"தமிழ் – காஷ்மீர் முதல் குமரி வரை பேசப்பட்ட மொழி; அது இந்தியாவின் தொல்குடிகளான திராவிடர்கள் பேசிய மொழி' என்று எடுத்தியம்பிய டாக்டர் அம்பேத்கரும்; தமிழ் மொழியை ஒருபுறம் விமர்சித்துக் கொண்டே, மறுபுறம் அதைச் செம்மைப்படுத்த ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை மேற்கொண்ட பெரியாரும் – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மறக்கப்பட்ட நிலையில், மொழி குறித்த பெரியாரின் பார்வையை, அதன் முக்கியத்துவம் கருதி இவ்விதழில் வெளியிடுகிறோம்.

தலைவர் அவர்களே! தோழர்களே!

"மொழி' என்பது பற்றிப் பேச சிறிதும் அதற்கான அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ அற்ற நான் – "மொழி' என்பது குறித்துப் பேசத் துணிந்தது, மொழித் தத்துவத்திலுள்ள என்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டேயாகும். நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது, எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கிய, இலக்கணங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. ஆராய்ச்சியாளர் மேற்கோள்களையும் என்னால் காட்ட இயலாது. எனக்குத் தோன்றிய, என் அனுபவத்துக்கு எட்டிய விஷயங்களைத்தான் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன். அவற்றில் பெரும்பாலும், உங்களுக்குக் குற்றமாகப்படலாம். ஆகவே, நான் கூறுவதை நீங்களும், உங்கள் அறிவையும், அனுபவத்தையும் மற்றும் இது விஷயத்தில் அனுபவமும் ஆராய்ச்சியும் உள்ள பெரியோர்கள் கருத்தையும் கொண்டு சிந்தித்துப் பார்த்து, ஏற்கக்கூடியதை ஏற்றும், ஏற்கக் கூடாததைத் தள்ளியும் தெளிவு பெற வேண்டுகிறேன்.

"மொழி' என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக்குறிப்புகளாலும்,சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை "மொழி' என்று கூறாவிட்டாலும், "ஒலிக் குறிப்பு' என்று கூறலாம்...

ஒருவரைப் பார்த்து, "உங்கள் மொழி என்ன?' என்று கேட்பதற்கு,  "நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்?' என்றுதான் பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது. மக்களிடையே கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால், அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்லவென்றும் உங்களுக்கு விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

தர்மபுரியானும், கொங்குநாட்டுக் கிராமத்தானும், யாழ்ப்பாணத்தானும் – இவர்கள் யாவரும் பேசுவது தமிழ்தான். ஆனால் தர்மபுரி தமிழன், யாழ்ப்பாணத்தான் கூறுவதை இரண்டு முறை திருப்பிக் கூறினால்தான் தெரிந்து கொள்ளுவான். அதேபோல், கொங்குநாட்டுக் கிராமத் தமிழன் தான் கூறுவதை மூன்றுமுறை திருப்பிச் சொன்னால்தான், தர்மபுரியான் அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, யாழ்ப்பாணத்தான், "அவர்கள் அப்பொழுதே வந்து விட்டார்கள்' என்று கூறுவதை திருநெல்வேலியான், "அவா அப்பமே வந்தா' என்பான்; கிராமத்தான், "அவியொ அப்பளையே வந்தாங்கோ' என்பான். இப்படி ஒரே மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைதான் காரணம்.

நம் நாட்டில் சில மலைவாசிகள் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதும் தமிழ் என்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறுவதை குறிப்புகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறதே தவிர, விளக்கமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். பின் ஏன் அவர்கள் நம்மைப் போல் பேச முடியவில்லை? அவர்களை நம்மோடு தொடர்பு கொள்ள முடியாமல் செய்த – அம்மலை வாசம்தானே காரணம்? அவர்களுக்கு வேண்டிய அளவு ஏதோ குறிப்புகள் வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். நமக்கு வேண்டிய அளவு நாம் ஏதோ குறிப்புகள் வைத்துக் கொண்டு, நாம் வாழ்க்கை நடத்துகிறோம். இதுதானே நமக்குள் உள்ள வித்தியாசம்? நம்முடன் தொடர்புவைத்துக் கொண்டு அம்மலைவாசிகள் கொஞ்ச காலம் வாழ்ந்தால், நம்மைப்போல் அவர்களும் பேசுவார்கள் அல்லவா?

