இந்த ஆவணப்பதிவுகள் அனைத்துமே சம்பாஜி சித்திரவதைச் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதையும் அவர் உடலைத் துண்டுகளாக்கி நதியில் வீசியதையும் பதிவு செய்திருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த உண்மையின் இன்னொரு பக்கமாகத்தான் விரிகிறது சம்பாஜிக்கு இறுதிச்சடங்கு செய்த ஒரு மகர் இனத்தவனின் வீரமிக்க வரலாறு.

சத்ரபதி சிவாஜியின் வாரிசுக்கு ஒரு மகர் இனத்தவன் இறுதிச்சடங்கு செய்தானா? அப்படியானால் அப்போது மராத்தாக்களின் வீரம் எங்கிருந்தது? இக்கேள்விகள் எழுவதை தடுக்க வேண்டுமென்றால் வரலாற்றின் இப்பக்கத்தை மாற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.

பீமா கோ ரே காவ் வழக்கு விசாரணை கமிஷனிடம் ஒடுக்கப்பட்ட சாதியினர் சில ஆவணங்களை முன் வைக்கிறார்கள். அதன் மூலம் இன்னும் சில வரலாற்று செய்திகள் வெளிவருகின்றன.

அவை:

1) கோவிந்த் கோபால் நாசிக் கோட்டைக்கு கவர்னராக சம்பாஜி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்தார். அவுரங்கசீப் படை பலமுறை முயன்றும் அக்கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. கோவிந்த் ஒரு மகர் இனத்தவர் என்பதால்தான் இந்த சரித்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

2) சம்பாஜி அவுரங்கசீப் படையினரால் தோற்கடிக்கப்பட்டார். அவர் என்னவானார் என்பது தெரியாத நிலையில் அவரைத் தேடும் பணிக்கு மகாராணி யசுபாய் இருவரை நியமிக்கிறார். அந்த இருவருமே மகர் இனத்தவர்கள். ஒருவர் கோவிந்த் கோபால். இன்னொருவர் ராயப்பன் மகர். இருவருமே மன்னர் சம்பாஜியைத் தேடி அலைகிறார்கள். ராயப்பன் அவுரங்கசீப் படையால் கொலை செய்யப்படுகிறார். கோவிந்த் சனக் பபாய் பகுதியில் தேடி அலையும் போது சம்பாஜி மன்னருக்கு நிகழ்ந்த கொடுமை தெரியவருகிறது. 

3) சம்பாஜிக்கு இறுதிச்சடங்கு செய்யத் துணிபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அவுரங்கசீப் அதிகாரம் அச்சுறுத்துகிறது. அந்த அச்சுறுத்தலால் எவரும் முன்வரவில்லை. ஆனால் கோவிந்த் கோபால் தானே முன் வந்து மன்னரின் உடல் பாகங்களை ஆற்றில் தேடி எடுத்து ஒட்டித் தைத்து இறுதிச்சடங்கும் செய்கிறார். இச்செய்தியை அவர் மகாராணிக்கும் தெரிவிக்கிறார்.

4) கோவிந்த் கோபாலின் இச்செயலால் ஆத்திரமடைந்த அவுரங்கசீப் படை கோவிந்த் கோபாலை கொலை செய்கிறது. அத்துடன் 50 முதல் 70 மகர்களையும் சேர்த்துக் கொன்று குவிக்கிறது.

5)கோவிந்த் கோபாலின் சமாதிக்கு அருகில் கொலை செய்யப்பட்ட மகர்களின் சிலைகளும் தங்கள் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் கோவிந்த் பன்சாரெ மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள். கோவிந்த் பன்சாரெ (Govind Pansare (24 November 1933 & 20 February 2015) மராட்டிய மாநிலத்தின் இடதுசாரி ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்? அவர் எந்த அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் எதிராக இருந்தார்? இன்றுவரை அவரைப் சுட்டுக் கொன்றவர்களை காவல்துறை கண்டுபிடிக்கவே முடியவில்லையே! ஏன்?

அண்மையில் நிகழ்ந்த இச்சம்பவம் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு பொதுஜன நினைவுகளில் மங்கிப்போய்விட்டது. கோவிந்த பன்சாரெ 21 புத்தகங்களை எழுதியவர். இடதுசாரி சிந்தனையாளர். அவர் எழுதிய ""யார் சிவாஜி?'' (Shivaji Kon Hota? (Marathi https://en.wikipedia.org/wiki/Marathi_language for Who was Shivaji) என்ற புத்தகம் தான் சிவாஜியை இந்துத்துவ அரசை நிறுவிய இந்து அரசன் என்ற அடையாளத்தைச் சிதைக்கிறது.

