மகாராட்டிரம் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. அதன் மோசமான உள்ளீடையும்; தாங்கள் அம்பேத்கர் – புலேயின் வழித்தோன்றல்கள் என அது கோரிக் கொள்வது உண்மையில் எந்தளவுக்குப் போலியானது என்பதையும் அண்மையில் அங்கு நிகழ்ந்த ஜாதி வன்கொடுமைகள் வெளிப்படுத்துகின்றன. இத்திருநாட்டில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; மூன்று தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது போன்ற புள்ளிவிவரப் பல்லவிகள், பெருகி வரும் வன்கொடுமைகளைக் குறைத்து விவரிப்பதாகவே உள்ளன.

சான்றாக, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் 2000 இல் கணக்கெடுக்கப்பட்டதைக் காட்டிலும் இரு மடங்காகி விட்டன. தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குற்ற ஆவணத்துறையின் புள்ளிவிவரப்படி, ஒரு நாளைக்கு 1.85 பேர் கொலை செய்யப்படுகின்றனர்; 5.68 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மொத்த வன்கொடுமைகளின் அளவு 39,408 அய் தொட்டுவிட்டது. அதாவது, ஒவ்வொரு நாளும் 108 ஜாதி குற்றங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4.5 ஜாதி குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவை காவல் துறை புள்ளிவிவரங்களே. எனில், உண்மை குற்ற விகிதத்தை எவரும் எளிதில் கற்பனை செய்து கொள்ள முடியும்.

சுய பெருமைகள் பேசுவது, உண்மைகளை மறுதலிப்பது என இந்தியாவைப் பிரதிபலிக்கும் மகாராட்டிரா – தற்போதைய சாதிய வன்கொடுமைப் போக்கிற்கு எதிராக – எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. அதன் முற்போக்கு மாநிலம் என்ற தோற்றத்திற்கு மாறாக சாதியம், வகுப்புவாதம் போன்றவற்றில் கடைப்பிடிக்கப்படும் பாகுபாடு என அனைத்து நிலைகளிலும் அது ஏறக்குறைய முன்னணியிலேயே இருக்கிறது. ஜோதிபா புலே மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் முற்போக்கு மரபு என்ற திரையின் கீழ் இந்த சட்டவிரோத செயல்களை மறைத்து, ஆளும் வர்க்கம் தங்கள் தவறுகளை மக்களிடமிருந்து மறைக்கிறது. தற்பொழுது இத்திரையைக் கிழித்து இவர்கள் இந்த சிறப்பான மரபை அழிப்பவர்கள் என்பதை வெளிப்படுத்தி, அவர்களை தலைகுனியச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதையொட்டி 2006 ஆம் ஆண்டு இம்மாநிலம் முழுவதும் பற்றி எரிந்த போராட்டங்கள் இவ்விசயத்தில் மகாராட்டிராவில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பொது சமூகத்தை விடுங்கள், அரசோ, ஊடகமோ (சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) சாதி வன்கொடுமைகள் குறித்த அதன் நடத்தைகளுக்காக வருந்தியதாகவே தெரியவில்லை.

பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஆணுடனான (கள்ளத்) தொடர்பை விட்டுவிடும்படி கிராமத்தவர்கள் கூறிய அறிவுரையை ஏற்க மறுத்த பெண்ணின் மீது – கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத தார்மீக நெறியிழந்த கிராமத்தவர்கள் – நிகழ்த்திய ஒரு கெடுவாய்ப்பான நிகழ்வு என்றே கயர்லாஞ்சியில் நடைபெற்ற கொடுமையை ஊடகம் மூடி மறைக்க முயற்சி செய்தது. ஆனால் உண்மை வெளியில் கசிந்து தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு வழி வகுத்தது.

உள்துறை அமைச்சர் இவை நக்சலைட்டுகள் ஆதரவுடன் நடைபெறுபவை என்று கூறி காவல் துறையின் வன்முறைக்கு வழி வகுத்தார். அரசும் ஊடகமும் இணைந்து காதல் தொடர்பு மற்றும் நக்சலைட்டுகள் போன்ற சொற்களை திறமையாகப் பயன்படுத்தி சாதி வன்முறைகளை மூடி மறைத்து, அதற்கெதிரான தலித் போராட்டங்களை கொச்சைப்படுத்தின.

