இராமானுஜரின் 1000வது பிறந்தநாள்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத பத்திரிக்கைகளும் சிறப்பு மலர்கள் வெளியிடுகின்றன. தமிழ் இந்துவும் இதழும், ஆர்.எஸ்.எஸ் -ன் விஜயபாரதமும் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. சாதி வேற்றுமைகளை மறுத்தார். பெண்களுக்கு ஆன்மீகப் பணிகளில் இடம் அளித்தார் என சமூகச் சீர்திருத்தவாதி போல் சித்தரித்து உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்-ன் அகிலபாரத செயற்குழு, 2016 மே-10 முதல் 2017 மே-1 வரை நாடு முழுவதும் இராமனுஜர் 1000 -வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளது. பா.ஜ.க. அரசு இராமனுஜர் தபால்தலை வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோளை நிறைவேற்றி உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களின், “மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுஜர்” என்ற தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்பாகிறது. ‘நமக்கு நாமே’ பயணம் சென்ற மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள திருக்கோட்டியூர் ஆலயத்திற்குச் சென்று திருக்கோட்டியூர் நம்பி மற்றும் இராமானுஜர் சிலைகளையும் பார்வையிட்டார். அப்படி என்னதான் இராமானுஜர் புரட்சி செய்து விட்டார் என்பதைப் பார்ப்போம்.

உறங்காவில்லி தாசர்

இராமானுஜர் காலம் கி.பி.1017 முதல் கி.பி.1137 வரையிலான 120 ஆண்டுகள். வைணவத்தில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல ‘விசிஷ்டாத்வைதத்தை’ உருவாக்கி, நாடு முழுவதும் 74 மடங்களை தொடங்கினார். இந்து சனாதன மதத்தில் பல பிரிவுகள் இருந்து உள்ளது. இருக்கிறது. பிரம்ம சூத்திரத்துக்கு ஆதிசங்கரர் எழுதிய உரை அத்வைத மதப்பிரிவாக மாறியது. மத்துவர் எழுதிய உரை த்வைதமானது இராமானுஜர் எழுதிய உரை விசிஷ்டாதவைதமானது.

ஆதிசங்கரின் அத்வைதத்திற்க்கும் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்துக்கும் இருந்த வேறுபாடுகளைப்பற்றி இராமானுஜர் சமஸ்கிருதத்தில் எழுதிய இறுதி நாள் குறிப்பை ‘அஹம் இராமானுஜர்’ என தமிழில் நூலில் ஒரு பெரியவர் எழுதி இருப்பதாக ‘நான் இராமானுஜன்’ என்னும் நூலை ஆமருவி தேவநாதன் குறிப்பிட்டு உள்ளர். அந்த நூலை விஜயபாரதம் வெளியிட்டு உள்ளது. அந்த நூலில் இருந்து பல செய்திகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இராமனுஜர் கூறுகிறார்,

அத்வைத சித்தாந்தத்தின் உயர்வு நான் கண்டு வியந்த ஒன்று தான். ஆதிசங்கர் பெளத்த தத்துவத்தையும் தரிசனத்தையும் ஆழக்கற்று அதன் அடிப்படையிலேயே பெளத்த மதஸ்தருடன் வாதிட்டு பெளத்தர்களை வீழ்த்தினார். அவரது ‘விவேக சூடாமணி’யில் பெளத்த சம்பிரதாயத்தை அதன் வழியிலேயே சென்று சாய்த்தார். இவரை ‘பிரஸன்ன பெளத்தர்’ என்றே அன்றைய அந்தணர்கள் அழைத்தனர். - ( ‘நான் இராமானுஜன்’ பக்கம் - 71 )

பார்ப்பனர்கள் புத்தரின் கொள்கைகளை ஒழிக்க அவர் மதத்தில் நுழைந்தது தெளிவாகிறது. அதனால் தான் தோழர் பெரியார் பார்ப்பனர்களை திராவிடர் கழகத்தில் சேர்த்ததில்லை. இன்று RSS - BJP அம்பேத்கருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும், விஜயபாரதம் அம்பேத்கருக்கு சிறப்பிதழ் வெளியிடுவதும் ஏன் என்பதும் தெளிவாகிறது.

