உளுத்து நாறிப்போன அதிகார வர்க்கத்தைச் சுமந்து கொண்டு, ஊர்வலம் – நகர்வலம் – நாடுவலம் வரும் பார்ப்பன – இந்துத்துவ அரசியலமைப்பு எனும் யானையைச் சிரம் தாழ்த்தி வணங்கி, தேர்தல் திருவிழாக்களில் நாம் திளைத்துக் கிடக்கிறோம். "உலகின் ஒப்பற்ற ஜனநாயகம்' என்பதை மெய்ப்பிக்க நம் விரல்களில் வைக்கப்படும் மைத்துளியில் நாம் பரவசம் கொள்கிறோம். ஜனநாயகக் கடமை, வாக்குரிமை, கருத்துரிமை என்ற பிதற்றல்களில் நம் வாழ்வுரிமை பறிபோய்க்கொண்டிருப்பதை நாம் உணர மறுக்கிறோம்.

azad_288நயவஞ்சக மத யானையின் முன் நாம் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், பலம் கொண்ட யானையே எனினும் – உயிர் துறப்போம் என்பதை உணர்ந்திருந்தும் – மற்போருக்கு நெஞ்சுரம் காட்டி நிற்கின்றனர் நம் உடனுறையும் சிலர்; அவரே மக்கள் போராளிகள். மதம் கொண்ட யானையின் மூர்க்கத்தனமே, பசுமை உயிர் வேட்டை. பருத்த யானையின் உடலில் பூசப்பட்ட முகலாய நறுமணத் திரவியத்தைவிட, பசுமை வேட்டையின் பச்சைக் குருதி நெடியின் வீச்சு அதிகம்.

திட்டமிடப்பட்ட இந்தப் படுகொலைகள் தற்செயலானவை என்றும் மல்லுக்கு நிற்பவர்கள் மண்டியிட முன்வந்தால் யானை நம் புலனுக்கு எட்டிய வகையில் ஒரு "சைவப் பிராணி'யே என்றும், இக்குருதி நெடி நம் மூர்ச்சையைத் துளைக்காத வகையில், உபதேசங்கள் செவியை மட்டுமல்ல, நாசியையும் அடைக்கின்றன. நாடும் மக்களும் (நாம்) பேச்சு மூச்சற்றுப் போவதற்குள், "பேசித் தீர்க்கப்படும்' என்ற புராதன காலத்து ராஜதந்திரம், எக்காலத்தையும் போல் இப்போதும் தேவைக்கொப்ப எடுத்தாளப்படுகிறது.

ஆளும் வர்க்கத்தின் மாவோயிஸ்டுகளுடனான பேச்சுவார்த்தைக்கு செருகுரி ராஜ்குமார் (எ) ஆசாத், மாவோயிஸ்டுகளின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பேச்சுவார்த்தையில் சுவாமி அக்னிவேஷ், அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டு வருகிறார். பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான புள்ளிகளை அரசுத் தரப்பிடமிருந்தும் மாவோயிஸ்டுகளிடமிருந்தும் கடிதங்களாகப் பெற்று, இரு தரப்பிற்கும் இடையில் பரிமாற்றம் செய்து வந்தார்.

இரண்டு கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்ட பிறகு, “லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் கொடூரமாக நசுக்கப்படுவதைத் தவிர்க்க, எமது கட்சி உண்மையாகவே பேச்சுவார்த்தையை விரும்புகிறது. இரு பக்கமும் சண்டை நிறுத்தம் செய்து கொண்டு, எமது குறைந்த பட்ச கோரிக்கைகளை செயல்படுத்தவும், எமது கட்சியின் மீதான தடைகளை நீக்கவும், சிறையில் உள்ள முன்னணித் தலைவர்களை விடுதலை செய்யவும் அரசு முன்வர வேண்டும்.

“மேலும் சண்டை தொடராமல் இருக்க, துணை ராணுவப் படைகளைப் போர்ப்பகுதியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்'' என்ற நிபந்தனைகள் அடங்கிய ஆசாத்தின் கடிதத்திற்கு, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் பெற்றுக் கொண்ட பதில்களை உள்ளடக்கிய மூன்றாவது கடிதத்தை 2010 சூன் 26 அன்று, சுவாமி அக்னிவேஷ் ஆசாத்திற்கு அனுப்பி வைத்தார். இக்கடிதத்தில் ப. சிதம்பரம் 72 மணி நேரத்திற்கு சண்டை நிறுத்தம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தார்.

