21ஆம் நூற்றாண்டில் உலகச் சமுதாயம் எண்ணற்ற மாற்றத்திற்குரிய வளர்ச்சிகளை எதிர்நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியத் துணைக்கண்டம் தன் சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒழுங்குபடுத்தி, உலக சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, தனக்கான அங்கீகாரத்தை நிலைநிறுத்திட விழைகிறது. ஆனால், சாதியக் கட்டமைப்புகளால் சில சமூகப் பொருளாதாரச் சவால்களை இன்றளவும் எதிர்கொண்டே வருகின்றது. இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு கொண்டாட்டங்களைத் துவங்கியுள்ள இத்தருணத்தில், சில சமூகக் குழுக்களினுடைய சிக்கல்களைத் தீர்க்க இயலாமலும், அவர்கள் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையினை, இந்திய அரசமைப்பு சட்டத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை உறுதி செய்திட இயலாச் சூழலிலேயே உள்ளது என்பதை புறம் தள்ள இயலாது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது’ (மலம் அள்ளுதல்) என்கின்ற காட்டுமிராண்டித்தனமான நடைமுறையைக் குறிப்பிடலாம்.

சமூகத்தில் இன்றளவும் நிலவிவரும் இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு, ஒரு முடிவுரை எழுத, இந்திய அரசும், மாநில அரசுகளும் 1950 முதல் பல்வேறு நிர்வாக, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், இலக்கினை எட்டிட இயலவில்லை. அரசின் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை அளிக்காததற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, இந்திய சமுதாயத்தில் நிலவிவரும் சாதியக் கட்டமைப்பும், தனி மனித விழிப்புணர்வு இன்மையுமே. எனவேதான் இன்றளவும் முழுமையாக இந்தச் சமூக அவலம் ஓய்ந்தபாடில்லை. இக்கட்டுரையானது, மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் சமூகக் குழுவின் அவல நிலைகளை எடுத்துரைத்து, அதற்காக அரசு மேற்கொண்ட பல்வேறு நிர்வாக, சட்ட நடவடிக்கைகளை விரிவாக விளக்கி, அவற்றின் தோல்விக்கான காரணங்களைப் பகுப்பாய்வு செய்ய விழைகிறது.manual scavengingமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது: தோற்ற சுருக்கம்

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது என்பது காலம் காலமாக சாதிய பழக்கமாக மாறி, தனிமனித வாழ்வின் இரண்டறக் கலந்த ஒரு விடயமாகவும் தொழில்முறையாகவும் உருப்பெற்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இது பரவலாக வடமாநிலங்களிலும், சில தென்னிந்திய மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வந்த ஒரு சமூக அவலம். சுய பிரகடனப்படுத்தப்பட்ட உயர்சாதி குடும்பங்கள், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த ஒரு நபரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ, தங்களது வீட்டிலோ அல்லது பகிரப்பட்ட கழிப்பறைகளிலோ துப்புரவு நடவடிக்கைகளுக்காகப் பணியமர்த்தி, தண்ணீர் இல்லாத சுகாதாரமற்ற கழிவறைகளைத் தூய்மை செய்யவும், மனிதக் கழிவுகளை கால்நடைக் கழிவுகளை அகற்றுவதுபோல் கைகளால் அகற்றி, தலையில் சுமந்து, அப்புறப்படுத்தவும் வழிவழியாக பணிக்கப்பட்டனர். இந்த சுகாதாரமற்ற, தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய இயலாத கழிவறைகள்தான் உலர்கழிவறைகள் என்பன.

வரலாற்று ஆய்வுகளின் வழியே, இந்தச் சமூக அவலத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட சாதியையோ அல்லது குறிப்பிட்ட வகுப்பினையோ சார்ந்தவர்கள் என்பது புலப்படவில்லை. மாறாக இது, அடிமைகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை முறையாகவே கருதப்பட்டது. பின்னாட்களில், இது ஒரு தொழிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு, சமூக, பொருளாதார காரணிகளை உள்ளடக்கியதாக உருமாற்றப்பட்டு, சாதியக் கட்டமைப்பின் வழியே ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது வகுப்பினரின் மீது திணிக்கப்பட்டிருப்பதாகப் பதிவிடப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட பல்வேறு வரலாற்று ஆய்வுகளின் மூலம், இந்த சமூக அவலத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், சில குறிப்பிட்ட சாதியையோ அல்லது குறிப்பிட்ட வகுப்பினையோ சார்ந்தவர்கள் என்பதும் வெளிப்படுகிறது.

