எப்போதும் பரப்பான செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நாம், அப்படி அந்த செய்திகளில் உண்மைத் தன்மை இருக்கின்றதா? என்று கூட பார்க்காமல், பரபரப்பாக இருக்கின்றதே என்பதற்காக அந்த செய்தியைப் பற்றி நாள் கணக்கில் விவாதிப்போம், அதுவும் பெண்கள் சார்ந்த செய்தியென்றால் மட்டும், கலாச்சாரம், பண்பாடு, என்றெல்லாம் பேசி, நம்மை நாமே புனிதர்களாகக் காட்ட முயற்சிப்போம்.
இது அடுத்து ஒரு பரபரப்பான செய்தி கிடைக்கும் வரை, பழைய செய்திக்கான வாதங்களையும், தீர்ப்புகளையும், அவரவர் பார்வைக்கு தகுந்த மாதிரி சொல்வார்கள். அப்படி ஒரு செய்தியைத் தான் நானும் பேசப்போகிறேன். இதில் நான் மட்டும் விமர்சிப்பதில் விதிவிலக்கு என்று சொல்வதல்ல என் நோக்கம், விமர்சகர்களின் மீதான விமர்சமனமாக இதைச் சொல்கிறேன்.
சில வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிகளில் நடந்த ஒரே மாதிரியான இரு நிகழ்ச்சிகளில் நடந்த சம்பவங்களை முதலில் பார்ப்போம். இரண்டு நிகழ்ச்சிகளிலும் திரைத்துறையில் உள்ள இரண்டு ஆளுமைகள் மூலம் நடத்தப்படுகிறது. குடும்பங்களில் கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை இவர்களிடம் கொண்டு சென்று பஞ்சாயத்து செய்யப்படுகிறது.
நான்கு சுவர்களுக்கு நடக்கும் அந்தரங்க விசயங்களையும் அரங்கத்திற்க்கு கொண்டுவந்து விமர்சிக்கிறார்கள்.
அதன் மூலம் பார்வையாளர்களுக்கு சுவராசியாமான(நமக்கு அடுத்த வீட்டில் நடக்கும் சாதாரண சண்டை என்றாலே தீனி தான். இதில் அவர்களின் அந்தரங்க விசயமும் வருவதால் சொல்லவா வேண்டும். சாக்லேட்டுடன் லட்டும் சாப்பிடும் சுகம் தான்) நிகழ்ச்சியையும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நல்லதொரு வருமானத்தையும் விளம்பரதாரர்கள் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நீதிமன்றங்கள் செய்ய வேண்டியதை, இவர்களே நடத்தி தீர்ப்பும் வழங்கிவிடுகிறார்கள்.
முதலில் இந்த நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள், காவல் நிலையங்களைக் கண்டு பயப்படுவர்களாகவும், நீதிமன்றங்களில் ஏற்படும் காலவிரயம் மற்றும் பொருளாதார இழப்பும், மேலும் தங்களின் சுயமரியாதை தொலைந்தாலும் பரவாயில்லை, தங்களுக்குத் தேவை உடனடித் தீர்வு என்கிற மனப்பான்மை தான், இவர்களை இந்தமாதிரியான நிகழ்ச்சிகளுக்கு செல்லத்தூண்டுகிறது.
கட்டப்பஞ்சாயத்துகளும் டி.வி பஞ்சாயத்துகளும்
இது காலம் காலமாக கிராமங்கள் தோறும் நடக்கும் மரத்தடி கட்டப் பஞ்சாயத்துகள் தான், நகரங்களுக்கேற்ப சற்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், டீக்கடையிலும், சாராயக் கடையிலும், வீட்டின் திண்னை மற்றும் வாசலிலும் பேசி வந்த அடுத்தவர் கதைகளை, இப்போதுள்ள நவீனமயமாதலுக்கேற்ப, பேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் பேசி வருகிறோமோ அது போலத்தான் கட்டப் பஞ்சாயத்துகளும் மாறி வருகிறது.