அதுவும் இசுலாமியர்களுக்கு எதிராக வைக்கப்படும் சிவாஜியின் இந்துமுகம் "யார் சிவாஜி' என்ற புத்தகத்தின் மூலம் மறுக்கப்படுகிறது. இசுலாமியப் படை எடுப்பாளர்களின் கட்டாய மதமாற்றக் கொடுமைகளிலிருந்து இந்துக்களைக் காப்பாற்றிய இந்து மதப் பாதுகாவலன் என்ற அடையாளத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது .

சிவாஜி இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்று கட்டமைக்கப்படும் இந்துத்துவ அரசியல் பிம்பத்தைச் சிதைக்கிறது. தன் ஆய்வுகளின் மூலம் கோவிந்த் பன்சாரெ சிவாஜி அனைத்து மதத்தினரையும் மதித்தார் என்றும் பிற மதத்தவருக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் கொடுத்தவர் என்ற சிவாஜியின் மதச்சார்பற்ற முகத்தை முன்னிலைப்படுத்துகிறார்.

சிவாஜியின் இராணுவத்தினர், பாதுகாவலர்கள், தளபதிகள், செயலர்கள் என்று அரசு அதிகாரத்தில் மூன்றில் ஒரு பங்கு இசுலாமியர்கள்தான் இருந்திருக்கிறார்கள் என்பதை கோவிந்த் பன்சாரெ ஆவணங்களுடன் தன் ஆய்வுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சிவாஜி குறித்து இந்துத்துவ அரசியல் முன்வைக்கும் "இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி' என்ற பொய்யான கருத்துருவாக்கத்திற்கு யார் சிவாஜி என்ற இவரின் ஆய்வுகள் எதிராக இருப்பதை இந்துத்துவ அரசியல் எதிர்கொண்ட விதம்தான் கோவிந்த் பன்சாரெயின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்.

திரிபுகள்

வரலாற்றைத் திரிப்பது, வரலாற்றை மாற்றி எழுதுவது, வரலாற்றைத் துடைத்து அழிப்பது இதெல்லாம் இந்துத்துவ அரசியலுக்கு கைவந்தக் கலைதானே! சிந்துவெளி நாகரிகத்திலிருந்து அவர்கள் செய்து வருவதுதானே! கோவிந்த் பன்சாரெ எழுதிய புத்தகம் "யார் சிவாஜி?' பிரபலமானதுதான் அவர் உயிருக்கு ஆபத்தாக மாறியது. 1988 இல் வெளிவந்த அப்புத்தகம் இன்றுவரை 38 பதிப்புகள் வெளிவந்துவிட்டன. அத்துடன் ஆங்கிலம், இந்தி, கன்னடம், உருது. குஜராத்தி மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது.

1,45,000க்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை ஆகிவிட்டன. மேலும் அவர் மறைவுக்குப் பின் புத்தகத்தின் விற்பனை இன்னும் பல மடங்கு அதிகரித்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது. வரலாற்றைத் திரிக்கவோ துடைத்து எடுக்கவோ முடியாத காலத்தில் அக்கருத்துகளைப் பரப்பும் களப்போராளிகளைச் சிந்தனையாளர்களை காணாமலடித்துக் கொலை செய்வது, இத்தியாதி செயல்கள் மூலம் பொதுஜன உளவியலில் ஓர் அச்சத்தை ஏற்படுத்துவதைத் திட்டமிட்டே செய்துவருகிறார்கள்.

தொடர்ந்து நிகழும் சில சம்பவங்களைக் கூர்மையாகக் கவனிக்கும்போது அதற்கான காரணங்கள் நம்மை அச்சுறுத்துகின்றன. சம்பாஜி மகாராஜா இறுதிச்சடங்கும் அதன் தொடர்பான சரித்திர உண்மைகளும் திட்டமிட்டே திரிபுகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

சம்பாஜி மகாராஜாவுக்கு இறுதிச்சடங்கு செய்தவர்கள் மராத்த இனத்தைச் சார்ந்த சிவாலே தேஷ்முக் (Shivale deshmukh) என்று சொல்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் கோவிந்த் கெய்க்வாட்டின் சமாதி இப்போதுதான் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். கோவிந்த கெய்க்வாட் சமாதி இருக்கும் இடத்தின் பட்டா பஞ்சாயத்தில் இல்லை என்று அலறுகிறார்கள்.

கெய்க்வாட்டின் சமாதியில் எழுதப்பட்டிருந்த போர்டைச் சிதைக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கெய்க்வாட் சமாதிக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரையும் –URBAN naxals என்று தேசவிரோதியாகச் சித்திரிக்கிறார்கள்.

காவிக்கொடியுடன் கூட்டத்தில் புகுந்து கலகம் செய்தவர்களை சமூகத்தின் பாதுகாவலர்களாகவும் தங்கள் உரிமைகளை நியாயமான குரலில் வெளிப்படுத்தியவர்களை தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கும் அண்மைகால அரசியல் போக்கு நம்ப முடியாத கதைகளை ஆவணங்களாக்குகிறது. இந்தியப் பிரதமர் மோதியை "ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது போல கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்கள்' என்றுகூட சொல்லத் தயங்கவில்லை!