மற்றும், மொழியானது அந்தந்த நாட்டு சீதோஷ்ணத்திற்கேற்பவும், அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய்ப் பேசக்கூடிய ரீதியிலும்,சில அதிக சக்தியை செலவிட்டு சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்கக் காண்கிறோம். உதாரணமாக, வடமொழியிலுள்ள "ஹ' போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆள் துளைத்துக் கொண்டு வருவதுபோல் ஒலிக்கிறது. அவர்கள் கொஞ்சிப் பேசிக்கொள்வதுபோல் நமக்கு ஒலிக்கிறது. சீதோஷ்ண நிலையானது மக்களின் மொழியை அவ்விதம் மாற்றியமைத்து வருகிறது. ஒரே மொழியை குளிர்ப் பிரதேசத்திலுள்ளவன் ஒரு விதமாயும், உஷ்ணமான பாலைவனத்திலுள்ளவன் ஒரு விதமாயும் பேசுவதைக் காணலாம்.

உதாரணமாக, ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு "ஹா', "ஹு' என்கின்ற – பெரும் காற்றைத் தள்ளிக்கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம்மொழியும், ஏன் – அதுபோன்றே வடமொழியும் பேசமுடிகிறது. ஆனால், என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் ழ, ள  இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை...

அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்த நாட்டு மொழிகளை சரிவர உச்சரிக்க முடிகிறதென்பதும், வேற்று நாட்டு மொழிகளைச் சரிவர உச்சரிப்பது அநேகருக்கு கஷ்டமாயிருக்கிறதென்பதும், தம் நாட்டிற்கு ஒப்பான சீதோஷ்ணமுள்ள வேறு ஒரு நாட்டு மொழியைத் தம்மால் சரிவர உச்சரிக்க முடிகிறதென்பதும் எதைக் காட்டுகிறது? அந்தந்த நாட்டின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அந்தந்த நாட்டு மக்களின் மொழி ஒலி அமைந்திருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது? அந்தந்த இடத்திற்கேற்பவும், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்பவும் மொழிகள் பிரிந்திருக்கின்றன என்பது மேலே கூறியதிலிருந்து பெறப்படுகிறது.

இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது, அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து, அந்தக் கருத்து இருந்ததில்லை என்பதுதான். அந்தக் கருத்து அவர்களிடத்து ஏற்படவேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொருத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்த மொழிபேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை வாங்கிப்படித்தால், அவற்றில் காணப்படும் கருத்துகளைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மொழியை ஏற்பதும், தள்ளுவதும் கூட பெரும்பாலும் அந்தந்த மொழியின்பாற்பட்ட முன்னேற்றக் கருத்துகளைப் பொருத்துதான் இருக்கிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக்கூடியனவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். இதுவுமன்னியில், மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் மிக முக்கியமாயிருக்கிறது. அரசாங்கத்தின் ஆதரவின்றேல் ஒரு மொழி எவ்வளவு சிறப்புடையதாயினும், அதன் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டே நிற்கும் என்பது கண்கூடு. ஆங்கில மொழிக்கு நம் நாட்டில் செல்வாக்கு ஏற்படக் காரணமே, அது அரசாங்க மொழியாய் இருந்து வருவதுதான்.

இதுவரை, பொதுவாக "மொழி' என்பது பற்றியும் அதன் அமைப்பு, சிறப்பு, வளர்ச்சி என்ற பலவான தன்மைகளைப் பற்றியும் ஒரு சிறிது ஆராய்ந்து பார்த்தோம் . இனி, நமது தகைமைசால் தமிழைப்பற்றிச் சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.

"தமிழ்' என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொருத்து, மக்களைப் பொருத்து – மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொருத்து நாட்டுக்கும், மக்களுக்கும், தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா?' என்ற கேள்விகள் – தமிழைப் பொருத்தவரை வித்து முந்தியதா? மரம் முந்தியதா? என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும், தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழ்மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ், தமிழ்நாடு, தமிழ்மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றைக் காணாதவர்களிடமிருந்து குறிக்கும்படியாக திராவிடம், திராவிடர், திராவிடமொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம்.

தமிழ்மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும்; அந்தக் கருத்தைக்கொண்டே "திராவிடம்' என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன. நாட்டிலும் இதை வெகுகாலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு வந்திருக்கிறோம்.

வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேசம் சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப் படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும், கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பதுபோல் – தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய, இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக் கொள்ள  வெட்கப்படுகிறார்கள்; சிலர் மறுக்கவும் செய்கிறார்கள்.