கிராமங்களில் நடக்கும் பஞ்சாயத்துகளில் சாதியக் கட்டமைப்பு குலையாமல் பார்த்துக் கொள்ளப்படும். குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் இன்றளவும் கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கின்றன. இது மாதிரியான பஞ்சாயத்துகளின் அந்தந்த ஊர்களில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆண்டைகள் தான் தீர்ப்பு வழங்குவார்கள். தீர்ப்பு வழங்கும் ஆண்டைகள் நல்லவர்களா, கெட்டவர்களா, படித்தவர்களா, பண்பானவர்களா என்றும் யாரும் பார்ப்பதில்லை. ஆதிக்கம் தான் முக்கியம், ஆதிக்கம்- சாதியாகவும், பணமாகவும் இருப்பது முக்கியம்.
இப்படியான ஆதிக்கவாதிகளிடமிருந்து, பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நியாயம் எப்போதும் கிடைத்ததில்லை. ஒடுக்கப்பட்ட பெண்களாக இருந்தால், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், ஆணாக இருந்தால் அவர்களை அடித்து துன்புறுத்துதல், பெண்களை கூட்டாக பாலியல் வண்புணர்வுச் செய்யச் சொல்லுதல், போன்ற தீர்ப்புகள் தான் கிடைக்கும்.
மேலும் இந்த மாதிரியான செயல்களை எதிர்த்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல், அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என்றும் சொல்வார்கள். ஒருவன் ஆதிக்க சாதியாக இருந்து, ஒடுக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தால் அவனுக்கு சில ஆயிரம் பணம் மட்டுமே தண்டணையாக வழங்கப் படுகிறது. ஒடுக்கப்பட்ட ஒரு பையன் ஆதிக்கசாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தால் கூட அந்தப் பையனை கொலை செய்வதும், பெண்ணை கவுரக் கொலையும் செய்வதும், அல்லது அந்தப் பெண்ணை சாதியவாதிகளால் நடத்தப்படும் விடுதிகளில் அடைத்துவைத்தல், போன்ற மனிதாபிமானத்திற்கெதிரான தீர்ப்புகள் தான் வரும்.
கயர்லாஞ்சி எனும் கிராமத்தில் ஒரு நிலப்பிரச்சனையில் அதிக்கவாதிகள் எல்லாம் சேர்ந்து, ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களை எல்லாம் அந்தக் குடும்பத்தலைவன் முன்னாடியே பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்ற செய்தியும் நாம் படித்திருக்கிறோம். இந்த மாதிரியான சாதியக் கொடுமைகள் இந்த நவீனமயமாக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் இல்லை என்றே சொல்லலாம்.
மேலும், இப்படிப்பட்ட கிராமப்பஞ்சாயத்துகளில் எந்தக் கிராமத்திலும் பெண்கள் கருத்துச் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வெறும் பார்வையாளர்களாக மட்டுமே பெண்கள் இருக்கவேண்டும். பெண்களைக் கருத்துச்சொல்லவே அனுமதிக்காததுதான் இங்கு பண்பாடு. இப்படி ஒரு சமுதாய நிலையில் வாழ்ந்து பழகிய ஆணாதிக்கச் சமூகம், இந்த நவீன டி.வி பஞ்சாயத்துகளில் பெண்கள் முடிவெடுத்து, தீர்ப்பையே சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளும்?
குஷ்புவின் அதிரடி
அப்படியான நவீன கட்டப் பஞ்சாய்த்துக்கு வந்த சில செய்திகளைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம். நடிகை குஷ்பூ தலைவராக இருக்கும் நிகழ்ச்சியில் ஒரு கணவன் தன் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு கேட்கிறார். (அடிப்படையில் அவன் ஒரு சந்தேகப் பேர்வழி, தன் மனைவியை, அந்தப் பெண்ணின் தகப்பனார், தம்பியிடன் சேர்த்து வைத்து தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தியுள்ளான். அதனால் அந்தப் பெண் தன் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்). என் மனைவிதான் என்னை விட்டு பிரிந்துள்ளார், நான் மிகவும் நல்லவர் என்று கதை சொல்கிறார்.