அரசின் பாரபட்சத்தையும் ஊடகத்தின் பக்கச்சாய்வையும் துணிச்சலுடன் சந்தித்து, ஒவ்வொரு வன்கொடுமைக்கெதிராகவும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் பெருமை இம்மாநிலத்தின் தலித்துகளையே சாரும். ஒரு மராத்தி பெண்ணை ஒரு தலித் காதலித்த குற்றத்திற்காக அவருடன் சேர்த்து மூன்று தலித்துகள் கொல்லப்பட்ட சோனாய் கொலைகளுடன் சென்ற ஆண்டு தொடங்கியது. இவ்விசயத்தை காவல்துறையும் ஊடகமும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடி மறைத்து விட்டன.

தலித் செயல்பாட்டாளர்களின் போராட்டமே அவர்களை நடவடிக்கை எடுக்க வைத்தது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் தற்பொழுது எவ்வித முன்னேற்றமுமின்றி நீண்டு கொண்டேயிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று பின் மோடி அலையின்உற்சாகத்தில் கோண்டியா மாவட்டத்தின் கவாலேவாடா கிராமத்தில் புத்த வியாரம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை – அக்கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் ஆதரவாளர்களான "போவார்' சாதியினர் – ஆக்கிரமிக்க முயன்றனர். இதை எதிர்த்த 48 வயதான தலித் செயல்வீரர் சஞ்சய் கோபர்கடேயை 16.5.2014 அன்று தீயிட்டுக் கொளுத்தினர்.

கோபர்கடே 94 சதவிகித தீக்காயங்களுடன் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களிடம் 6 நபர்களின் பெயர்களை இரு முறை கூறினார். இவர்கள் அனைவரும் "போவார்' சாதியினர்.இது அவருடைய மரணத்திற்குப் பின் குற்றவாளிகளுக்கெதிரான மரண வாக்குமூலமாக காவல் துறையால் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காவல் ஆய்வாளர் அனில் பட்டேல், "காதல் தொடர்பு' என்ற பொய்யான குற்றச்சாட்டை அவருடைய வயதான மனைவி தேவகிபாய் மீது சுமத்தினார். தேவகியும் அவருடைய அண்டை வீட்டுக்காரரான ராஜூ கட்பாயலு என்பவரும் நெருக்கமாக இருப்பதை கோபர்கடே பார்த்து விட்டதால் அவரைத் தீர்த்துக்கட்ட இவர்களிருவரும் திட்டமிட்டதாக ஒரு கட்டுக் கதையைக் கூறி தேவகிபாயை கைது செய்தார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 310 மற்றும் 307 இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட "போவார்'கள் விரைவில் வெளியே வந்து விட்டனர்.ஒட்டுமொத்த கிராமமும் தலித் செயல்பாட்டாளர்களும் காவல் துறையின் இந்த கட்டுக் கதையினால் அதிர்ந்து போயினர். சஞ்ஜய் கோபர்கடேயின் மறைவினாலான துயரம் ஒரு புறம் இருக்க, தேவகிபாயையும் கட்பாயலையும் காவல் துறையின் துன்புறுத்தல்களிலிருந்தும் அவமானங்களில் இருந்தும் கூட காப்பாற்ற முடியவில்லை.

ஏப்ரல் 28 அன்று அகமத் நகரின் ஜம்கெட் வட்டத்தைச் சேர்ந்த கத்ரா என்ற கிராமத்தில், ஏழை தலித் தொழிலாளர்களின் ஒரே மகனான 17 வயதான நிதின் ஆகே, பட்டப்பகலில் அதே கிராமத்தைச் சேர்ந்த மராத்தியரால் – அவன் படித்த பள்ளியில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டு – மணிக்கணக்கில் கொடுமையாக துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டான்! அவன் செய்த குற்றம் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்ததுதான். இந்த கொலை தலித் இளைஞர்களிடம் தன்னெழுச்சியான போராட்டங்களைத் தோற்றுவித்தது. ஆனாலும் கூட அவற்றால் குற்றவாளிகள் சிறையிலேயே இருப்பதை உறுதி செய்ய முடியவில்லை.

அகமத் நகர் மாவட்டத்தின் ஜாவ்கேடே (கல்சா) கிராமத்தில் அக்டோபர் 20 அன்று கிட்டத்தட்ட சோனாய் கிராமத்தில் நிகழ்ந்ததைப் போன்றதொரு செயல் மீண்டும் நிகழ்த்தப்பட்டது. தலித்துகளின் காயங்கள் மீது உப்பைத் தடவியது போல, கொதிக்கும் சாதிய பதற்றத்தைப் புறந்தள்ளிவிட்டு தலித்துகள் தங்கள் சாதியப்படி நிலையை ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதமாக – இந்த கிராமமும் கயர்லாஞ்சியைப் போலவே – மகாராட்டிராவின் பிரச்சனை இல்லா கிராமத்திற்கான விருதினைப் பெற்றது.