ஆனால், “இந்த அரசு உண்மையான அக்கறையுடன் செயல்படுவதாக இருந்தால், சண்டை நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்த வேண்டும்'' என ஆசாத் வலியுறுத்தி இருந்தார். பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்து அனுப்பப்படும் என்று எண்ணியிருந்த சுவாமி அக்னிவேஷ்க்கு, ஆந்திராவின் வனப்பகுதியில் ஆசாத் போலி மோதலில் கொல்லப்பட்ட செய்திதான் வந்து சேர்ந்தது.

“அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் நம்பிக்கைக்குரியவராகவும் முக்கியமானவராகவும் அவர் இருந்தார். இது, அரசுத் தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்குமே பெரிய இழப்பு. அவரது மரணம் அமைதிக்கான வாய்ப்புகளை தடம்புரளச் செய்து விடாது என்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்'' என்று தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார் சுவாமி அக்னிவேஷ். ஆசாத் கொல்லப்பட்ட சில வாரங்களில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். லால்கரில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஆதிவாசிப் பெண்கள் பல கிராமங்களில் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். “சண்டை நிறுத்தம் செய்து கொள்வதற்காகக் கட்சிக்குள் தீவிரமாக வாதாடி வந்தவர் ஆசாத். அவரைக் கொன்றதன் மூலம், அரசாங்கம் ஒருபோதும் பேச்சுவார்த்தையில் அக்கறை கொள்ளவில்லை என்பதை உணர்த்தியுள்ளது'' என மாவோயிஸ்டுகளின் தண்டகாரண்யா சிறப்புப் பகுதி செய்தித் தொடர்பாளர் உசெண்டி குற்றம் சாட்டுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் மத்தியக் குழு செய்தித் தொடர்பாளராகவும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும், பொதுச் செயலாளர் கணபதியின் நெருங்கிய தோழராகவும் இருந்தவர் ஆசாத்.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர். வாரங்கல் பொறியியல் கல்லூரியில் இரண்டு எம்.டெக். பட்டங்கள் பெற்ற சிறந்த படிப்பாளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர். புரட்சிகர மாணவர் சங்கத்தை ஆந்திராவில் நிறுவியவர்களில் ஒருவர். அவசர நிலைக் காலத்தில் சிறைப்படுத்தப்பட்டு, வெளியில் வந்த சில மாதங்களிலேயே தலைமறைவு வாழ்க்கைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவர்.

மாவோயிஸ்டு கட்சியின் தத்துவ – கோட்பாட்டு விவாதங்களிலும், செயல்திட்ட முன்னெடுப்புகளிலும், அமைப்பு உருவாக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். புரட்சிகர அரசியல் இயக்க வரலாற்றில் தனக்கென தனி இடம் பெற்றிருப்பவர். முதலாளித்துவ அறிவாளிகளுக்கு குறிப்பாக, ஊடகங்களுக்கு அண்மைக் காலங்களில் பழங்குடி மக்களின் பிரச்சனைகளையும் உரிமைகளையும் தனக்கேயுரிய அறிவு விசாலத்துடன் எடுத்துச் சொன்னவர். தார்மீக ஆவேசத்துடன் எழுதியவர். பழங்குடி மக்களின் என்றென்றைக்குமான அன்புக்குரிய உற்ற தோழர் என அறிந்த வகையில், அவருடைய இழப்பு ஈடுசெய்ய இயலாததே என உணர முடியும்.

kattar_600

(2.7.2010 அன்று படுகொலை செய்யப்பட்ட ஆசாத்திற்கு வீரவணக்கம் செலுத்துகிறார் புரட்சிப் பாடகர் கத்தார்)

ஆந்திர – மகாராட்டிர எல்லையில் சுமார் 30 மாவோயிஸ்டுகள் அடிலாபாத் வனப் பகுதியில் ஊடுருவியிருப்பதாக உளவுத் துறை தகவல் கிடைத்து சுற்றி வளைத்ததாகவும், அவர்களைச் சரணடைய கேட்டுக் கொண்டபோது, துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால் தாங்கள் திருப்பிச் சுட்டதாகவும் தெரிவித்தார், அடிலாபாத் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பிரமோத் குமார். மேலும், சூலை 1 அன்று இரவு 11.30 முதல் சூலை 2 அதிகாலை 2 மணி வரை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய பிறகே, அவர்களில் ஒருவர் ஆசாத் என அடையாளம் தெரிந்ததாகவும் மனசாட்சியின்றி அதிகார வர்க்கம் சொல்லித் தந்ததை அவர் ஒப்புவித்தார்.