காரணம், அவர்களது மொழிகளில் ஆரியச் சொற்கள் பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இடநெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு கூடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக்குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள், தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மதத் தத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன்மூலம் தமது கலை, ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி, தமிழ் அல்லாத வேறு மொழியாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு (சென்னையில்) "தோட்டத்திற்குப் போகிறேன் என்றால், வயலுக்கு, விளைநிலத்துக்குப் போகிறேன் என்று அர்த்தம், "கொல்லைக்குப் போகிறேன்' என்றால், "கக்கூசுக்குப் போகிறேன்' என்று அர்த்தம். சோழநாட்டில் தோட்டத்துக்குப் போவதென்றால், கச்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்ளுவார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருந்தால், ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?

முன்பு – சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மலையாளத்துக்கு வியாபார விஷயமாய் சென்றபோதெல்லாம் நான் சிறிது அழுத்தியும், குறுக்கியும், மடித்தும் பேசிய தமிழை அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டுதான் இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்; அகராதி கொண்டு மெய்ப்பிக்கவும் முடியும். சமீபகாலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை.

தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ் சப்தத்தில்தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்துப் பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில்தான் அச்சிடப் பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது. வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி "தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுநர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது, நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது "தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக்கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக்கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக? தமிழ் இந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும்விட தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் – மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள் நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி – தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல. இம்மொழியில் பாடி அதிசயங்கள் விளைவித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், அந்தக் கருத்து நமக்குத் தேவையில்லை. ஏன்? ஆயிரம் முதலையை வைத்துக்கொண்டுதான் பாடிப் பாருங்களேன்; அவைகளில் எதுவாவது, தான் தின்ற ஒரு மீனையாவது கக்குகிறதா என்று! அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான்; அது தமிழ்ப்பண்புகூட அல்ல. தமிழில், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை.

இதேபோல், தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்ததும் நம்மைத் தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் – நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியே பேசுவோமா? அல்லது, நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? இன்னும் கவனிப்போம். நம் தாய் குழந்தையாக இருந்தபோது பேசியதென்ன? "பாய்ச்சி குடிக்கி', "சோச்சி தின்னு', "மூத்தா போய்', "ஆய்க்கு போ'  என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி, சோச்சி, மூத்தா, ஆயி – என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால், தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமை என்று தோன்றவில்லையா?

ஆதலால், ஒரு மொழியின் தொடர்பு நமக்கு நல்லதா கெட்டதா என்று சிந்திக்கும்போது – நமது இடத்திற்கும், சீதோஷ்ணத்திற்கும் பொருந்தியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிறகு அம்மொழியிலுள்ள கருத்துகள் நம் தன்மானத்தையும், மேன்மையையும், நலத்தையும், தகுதியையும் காக்கக்கூடியதா? அதிகப்படுத்தக் கூடியதா? அவற்றைக் கெடுக்கக்கூடியதா? என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, தமிழ்மொழியின் வடமொழி தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள, ஏற்படப்போகும் கெடுதிகளைப் பார்ப்போம். நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக்கொள்ளுவோம். "சாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே, வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால் தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன். இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் – வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.

தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்தபிறகுதானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்! அதன் பிறகுதானே, சிறிது சச்சரவு நேர்ந்தது. தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து, "ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புருஷனுக்குக் கொடுத்துவிட்டோம்; தானம் செய்து விட்டோமே! இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா' என்று கூறும்  தகப்பன்மார்கள் தோன்றினார்கள்! கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தைஒன்று கண்டுபிடியுங்களேன். திருவள்ளுவர் "வாழ்க்கைத் துணை'  என்றுதானே கூறுகிறார். அதாவது, புருஷனும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்குப் பொருள். எவ்வளவு கருத்து வேறுபாடு பாருங்கள். "மோட்சம்' என்பதற்குத் தமிழ் வார்த்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனைத் தமிழர் காலத்தையும் கருத்தையும், பொருளையும் வீணாக்குகிறார்கள், கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி? நெறி, கோள் என்றால் – வெறி ஏது?

"பதிவிரதாத் தன்மை' என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? "பதிவிரதம்' என்ற வார்த்தை இருந்தால் – "சதி விரதம்' அல்லது "மனைவி விரதம்' என்கின்ற வார்த்தையும் இருக்க வேண்டுமே! இதுவும் வடமொழித் தொடர்பால் ஏற்றவினைதான். "ஆத்மா' என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன? தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலர்க்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம்.

