sex education“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, பள்ளிச் செல்லும் வயதிருக்கும்போது நானும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டேன்” என்று என் வயதையொட்டிய நண்பர் பகிர்ந்து கொண்டபோது பெருந்திகைப்பை ஏற்படுத்தியது. அதேபோல், ஒரு வீட்டின் கார் ஓட்டுனரும் அவரது நண்பரும் சேர்ந்து ஒரு சிறுமியையும் அவளது தம்பியையும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் என்னுடைய கல்லுாரிக் காலத்தில் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்டது எனக்கு இன்றளவும் நினைவிருக்கிறது.

மேலும், மூன்று வயதுள்ள ஒரு குழந்தையை மிகக் கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தல் செய்துக் கொலைச் செய்தக் காரணத்திற்காக 20-வயது இளைஞனை கைது செய்தனர். மேற்கூறியச் சம்பவங்களில் குற்றவாளிகளும் நடந்த இடங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அய்னாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமைத் தொடங்கி ஐந்து வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் வரையிலும் அவா்கள் அனைவரின் மனநிலையும் ஒன்று தான்.

இயற்கையிலேயே பெண் என்பவள் ஆணுக்கான பாலியல் நுகர்வுப்பொருள் என்னும் அதிகார மையம் பல நூற்றாண்டுகள் கடந்தும் நகா்ந்து கொண்டு வருவதை நாம் கவனித்தும் மௌனம் காத்து வருகிறோம். அதேபோன்று, இன்று அந்த வரிசையில் குழந்தைகளும் பாலியல் நுகர்வுப்பொருளாக மாற்றப்பட்டு விட்டதை நாம் கவனிக்கத் தவறி விட்டோம். அதைத் தான் மேற்கூறிய சம்பவங்கள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.

தரவுகளோடு பார்த்தோமேயானல் 2018-ஆம் ஆண்டின் தேசிய குற்றப்பதிவு பிரிவினரின் (National Crime Records Bureau) ஆவணத்தின்படி 1,41,764 குற்றப் பதிவுகள் அதாவது ஒட்டு மொத்த இந்திய அளவில் 31.8 சதவீதம். தமிழ்நாட்டில் 4155 குற்றப்பதிவுகள் அதாவது மாநிலங்கள் அளவில் 20.6 சதவீதம். இதில் முதல் மூன்று இடங்களை உத்திரப்பிரதேசமும் (19936) மத்தியப் பிரதேசமும் (18992) மகாராஷ்டரமும் (18892) பிடித்துள்ளது.

அதிலும் குறிப்பாக POCSO (Protection of Children from Sexual Offense Act, 2012) சட்டத்தின் கீழ் 34.7 சதவீத (குழந்தை கற்பழிப்பு உட்பட) வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் 2018-ஆண்டின் தரவுகள் என்றாலும் 2016-ஆண்டுடன் 2018-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து கொண்டுதான் வந்திருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது கடந்த இரண்டு வருடங்களில் இந்த குற்றப் பதிவுகள் அதிகரித்திருக்கிறது என்பதை ஊடகங்களின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதில் வழக்குப் பதியப்படாத இன்னும் எத்தனையோ ஆயிரம் சம்பங்கள் இருக்கும் அவையனைத்தும் இந்த தரவினுள் கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய தரவுகள் இந்திய சமூக-உளவியலில் ஏற்பட்டுள்ள மிக ஆபத்தான பண்பாட்டு மாற்றத்தை தான் நமக்கு தெரிவுப்படுத்துகிறது.

சமூக-பண்பாட்டு கட்டமைப்பிலேயே வேரூன்றி நிற்கும் பாலியல் சமத்துவமின்மை தான் குழந்தைகளுக்குகெதிரான பாலியல் குற்றங்களின் அடிப்படை. பாலியல் குற்றங்களுக்கு தனி மனித உளவியல் மாற்றம் தான் காரணம் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு பாலினங்கள் மீதான சமூக-பண்பாட்டு கட்டுமானங்களை மறுசீராய்வு செய்வதன் மூலமே பாலியல் குற்றங்களை நாம் குறைக்க முடியும். காரணம், இந்த பண்பாட்டு மாற்றங்களின் எதிரொலிப்புத்தான் தனிமனித உளவியல் ஏற்படும் மாற்றம்.