தாழ்த்தப்பட்ட, வேடர் குலத்தில்பிறந்த உறங்காவில்லிதாசன், தன் மனைவியின் அழகில் மோகித்து இருந்த போது இராமானுஜர் அவனிடம் இதைவிடச் சிறந்த அழகைக் காட்டுகிறேன் என்றுகூறி, திருநாமம் சாற்றி (நாமம் போட்டு) திருவரங்கம் கோவிலுள்ளே அழைத்துச் சென்று, பெருமாளின் அழகைக் காட்டினார். அதில் மயங்கிய ஊறங்காவில்லிதாசர் மற்றும் அவரது மனைவி பொன்னாச்சி இருவருக்கும் ‘பஞ்ச சமஸ்காரம்’ செய்துவித்தார். உறங்காவில்லிதாசர் உறையூரில் இருந்து திருவரங்கம் வந்து இராமானுஜர் மடத்துக்கு அருகே குடிசை அமைத்து தங்கினார். இராமானுஜர் தனது முக்கிய சீடர்களுள் ஒருவராக இவரை வைத்துக் கொண்டார்.

‘உறங்காவில்லி தாசருக்கு ‘அகளங்க நாட்டு ஆழ்வான்’ என்னும் பட்டத்தையும் கொடுத்து விட்டார்கள். சூத்திர, பஞ்சம மக்களை (பிற்படுத்தப்பட்டர், தாழ்த்தப்பட்ட மக்களை) - இந்து சனாதன மதம் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கக் கூடாதவர்களாக ஒதுக்கி வைத்த மக்களை - வைணவத்தில் இணைப்பதற்குச் சங்குசக்கரச் சின்னங்களைப் பொறித்து அவர்கள் பெயர்களில் ‘தாசன்’ எனும் பட்டத்தையும் கொடுத்து (பெருமாளின் அடிமை எனும் பொருள்) மனுசாஸ்திரத்தை நிலைநிறுத்தியது தான் இராமானுஜரின் மதப்புரட்சி.

“பிராமணனுக்கு ஷர்மா என்றும், Bத்திரியனுக்கு வர்மா என்றும், வைசியனுக்கு குப்தா, பூதி என்றும், சூத்திரனுக்கு தாசன் என்றும் பெயர் வைக்க வேண்டும்.”- மனுசாஸ்திரம், அத்தியாயம் 2, ஸ்லோகம் 32

ஒவ்வொரு ஜாதிக்கும் இன்னின்ன பெயர்களைத்தான் வைக்க வேண்டும் என்று பெயர் வைப்பதில்கூட ஜாதி வேற்றுமையை, ஏற்றத்தாழ்வை உண்டாக்கியன இந்து மத தர்மங்கள். அவற்றைச் சிறிதும் மாற்றாமல் பின்பற்றியவர், நம்மையும் பின்பற்றச் சொல்லியவர்தான் இராமானுஜர். இது தான் மதச் சீர்திருத்தமா?

(இன்றும் காரமடையில் அரங்கநாதர் கோவிலுள் தாசர்களுக்கு செங்கல்முத்திரை என்னும் பழுக்க காய்ச்சிய இரும்பினால் சங்கு சக்கரங்கள் தோள் பட்டைகளில் பொறிக்கப்படுகிறது. இது குறித்து விரிவாக மற்றொரு பகுதியில் பார்ப்போம்)

இராமனுஜர் நால்வர்ணக்கோட்பாட்டை ஆதரித்தும் வேதத்தை யார் கற்க வேண்டும், பூணூல் அணிவது ஏன் என விளக்கியும் உள்ளார். நான்கு வர்ணத்தினருக்கும் உரிய தொழில் மற்றும் கடமைகளைப் பற்றி விரிவாகச் சொல்வதைப் பார்ப்போம்!

பிராமணருக்கு விதிக்கப்பட்ட ஆறு தொழில்கள்

1.       அத்யயனம் - வேதம் பயில்வது, 2. அத்யாபனம்- வேதம் பயிற்றுவிப்பது, 3. யஜனம், - சுயமாக வேள்வி செய்வது, 4.யாஜனம்- மற்றவருக்கு வேள்வி செய்விப்பது, 5.தானம்-தானம் கொடுப்பது,          6.பிரதிக்ரஹம் - தான் தானம் பெறுவது ‘பிராமணன்’ என்பது தொழிலோ குணமோ உடலோ ஆத்மாவோ அல்ல. அது ஒரு நிலை. வாழ்வில் அடைய வேண்டிய நிலை. கல்வி, ஞானம், தத்துவம், வேள்வி முதலியனவற்றில் தேர்ச்சி பெறும் ஒரு நிலை. தவிர பிறப்பால் ஒரு வேற்றுமையும் இல்லை  -(‘நான் இராமானுஜன்’ பக்கம்.91)