ஒருங்கிணைந்த இந்தியாவின் 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 20 லட்சம் மக்கள், இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 1961இல் 8.2 லட்சமாகவும், 1981இல் 6.18 லட்சமாகவும், 1989இல் 4 லட்சமாகவும் கணக்கிடப்பட்டது. இருபத்திஒன்றாம் நூற்றாண்டில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 80 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், இதற்குக் காரணமான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த இயலாத சுமார் 26 லட்சம் உலர்கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்பதும் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்களாக உள்ளன.

சமீபத்திய 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தரவுகளின்படி, சுமார் 53,130 பேர் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் உள்ளதாகவும் தெரியவருகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை நாட்டின் பெருவாரியான பகுதிகளில் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் முறையிலும், பிற கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் தொழிலிலும், இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களே இன்றளவும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதும் புலப்படுகிறது. மிக அபாயகரமான இச்செயல்களின் விளைவாக, பல்வேறு இறப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 1993 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சுமார் 954 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 110 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும், 2020-2021 ஆண்டில் மட்டும் சுமார் 140 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நிர்வாகரீதியிலான நடவடிக்கைகள்:

இந்திய அரசமைப்புச் சட்டத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தை அனைவருக்கும் உறுதிசெய்வதற்காக, நாடு விடுதலையடைந்தது முதல், இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைச் செவ்வனே மேற்கொண்டு, சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்து, ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் உள்ளடக்கியதான ஒரு வளர்ச்சியை எட்டிட விழைகிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு, 1949 ஆம் ஆண்டு மும்பை அரசாங்கத்தால் (அன்றைய பாம்பே அரசாங்கத்தால்) முதன்முதலாக இந்த மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் வாழ்வியல் சூழலை ஆராய்வதற்காக, பி.என். பார்வே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1952ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கையானது, மனிதக்கழிவுகளை தலையில் சுமப்பது, கைகளால் அகற்றுவது போன்ற பணிகளில் அன்று பரவலாகப் பணியமர்த்தப்பட்டு வந்த பாங்கி சாதியினரை அப்பணியமர்த்தலிலிருந்து முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் எனவும், நகர்ப்புற பகுதிகளில் நவீன கழிப்பறைகள் கட்டுவதன் மூலமாக, இந்த அவலச் செயலைத் தடுத்து நிறுத்த முடியுமெனவும், வழிவழியாக இந்த மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலில் ஒரு குடும்பத்தைச் சார்ந்தோ அல்லது ஒரு வீட்டைச் சார்ந்தோ பணிபுரிந்து வரக்கூடிய முறையை முற்றிலுமாக நீக்கி, கழிவறைகளை நகராட்சி வசம் கொண்டு வருவதன் மூலமாக, பொது கழிப்பறை வசதியை அனைவருக்கும் வழங்க முடியும் எனவும், இதன் மூலமாக இப்படிப்பட்ட அவதொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்த நவீன கழிப்பறைகளை அமைப்பதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் சிக்கலினைக் கருத்தில் கொண்டும், அவர்களுக்கு தகுந்த சமூக பாதுகாப்புகளை வழங்கி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சீரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பரிந்துரைத்தது. இக்குழுவினுடைய அறிக்கையானது ஒன்றிய அரசினால் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டு, மேற்சொன்ன கருத்துக்களை நடைமுறைப்படுத்த பணிக்கப்பட்டன.

இதன் பிறகு, 1955 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த அவலச் செயல் குறித்த தனது கவலையைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தேசத்தந்தை காந்தியடிகள் சுட்டிக்காட்டிய, இந்த மனிதாபிமானமற்ற நடைமுறையை ஒழிப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தது. பலவகையான திட்டமிடுதலுடன்கூடிய நிதி உதவிகளை நகராட்சிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கி, நவீன கழிப்பறைகளை அமைப்பதன் மூலமாக, இந்த சமூக அவலத்தினை முற்றிலுமாகக் களைந்திட இயலும் எனவும் தீர்மானமாகத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு 1957ஆம் ஆண்டு பேராசிரியர் என். ஆர். மால்காணியின் தலைமையில் ஒரு குழு அமைத்து, இந்த மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருந்தவர்களுடைய வாழ்வியல் சூழல் குறித்த ஆய்வினை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டது.