மேலும், உலகமயமாதலின் விளைவாக ஏற்பட்டுள்ள இந்த பண்பாட்டு மாற்றத்தினுள் பெண்களும் குழந்தைகளும் ஒரு நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டுள்ளனா். அதாவது நுகர்வுக் கலாச்சாரத்தின் மிக முக்கியமான பண்டமாக குழந்தைகள் மாற்றப்பட்டுள்ளனா். அரச பயங்கரவாதம், ஆணவக் கொலைகள், கும்பல் கொலைகள், பெண் பாலியல் வன்கொடுமைகள் என்றிருக்கும் இந்த வரிசையில் இன்று குழந்தைகள் பலாத்காரமும் அதைத் தொடா்ந்த கொலைகளும் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக மதமும், ஜாதியும் குழந்தைகளின் மீதான கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு அடிப்படையாகவும் அமைகிறது.

தற்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையையும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகையக் குற்றங்கள் பற்றியான விரிவான புரிதல்களையோ உரையாடல்களையோ எந்த துறையினரும் கொண்டிருக்கவில்லை என்பது தான் நிதா்சனமான உண்மை.

இந்த ஆபத்தான பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து அவா்களுக்கு மிகச் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கங்களும் ஊடகங்களும் சமூகத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் நடக்கவில்லையென ஒரு தவறான பிம்பத்தை மக்களுக்கு ஏற்படுத்துகின்றன.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை இந்த நவீன சமூகம் எப்படி புரிந்துகொண்டு அத்தகையக் குற்றங்களைக் குறைப்பதற்கு என்னவிதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது என்பது தான் இன்றைக்கு எழுந்திருக்கும் மிக முக்கியமான கேள்வி. பெற்றோர் வளா்ப்புமுறை, பள்ளிப் பாடத்திட்டங்கள், அதீத மதுப்பழக்கம், ஃபோர்னோகிராப்பி போன்ற இன்னும் எத்தனையோ கூறுகள் குற்றங்களுக்கு அடிப்படையாக இருந்தாலும் இன்றைய சூழலில் ஃபோர்னோகிராப்பி என்னும் ஆபாசப் படங்கள் பற்றிய விழிப்புணா்வு தேவை அத்தியாவசியமானது என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஃபோர்னோகிராப்பி

அடிப்படையில் கூா்மையான சித்தாந்தம் இல்லாத மக்களின் இயங்கு முறையயை தீா்மானிப்பதே அவா்கள் வாழும் சமூகத்தில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்கள் தான். அதிலும் குறிப்பாக அதீத பாலியல் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவாக இன்றைய சமூகத்தில் பாலியல் ரீதியான சிற்றின்ப வேட்கையின் தாக்கம் வரம்பு மீறிய நிலையில் உள்ளதன் வெளிப்பாடு தான் மேற்கூறிய சம்பவங்கள். “ஃபோர்னோகிராப்பி என்பது ஒரு கோட்பாடு, பாலியல் வன்முறை என்பது அதன் செயல்முறை” என்று ராபின் மோர்கன் என்னும் எழுத்தாளா் எழுதுகிறார்.

இத்தகையச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு பண்பாட்டை மறுசீராய்வுக்கு உள்ளாக்குவதன் மூலம் மட்டுமே தனிமனிதனின் உளவியல் மாற்றத்தில் ஒரு நடைமுறைக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். இதில் ஃபோர்னோகிராபி நம்முடைய பண்பாட்டு மாற்றத்தினுள் மிக முக்கியமான பங்குவகிக்கிறது.

 பாலியல் வன்முறையும் வக்கிரமும் நிறைந்த இத்தகைய ஃபோர்னோகிராபி படங்கள், பெண்கள் மற்றும் சிறுவயதினா் மீதான பார்வையை மிக எளிதாக திசை திருப்பிவிடுகிறது. அதிலும் குறிப்பாக தொழில்நட்ப வளா்ச்சியின் விளைவாக ஏதோ ஒரு வழியில், ஆபாசப் படங்களைப் பார்க்கும் பெரும்பாலான இளம்பருவத்தினரும் வயதுடையோரும் தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோராகவும் இருக்கின்றனா்.