விடுதலை என்னும் பொருள் தரக்கூடிய ஆசாத் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டவர் ராஜ்குமார். தலைமறைவு இயக்கத்திற்கேயுரிய தவிர்க்கவியலாத நடவடிக்கைகளில் ஒன்றாக மது, கங்காதர், உதய், தினேஷ் என்ற வேறு பெயர்களிலும் செயல்பட்டு வந்தவர். தனது இயற்பெயராலோ, புனை பெயர்களாலோ அல்லாமல் வரலாற்றில் விடுதலையின் குறியீட்டுப் பெயராகவே அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.

துப்பாக்கிச் சண்டை நடந்ததாகச் சொல்லப்படும் சர்கேபள்ளி கிராம மக்கள், அன்று இரவு தாங்கள் துப்பாக்கிச் சத்தம் எதையும் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். “நாக்பூரில் திரையரங்கம் ஒன்றில் எமது தோழர் ஒருவரை சந்திப்பதற்காக, ஆசாத் சூலை 1 அன்று இரவு சென்றார். ஆனால், அந்தத் தோழரை சந்திக்கும் முன்பே, ஆசாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்த பிறகே, காட்டில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கின்றனர்'' என உசெண்டி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆசாத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டாம் நபர் மாவோயிஸ்டு அல்லர் என்பதும், உத்தரகாண்ட் மாநிலத்தின் திவால்டல் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹேமச் சந்திர பாண்டே என்பதும், அவரது குடும்பத்தினரால் அடையாளம் சொல்லப்பட்ட பிறகே அறிய வந்திருக்கிறது.

அடிலாபாத் மாவட்ட மருத்துவமனையில் சூலை 3 அன்று, ஆசாத்தின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. மார்பில் 1 செ.மீ. அளவு குண்டுத் துளையும், அதன் ஓரம் எரிந்து கரிய சாம்பல் நிறத்துடனும் காணப்பட்டதாகக் கூறாய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கும் துளையைச் சுற்றி காணப்படும் தோலின் ஓரம் எரிந்தும் கரிய நிறத்துடனும் இருந்தால், 7.5 செ.மீ. தொலைவுக்குள் மிக அருகிலிருந்து சுட்டால் மட்டுமே ஏற்படக் கூடிய காயக் குறிகள் என, மருத்துவ அறிவியல் வல்லுநர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். சண்டிகரில் உள்ள உடற்கூறு அறிவியல் ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர், 9 எம்.எம். கைத் துப்பாக்கியைக் கொண்டு அருகிலிருந்தே சுட்டால் மட்டுமே, இத்தகைய காயம் ஏற்படும் என "அவுட்லுக்' (6 செப்டம்பர், 2010) இதழில் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையைத் தொடங்குகிற காலத்தில் சண்டை நிறுத்தம் செய்து கொள்ளலாம் எனக் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட அரசு, அதை நடைமுறைப்படுத்துவதில் நேர்மையாக இல்லாதது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பின் அமைதிக்கான தூதுவரை அறநெறி பிறழ்ந்து, அட்டூழியமாகக் கொன்றழித்துள்ளது. ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அமைதித் தூதுவராக செயற்பட்டுவந்த தமிழ்ச் செல்வனை இவ்வகையில்தான் கொன்றழித்தது. கடைசிக்கட்ட ஈழப் போரின் இறுதி நாட்களில் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் அரசியல் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்த நடேசன், வெள்ளைக் கொடியேந்தி இலங்கை ராணுவத்திடம் சென்றபோதும் போர் நெறிகளை மீறி அவர்களால் கொன்றழிக்கப்பட்டார்.

இலங்கை ராணுவத்திற்கும் – அரசுக்கும் முதன்மை ஆலோசகராக இருந்து வரும் இந்திய அரசு, சொந்த நாட்டிலும் போர் நெறிகளைப் பின்பற்றப் போவதில்லை என்பதற்கு, ஆசாத்தின் பச்சைப் படுகொலையே சாட்சியமாக இருக்கும். சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக் கப் போவதில்லை எனச் சொல்லிக் கொண்டே, அறிவிக்கப்படாத மரபுவழிப் போரை இந்திய அரசு, பழங்குடி மக்கள் மீதும், மாவோயிஸ்டு போராளிகள் மீதும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதே வகையான மரபு வழிப் போரை நடத்தி, லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றழித்த சிங்கள அரசைத் தடுத்து நிறுத்தாத சர்வதேச சமூகம், இந்தியாவின் உள்நாட்டுப் போரையும் கைகட்டி வேடிக்கை பார்க்கத்தான் போகிறது.