இக்குழுவானது பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, 1960இல் தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தது. குறிப்பிட்டு சொல்லக்கூடிய பின்வரும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனை போன்றவற்றில் இயன்ற அளவு தண்ணீரால் சுத்தம் செய்யக்கூடிய கழிவறைகளைப் பயன்படுத்துதல் அல்லது மலக்குழி (செப்டி டேங்க்) கழிவறைகளைப் பயன்படுத்துதல், கைகளால் மலம் அள்ளுவதைத் தடை செய்தல், பாதுகாப்பு உபகரணங்களையும் கையுறைகளையும் வழங்குதல், மனிதக்கழிவுகளைத் தலையில் சுமப்பதைத் தடைசெய்தல், இந்தியா முழுவதும் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் பாதுகாப்பான கழிவறைகளை அமைத்தல், பல வட இந்திய மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வந்த, சாதிய அடிப்படையில் வழிவழியாக கழிவறைகளை சுத்தம் செய்யும் முறையைத் தடைசெய்தல், உள்ளாட்சி அமைப்புகள் இந்த சமூக அவலத்தைப் போக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யும் வகையில், நிதி உதவிகளை அளித்தல் என விரிவான பரிந்துரைகளை வழங்கியது.

மேற்சொன்ன பார்வே கமிட்டியும், பேராசிரியர் என். ஆர். மால்காணி குழுவும் பரிந்துரைத்தது போல சாதிய அடிப்படையில் பரம்பரை பரம்பரையாகக் கழிவறைகளை சுத்தம் செய்யும் முறையை முற்றிலுமாக தடை செய்வதன் மூலமே இந்த சமூக அவலத்தைக் களைய முடியும். எனவே, இதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் 1964ஆம் ஆண்டு வரை இதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதன்பிறகு

1965-ஆம் ஆண்டு, முந்தைய பல குழுக்களில் உறுப்பினராக இருந்த பேராசிரியர் என்.ஆர். மால்காணியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, வழிவழியாக கழிவறைகளைச் சுத்தம் செய்யும் முறையை ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜம்முகாஷ்மீர், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்யப் பணிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் எடுக்கப்பட்ட சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்களின் விளைவாகவும், தனி மனித கழிவறைகளுக்கு வரி விதித்ததன் மூலமாகவும், இந்த சமூக அவலத்தில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

1965 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவானது தனது பரிந்துரையில், பிற மாநிலங்களில் கழிவறைகளுக்கான வரி விதித்தது போல், இந்த மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள், தனி மனித கழிவறைகளுக்கு வரி விதிப்பதன் மூலமாக, இந்த சமூக அவலம் தீர்க்கப்பட்டு, பொதுக் கழிவறைகளை அமைப்பதின் மூலமாக இந்த மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறையினை முற்றிலும் ஒழிக்க இயலும் என்று பரிந்துரைத்தது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை முற்றிலும் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டு துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மனிதக்கழிவுகளைப் அகற்றுபவர்களுடைய வாழ்வியல் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக முனைவர் பாண்டியா தலைமையில், தேசிய தொழிலாளர் ஆணையம் ஒரு குழுவினை அமைத்தது. 1968இல் சமர்ப்பிக்கப்பட்ட இக்குழுவினுடைய அறிக்கையானது, மனிதாபிமானமற்ற நடைமுறையிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்காக இயந்திரமயமாக்கலை வலியுறுத்தி, அவர்களுடைய சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்திசெய்ய வலியுறுத்தியது. முதன்முதலாக இக்குழுவானது ஒரு தகுந்த சட்டத்தின் மூலமாக இந்த மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையைத் தடை செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