Fight the New Drug என்னும் ஆபாச படங்களை எதிர்க்கும் ஒருங்கிணைப்பு ஒரு தரவை வெளியிட்டது. அதாவது, ஆபாசப் படங்களை ஆராய்ந்ததில் (309 காட்சிகள்) 88 சதவிகிதம் உடல் சார்ந்த பாலியல் வன்முறைக் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதும், 49 சதவிகிதம் அந்தத் திரைப்படத்தில் மிகவும் இழிவான வார்த்தைகளால் அந்தப் பெண் திட்டப்படுவதாகவும் அந்த தரவு தெரிவிக்கின்றது.

அதிக நேரம் ஃபோர்னோகிராபி படங்களில் நேரம் செலவிடுபவா்களின் சமூகப் பார்வை மிகவும் வக்கிரமாக மாறிவருவதை தங்கள் ஆய்வுகளின் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் கூட்டுவன்புணா்வுக்கோ வல்லுறவுக்கோ உள்ளாக்கப்படுவதை அவள் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறாள் என்னும் பிம்பத்தை தான் ஃபோர்னோகிராபி மிக அழுத்தமாக ஏற்படுத்துகிறது. மேலும், இணையதளத்தில் ஆபாசப் படம் பார்பவா்களின் எண்ணிக்கையானது உயர்ந்துகொண்டு வருவதை சமீபத்திய தரவுகளின் மூலம் நாம் அறியலாம்.

Nepiophilia, Ephebophilia, Hebephilia, Pedophilia,

மனிதா்களுக்குள் ஏற்படும் பாலியல் உணா்வுகளைப் பற்றிய பல வகைகளை உளவியல் அறிஞா்கள் குறிப்பிடுகிறார்கள். அதில்,

Nepiophilia – என்பது 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் மீதான பாலியல் உணா்ச்சி என்று உளவியல் நிபுணா்கள் வரையறுக்கிறார்கள்.

Pedophilic Desire என்பது பருவமெய்யாத குழந்தைகளின் (Prepubescent child) மீது தனிமனிதனுக்கு ஏற்படும் பாலியல் உணா்ச்சி.

Hebephilia – என்பது 11 வயதிலிருந்து 14 வயதுவரையிருக்கும் வளா்பருவத்தினா் மீதான பாலியல் உணா்ச்சி.

Ephebophilia – என்பது 15 வயதிலிருந்து 19 வயதுவரையிருக்கும் பருவத்தினா் மீதான பாலியல் உணா்ச்சி.

Teleiophilia – 20 வயதிலிருந்து 30 வயதுவரையிருக்கம் இளம் பருவத்தினா் மீதான பாலியல் உணா்ச்சி.

Gerontophilia – குறிப்பாக 60 வயதுக்கு மேலிருப்பவா்கள் மீதான பாலியல் உணா்ச்சி.

இதில் முதல் ஐந்து வகையைச் சோ்ந்தவா்கள் தான் நாம் வாழும் சமூகத்தில் மிகப் பரவலாக இருக்கிறார்கள். அவர்கள் தோ்வு செய்யும் குழந்தைகளின் வயது 5-லிருந்து 19 வயது வரையிருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதை இந்தியாவின் தேசிய குற்றப்பதிவு பிரிவினரின் ஆவணத்திலிருந்து நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

அதாவது, (தமிழ்நாட்டில்) 6 வயதுக்கு கீழிருக்கும் குழந்தைகள் 47 பேரும், 6-12 வயது குழந்தைகள் 111 பேரும், 12-16 வயது குழந்தைகள் 578 பேரும், 16-18 வயது குழந்தைகள் 730 போ் என மொத்தம் 1466 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் கணிசமான அளவில் ஆண் குழந்தைகளும் அடங்குவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நெடுங்காலத்திற்கு தங்களுடைய பாலியல் இச்சைகளை தீா்த்துக் கொள்வதற்கு ஏதுவாக இருப்பதற்காக இவா்கள் தேர்வு செய்யும் குழந்தைகள் அனைவருமே அவர்களுக்கு நன்கு அறிமுகமானவா்களாகவோ அல்லது அவா்களின் உறவினர்களின் குழந்தைகளாகவோ இருக்கும்.