த்விஜன் இருபிறப்பாளன்

பிராமணச்சிறுவன் தன் தாயிடம் இருந்து பிறப்பது ஒரு பிறவி. உபநயனம் (பூணூல் அணிவித்தல்) முடித்து அவன் கல்வி கற்க (வேதம்) துவங்கும் நிலை இன்னொரு பிறவி. இரண்டாம் பிறப்பு. இப்படி இரு பிறப்பு உள்ளவர்கள் ‘த்விஜர்கள்’. பிராமணன் பிரம்மத்தை அறிய வேண்டியவன் என்பதால் பிரம்மத்தை அறிய முதல்படியாக அவனுக்கு ‘காயத்திரி’ மந்திரம் உபதேசிக்கப் படுகிறது. பிராமணன் என்பது பிறவியாலே பூணூல் தரிப்பாதாலோ வருவதன்று அது ஒரு பதவி.

‘ஓம் நாமோ நாராயணாய’ மந்திரத்தை அனைத்து மக்களுக்கும் சொன்ன இராமனுஜர், பிரம்மத்தை அறிவதும், காயத்திரி மந்திரத்தைப் படிப்பதும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியன என வலியுறுத்துகிறார். அவரவருக்குரிய குலத்தொழிலைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென மனுசாஸ்திரத்தை முன் நிறுத்துகிறார். இன்றைக்கு உள்ள கார்ப்பரேட் சாமியார்களும் சுளுளு-க்கும் முன்னோடி இராமானுஜர் என்பது தெளிவாகிறது.

“ஆன்மீகப் பயணத்தில் இருந்து பொருளாதாரத்தைப் பிரிக்க முடியாது. அவன் தொழில் செய்வதை நிறுத்தக்கூடாது. தச்சனோ, கொல்லனோ, சிற்பசாஸ்திர வல்லுனனோ யாராக இருந்தாலும் தொழிலைத் தொடரவேண்டும். சில மணித்துளிகளே ஆயினும் செலவழித்துப் பெருமாளுக்கு ஆராதனம் செய்ய வேண்டும். கீதையில் பெருமாள் சொல்வது போல ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ்’ என்று அவனிடம் சரணாகதி அடைந்து உங்கள் தொழிலைச் செய்து கொண்டிருங்கள். ஆனால் தொழிலின் பலனை அவன் அளிப்பான் என்று உணர்ந்திருங்கள். பலன் எத்தகையதாயினும் அவனது பிரசாதம் என்று எண்ணிச் சாந்தாமாயிருங்கள்’’.‘ - ‘நான் இராமானுஜன்’ பக்கம் 104

இராமனுஜர் மதப்புரட்சியும் செய்யவில்லை ஜாதியையும் ஒழிக்கவில்லை. வைணவ மதத்தில் மேலும் பால ஜாதியினரை (சூத்திர, பஞ்சமர்) இணைத்துள்ளார். தோழர் பெரியார் கூறுகிறார்,

“இராமானுஜர் நாமத்தையும், பூணூலையும் பழைய சின்னம் என்பதாகக் கருதி அதை வைத்துக் கொண்டு ‘பறையன்’ என்பவர்களை யெல்லாம் பிடித்து நாமமும், பூணூலும் போட்டு மக்களைச் சமத்துவம் அடையச் செய்வது என்பதான சீர்திருத்தம் செய்தார் என்பதாகச் சொல்லப் படுகின்றது. இதனால் பழைய சின்னம் காப்பாற்றப்பட்டதே தவிர, மக்களுக்கு சமத்துவம் கிடைத்ததா? சமத்துவ உணர்ச்சி உண்டாயிற்றா?. நாமமும் பூணூலும் உடையவர்களுக் குள்ளாகவே உயர்வு தாழ்வும், அதுகள் இல்லாத வர்களை தாழ்மையாய்க் கருதுவதும் இன்று சூரியன் போல் துலங்குகிறது.” - தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 02.12.1928

        தோழர் பெரியார் சொன்னது போல, இராமனுஜர் முதல் முதலில் தனது மதத்தவருக்கு (விசிஷ்டத்வைத) நெற்றியில் நாமம் (திருமண்) போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற விதியை ஏற்படுத்தினார். ஜாதி ஒழிக்கப் புறப்பட்டவர் நமக்கு கடைசியில் நாமம் போட்டுவிட்டு போனார். இவ்வளவு சண்டைக்கும், நாமம்தான் பிரச்சனை அதன் விளக்கம் என்னவென்று பார்த்தால் இதை விட இழிவாக உள்ளது.