நம் நாட்டு சீதோஷ்ண நிலையைப் பொருத்தும், கருத்துகளின் செழுமையைப் பொருத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆசாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை. அவற்றிற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள அவர்களது மொழியே அவர்களுக்கு உயர்வானதாகவும், நமது மொழி அவர்களுக்குத் தாழ்வானதாகவும் தோன்றுவது சகஜம். ஆனால், நாமும், அவர்கள் நம் மொழியை மட்டமாகக் கருதுகிறார்களே என்பதற்காக, நம்மொழியை மட்டம் என்று கருதிவிடலாமா? அப்படிக் கருதி வடமொழியை ஆதரிக்கப் புகுந்துதானே நாம் பல மூட நம்பிக்கைகளுக்கும், பல இழிவுகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிறோம். வடமொழியில் நமக்குப் பெயர் சூத்திரன். நாம் ஏன் சூத்திரர்கள் என்று இன்று கேட்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்கு நம் தமிழ் மொழியிலிருந்து ஒரே ஒரு ஆதாரமாவது காட்டட்டுமே! ஒன்று கூட இல்லையே! வடமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு ஆதாரங்கள்? கடவுள் வாக்குகளே அதற்கு ஆதாரமாய் வந்துவிடுமே! தற்போது தமிழில் வந்து புகுந்துகொண்ட வடமொழி வார்த்தைகளை எடுத்துவிட்டால் – நம் குறைகள், தொல்லைகள் எவ்வளவு நீங்குமென்பதும்; தொடர்பை ஏற்றுக் கொண்டால் எவ்வளவு இழிநிலைக்கு ஆளாக வேண்டியிருக்கிறதென்பதும் புரிகிறதல்லவா?

வடமொழித் தொடர்பால் இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக ஆங்கில மொழி தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும், அம்மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. நமது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்கான பல அரிய மார்க்கங்களை ஆங்கில நூல்களிலிருந்தே நாம் பெரும்பாலும் அறிந்து வருகிறோம். சுருங்கக்கூறின், "அடிமை வாழ்வே ஆனந்தம்' என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது. ராஜா வேண்டாம், குடியரசுதான் வேண்டும் என்கின்ற அறிவு; சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழியவேண்டும் என்கின்ற அறிவு; ஆணும் பெண்ணும் சமம் என்கின்ற அறிவு ஆகிய சகல அரசியல் – பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துகளையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது.

தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும், ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயொழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்கவந்த வடமொழியோ அல்ல. வடமொழித் தொடர்பு சாத்திர, புராண, இதிகாச மூடநம்பிக்கைகள் நம் பகுத்தறிவை அடிமைப்படுத்தின. ஆங்கில மொழி நம்மை அவ்வடிமைத் தளையிலிருந்து விடுத்து, எதையும் நம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்கும்படிச் செய்தது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத, பிரத்யட்ச அனுபவத்திற்கு ஒவ்வாத, சரித்திர காலத்திற்கு உட்படாத எதையும் ஒதுக்கித் தள்ளும்படிச் செய்தது. ஆங்கில மொழிதான் அதைப் பேசிய மக்களைத் தமிழைக் காட்டிலும் வெகு வேகமாக அறிவு உலகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆங்கிலேயன் சந்திரகிரகத்தினிடமிருந்து ஒலி கேட்கிறான்; வடமொழியான் இங்கு அதில் ஈரேழு பதினாலு லோகங்களைக் காட்டித் திவச மந்திரம் படிக்கிறான். எவ்வளவு வேற்றுமை பாருங்கள்! காரணம் என்ன? நம் மக்களுக்கு புத்தியில்லையா? அல்லது, நம் மூளை களிமண்ணால் செய்யப்பட்டதா? அப்படியொன்றும் இல்லையே!

அறிவு வளர்ச்சிக்குப் பெரும்பாலும் சுற்றுச் சார்புதான் காரணம். ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும், ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்துப் பாருங்கள்; இதனுண்மை விளங்கும். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனைவிடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனாயிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான்; இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான். அவனவன் வளர்ந்த இடத்தில் உள்ள பழக்கவழக்கங்களை ஒட்டி அவனவனுடைய அறிவுத் தன்மையும் மாறுபட்டிருக்கிறது...

தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ் சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாகத் தமிழ்நாட்டில் புகத் தொடங்கின. தமிழ் மன்னர்கள் ஆரிய மதத்தை ஏற்றுக் கொண்டதால், அம்மதக் கருத்துகளை விளக்கத் தமிழில் சொற்கள் இல்லாதது போகவே, அதிகமாக வடமொழிச் சொற்களைக் கையாள ஆரம்பித்தனர். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ்  கிடைத்துவிடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவனவெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய, தமிழ் மொழி நூல்களில், தற்சமயம் நம் நாட்டில் இருந்துவரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இம்மதம் ஒழிய, பெரும்பாலும் பழைமை விரும்பிகளான பண்டிதர்களே பெருத்த தடையாக இதுகாறும் இருந்து வந்திருக்கிறார்கள். தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப் பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப்போல் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு, கவைக்குதவாத கட்டுக் கதைகளை நம்

குழந்தைகளுக்குப் போதித்துவிட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதைவிட்டு – நம் குழந்தைகளுக்குத் திருவிளையாடற்புராண அறிவையும், தேவார – திருவாசக அறிவையம், பாரத – ராமாயண அறிவையும் பரப்பிவிட்டனர்; சிந்திக்கத் தவறினார்கள். சிலப்பதிகாரத்தைத் தலைசிறந்த நூலென்று இன்றும் போற்றி வருகிறார்கள். அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு.

இன்று எந்த ஒரு பெண்ணாவது, அவள் எவ்வளவுதான் கற்புடைய கன்னிகையாயிருந்த போதிலும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரிக் காரியம் நடந்திருக்குமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணையிடுகிறாள், "பார்ப்பனரை அழிக்காதே' என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரியப் பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில், கப்பலோட்டி வாணிபம் நடாத்திய தமிழர் மரபில் – இன்று, ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழைமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் மொழியில் இல்லாத ஒரு கருத்தை, நம் மொழியில் ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது, அக்கருத்துக்குண்டான வார்த்தைகளைத் தோற்றுவிப்பதில், நாம் மிக ஜாக்கிரதையாகப் பணியாற்ற வேண்டும். நாம் கண்டுபிடிக்கும் அல்லது உண்டாக்கும் வார்த்தை, நாம் கூறவேண்டிய கருத்தைத் தெளிவாகவும், விளக்கம் செய்வதாகவும், சுலபமாக உச்சரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக "காப்பி' என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இப்போது நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த பானம் அவசியமாகிவிட்டது. நமது மொழியில் இதற்கு வார்த்தை கிடையாது. இப்போது அதற்கு வேறு வார்த்தை உண்டாக்குவதைவிட, வழக்கில் இருந்துவரும் அதே வார்த்தையை நாம் தமிழில் ஏற்றுக் கொள்ளலாம். நமக்குத் தேவையான விஞ்ஞானக் கருத்துகளுக்கு வேறு வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும்போதும், ஆங்கில வார்த்தைகள் தமிழ் மொழி உச்சரிப்புக்குச் சுலபமாக இருக்குமானால், அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நலமாகும்.

கலைச்சொல் நிர்மாணக் கமிட்டியார் கண்டுபிடித்துள்ள வார்த்தைகளைப் பாருங்கள். Electrolysis, Hydrogen, Disinfectantt என்பவற்றிற்கு, முறையே – வித்யுக்தி யோகம், ஆப்ஜனகம், பூதி நாசினி என்று புது வார்த்தைகளைத் தோற்றுவித்துள்ளார்கள். ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக வடமொழி வார்த்தைகளைத் தோற்றுவித்துள்ளனர். இதைவிட சென்னை தமிழ்ச் சங்கத்தார் கண்டுபிடித்துள்ள, முறையே – மின் பருக்கை, நீரகம், நச்சு நீக்கி என்ற வார்த்தைகளே சிறந்தனவாக இருக்கின்றன. காரணம், சென்னை தமிழ்ச் சங்கத்தாருக்குள்ள தமிழ்ப் பற்று, கலைச் சொல் நிர்மாணக் கமிட்டியாருக்கு இல்லாமற்போனதுதான். நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும், நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம் மொழியிலிருந்தும் – நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழி தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று, மேனாட்டு மொழி வல்லுநர்களே எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

