“... இந்தியாவில் தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள் என்பது உறுதியாகிறது. இந்திய அரசு சட்டத்தை உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்தும்படி நிர்வாகத்தை வலியுறுத்தினாலும் – இப்பிரச்சனையின் (சாதி) வேரைக் கண்டுபிடித்து ஒழிக்க அது தவறிவிட்டது. தொடக்கப் பள்ளிகளில் சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவம் குறித்து கற்றுத் தருவதற்கான ஒரு விரிவான – முழுமையான அணுகுமுறை இல்லாதவரை, சாதிப் பாகுபாடுகள் விரைவில் மறைவதற்கு வாய்ப்பில்லை. பொருளாதாரத் தளத்தில் தனியார் துறையினரின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பணி இடங்களில் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்ப்பதற்கு எவ்விதத் திட்டமும் இல்லை எனில், அது மிகப்பெரிய அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை தோற்றுவித்துவிடும். இந்தியாவின் பொதுப் பள்ளிகளில் உள்ள கல்வித்திட்டத்தில், தலித் மக்களை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு முழுமையான பாடத்திட்டம்தான் இதுபோன்ற பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், இத்தகையதொரு கல்வித் திட்டம் இங்கு முற்றிலுமாக இல்லை.''

– அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் டேவிட் முல்போர்டு, 22.6.2005 அன்று அனுப்பிய செய்தி (35177 : கமுக்கம்) "விக்கிலீக்ஸ்' – "தி இந்து' 25.3.2011

தேர்தல்கள், ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரலாம். ஆனால், அவை அடித்தட்டு மக்களின் வாழ்நிலையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. தேர்தலில் பங்கேற்கும் தலித் அரசியல் கட்சிகள், மீண்டும் மீண்டும் அக்கறையோடு அணுக வேண்டிய முதன்மையான பிரச்சினை இது. பலவிதமான முறைகேடுகளில் ஒருமித்திருந்தாலும், தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வர இயலும் என்பது மற்றொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இத்தகையதொரு சூழலில், தலித் கட்சிகளின் பங்கு மிகவும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. தேர்தல் அரசியலில் பங்கேற்பது மட்டுமே, தலித் மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் தீர்த்து விடாது என்பதைப் புரிந்து கொள்வதற்குரிய தருணமிது!

“தமிழ்நாட்டில் கணக்கெடுக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள 104 கிராமங்களில், இரட்டை டம்ளர் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. கோயில்களிலும், திருவிழாக்களிலும் தலித் மக்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. 9 மாவட்டங்களில் உள்ள 45 ஊராட்சித் தலைவர்கள் தங்கள் மீது சாதிப்பாகுபாடு காட்டப்படுவதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்'' ("தி இந்து' 7.3.2011); “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டு கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள், "நாங்கள் சமூக, பொருளாதார, பண்பாடு ரீதியாக சாதி இந்துக்களால் வெறுத்து ஒதுக்கப்படுகிறோம்' என்கின்றனர்'' ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 2.3.2011).

“மதுரை மாவட்டத்தில் உள்ள வில்லூர் கிராமத்தில், சாதி இந்துக்களின் தெருக்களில் – தலித்துகள் எவரும் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது; தலித்துகள் வேட்டி கட்டிக் கொண்டு போகக்கூடாது. மீறினால் வேட்டியை உருவி விடுவார்கள். இதை மீறிய தங்க பாண்டியன் என்ற தலித் இளைஞர் தாக்கப்பட்டு, அது கலவரமாக மாறி, காவல் துறையினர் மீதே சாதி இந்துக்கள் நடத்திய தாக்குதல், இறுதியில் துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கிறது'' ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 2.5.2011); “4,744 ஏக்கர் பஞ்சமி நிலங்களை பிற சமூகத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், 2000 ஏக்கர்களுக்கும் மேலான பஞ்சமி நிலங்கள் சட்டத்திற்குப் புறம்பாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன'' ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 23.3.2011).

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது ஏற்பட்ட மோதலில், தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரை சாதிப் பெயரைச் சொல்லி அடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 19.4.11 அன்று தண்டனையை உறுதி செய்து முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது: “சாதி தொடர்பான கவுரவக் கொலைகள் மற்றும் சாதி பெயரைச் சொல்லி அவமதிப்பது போன்ற குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் பகுதிக்கு பொறுப்பாக உள்ள மாவட்ட காவல் மற்றும் ஆட்சிப்பணி அதிகாரிகளை இடைநீக்கம் செய்வதோடு, குற்றங்களைத் தடுக்கத் தவறியதற்காக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்'' (இந்தியன் எக்ஸ்பிரஸ்' 20.4.2011)

இன்றளவும் தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எல்லையே இல்லை; இவற்றை 63 ஆண்டு கால தேர்தல் அரசியல் தீர்க்கவும் இல்லை. அதைக் கடந்து அநீதிகளுக்கு எதிரான இடையறாத போராட்டம் என்பது, இந்து சாதிய சமூக அமைப்புக்கு எதிராக நடத்தப்பட வேண்டும். ஆம், இந்துவாக இல்லாமல் போவதற்கான போராட்டம் அது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர், "சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதுதான் தமது அரசின் முன்னுரிமை' என்று அறிவித்திருக்கிறார். மநுதர்ம காலத்திலும் வர்ணாசிரம சட்ட ஒழுங்கை காப்பாற்றத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது. தற்கால சட்டத்தின் ஆட்சியிலும் சாதி – தீண்டாமையைப் பாதுகாக்கும் சட்ட ஒழுங்கிற்குதான் முன்னுரிமை அளிக்கப்படுமா?

Pin It