இதை எவ்வளவு காலம் இருட்டில் ஒளித்து வைத்திருக்கிறோமோ அவ்வளவு காலமும் எத்தனைக் குழந்தைகளின் வாழ்வை வேண்டுமானாலும் அது உட்கொண்டு தன்னை உருமாற்றிக் கொள்ளும் தன்மையுடையது. இத்தனை காலமாக பல தலைமுறைக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த குணாதிசயங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் போது தான் தனிமனித மற்றும் சமூக-உளவியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

இப்படிப்பட்ட ஒரு கொடூர குணத்தின் விளைவு எப்படி வெளியுலகிற்கு தெரியாமல் போனது? ஏன் இப்படிபட்டவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை? ஏன் இந்தியாவில் இந்த குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை? பாலியல் கல்வியை எந்த வயதிலிருந்து தொடங்க வேண்டும் அல்லது யாருக்கு இன்னும் அழுத்தமாக பாலியல் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்? என்று எத்தனையோ கேள்விகளை சமூக-உளவியல் பார்வை கொண்டு நாம் அணுக வேண்டிய அவசியமுள்ளது என்பதைத் தான் இந்த தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பள்ளிகளும் பாலியல் கல்வியும்

மேற்கூறிய பிரச்சினைகளைத் தீா்க்கும் பல்வேறு கூறுகளுள் மிக முக்கியமானதாக பாலியல் கல்வி கருதப்படுகிறது. கல்வித் தளத்தில் பாலியல் கல்வியை ஆபாசமானதாக கருதுவதன் நோக்கமே பாலியல் கல்வியை உடலுறவுடன் மட்டும் பொருந்திப் பார்க்கும் ஒரு பிற்போக்கத்தனமேயன்றி வேறறொன்றுமில்லை.

பாலியல் கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பெற்றோர்களே பாலியல் கல்வியை எதிர்மறையாகத்தான் புரிந்து கொண்டிருக்கின்றனா். அவா்களில் பெரும்பான்மையான குற்றச்சாட்டு என்பது, பாலியல் கல்வியானது இளம் வயதினருக்கு உடலுறவைப்பற்றியும் உடலுறவில் எப்படி ஈடுபடுவது என்பது பற்றியும் மட்டுமே கற்றுக் கொடுப்பதாக எண்ணுகின்றனா்.

மேலும், பாலியல் கல்வியைக் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கற்றுக்கொடுப்பதன் மூலம் பாலியல் சார்ந்த குற்றங்களும், மாணவ-மாணவிகளின் ‘ஒழுக்க’ நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதாக சில கலாச்சார காப்பாளா்கள் கூறி வருகின்றனா். இவையனைத்தும் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் என பல தடவை நிரூபணமாக்கப்பட்டது தான் என்றாலும் UNESCO வெளியிட்டுள்ள விரிவான பாலியல் கல்விக் கொள்கையை இந்தியாவின் பல மாநிலங்கள் அதிகாரப் பூா்வமாக தடை செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால், யுனெஸ்கோவின் அறிவுறுத்துதலின்படி பாலியல் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டமானது இள வயதுடையவா்கள் மூலம் பாலினச் சமத்துவத்தை சமூக-பண்பாட்டுத் தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று ஆதாரப் பூா்வமாகக் குறிப்பிடுகின்றனா்.

பெண்களுக்குத் தான் பாலியல் கல்வி அவசியம் தேவை என்னும் அடிப்படைகளற்ற கருத்தை தவிர்த்து, பாலியல் கல்வி என்பது இருபாலருக்கும் மற்றும் அனைத்து வயதினருக்குமான அத்தியாவசியத் தேவை என்பதை உணருதல் வேண்டும். மேலும், தங்களுடைய குழந்தைகளின் உடல் சார்ந்த தேவைகளை பெரும்பான்மையான பெற்றோர்கள் கேட்டறிந்ததும் இல்லை, அவா்களுக்கு பாலியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முயற்சித்ததும் இல்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம், பாலியல் கல்வி என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்னும் பிற்போக்குத்தனமான பரப்புரை சமூகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பாலியல் கல்வியை கல்வித் தளத்தில் நிராகாரிப்பதன் விளைவும் தான் நடந்து கொண்டிருக்கும் குற்றங்கள்.