கடைசியாக தமிழ் மொழி வளர்ச்சிக்காக, அதில் செய்யப்பட்ட வேண்டிய சில சீர்திருத்தங்களைக் குறித்து, எனது கருத்துகளைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும்; மக்கள் கற்க மேலும் லகுவாக்கப்பட வேண்டும்; பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். "இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி; வெகு காலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது; மற்ற மொழிகளைப் போல் திருத்தப்படாதது' என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறைவாகுமே தவிர, பெருமையாகாது என்பேன். ஏன்? பழைமை எல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது; திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும், திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ, குற்றமாகவோ ஆகிவிடாது. மேன்மையடையவும், காலத்தோடு கலந்து செல்லவும், எதையும் மாற்றவும், திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய – பண்டைக் காலத்திய பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தால், கழிபட்டுப் போவோம்; பின்தங்கிப் போவோம்.

மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க் கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ளவேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம்மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் – சிவனும், சுப்பிரமணியனும் பேசிய மொழி; உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும், சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க் கருவிகள் இன்று நம் மக்களுக்குப் பயன்படுமா? அவைகளை நாம் இன்று பயன்படுத்துவோமா? அல்லது அவர்களே இன்று போரிட நேர்ந்தால் – அவைகளைப் பயன்படுத்துவார்களா? சிந்தித்துப் பாருங்கள்!..

ஆகவே, பிறர் சுலபமாகத் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவும், சுலபமாக அச்சுக் கோக்கவும், டைப் அடிக்கவும் தமிழ் எழுத்து களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்படுவது நலம் என்று நினைக்கிறேன். தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்த வேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். மொத்த எழுத்துகள் 216 வேண்டியிருக்கிறது என்றால், இதில் 135 எழுத்து உருவங்கள் தனித்தனியாக ஞாபகத்தில் வைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் எழுத்துகள், ஆங்கிலம் முதலிய சில அந்நிய மொழி எழுத்துகளை விட, எழுத்துக் கூட்டுவதற்கு ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கிய நேர்முறையைக் கொண்டதானாலும் எழுத்துகளைக் கற்க வேண்டியது கஷ்டமாகிறது. ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் உள்ளன. அவைகளில் உயிர் எழுத்துகள் 5, மெய்யெழுத்துகள் 20 எனலாம். அவை எல்லாம் தனி எழுத்துகளே. உயிர்மெய் எழுத்துகள் – அதாவது, உயிரும் மெய்யும் கூடிய எழுத்துக்கள் கிடையாது;  வெகு சுலபமாக அவ்வெழுத்துகளைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இலக்கண முறை, உச்சரிப்பு முறை, ஒரு பொது வரையறைக்குக் கட்டுப்பட்டதல்ல. தமிழில், அப்படியல்ல. எழுத்துக் கூட்டுதலும், உச்சரிப்பும், அதன் இலக்கணமும் பெரிதும் இயற்கையையே அடிப்படையாகக் கொண்டதாகும். அப்படிப்பட்ட மொழியை, நாம் ஏன் நவீன முயற்சிக்கு ஏற்ற வண்ணம் செப்பனிடக் கூடாது?

சாதாரணமாக, தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள, ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இந்த இரண்டும் தேவையில்லாத எழுத்துகள். மேலும், இவைகள் கூட்டெழுத்துகளே ஒழிய தனி எழுத்துகள் அல்ல. இவை இல்லாமல் எந்தத் தமிழ்ச் சொல்லையும் எழுதலாம்;

உச்சரிக்கலாம். இவைகளை எடுத்துவிட்டால் சொற்களின் உச்சரிப்பிலோ, பொருளிலோ, இலக்கணத்திலோ எவ்விதக் குறையும், குற்றமும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றவில்லை. சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் இருந்தே நான் இதை கவனித்து வருகிறேன்.

இந்தப்படி எழுத்துக் கோத்து அச்சடிக்கப்பட்டுள்ள ஒரு குறள் புத்தகத்தையும் நான் 40 வருடத்திற்கு முன்பே பார்த்திருக்கிறேன். இப்படிச் செய்வதில் மொத்தத்தில் 38 எழுத்துகள் (அதாவது உயிரெழுத்து, ஐ, ஒள ஆகிய 2–ம்; அவை ஏறும் மெய்யெழுத்துகளில் 2 து18 = 36 ம் ஆக, 36 +2=38, ஞாபகத்திற்கும், பழக்கத்திற்கும் தேவை இல்லாத எழுத்துகள் ஆகிவிடும். (ஐ=அய்; ஒள=அவ் என எழுதலாம்), இவை தவிர உயிர்மெய் எழுத்துகளில் தனிமாற்றம் பெற்றிருக்கிற t, Ù, à, ஆகிய மூன்று எழுத்துகளுக்கும் தனி உருவம் தேவை இல்லாமல் ணா, றா, னா, போல் ஆக்கிவிடலாம்.