இதனைத் தொடர்ந்து, அரியானா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் அரசுகள், பல்வேறு குழுக்களை அமைத்து, தங்களது மாநிலங்களில் இந்த சமூக அவலத்தினைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விழைந்தன. ஆனால் குறிப்பிடத்தகுந்த அளவு, எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1983 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில், கேள்வி நேரத்தின்போது, இந்த தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, இந்த அருவருப்பான முறை ஒழிக்கப்படும் என்றும், இதற்கான முயற்சிகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், தண்ணீர் வசதி இல்லாத உலர்கழிவறைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தக்கூடிய கழிவறைகளை அமைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் எனவும், இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் விதமாக, மாற்றுத் தொழில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதன் தொடர்ச்சியாக 1989ஆம் ஆண்டு, அன்றைய ஒன்றிய திட்டக்குழுவின் ஆலோசகரான எஸ். கே. பாசு தலைமையில் ஒரு குழுவினை, மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களுடைய நலன்கள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைத்தது. இக்குழுவானது, விரிவான ஆய்வினை மேற்கொண்ட பிறகு, இதற்கு முன்னர் மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்க்கமான சில தீர்வுகளைப் பரிந்துரைத்தது. துப்புரவுப் பணியாளர்களுடைய வேலை மற்றும் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமானது, சுகாதாரமற்ற உலர் கழிவறைகளை, தண்ணீர் வசதி உள்ள கழிவறைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் (அதே ஆர்வமும், முனைப்பும்) காட்டப்படவில்லை என்று விமர்சித்தது.

ஒன்றிய அரசு, இத்தகைய நடவடிக்கைகளைச் சீரிய முறையில் மேற்கொண்ட, போதிலும், ‘வழிவழியாக தனிநபர் வீட்டில் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் உரிமை முறை’ பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருந்த காரணத்தினாலும், சாதி அடக்குமுறை நீடித்த காரணத்தினாலும், உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும், மாநில அரசுகளினுடைய அர்ப்பணிப்பில்லா அணுகுமுறை காரணமாகவும் (இந்த சீரிய நடவடிக்கைகள்) எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிர்வாகரீதியிலான முன்னெடுப்புகளின் தோல்வியால் அரசு, இந்த சமூக அவல நிலையைக் களைவதற்காக, 1993ஆம் ஆண்டு ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தின் வாயிலாக இயற்றி, இந்த விளிம்பு நிலை மனிதர்களினுடைய நலனை உறுதி செய்வதற்காக ஒரு தேசிய ஆணையத்தையும் அமைத்தது.

சட்டப்பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள்:

இந்திய அரசியலமைப்பு சட்டமானது தனி மனிதர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான ‘சாதிய பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு’, தீண்டாமைக்கு எதிரான பாதுகாப்பு, வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகிய பிரிவுகளின் கீழ், இந்த சமூக அவலத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களுடைய வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள இயலும். இந்தத் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்பட்டிருப்பதால், இச்செயலானது உறுப்பு 23 இன் கீழ், அதாவது கட்டாய உழைப்பு மற்றும் பாரபட்சமான நடைமுறையைத் தடைசெய்வதன் கீழ் வருவதால் அரசமைப்புச் சட்ட உரிமைகள் வெளிப்படையாகவே மீறப்படுகின்றன என்பதும் புலப்படுகிறது.

இத்தகைய அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், இந்த சமூக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளானது மீறப்பட்டு, மறுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டனர். உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 மற்றும் பட்டியல் இனத்தவருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989இன் கீழும் மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களுடைய வாழ்வியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலும் என்று இருந்த போதிலும், இவ்விரு சட்டங்களும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை வெளிப்படையாக வன்கொடுமை என வரையறை செய்யாத காரணத்தினால் (2015 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் வரை), இந்த அவதொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களுடைய பாதுகாப்பானது, முழுமையாக வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, ஒரு தகுந்த, தனிச் சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டி, 1993ஆம் ஆண்டு, மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்தும், உலர் கழிப்பறைகள் கட்டப்படுவதைத் தடைசெய்தும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. 1993 இல் இச்சட்டம் இயற்றப்பட்டாலும், 1997 சனவரி 26 ஆம் நாள்தான் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதுவும் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே.

இச்சட்டமானது 2 உயரிய நோக்கங்களைக் கொண்டு இருந்தபோதிலும், (அதாவது மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதனைத் தடை செய்தலும் மற்றும் அதற்கு மிக முக்கியக் காரணியாக இருக்கக்கூடிய உலர் கழிப்பறைகள் கட்டுதலைத் தடை செய்வதும்) எதிர்பார்த்த, விரும்பத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்தத் தவறியிருந்தது. இதற்கு மிக முக்கியக் காரணம், சுகாதாரமற்ற கழிப்பறைகள் என்பதை விடுத்து, இச்சட்டமானது உலர்ந்த கழிப்பறைகள் என்ற பெயரில் ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு வரையறுத்து செயல்பட்டதே. இதன்முலம், மிகவும் அபாயகரமான மலக்குழிகள், திறந்தவெளி மற்றும் பாதாளச்சாக்கடைகள் ஆகியவற்றில் மனிதர்களை ஈடுபடுத்தி சுத்தம் செய்வது தடை செய்யப்படவில்லை.