குஷ்பூவும் அந்தப் பெண்ணை வரவழைத்து ஏன் என்று கேட்கிறார். அந்தப் பெண்ணும் தன் கதை முழுவதும் சொல்ல ஆரம்பித்து, இவனால் தன்னுடைய ஒரு குழந்தையை வயிற்றிலேயே இறந்த நிகழ்வும் சொல்கிறார். மேலும் அந்த்ப பெண்ணும் கணவனின் கொடுமையால் மனச்சிதைவுக்கும் ஆளாகியுள்ளார். இதற்கான வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் போது அந்தப் பெண் கோபத்தை அடக்க முடியாமல் கணவரை கன்னத்தில் அடித்துவிடுகிறார்.
அந்தப் பெண்ணின் சகோதரியிடமும் வாக்குவாதம் செய்யும் போது அந்தப் பெண்ணும் அவனை அடித்துவிடுகிறார். இதற்கு அவன் அந்தப் பெண்ணைப் படுமோசமான கெட்டவார்த்தையால் திட்டிவிடுகிறான். அப்போது தான் நடிகை குஷ்பூ அவனின் சட்டையப்பிடித்து அநாகரீமாக பேசியதற்குக் கண்டித்துவிட்டு அமருகிறார். அந்த இடம் தான் அவரைப் பற்றி பேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் கடுமையாக விமர்சிக்க வைக்கிறது.
அந்த நபரை சட்டையப் பிடித்தற்காக குஷ்பூவைக் கேள்வி கேட்கும் நாம், அந்த நபரின் செய்கையை என்னவென்று கண்டிப்பது? குஷ்பூவின் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். அப்படித்தான் நடக்கவேண்டும். ஏன் அந்த நபரின் சட்டையை ஒரு ஆண் நடிகர் பிடித்தால் இதே மாதிரிதான் நாம் எதிர்வினையாற்றுவோமா? ஒரு பெண் என்பதானால் ஒரே கொதிப்பு. இந்த நிகழ்வுக்கு மட்டும் அவரை கண்டிக்கிறார்களா? என்றால் இல்லை.
அந்த நடிகையின் பழைய வாழ்க்கையைத் தோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் சில முற்போக்கு பேசும் பெண்களும் அவரின் கடந்த காலத்தில், சினிமாவில் அரைகுறை ஆடையுடன் நடித்ததையும் ஒப்பிட்டு, நீயெல்லாம் பஞ்சாயத்து பேசலாமா? என்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியை பிடிக்கவில்லையென்றால் அந்த நிகழ்ச்சியைத் தான் விமர்சிக்க வேண்டுமே தவிர, நிகழ்ச்சி நடத்துபவரின் கடந்த கால வாழ்க்கைய அல்ல? அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதும் நம் சிந்தனைக் கோளாறு தான்.
ஒடும் பேருந்தில் ஒரு ஆண், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் தவறாக நடக்கும் போது, அந்தப் பெண்ணின் அருகிலிருக்கும் ஆணோ, பெண்னோ, அவனை அடிக்க முற்படுவார்களே அப்போது போய் அடிக்க முனைந்தவரிடம் நீ ஒரு பெண் என்பதால் நீ அந்த ஆணை அடிக்க கூடாது என்று யாரும் சொல்லவும் முடியாது. அந்தப் பெண்ணின் வரலாறையும் தேடமுடியாது. தன் அருகே இருக்கும் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறும் போது அதைப் பார்த்துக் கொண்டு எந்தப் பெண்ணும் சும்மா இருக்க முடியாது.