இந்திய ராணுவத்தின் மரபு வழித் தாக்குதலை மாவோயிஸ்டுகள் கெரில்லா போர் முறையில் எதிர்கொண்டு வருவதால், இழப்புகளை அரசும் ஊடகங்களும் மூடி மறைத்து விடுகின்றன. எதிர்காலத்தில் இரு தரப்பும் மரபுவழிப் போரில் ஈடுபட நேருமெனில், இழப்புகள் எண்ணிப் பார்க்கவியலாத அளவில் இருக்கும். விடுதலைப் புலிகளை அழிக்க, இலங்கை அரசுக்கு பல நாடுகள் உதவின எனில், இந்திய உள்நாட்டுப் போரை பன்னாட்டுப் படைகளே வழிநடத்தும். நேற்று ஈராக்கில் நடந்ததும், இன்று லிபியாவில் நடப்பதும், நாளை இந்தியாவில் நடக்கப் போவதும் அது தான். ஏனெனில், பன்னாட்டு நிறுவனங்களின் பன்னாட்டு மூலதனங்களைப் பாதுகாக்க, உருவாக்கப்பட்டவைதான் பன்னாட்டுப் படைகள். போர் இன்று பழங்குடிகளுக்கு எதிரானதாக இருக்கலாம். நாளையோ, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் – நம் ஒவ்வொருவருக்கும் எதிரானதாக இருக்குமென்பது திண்ணம்.

சட்டீஸ்கரில் அக்டோபர் 2, 2010 அன்று "தண்டகாரண்யா அமைதி மீட்பு இயக்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பு, பிஜப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் குட்ரு என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. “அரசாங்கமும் மாவோயிஸ்டுகளும் பிஜப்பூர் பழங்குடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விரைவில் இப்பகுதியில் அமைதி திரும்ப வழிகாண வேண்டும்'' என இவ்வியக்கம் அறிக்கை வெளியிட்டது. காந்தியின் பிறந்த நாள் அன்று, அமைதியின் பெயரால் தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் நிறுவன உறுப்பினர்களான மதுகர்ராவ், சின்னாராம் கோட்டா, விக்ரம் மந்தவி, பலராம் நாக், ஜோதிராம் ஆசாத் ஆகிய அனைவரும் "சல்வா ஜுடும்' கூலிப் படையின் முக்கியப் பொறுப்பாளர்கள் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

"அமைதிப் பேரணி', "தூய்மைப்படுத்தும் பேரணி' என்ற பெயர்களில் இவ்வியக்கத்தினர் "சட்டீஸ்கர் பழங்குடிகள், மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் அல்லர்' என்ற முழக்கத்துடன் தமது கூலிப்படையினரைக் கொண்டு ஊர்வலங்களை நடத்தினர். “சல்வா ஜுடுமின் தலைவராக நன்கு அறியப்பட்ட மகேந்திர கர்மா, இந்த அமைதி இயக்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. சல்வா ஜுடுமின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதால் இந்த இயக்கம் எவ்வித சார்பு நிலையுமின்றி தொடங்கப்படுகிறது'' எனக் கூறும் இதன் நிறுவன உறுப்பினர் சின்னாராம் கோட்டா, “வேலை வாய்ப்பு, சாலை வசதிகள், கல்வி ஆகியவற்றிற்காக அமைதியான வழியில் போராடுவதையும், மாவோயிஸ்டு ஆதரவாளர்களாக இருப்பவர்களை "நல்வழிப் படுத்தி' அரசு நிர்வாகத்தின் ஆதரவாளர்களாக மாற்றுவதையும் தமது அமைப்பு நோக்கமாகக் கொண்டிருக்கிறது'' என்கிறார்.