அதேபோல, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடை செய்வதிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட விலக்கு அளிக்கும் உரிமை, பல்வேறு வகைகளில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதாலும், மனிதக் கழிவுகளை அகற்றுவோரினுடைய வரையறையும், மிகக்குறுகிய கண்ணோட்டத்தோடு வரையறுக்கப்பட்டதாலும், பல மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறைகள் இச்சட்டத்தின் எல்லைக்குள் அகப்படாதிருந்தன.

மேலும், இந்த மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் செயலில் தனிநபர்களைப் பணியமர்த்தலைத் தடை செய்தும், இதனை மீறி பணி அமர்த்தினால், பணியமர்த்துபவருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் தண்டமும் விதிக்க 1993ஆம் ஆண்டு சட்டம் வகை செய்திருந்தாலும், 1993 முதல் 2013ஆம் ஆண்டு வரை, ஒரு வழக்குகூட இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்ற ஒன்றே, இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை என்பதை எடுத்துக் காட்டியது. மேலும், 1993ஆம் ஆண்டு சட்டம், கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் முறை குறித்து எவ்வித விளக்கமும் அளிக்காத காரணத்தினால், இந்த அபாயகரமான செயல்கள், தடைசெய்யப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையின் வரையறையில் வரவில்லை என்பதும் தெளிவாகிறது.

மிக அதிர்ச்சி தரும் விதமாக “மனிதக்கழிவுகளை சக்கர வண்டிகளிலும் குவளைகளிலும் எடுத்துச் செல்வதையும், வடிகால்களிலிருந்து அகற்றுவதையும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையாகக் கருதமுடியாது. 1993ஆம் ஆண்டு சட்டம், கைகளால் அகற்றுவதை மட்டுமே தடை செய்கிறது. எனவே, இம்முறைகள் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவதாகாது. அவ்வாறு பொருள் கொள்ள இயலாது” என்று தில்லி மாநில அரசு, உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.

இப்படிப்பட்ட தெளிவற்ற சட்டப்பிரிவுகளினால், இந்த மனிதத்தன்மையற்ற செயலை முற்றிலும் தடைசெய்ய இயலாததாலும், இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படாத காரணத்தாலும், 2003ஆம் ஆண்டு, சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (துப்புரவுத் தொழிலாளர் இயக்கம்) எனும் அமைப்பு, ஒரு பொதுநல வழக்கினை உச்சநீதிமன்றத்தில் தொடுத்து, இந்த சமூக அவலச் செயலைத் தடை செய்யவும், 1993ஆம் ஆண்டு சட்டத்தினை சீறிய முறையில் செயல்படுத்திடவும் வலியுறுத்தியது.

உச்ச நீதிமன்றம், ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறை அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாது, சர்வதேச சட்டங்களுக்கான இந்தியாவின் அடிப்படை உத்தரவாதத்திற்கும் (உறுதிப்பாட்டிற்கும்) எதிரானது என்று தீர்ப்பளித்தது. மனிதக்கழிவுகளை அகற்றுபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் நலம் பேணும் பல தொண்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பினுடைய துணை அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாகவும், உச்சநீதிமன்றத்தில் அன்று நிலுவையில் இருந்த பொதுநல வழக்கினுடைய விசாரணைப் போக்கின் தன்மை காரணமாகவும், 1993 ஆம் ஆண்டு சட்டத்தின் குறைகளைக் களைந்து, 2013ஆம் ஆண்டில் ஒரு புதிய சட்டத்தை ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இறுதித் தீர்ப்பை வழங்கும்போது, ..உச்சநீதிமன்றம், இந்த புதிய சட்டத்தைக் கவனத்தில் கொண்டு, மாநிலங்களுக்கும் மறுவாழ்வு, வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் சட்ட உதவி போன்றவற்றினை வழங்கும் பிற சட்ட அமைப்புகளுக்கும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியது. மேலும், எதிர்காலத்தில் இச்சட்டப்பிரிவுகள் மீறப்படுமேயானால், உயர்நீதிமன்றங்களை அணுகுமாறும் அறிவுறுத்தியது.