தலித் குடும்பத்தைச் சேர்ந்த 42 வயதான சஞ்சய் ஜகன்நாத் ஜாதவ் அவருடைய 38 வயதான மனைவி ஜெயசிறீ மற்றும் அவர்களின் ஒரே மகனான 19 வயதான சுனில் ஆகிய மூவரும் அவர்கள் பயிரை அறுவடை செய்வதற்காக தற்காலிகமாக அமைத்திருந்த பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்டனர். ஆண்களுடைய உடலின் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அருகில் இருந்த கிணற்றிலும் ஆழ்குழாய் கிணற்றின் குழியிலும் போடப்பட்டன. ஜெயசிறீயின் உடல் ஆழமான தலைக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. மும்பை அருகில் கோரெகானில் உள்ள பால்வளம் தொடர்பான அறிவியல் படிப்பில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவரான சுனில் தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார்.

"தலித் அட்யசார் க்ருதி சமிதி' வெளியிட்ட உண்மை அறியும் அறிக்கையின் படி, சஞ்சய்யின் சகோதரர் மரத்தா "வாக்' குடும்பங்களைச் சேர்ந்த நான்கு நபர்களின் பெயர்களை உடனே காவல் துறையிடம் தெரிவித்திருந்த போதும் – குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தலித்துகளின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்வேளையிலும் கூட – காவல் துறை விசாரணை என்ற பெயரில் கிராமத்தவர்களையும் சுனிலின் நண்பர்களையும்தான் துன்புறுத்திக் கொண்டிருந்தது. காவல் துறையின் இவ்வாறான நடவடிக்கைக்கெதிராக கிராம மக்கள் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.

"வாக்'கள் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியைத் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான மோனிகா ரஜாலேவிற்கும் பலமிக்க அரசியல் வாதிகள் பலருக்கும் உறவினர்கள். எனவேதான் காவலர்கள் குழப்பம் நிலவுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். சுனில் "வாக்' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததால் ஏற்பட்டதன் விளைவால் நிகழ்ந்த சம்பவம் என இந்த நிகழ்வின் மீதும் "காதல் தொடர்பு' பூச்சைப் பூசும் போக்கு இருந்தது. போராட்டங்கள் நக்சலைட்டுகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இக்குற்றத்திற்கான உடனடி பொறி எதுவாக இருப்பினும், வன்கொடுமைக்கான வேர் என்பது சுனிலின் தன்னம்பிக்கையான நடத்தையை அக்கிராமத்தைச் சேர்ந்த மராத்தாக்கள் சாதிய சட்டத்திற்கெதிரானதாக பொருள் கொண்டதுதான்.

ஆதிக்க சாதி பெண்களைத் துரத்தும் மோசமான கும்பல் என்ற பூச்சை தலித்துகள் மீது பூச காவல் துறைக்கும் குற்றவாளிகள் மீது அனுதாபத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த காதல் தொடர்பு என்ற சொல் பயன்படுகிறது.விருப்பமான உறவை ஏற்படுத்திக் கொள்வது ஒரு குற்றமல்ல என்ற உண்மை இங்கு புறக்கணிக்கப்படுகிறது.

காவல் துறை சில அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 இன் கீழ் குற்றத்தைப் பதிவு செய்திருந்தது. இது அவர்களின் அறியாமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஏனெனில் குற்றவாளிகள் அடையாளம் தெரியாத நபர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் தலித் அல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற ஊகத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பதிவு செய்ய இயலாது.