"பழங்குடி இளைஞர்களுக்கு மாநில காவல் துறை வேலைவாய்ப்புகளை வழங்கி, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்களிப்பதைத் தருகிறது' எனவும் அமைதி இயக்கத்தின் நோக்கத்தை தன்னையறியாமல் அம்பலப்படுத்துகிறார் கோட்டா. சல்வா ஜுடுமின் இந்த புதிய முகமூடிக்கு எதிராக, இவ்வியக்கத்தைத் தடை செய்யக் கோரி, 2010 அக்டோபர் 22, 23 ஆகிய இரு நாட்கள் மாவோயிஸ்டுகள் சட்டீஸ்கரில் கதவடைப்புப் போராட்டம் நடத்தினர்.

salva_judum_600

(11.3.2011 அன்று சல்வா ஜூடும் கூலிப்படை - காவல் துறையினரால் தீக்கிரையாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று)

சல்வா ஜுடுமிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரு பொதுநல வழக்குகள் (W.P. Civil 250/2007, W.P. Criminal 119/2007) நிலுவையில் இருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளின் மீதான விசா ரணையின்போது, சல்வாஜுடும் ஒரு சட்டவிரோத அமைப்பு எனக் கண்டித்திருக்கிறது. 2007 வரையான இக்குற்றச்சாட்டு வழக்குகளிலேயே 500 கொலைகள், 99 பாலியல் குற்றங்கள், 103 வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல்கள் ஆதாரங்களுடன் சல்வா ஜுடும் மீது சாட்டப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் திசை திருப்பவே, அமைதி இயக்கம் என்ற புதிய நாடகத்தை அரசு எந்திரத்தின் துணையுடன் காவல் துறை அரங்கேற்ற நினைக்கிறது. இந்த நாடகம் மிகச் சமீபமாக மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

மார்ச் 11 மற்றும் 16, 2011 தேதிகளில் சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் டெம்ட்லா, மொரபள்ளி, தீமாபுரம் என்ற மூன்று கிராமங்களை கோப்ரா மற்றும் கோயா படையணிகளுடன் சல்வா ஜுடுமின் சிறப்புப் பிரிவு காவலர்கள் இணைந்து தாக்கியுள்ளனர். "ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்களின் கூட்டமைப்பு' சார்பில் டெல்லியில் இத்தாக்குதல் குறித்த உண்மையறியும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில் சிந்தால்நர் பகுதியைச் சேர்ந்த இம்மூன்று கிராமங்களையும் காவல் துறையினர் தாக்கி, 300 வீடுகளைத் தீக்கிரையாக்கியுள்ளனர் என்றும், ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டும் மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கத்துடன் சென்ற, மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் நந்த் குமார் பட்டேல் உள்ளிட்ட 10 காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், 2011 மார்ச் 29 அன்று, பொலம்பள்ளி என்ற கிராமத்தின் அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியரே மார்ச் 24, 2011 அன்று இப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இவர்களைத் தடுத்து நிறுத்தியவர்கள் வேறு யாருமல்லர், சல்வா ஜுடும் அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்புக் காவலர் பிரிவினரே. இவர்களுக்கு இத்தகைய அதிகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்கியிருப்பவர் மண்டல காவல் துறைத் தலைவர் லாங்குமார். இது, இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் எனப் புரிந்து கொள்ளத் தேவையில்லை. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக, சகோதரச் சண்டைகளில் கொல்லப்பட, பழங்குடி மக்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு காவல் துறையின் உடுப்பு தரித்து, அரசுப் படைகளின் கேடயங்களைப் போல பயன்படுத்தப்பட்டு வரும் இவர்கள் பகடைக் காய்களே.

சிந்தால்நர் பகுதியைச் சேர்ந்த ராய்ப்பூர் – ஜக்தல்பூர் – சுக்மா இணைப்புச் சாலையின் வழியில் ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. மார்ச் 26 அன்று சுவாமி அக்னிவேஷ் இப்பகுதியைப் பார்வையிட வந்தபோது, தடுக்கப்பட்டு கல்லெறிந்து தாக்கப்பட்டார். மார்ச் 20, 21 தேதிகளில் "டைம்ஸ் ஆப் இந்தியா' "தி இந்து' பத்திரிகையாளர்கள் சாலையல்லாத குறுக்குப் பாதையில் உயிரைப் பணயம் வைத்துச் சென்று, பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து சில தகவல்களை வெளியிட்டனர். செப்டம்பர் 2009 இல் PUDR அமைப்பின் குழுவினரும், டிசம்பர் 15, 2009 இல் டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் நந்தினி சுந்தர், உஜ்ஜல் சிங் போன்றோரும், சனவரி 2010 இல் மேதா பட்கரின் தலைமையிலான NAPM தன்னார்வக் குழுவைச் சேர்ந்த 40 பேரும், மே 2010 இல் பேராசிரியர் யஷ்பால் உள்ளிட்ட 40 சமூக அக்கறையாளர்கள் குழுவினரும் இப்பகுதிக்குள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