இந்த 2013 ஆம் ஆண்டு சட்டம், இந்த அவதொழிலில் ஈடுபட சமூகரீதியாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின் துயர் துடைக்கும் விதமாக, இத்தனை காலமாக அரசியலமைப்பு உரிமைகளானது மீறப்பட்டு, மறுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டதை வரலாற்று அநீதியாகப் பறைசாற்றி, அந்த மக்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதும், மனிதக்கழிவுகளை அகற்றும் முறையானது நடைமுறையில் இருந்ததை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதன் மூலம், முந்தைய சட்டத்தின், பல்வேறு கொள்கை முன்முயற்சிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் தோல்வி/திறனின்மையை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்பதும் புலப்படுகிறது.

1993 ஆம் ஆண்டு சட்டத்தைபோல் கைகளால் மலம் அள்ளுவதையும், உலர்கழிவறைகள் கட்டப்படுவதையும் தடை செய்வதோடு மட்டுமல்லாது, 2013ஆம் ஆண்டு சட்டம், மனிதர்களைக் கொண்டு கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்தல், திறந்த வெளி வடிகால்களில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்தல், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்தல், பாதாளக் கழிவுநீர் அமைப்புகளைச் சுத்தம் செய்தல் போன்றவற்றையும் தடை செய்கிறது. சில அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும், கழிவுநீர் தொட்டிகள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதற்கான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அரசு வழங்க வேண்டும் என்றும், அத்தகைய துப்புரவு செயல்முறை மனிதக் கழிவுகளை அகற்றும் முறையாக கருதப்படாது என்றும்,தொடர்வண்டித் துறையில் பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு சுத்தம் செய்வது மனிதக் கழிவுகளை அகற்றும் முறையாகக் கருதப்படாது என்றும் சட்டம் விலக்கு அளிக்கிறது.

இச்சட்டப்பிரிவுகளை மீறி, மனிதர்களை இத்தொழிலில் பணியமர்த்துவதும், விலக்களிக்கப்பட்ட துறைகளிலோ பணிகளிலோ, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாது பணிசெய்ய வைப்பதும், பிணையில் வெளிவர இயலாத தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு, குறைந்தபட்சமாக ஒரு வருடம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும், 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை தண்டம் விதிக்கவும் வகைசெய்கிறது.

இச்சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த, ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் மேற்பார்வை குழுக்களை அமைத்து, இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் களையும், இன்றளவும் ஈடுபட்டிருக்கின்றவர்களையும் கணக்கெடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்கான நிதி உதவிகளை வழங்கவும் வகை செய்கிறது. எவ்வாறாயினும், தொடர்வண்டித் துறைக்கு விலக்கு அளிக்கும் சட்டப் பிரிவு, இந்த அவதொழிலை மேற்கொள்ள அரசே ஊக்குவிப்பது போலவும், சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை சீர்குலைப்பதாகவும் அமைந்திருக்கிறது. தொடர்வண்டித் துறை இந்த சுகாதாரமற்ற கழிவறைகளை மாற்றி, உயிரியல் தொழில்நுட்பத்தோடு கூடிய கழிவறைகளை அமைப்பதற்கான பணியினை முன்னெடுத்துள்ள போதிலும், மிகவும் மந்தமான போக்கிலேயே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் கடந்தபொழுதிலும், இன்றளவும் 25 சதவீதமான ரயில் பெட்டிகள்கூட உயிரியல் தொழில்நுட்பத்தோடு கூடிய கழிவறைகளாக மாற்றப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிறகு, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முன்பாக, குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர் நீதிமன்றங்களின் முன்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களைக் கொண்டு, அபாயகரமான கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தலையும், பாதாளச்சாக்கடைகளைச் சுத்தம் செய்வதையும் முற்றிலுமாகத் தடைசெய்து, மேம்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டு, இயந்திரமயமாக்கல் மூலம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்தக் காட்டுமிராண்டித்தனமான பணியமர்த்தல் நடவடிக்கைகளின் வாயிலாக பாதிக்கப்பட்ட நபர்களினுடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளன. ஏன் கடந்த மாதம் கூட, சென்னை உயர் நீதிமன்றம், கழிவுநீர்த் தொட்டிகளையும் பாதாளச் சாக்கடைகளையும் சுத்தம் செய்ய மனிதர்கள் பணியமர்த்தப்படுவதை முற்றிலுமாகத் தடைசெய்து உத்தரவிட்டுள்ளது.