டிசம்பர் 2017 இல் முதன் முதலில் கோவிந்த கெய்க்வாட் சமாதியிலிருந்த அறிவிப்பு பலகை சிதைக்கப்பட்டது. அப்போது காவல்துறையை அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு காணவே ஒடுக்கப்பட்ட மக்கள் விரும்பினார்கள். ஆனால் காவல்துறைக்கு இது பிரச்சினையாகவே தெரியவில்லை.

மீண்டும் டிசம்பர் 29, 2017 இல் சமாதியில் புதிதாக வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்றிச் சிதைக்கிறார்கள். பொதுஜன உளவியலில் இசுலாமிய அரசர்கள் இந்துக்களைக் கட்டாய மதமாற்றத்திற்குள்ளாக்கினார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

ஆனால் வரலாற்றில் இசுலாமிய அரசர்களின் மதச்சார்பற்ற ஆட்சி பேசப்படாமல் கடந்து செல்லப்படுகிறது. அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட திட்டமிட்டு ஓரளவு வெற்றியும் பெற்றவர்கள் இசுலாமிய அரசர் அக்பரின் உதவியுடன் துளசிதாசர் இந்தி மொழியில் "ராம சரிதமானஸ்' எழுதினார் என்பதையோ அக்பர் ஆட்சியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இந்துக் கடவுளான இராமனின் உருவமே பொறிக்கப்பட்டிருந்தது என்பதை மறைத்துவிடுகிறார்கள்.

பீமா கோரேகாவ் வழக்கில் என்ன நடந்தது? வழக்கு, கைது இதற்குப் பின்னாலிருக்கும் அரசியல் நோக்கங்களைப் பற்றி அரசியல் களத்திலிருந்து வந்திருக்கும் செய்தியைக் கவனிக்க வேண்டி இருக்கிறது. மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு NCP கட்சியின் கடிதம், பீமா கோரேகாவ் சம்பவத்தில் பிஜேபி அரசு என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம் என்பதால் இந்த வழக்கில் சிறைப்பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

டிசம்பர் 06 இந்திய அரசியலமைப்பின் தந்தை பாபாசாகிப் அம்பேத்கரின் நினைவு நாள். அம்பேத்கரின் சைத்யபூமி, தாதரில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் அன்று சைத்யபூமி நோக்கி வருவார்கள்.

தங்கள் தலைவனுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தங்கள் வாழ்நாள் கடமையென நினைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் ஒவ்வொரு ஆண்டும் பெருகிவரும் எண்ணிக்கையும் இன்றைய அரசியலில் மிகுந்த கவனம் பெறுகின்றன. இந்தப் பின்னணியில்தான் பாபர் மசூதி இடிப்பு நாள் டிசம்பர் 06 என்பதையும் நாம் வாசிக்க வேண்டும்.

ஆண்டுக்கு 365 நாட்கள் இருக்கும் போது டிசம்பர் 06 ஐ பாபர் மசூதி இடிப்புக்கு தேர்ந்தெடுத்த இந்துத்துவ அரசியலின் நோக்கம் அண்ணல் அம்பேத்கரை இருட்டடிப்பு செய்வதல்லால் வேறு என்ன? அதனால்தான் 2019 டிசம்பர் 06 பத்திரிகையைப் புரட்டினால் முதல் பக்கத்தில் (தினத்தந்தி ) பாபர் மசூதி இடிப்பு நாள் பழனி கோவிலுக்கு பாதுகாப்பு என்று படத்துடன் செய்தி வருகிறது.

டிசம்பர் 06 அறிவாயுதம் ஏந்திய இந்திய தலைவர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் என்பது செய்தியாகக்கூட இடம் பெறாமல் பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் விளம்பரமாக 3 ஆவது பக்கத்தில் இடம்பெற வைப்பதன் அரசியல் அதன் உள் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது.

இப்படித்தான் வரலாற்றின் உண்மைகளும் சிறிது சிறிதாக பின்னோக்கி சென்று காலப்போக்கில் மங்கலாகி, பார்வையிலிருந்து மறைக்கப்பட்டதாய் விடுகிறது. திரிபு வாதங்களின் ஊடாக இந்துத்துவ அரசியல் இந்தியாவை இந்துக்களின் தேசமாகவும் இந்திய தேசத்தின் பொது எதிரி இசுலாமியர்கள் என்றும் சித்திரிக்க முயற்சி செய்கிறது. இந்திய அறிவுசார்ந்த சமூகமும் இதற்கெல்லாம் சாட்சியாக இருப்பதுதான் பேரவலம்.

- புதிய மாதவி