சாலைகளில் மரங்களை வெட்டிக் கிடத்தியும், முள்வேலிகளை விரித்து வைத்தும் சிறப்புக் காவல் பிரிவினர் இப்பகுதியில் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். மாநில காவல் துறையினரோ, ராணுவம் மற்றும் காவல் துறையினரின் அட்டூழியங்களைப் பற்றி கட்டுரை தயாரிக்கும் செய்தியாளர்கள் மீதே வழக்குத் தொடுத்தும் வருகின்றனர். "டைனிக் பாஸ்கர்' , "ஹரி பூமி' என்ற இரு நாளிதழ்களை சம்பந்தப்பட்ட எரிசக்தி (சுரங்க) நிறுவனங்களே நடத்தி வருகின்றன. இவை, "சட்டீஸ்கரின் எதிர்காலம் சுரங்கங்களின் வளர்ச்சியில் தான் இருக்கிறது' என்பதான தலைப்புச் செய்திகளையே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட சுதந்திரமாகக் கடமையாற்ற அனுமதி மறுக்கப்பட்டு, இருண்ட கண்டம் அல்லது இரும்புத் திரை பகுதி போல, சட்ட வரம்புகளிலிருந்து விலக்கப்பட்டு, நசுக்கி அழிக்கப்பட்டு வருகிறது பழங்குடி மக்களின் இப்பகுதி.

தண்டேவாடாவின் சிந்தால்நர் பகுதியைச் சேர்ந்த இக்கிராமங்கள் மீதான தாக்குதலுக்குக் காரணம் இல்லாமலில்லை. பிப்ரவரி 28, 2011 அன்று, தரம்ஜய்கார் எனும் நகரில் DB Power Ltd. என்ற நிறுவனத்திற்கு 693.32 ஹெக்டேர் பரப்பிலான பழங்குடி மக்களின் நிலத்தை, நிலக்கரி சுரங்கத்திற்காகக் கையளிக்க, அம்மக்களிடம் ஒப்புதல் பெறும் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 438 பேரில் ஒருவர் கூட இதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. "டைம்ஸ் ஆப் இந்தியா' , "தி இந்து' ஆகிய நாளிதழ்களின் செய்தியாளர்கள் இந்த "மக்கள் கருத்தறியும்' கூட்டத்தில் பங்கேற்றனர். பழங்குடி மக்களின் இந்த நூறு சதவிகித எதிர்ப்புக்குப் பழி தீர்க்கும் விதமாகவே, கோயா கமாண்டோக்களின் இக்கிராமங்களின் மீதான தாக்குதல் வடிவம் பெற்றிருக்கிறது.

பி.யு.சி.எல். அமைப்பின் தேசிய செயலாளர் கவிதா சிறீவத்சவா என்பவர், சிந்தால்நர் தாக்குதல் குறித்து தொடுத்த வழக்கு ஒன்றில், மார்ச் 29, 2011 அன்று உச்சநீதிமன்றம், தண்டேவாடா மாவட்ட ஆட்சியரும் மனித உரிமை ஆணையத் தின் ஊழியர்களும் உண்மையறியும் ஆய்வு ஒன்றை இப்பகுதியில் மேற்கொண்டு, அறிக்கை தர வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், 2005லேயே PUCL, PUDR போன்ற மனித உரிமை அமைப்புகள் மருத்துவர் பினாயக் சென் தலைமையில் சல்வாஜுடும் வன்முறைகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை அரசுக்கு அளித்திருக்கின்றனர். "தன் மக்களின் மீதே அரசு போர் தொடுக்கும் போது' எனப் பெயரிடப்பட்ட அந்த அறிக்கையை அரசு பொருட்படுத்தாமலேயே போனது.