சுமார் 8 ஆண்டுகள் கடந்தபோதிலும், இன்றளவும் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்காக மனிதர்கள் பணியமர்த்தப்படும் பொழுது, அந்த மலக்குழிக்குள் மீத்தேன் வாயு உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் மிக எளிய நடைமுறையான ‘தீக்குச்சியைக் கொளுத்திப் பார்க்கும் முறை’ கூட கடைபிடிக்கப்படுவதில்லை என்பது வேதனைக்குரியது. இந்த மலக்குழிக்குள் நச்சுவாய்வுக்குப் பலியானோர் பற்றியும், பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு உள்ளானோர் குறித்தும் செய்திகள் ஏடுகளில் வந்த வண்ணம் உள்ளன. இன்றளவும் இந்தச் செய்திகளை, கனத்த இதயத்தோடு கடந்து செல்ல இயலுகிறது எனில், அரசு கட்டமைப்புகள் எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன என்பது வெட்டவெளிச்சமாகிறது.

முன்னோக்கிய பாதை:

இந்தியத் துணைக்கண்டம் போன்ற மக்கள் தொகை பெருகியுள்ள நாட்டில், அதுவும் சாதியக் கோட்பாடுகளால் கட்டுண்டு, இரண்டறக் கலந்துள்ள சமுதாயத்திலிருந்து, மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் மனிதாபிமானமற்ற அவதொழிலில் இருந்து சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளோரைப் பாதுகாப்பதும், அவர்களுக்கான மறுவாழ்வு நல உதவிகளை வழங்குவது என்பதும் மிகவும் சவாலான பணியாகும். சமுதாயத்தில் சாதியக் கட்டமைப்புகள் ஆழமாக வேரூன்றி இருக்கின்ற காரணத்தினால்தான், இன்றளவும் சில மாதங்களுக்கு முன்புவரை, நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக வடமாநிலங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறையானது பின்பற்றப்பட்டு வந்தது என்பதனை சமீபத்திய ஆய்வின் வாயிலாக அறிய முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, அரசினுடைய பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக இல்லாது. அரசுசாரா நிறுவனங்களினுடைய அழுத்தங்கள் காரணமாகவும், நீதிமன்ற பேராணைகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே நடந்தேறின என்றே கருதப்பட வேண்டியுள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக வெளிக்கொணரப்பட்ட தரவுகளுக்கும், அரசு அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளுக்கும் இடையில் இன்றளவும் முரண்பாடுகள் உள்ளன. சமூக அழுத்தங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும் பன்னாட்டு அமைப்புகளின் வலியுறுத்தல்களின் காரணமாகவும், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இந்த அவதொழிலில் இருந்து மனிதர்களை இன்றளவும் விடுபட வைக்க இயலவில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது.

நவீனமயமாக்குதல், இயந்திரமயமாக்கல், உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை மட்டுமே இந்த நடைமுறைக்கு மிகச்சரியான தீர்வாக அமையும். பாதாளச் சாக்கடைகளில் தானியங்கி தொழில்நுட்பத்தை மேற்கொள்வதன் மூலமாக, மனிதர்கள் பணியமர்த்தப்படுவதை முற்றிலுமாகக் கைவிட இயலும். இந்த அவதொழிலைத் தடைசெய்வது ஒருபுறம் இருந்தாலும், இத்தொழிலில் பணியமர்த்தப்பட்டு, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களினுடைய சமூகப் பாதுகாப்பினை உறுதிசெய்வதும், அவர்களினுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இன்றியமையாக் கடமையாகிறது. நாடு விடுதலை அடைந்ததன் 75 ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் நாம் ஈடுபட்டுருக்கின்ற இத்தருணத்தில், இந்த அவதொழி­லிலிருந்து சகமனிதர்களுடைய விடுதலையை வேண்டி, நாமும் உறுதி ஏற்பதே சாலச் சிறந்தது.

- ம.சக்திவேல், உதவிப்பேராசிரியர் (சட்டம்), குருகோவிந்த்சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், புதுடெல்லி

Pin It