நாமக்குறியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம் தான். அதாவது சைவர்களின் லிங்கத்து இணையான வைணவக் குறியே நாமம் சைவர்கள் என்பவர்கள் சிவன் என்னும் இந்துக் கடவுளை வழிபடுவார்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும் கடவுள்களில் இன்னொரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு வழிபாடு ஆகும்.

நெற்றியில் செங்குத்தாக இரண்டு வெள்ளைக்கோடுகள், இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடு இதுதான் நாமம். இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக்கோடு சிருஷ்டி தத்துவத்தைக் குறிக்கும் (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையில் தொங்கும் உறுப்பு-ஆண்குறி) நூல்: திருநீறு-ஓம்-நாமம் ஏன்?எதற்காக (பக்கம்-7-8)

தென்கலை - வடகலை

இராமானுஜரின் விசிஷ்டாத் வைதத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தென்கலை சம்பிரதாயத்தை ‘மார்ஜால நியாயம்’ என்று செல்வார்கள். அதாவது பூனை நியாயம். பூனைக்குட்டி எந்த முயற்சியும் செய்ய வேண்டியது இல்லை. அதன் தாயே அதனை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாயினால் கவ்விச்செலும் எந்தவிதமான அனுஷ்டானங்களும் தேவை இல்லை. பெருமாளிடம் சரணாகதி அடைந்தல் போதும் அவன் பார்த்துக் கொள்வான்.

வடகலை சம்பிரதாயம் என்பது ‘மார்க்கண்ட நியாயம்’. அதாவது குரங்கின் நியாயம் குரங்குக்குட்டி தான் தாயைப்பற்றிக் கொள்ள வேண்டும். தாய், குட்டியை தூக்காது. அதுபோல ஜீவாத்மாக்களான நாம் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். பெருமாளின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானாங்கள் தேவை என்பது வடகலை. திருமண் (நாமம் போடுவதில்) பூசுவதில் பாதம் இருந்தால் லு தென்கலை மரபினர். பாதம் இல்லாதவர் ரு வடகலை மரபினர். இது தவிர பாஞ்சராத்திர மரபினர் என்ற பிரிவும் உண்டு. இப்பிரிவினர் ஆகம நெறியைப் பின்பற்றுகிறார்கள்.

லு நாமம் போடுவதா? ரு நாமம் போடுவதா? என்பதில் இருபிரிவினருக்கும் கடுமையான மோதல்கள் ஏற்பட்டது. பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்த இங்கிலாந்தில் இருந்த இந்தியாவுக்கான உச்ச நீதிமன்றம் (பிரிவுகவுன்சில்) வரை வழக்கு நடத்தியுள்ளனர் வைணவப் பார்ப்பனர்கள்.

இடங்கை - வலங்கை மோதல்கள்

18-ம் நூற்றாண்டின் ‘ஆபேதுபே’ என்கிற பிரஞ்சுக்காரர் இந்தியாவிற்கு வந்தார். குறிப்பாக தென்னிந்தியாவில் சுமார் 30 ஆண்டுகள் தங்கியிருந்து, இந்த மக்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்தார். இதன் விளைவாக ‘இந்திய மக்கள்’ என்கிற நூலினை பிரஞ்சு மொழியில் 1806-ல் எழுதி முடித்தார். இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1820-ல் வெளிவந்தது. தமிழில் அலைகள் வெளியிட்டகம் 2008 ல் ‘இந்திய மக்கள்: பழக்க வழக்கங்கள் - சடங்குகள் - நிறுவனங்கள்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

“இதுவரையிலும் குறிப்பிடாத சில இனங்களும் உண்டு. அவைதான் வலது, இடது கை இனங்கள் என்பன. இது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. ஏனெனில் நாட்டில் எந்தப் பழைய நூல்களிலும் இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. நாட்டின் வட பகுதியில் இவை இல்லவே இல்லை என்று கூறலாம். தென் மாநிலங்களில் சில இடங்களில் இந்த இனம் பற்றி தெரியவருகிறது. இந்த வலது, இடது கை விவாகரம் பற்றி இந்து மத ரிஷிகள் சிந்தித்துப் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