இது மட்டுமல்லாமல், ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் நிலக்கரிச் சுரங்கங்களில் ஏழு முதல் பதினேழு வயது வரையான குழந்தைத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என ஆதாரங்களுடன், 2010 ஏப்ரல் 5 அன்று "தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது. இக்குழந்தைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒரிசா, மேற்கு வங்கம், பீகார், அசாம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தேசிய மனித உரிமை ஆணையம் இச் செய்தியையே புகாராக எடுத்துக் கொண்டு, ஜார்கண்ட் அரசின் தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

“அனுமதி பெற்றும் சட்டவிரோதமாகவும் செயல்பட்டு வரும் நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தர வாதச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருக்கும் பயன்கள், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் கீழ் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்குப் போதுமான அளவில் பள்ளிக் கூடங்கள் நிறுவி நடைமுறைப்படுத்தியமை ஆகியவை பற்றிய விரிவான அறிக்கையை ஒப்புவிக்க வேண்டும்'' எனவும் தேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

 

இந்தோ – ஜெர்மன் கூட்டுத் திட்டமாக, மகாராட்டிரத்தில் பீமா ஷங்கர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 3.5 கி.மீ. தொலைவில், 113 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 195 ஹெக்டேர் பரப்பளவிலான, 770 கோடி மதிப்புமிக்க பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், இத்திட்டத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட, 26 ஆயிரத்து 615 மரங்களை வெட்டிக் கொள்ளலாம் என அரசாங்கத்தின் திட்ட மதிப்பீட்டில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச் சூழல் களப்பணியாளர்கள் அதுல் கலே மற்றும் விஷ்வாம்பர் சவுத்ரி ஆகியோர், இத்திட்டத்தின் பெயரில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வன மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மும்பை உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 2010 இல், மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதற்கு அதுல்கலே தடையாணை வாங்கினார்.

ஆனால், இக்காற்றாலைத் திட்டத்திற்கென 20 கி.மீ. நீளமுள்ள சாலை அமைக்கும் பணிக்காக, உயர் நீதிமன்ற தடையாணையை மீறியும் மார்ச் 31, 2011 வரை மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருப்பதை, "தி இந்து' (ஏப்ரல் 10, 2011) அம்பலப்படுத்தியுள்ளது. “இத்தனை மரங்கள் வெட்டப்பட்ட பிறகு, பசுமை ஆற்றல் (Green Energy) திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தினால் என்ன பயன் இருக்க முடியும்?'' என கேள்வியெழுப்பியிருக்கிறார் டாக்டர் சவுத்ரி. “தேசிய பூங்காக்கள் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 10 கி.மீ. சுற்றளவிற்குள் "வளர்ச்சித் திட்டங்கள்' என்ற பெயரில் கூட, எந்தவொரு திட்டமும் தொடங்கப்படக் கூடாது என்பது விதிமுறையாக இருக்கும்போது, இத்திட்டத்திற்கான அனுமதியை அரசு வழங்கியது எப்படி?'' என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இவர் எழுப்பிய கேள்விக்கு, மாநில வனப் பாதுகாப்புத் துறையிடமிருந்து எந்தவித பதிலுமில்லை. நடுவண் நிபுணர் குழுவிற்கும் சுற்றுச் சூழல் நடுவண் அமைச்சகத்திற்கும், கலேவும் சவுத்ரியும் அனுப்பியிருக்கும் இது தொடர்பான புகார்கள் மீது, விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் என்ன நடக்கப் போகிறது? வழிகாட்டும் நெறிமுறைகள் மீறப்படவில்லை என்றும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் வழக்கம்போல நிபுணர் குழு அறிக்கை தந்து, விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். இந்திய அதிகார வர்க்கத்தின் நீதி பரிபாலன யோக்கியதை உலகம் அறிந்த ஒன்றுதானே?

பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, குழந்தைத் தொழிலாளர்களை சட்டவிரோதமாக ஊக்குவித்தல், தவறான தகவல்களையும் பொய்ச் செய்திகளையும் மக்களிடம் பரப்பி பத்திரிகை ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறுதல், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரிலேயே காடுகளை – மரங்களை அழித்தல், சூழலியல் ஒழுங்கைச் சீர்குலைத்தல், வரி ஏய்ப்பு – கள்ளச் சந்தை – கருப்புப் பணம் என கனிம வளங்களின் துறைகளையே சட்டவிரோதமாக்குதல், எதிர்கால இந்தியத் தலைமுறையின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்குதல் எனப் பசுமை வேட்டையின் தொடர் கண்ணிகள் நம் ஒவ்வொருவரையும் பிணைத்துச் செல்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

– அடுத்த இதழில்

Pin It