ஜிஷாவைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவளும் உங்களைப் போலத்தான் இரண்டு கைகளும், இரண்டு கால்களும் உள்ள ஒரு மனிதப் பிறவி. அவளுக்கும் உங்களைப் போலவே உணர்ச்சிகள் உண்டு. நெருப்பென்றால் சுடும், பனி என்றால் குளிரும். இதையெல்லாம் நாம் ஏன் சொல்கின்றோம் என்றால் இது போன்ற உணர்வுகள் சில சாதிகளுக்குக் குறிப்பாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்களுக்குக் கிடையாது என சில சாதி இந்துக்கள் நம்புகின்றார்கள். அதனால் அவர்களின் வாயில் மலம் திணிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ, அவர்களது உறுப்புகளை சிதைக்கவோ மிக எளிதாக அவர்களால் முடிகின்றது.

 crime against womenஅவர்களைப் பொருத்தவரை ஒரு தாழ்த்தப்பட்ட ஆணின் உடலோ, பெண்ணின் உடலோ இந்தச் சமூகத்தின் சாதி இந்துக்களின் பொது பயன்பாட்டுக்கானவை. அந்த உடலை நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், மலம் சுமக்க வைக்கலாம், செருப்புத் தைக்க வைக்கலாம், செத்த மாட்டை அடக்கம் செய்ய வைக்கலாம், இழவு செய்தி சொல்ல சொல்லலாம். இதை எல்லம் செய்ய மறுத்தால் அந்தத் தலித்தின் உடல் மீது மனம் போன போக்கில் எந்த வகையான வன்முறையை வேண்டும் என்றாலும் கட்டவிழ்த்து விடலாம். அதை இந்து சமூகத்தின் நன்மைக்காவே செய்வதாக பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்.

 ஒரு தலித்தை அவமானப்படுத்துவது என்பதோ, கொல்வது என்பதோ பொது சமூகத்தின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அப்படி செய்வது என்பது சாதி இந்துக்களுக்கு அவர்களது மதம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை; அதை கேள்விக்குள்ளாக்குவது என்பது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மனதையும் புண்படுத்தியதாக ஆகிவிடும்.

 எப்படி இளவரசனையும், கோகுல்ராஜையும், சங்கரையும் கொல்வதற்கு முழு உரிமையும் தனக்கு உள்ளது என சாதி இந்துக்கள் நினைக்கின்றார்களோ, எப்படி அது சாதியின் புனிதப்படுத்துதலுக்கான ஒரே வழி என அவர்களது இந்து மனது அவர்களை இயக்குகின்றதோ, அதே போலத்தான் ஒரு தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொல்வதையும் இந்து மதம் அவர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாய் அவர்கள் பார்க்கின்றார்கள்

 கணவனால் கைவிடப்பட்ட ராஜேஷ்வரிக்கு இருந்த ஒரே ஆறுதல் தன்னுடைய மகள் ஜிஷா தான். தன்னைப்போல தன்னுடைய பிள்ளையும் வாழ்க்கையில் சிரமப்படக்கூடாது என வீட்டுவேலை செய்து தனது மகளை சட்டம் படிக்க வைத்தாள். ஒரு நாள் தன்மீது வாகனத்தில் மோதிவிட்ட இரண்டு வாலிபர்களிடம் ஜிஷா சண்டைக்குப் போகின்றாள். ஒரு தலித் பெண்ணுக்கு உரிய அதிகாரம் இந்தச் சமூகத்தில் என்ன என்று அவளுக்கு அவள் அம்மா சொல்லித் தரவில்லை என்று நினைக்கின்றேன். ஒருவேளை அவள் படித்த சட்டம் அவளை அப்படி சண்டைக்குப் போக உள்தூண்டுதலாய் இருந்திருக்கலாம். இந்தச் சம்பத்தைத் தொடர்ந்து அவளுக்கு அந்த இரண்டு வாலிபர்களிடம் இருந்தும் தொடர்ச்சியாக கொலைமிரட்டல் வருகின்றது. இதனால் பதற்றமடைந்த ஜிஷாவின் தாய் ராஜேஷ்வரி, கேரளாவின் பெரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றாள். ஒருமுறை, இரு முறை அல்ல, பல முறை. இந்தியா முழுவதும் காவல் நிலையங்களில் கெட்டித்தட்டிப் போய் உள்ள ஆதிக்க சாதி மனோநிலை தான் அங்கும் செயல்பட்டிருக்கின்றது.