...முதலாவதாக அதாவது இடது கை பிரிவு என்றால், அதில் மொத்த வைசியர்களும், பஞ்சமர்களும், சில சூத்திரர்களும் அடங்குவர். இந்த இடது கை பிரிவில் மிகவும் கேவலமாக நடத்தப்பட்ட சக்கிலியர்கள் வருகின்றனர். வலது கை பிரிவில் பல சூத்திர சாதிகள் வருகின்றன. இதில் தாழ்த்தப்பட்டோரே அதிகம். தங்களை அவர்கள் ‘வலங்கை மட்டர்’ என்று கூறிக்கொள்வதில் பெருமையடைந்தனர். இதற்கு வலதுகை நண்பர்கள் என்று பொருள். இந்த இரு பிரிவினருக்குமிடையேயான மோதல்கள் பெருத்த துயரத்தை சமூகத்தில் விளைவித்தன.” - இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் சடங்குகள்-நிறுவனங்கள் .பக்கம்-46

“தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளேயே சக்கிலியர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. இது மாவட்டம் முழுமைக்குமாகப் பரவியது. இதில் தொடர்பில்லாத பல மக்கள் கிராமங்களைக் காலி செய்து கொண்டு வெளியேறிவிட்டனர். ஏதோ மராட்டிய இராணுவம் படையெடுத்தது போன்ற பயம் ஏற்பட்டுவிட்டது. அதிர்ஷ்டவசமாக மக்களில் சிலர் இப்பிரச்சனையில் தலையிட்டு மத்யஸ்தம் செய்யவே. மோதல் பெருமளவில் பரவவில்லை. இப்பிரச்சனைக்கு காரணமாக இருந்தது. ஒரு சிறிய நிகழ்ச்சியே. ஒரு சக்கிலியர் பொதுவிழா ஒன்றின் போது தனது தலைப்பாகையில் சிவப்பு நிற பூக்களை வைத்துக் கொண்டதே. இது பிற தாழ்த்தப்பட்ட மக்களால் எதிர்க்கப்பட்டது.” - இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் சடங்குகள்-நிறுவனங்கள். பக்கம் 47-48)

தென்கலை இடக்கை பிரிவுகளாகவும் வடகலை வலது கை பிரிவாகவும் பார்ப்பனர்கள் மோதி கொண்டது போலவே தாழ்த்தப்பட்ட மக்களும் இரண்டு பிரிவுகளாக மோதி கொண்டது இந்து மதத்தால் விளைந்த கொடுமையாகும்.

கோவை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சக்கிலியர்கள் தாலிக்கயிறாகக் கருப்புக் கயிரையே கட்டி வந்தனர். இளைஞர்கள் கைகளில் கட்டிக்கொள்ளும் கயிறுகள்கூட கருப்புக் கலரில் மட்டுமே இருந்து வந்தன..

இராமானுஜரின் சீர்திருத்தப் புரட்டின் விளைவாக இன்றும், தாழ்த்தப்பட்ட மக்களில் சக்கிலியர், பழங்குடியின மக்கள் இன்னும் பல பிரிவினர் புரட்டாசி மாதம் விரதம் இருப்பது மாமிசம் உண்ணாமல் இருந்து பெருமாள் கோவிலுக்கு செல்வது போன்ற வழக்கங்களை மேற்கொள்கிறார்கள். அது போக சொந்தமாகக் குலதெய்வங்களுக்கு கோயில் கட்டி பல லட்ச ரூபாய் செலவு செய்து பொருளாதாரத்தை இழந்துள்ளார்கள். வேறு எந்த ஜாதியினரைக்காட்டிலும் சக்கிலியர்கள் அதிகமாகச் செலவு செய்து பெருமாள் கோவில் கட்டியுள்ளனர்.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஜாதியினர். இன்று கோபுரம் கட்டித் தன்னை இழிவுபடுத்திய சின்னம் ‘கோபுரம்’ என்பதை அறியாமல் அதைப் பெருமையாக எண்ணிச் செய்கிறார்கள். கோவில் கட்டுவதற்கு 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வரி வசூல் செய்கிறார்கள். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இதை அதிகமாகக் காணமுடிகிறது.

உன் குல தெய்வம் பெரிதா? என் குல தெய்வம் பெரிதா? என போட்டி போட்டுக் கட்டுகிறார்கள். அப்படி கட்டிய கோவில்களில் சில. அவிநாசி குப்பாண்டம்பாளையம், அவிநாசி ஒச்சாம்பாளையம், உடுமலை விலாமரத்துபட்டி, நெகமம் இராமச்சந்திராபுரம் ஆகியவை ஆகும். “குலதெய்வங்கள் இலை என்றால் பல தெய்வங்கள் இல்லை” எனச் சொல்லி இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். குல தெய்வங்கள் இல்லை என்று குல தெய்வத்தை தேடிச் சென்ற கதைகள்கூட இங்கு உண்டு. 

Pin It