அக்டோபர் 21 இல் ஜாவ்கடே கிராமத்தைச் சேர்ந்த ஜாதவ்களின் உடல்கள் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட அதே நாளில், அதே அகமத் நகர் மாவட்டம் பார்னெர் வட்டத்தைச் சேர்ந்த அல்கோட்டி கிராமத்தில் பர்தி வகுப்பைச் சேர்ந்த 4 பழங்குடியினர் கிராம பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கிராமத்தவர்களால் கற்களால் தாக்கப்பட்டனர். ராகுல் புஞ்சியா மற்றும் பிகேஷ் புஞ்சியா என்ற இரு சகோதரர்கள் கடுமையான காயங்களால் உயிரிழந்தனர். மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர். 2013 ஆம் ஆண்டில் மட்டும் இதே போன்ற 113 வன்கொடுமை நிகழ்வுகள் இந்த மாவட்டத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்டோபர் 2014 வரையில் 74 வன்கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பா.ஜ.க. பிரமுகருமான பபன்ராவ் பக்பியூட்டின் உறவினர்கள், "காதல் தொடர்பு' குற்றத்தின் பேரில் காது கேளாத, வாய்பேச இயலாத, சொந்த நிலமுமில்லாத ஏழை தலித்தான அபா காலேவை தாக்கியது; பபன் மிசால் மற்றும் ஜானாபாய் போர்கி என்ற இரு தலித்துகளை உயிருடன் எரித்தது; கர்ஜாட் வட்டத்தைச் சேர்ந்த தீபக் காம்ளேவை கடுமையாகத் தாக்கியது; நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான சுமன் காலேயை கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொலை செய்தது; ஷெவ்காவ்ன் வட்டத்தைச் சேர்ந்த பைத்தான் என்ற இடத்தில் ஒரு தலித்தை துண்டு துண்டாக வெட்டியது போன்ற சில வன்கொடுமைகளே வெளிச்சத்திற்கு வருகின்றன. தண்டனை வழங்குவது ஒரு புறம் இருக்கட்டும். குறைந்தபட்சம் இவற்றில் எதிலுமே குற்றவாளிகள் கைது செய்யப்படவே இல்லை. இந்த நிகழ்வுகள் தலித்துகளின் பண்பாட்டு உறுதியை சாதிய சக்திகள் தங்களின் கொடூரமான படை மூலம் பழி தீர்ப்பதற்கு ஊக்கமளிக்க மட்டுமே செய்தன.

வன்கொடுமை நிகழும் ஒவ்வொரு முறையும் மகாராஷ்டிராவின் மேட்டுக் குடிகள் புலே – அம்பேத்கர் மரபைப் பற்றி கூச்சநாச்சமின்றி புலம்புகின்றன. உண்மையில் கடந்த சில ஆண்டுகளில் வன் கொடுமைகள் பற்றிய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 29 மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் 5 அல்லது 6 ஆவது இடத்தை வகிக்கிறது. தலித்துகளுக்கெதிரான குற்றங்களில் அதன் பங்களிப்பு அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

நவீன காலத்தில் பேஷ்வாக்களின் பிற்போக்கான பார்ப்பனிய ஆட்சியை கொண்டிருந்தது என்றொரு தனிச்சிறப்பு மகாராட்டிராவிற்கு உண்டு. ஆங்கிலேய ராணுவம் மராத்திய சாம்ராஜ்ஜியத்தை 1818 இல் வீழ்த்திய பிறகு அதிக எண்ணிக்கையில் மகர் வீரர்களைச் சேர்த்தது. இதனால் பூனாவின் பார்ப்பனர்கள் ஆங்கிலேய அரசிற்கெதிராக காலனிய எதிர்ப்பாளர்கள் என்ற போர்வையில் ஆயுதம் ஏந்தினர். ஆனால் உண்மையில் அவர்கள் தங்களின் இழந்த அரசை மீட்டெடுப்பதற்கே இதைச் செய்தனர். நாடு முழுவதும் உள்ள இந்துத்துவக் கொள்கை மற்றும் பாசிசப் பதாகையைத் தாங்கிய ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்) இங்கு தான் தோன்றியது.

இம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் உள்ளிட்ட பிற இயக்கங்களும் பார்ப்பனத் தலைமையில் இருந்து தப்பவில்லை. அதன் பார்ப்பனத் தலைவர்கள் கம்யூனிசத்தை வேதங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நாதுராம் கோட்சே, பிற்போக்குவாதியான பால்தாக்ரே, பயங்கரவாத இயக்கமான "அபினவ் பாரத்' மற்றும் நரேந்திர தபோல்கரை கொன்ற குற்றவாளிகள் ஆகியோரின் மண் மகாராஷ்டிரா. பார்ப்பனியத்தின் கம்பு தற்பொழுது வசதி பெற்றுள்ள பண்பாடற்ற சூத்திரர்களின் கையில் உள்ளது. மீண்டும் புதிதாக எழுகின்ற இந்துத்துவம் இம்மாநிலத்தில் உள்ள தலித்துகள் மோசமான நாட்களை சந்திக்க வேண்டி இருப்பதை எச்சரிக்கிறது. இந்த சாதிய மண்ணோடு குறைந்தபட்சம் புலே மற்றும் அம்பேத்கரை தொடர்புபடுத்தாமலாவது இருக்க வேண்டும்.

தமிழில் : செசரவணன்

நன்றி :"எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி' (6.12.2014)


Pin It