 எப்படி இளவரசனுக்கும், சங்கருக்கும் பாதுகாப்பு கொடுக்காமல் அவர்கள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்படுவதற்குக் காவல்துறை உடந்தையாக இருந்ததோ அதே போலத்தான் இங்கும் இருந்துள்ளது. கடந்த 28-ம் தேதி ஜிஷா வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கின்றாள். நினைத்தாலே நெஞ்சம் பதைபதைக்கின்றது. அவளது உடலில் 30 இடங்களில் கொடூரமான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவளது மார்பு மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் கூர்மையான ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுள்ளன. வயிற்றில் பலமாக தாக்கியதால் அவளது பெருங்குடல் வெளியே வந்திருக்கின்றது.

 நாகரிக மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானகரமான செயல் இது. ஆனால் அநாகரிகத்தையே தன்னுடைய கொள்கையாக கொண்ட இந்திய சமுகம் இதற்காக ஒருபோதும் வெட்கப்பட போவதில்லை. அதற்கு இது ஒன்றும் புதிதல்ல. இது போன்ற மிகக் கொடூரமான பல பாலியல் பலாத்கார நிகழ்ச்சிகளை அது தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. தினம் தினம் நான்கு தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள். வருடத்திற்கு ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள்; பலர் கொடூரமாக கொல்லப்படுகின்றார்கள்.

 கைர்லாஞ்சி போட்மங்கே குடும்பம், உத்திரப் பிரதேச மாநிலம் படான் நகர் அருகே உள்ள ககரா கிராமத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டது, கரூர் மாவட்டம் மாயனூரில் வினிதா என்ற பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது என சில சம்பவங்கள் மட்டுமே வெளி உலகத்தின் கவனத்தைப் பெற்றது. ஆனால் வெளி உலகத்தின் கவனத்தை பெறாத ஆயிரக்கணக்கான தலித் பெண்களின் பிணங்கள் இந்தியா முழுவதும் புதைந்து கிடக்கின்றன.

 சாதி இந்துக்களின் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்படும் போது கொதித்தெழும் இந்திய சமூகம் தலித் பெண்கள் கொல்லப்படும் போது தனது முகத்தை வேண்டாவெறுப்பாக திரும்பிக் கொள்கின்றது. ஒரு வேளை தலித்பெண்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கூட ஒரு தீட்டுச் செயலாக இந்திய சாதி சமூகத்திற்குத் தெரிகின்றது போலும்.

 ஆண்டாண்டு காலமாக பார்ப்பன இந்து மதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட பெண்கள் மீதான ஆண்களின் ஆதிக்க மனப்பான்மையே அவர்களை இப்படி பெண்களின் உடல் மீது ஆதிக்கம் செய்யச் சொல்லி தூண்டுகின்றது. அதிலும் குறிப்பாக தலித்துகளை ஒரு மனிதப் பிறவியாகவே பார்க்க கற்றுக் கொடுக்காத பார்ப்பன இந்துமதமே அவர்களின் மீது மேலும் மூர்க்கத்தனமாக தாக்குதலை தொடுக்க சாதி இந்துக்களைத் தூண்டுகின்றது. நிர்பயாக்களின் மரணம் உலக செய்தியாக மாற்றப்படும் போது ஜிஷாவின் மரணங்கள் உள்ளூர் செய்தியாக கூட மாறுவது கிடையாது. உடல் சிதைத்துக் கொல்லப்பட்ட உடல்களில் கூட ஒட்டி இருக்கும் சாதியைத் துருவி துருவி பார்த்து கண்டனம் தெரிவிக்கின்றது இந்தியாவின் சாதிய மனது.

 ஜிஷாவின் மரணம் மாநிலத்திற்கே அவமானம் என்று உம்மன் சாண்டி கூறுகின்றார். இது உண்மையில் கேரள சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்து சொல்லப்பட்டதாகவே நான் நினைக்கின்றேன். ஏனெனில் ஜிஷாவின் கொலைக்குக் காரணமான சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உம்மன் சாண்டியே ஒரு மோசமான பேர்வழி என்பது சரிதா நாயர் கொடுத்த வாக்குமூலம் அம்பலப்படுத்தியது. அதனால் வழக்கு எப்படி நடத்தப்படும் என முன்கூட்டியே ஒரளவு தெரிந்துகொள்ளலாம்.

 ஜிஷாவின் மரணம் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றது. இந்திய சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பு ஏற்படுகின்றது. தன்னுடைய சக மனுசியை, இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் அனுபவிக்கும் உரிமைகளையும், சுதந்திரத்தையும் போலவே அவளுக்கும் அதை அனுபவிப்பதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு என பார்க்காமல் அவளை ஒரு பாலியல் பொருளாக பார்க்கும் ஒரு சமூகம் இருந்தால் என்ன? அழிந்து போனால் என்ன?

- செ.கார்கி