இந்த மன நிலைமை தான் அந்த நடிகைக்கும் இருந்திருக்கும். தவறே செய்யாதவர்கள் தான் தண்டனை வழங்கவேண்டும் என்றால் நாட்டில் யாரையும் யாரும் தண்டிக்க முடியாது. பெண்கள் பொது வெளியில் வந்து ஆண் செய்யும் வேலையை செய்யும் போது, ஆணாதிக்கச் சிந்தனை பெண்களை காயப் படுத்த ஆரம்பிக்கிறது. நீண்ட காலமாய் நம்மிடம் இருந்த இடம் (ஆரம்பத்தில் பெண்களிடம் தான் எல்லாத் துறையும் இருந்தன) மீண்டும் பெண்களுக்கே திரும்புகிறது என்கிற எரிச்சலில், ஆண்கள் பெண்கள் மீது பாலியல் போர்தொடுக்கிறார்கள். அதற்கு சில பெண்களும், ஆண்களின் கேவலமான செயல்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
இதேபோல் மற்றொரு நிகழ்ச்சியில் இலட்சுமி இராமகிருட்ணனின் உடல் மொழியைக் கிண்டலடித்து, அவர் பேசுவது போல் நடித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியும், ஒரு படத்தில் பாட்டையும் பாடிவிட்டார்கள். ஊடக அறம் என்னவென்றே தெரியாத பாண்டே கூட தான் ஒரு ஆண் என்பதால் தனக்கும் எல்லாம் தெரியும் என்று கர்வத்துடன் இலட்சுமிக்கு அறம் பற்றிய பாடம் எடுக்கிறார்.
குஷ்பூவும், இலட்சுமியும் நிகழ்ச்சியில் சொல்லும் எந்தக் கருத்துகளிலும் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இந்துத்துவவாதிகளைப் போல் குடும்பம் என்கிற அமைப்பு எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் அதனை விட்டு விலகக் கூடாது என்று நினைப்பவர்கள். அதனால் இவர்கள் மேல் எந்த கரிசனமும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்குச் செல்வதன் மூலம் நமது பிரச்சனைகள் பொதுவெளியில் காட்சிப்படுத்தப் படுகிறது என்று தெரிந்து தான் மக்களும் செல்கிறார்கள். அவர்களுக்கு தேவை உடனடித் தீர்வு. அது இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கும் கிடைக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் பிரச்சனையைத் தொடர்ந்து பார்கிறோம். குழாயடிகளில் நடக்கும் சண்டையைப் பார்ப்பது போல் கூட்டம் கூட்டமாக பார்க்கிறோம். ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்ளும் பொருள் நம் மீது விழும்வரை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். விழுந்தபின் நியாயம், தர்மம் பேச ஆரம்பிக்கிறோம். சண்டைபோடுபவர்களின் நதிமூலத்தை ஆராய ஆரம்பிக்கிறோம்.
இந்த மாதிரியான சண்டைகளை தொலைக்காட்சிகளின் பார்ப்பதன் மூலம் நாளுக்கு நாள் நம் சுவராசியம் கூடிக்கொண்டே போகிறது அதன் மூலம் இந்நிகழ்ச்சிக்காண டிஆர்பி ரேட்டிங் கூடுவதால், விளம்பரதாரர்களும் கூடி, நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சிகளுக்கும் வருமானம் கூடுகிறது.
ஆகையால் குற்றம் குஷ்பூ மற்றும் இலட்சுமியிடம் மட்டும் இல்லை. அவர்கள் மீது கல்லெறியும் நம்மிடமும் உள்ளது. சமூகப்பொறுப்பு கடமை எல்லோருக்கும் வேண்டும். இந்த மாதிரியான நிகழ்ச்சிகளைச் சீர்செய்ய வேண்டுமானால் அதில் இருக்கும் குறைகளைக் களைய தேவையான கருத்துகளை நிகழ்ச்சி தொகுப்பாளருக்குத் தெரிய்படுத்துங்கள்.
அதே கருத்துகளைப் பொது வெளியில் விவாதியுங்கள். நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்படாவிடில், அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தரும் விளம்பர தாரர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள். அதையும் பகிங்கரமாக அறிவியுங்கள். அப்பொழுதுதான் ஒரு தீர்வு கிடைக்கும். தனிநபர் தாக்குதலைத் தவிர்ப்போம். பெண்களின் சமூக வெளியை அங்கீகரிப்போம்.