இத்தகைய பண்பாட்டு மாற்றம். கல்வித் தளத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு தளத்திலும் பாலினச் சமத்துவத்தையும் பாலியல் கல்வியையும் முன்னெடுக்கும்போது இந்த ஆபத்தான பண்பாட்டு மாற்றம் அடுத்த தலைமுறைக்குள் ஊடுருவாமல் நம்மால் தடுக்க முடியும்.

குழந்தைகள் -பெற்றோர் கையேடு (தரவு: NSPCC – Cruelty to Children must stop. Full Stop)

(https://www.nspcc.org.uk/keeping-children-safe/support-for-parents/pants-underwear-rule/)

குழந்தைகளுக்கு உள்ளாடை விதிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் அவா்களின் உள்ளாடைப் பற்றி பேசுவோம்.

  1. அந்தரங்கங்கள் அந்தரங்கங்களே – உங்களுடைய உடம்பில் உள்ளாடையால் மறைக்கப்பட்டுள்ள பகுதிதான் உங்களின் அந்தரங்கப் பகுதி. அதை யாரும் பார்க்கவோ அல்லது தொடுவதற்கோ நீங்கள் அனுமதிக்கக் கூடாது.. சில நேரங்களில் மருத்துவா்களோ செவிலியா்களோ அல்லது குடும்ப உறுப்பினா்களோ அந்தரங்கத்தை பார்க்கவோ தொடவோ வேண்டியிருக்கும். ஆனால், அதை அவா்கள் செய்வதற்கு முன்னால் அவா்கள் சரியான விளக்கம் பெற்று உங்களிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், உள்ளாடைகளால் மறைக்கப்பட்டிருக்கும் அவா்களின் உடல் பாகங்களை பார்க்கவோ அல்லது தொடவோ உங்களிடம் யாரும் கேட்கக்கூடாது.
  2. எப்பொழுதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய உடல் உங்களுக்கு சொந்தமானது – இது உங்களுடைய உடல், வேறு யாருடையதும் அல்ல. உங்களை யாரும் கூச்சமடையவோ அல்லது சங்கடமாக உணரவைக்கும் விஷயங்களையோ யாரும் செய்யக் கூடாது. அப்படி யாரும் உங்களிடம் நடக்க முயற்சி செய்தால், நீங்கள் நம்பும் ஒருவரிடம் அதைத் தெரிவிக்கவும்.
  3. இல்லை என்றால் இல்லை தான் – உங்களுடைய குடும்ப உறுப்பினா்களிடமோ (அ) நீங்கள் விரும்பும் ஒருவரிடமோ இல்லை (அ) வேண்டாம் என்று மறுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையுள்ளது. ஞாபகம் வைத்துக் கொள்ளவும், உங்களுடைய உடல் மற்றும் உணா்வுகளை நீங்கள் தான் கட்டுப்படுத்துகிறீா்கள்.
  4. உங்களை கவலைக்குள்ளாக்கும் இரகசியங்களை பற்றி வெளியே பேசுங்கள் – இரகசியங்கள் உங்களைக் கவலைக்குள்ளாக்ககவோ (அ) வருத்தப்பட வைக்கவோ கூடாது. அப்படியிருந்தால், நீங்கள் நம்பும் ஒருவரிடம் அதை தெரியப்படுத்தவும். உங்களை வருத்தப்பட வைக்கும் இரகசியங்களை பகிர்வதன் மூலம் உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை.
  5. வெளியே பேசுங்கள் அப்போது தான் யாராவது உதவ முடியும் – உங்களை கவலைக்குள்ளாக்ககவோ (அ) வருத்தப்படவைக்கும் விஷயங்களை பற்றி வெளியே பேசுங்கள். நீங்கள் நம்பும் ஒருவா் நிச்சயமாக அதை கவனித்துக் கேட்பார், மேலும் அவா் உங்களுக்கு உதவ முடியும். அவா் உங்களுடைய குடும்ப உறுப்பினராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவா் உங்களுடைய ஆசிரியராகவோ (அ) உங்கள் நண்பரின் பெற்றோராகவோ (அ) 1098 என்ற சைல்டு லைன் (Child Help Line) எண்ணிற்கு தெரியப்படுத்தலாம்.

- கிரண்குமார் ஜீவகன்

Pin It