மற்றும், மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம்; உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில், நெடில் எழுத்துகள் கொண்ட; (4 து18 = 72) தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டுத் தனிச்சிறப்புக் குறிப்பை – அதாவது "க'கரத்திற்கு "ஆ'கார நெடில் உருவம் காட்ட ஒரு "õ' (கால்) போட்டு விடுவது போல், "க'கரத்துக்கு எகரம், ஏகாரம் காட்ட ஒற்றைச் சுழிக் கொம்பு, இரட்டைச் சுழிக் கொம்பு "ö, ÷' போடுவதுபோல – மற்ற, இகர, ஈகாரத்துக்கும்; உகர, ஊகாரத்துக்கும் சில குறிப்புகளை உண்டாக்கி, உயிர் 10, மெய் 18, குறில், நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம்.

இதைப்பற்றி மற்றொரு சொற்பெருக்கில் தெளிவாக்க இருக்கிறேன். இந்த மாறுதல்கள் செய்வதால் நம் மொழிக்கோ, பொருளுக்கோ, இலக்கணத்துக்கோ எவ்விதக் குறைபாடோ, கேடோ செய்தவர்களாக ஆகமாட்டோம். மேல் நாடுகளில் எழுத்துகள், எழுத்துக்கூட்டும் முறைகள் இவைகளில் மாற்றம் செய்வதால், இலக்கணத்தில், உச்சரிப்பில், பொருளில் மாற்றம் ஏற்படுவதாயிருந்தாலுங் கூட துணிவாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் சொல்லும் மாற்றங்களுக்கு அப்படிப்பட்ட குற்றங்குறைகள் இல்லையென்றே கருதுகிறேன்.

நமது தமிழ்ப் பண்டிதர்கள் இம்மாற்றங்களுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமே – அதுவன்றோ பெரிய கஷ்டம்! மேல்நாடுகளில் பண்டிதர்கள் என்றால் புத்துலகச் சிற்பிகளாயிருப்பார்கள். நம் நாட்டிலோ பண்டிதர்கள் என்றால் பழைமைக்கு இழுத்துக் கொண்டு போகும் பாட்டிக்கதை வீரர்களாக இருக்கிறார்கள். "பண்டு' என்ற சொல்லிலிருந்து – அதாவது பண்டையர்கள் என்பதுதான் பண்டிதர்கள் என்ற சொல்லாகத் திரிந்தது என்று மூலம் கண்டுபிடிக்கத் தக்கவர்களாக இருக்கிறார்கள்! எழுத்து, மொழி சீர்திருத்தத்தில் எனக்குத் தெரிய எந்தப் பண்டிதரும் பாடுபட்டிருப்பதாகக் காண முடியவில்லை.

அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில் "ந, ங, ஞ' ஆகிய மூன்று எழுத்துகளையும் எடுத்துவிடலாம். "ன்+த = ந'; "ன்+க = ங'; ன்+ச = ஞ' என்று ஆக்கிவிடலாம். எனவே, மெய்யெழுத்தில் ந, ங, ஞ ஆகிய மூன்றையும் குறைக்கலாம். இவை தனித்தனியாகத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. உயிரெழுத்துகளில் "ஐ'யும், "ஒள'வும் எப்படிக் கூட்டெழுத்துகளோ, அப்படி – உயிர் மெய்யிலுள்ள கூட்டெழுத்துகள்தான் இந்த ந, ஞ, ங என்ற மூன்றும். பந்து என்ற வார்த்தையையும், பங்கு என்ற வார்த்தையையும், பஞ்சு என்ற வார்த்தையையும் எடுத்துக் கொள்ளுவோம். ந, வையும், ங, வையும், ஞ, வையும் எடுத்துவிட்டால் "பன்து', "பன்சு' என்று எழுத வேண்டியிருக்கும். இந்தச் சொற்களின் உச்சரிப்பை முதலில் சொல்லிக்கொடுத்துவிடலாம்; அல்லது , சாதாரணமாக உச்சரிப்புப் பழக்கத்திலேயே இருந்துவரும்.

பொதுவாகவே "த'வுக்கு முன் வந்தால் – இப்படி உச்சரிக்க வேண்டும்; "க'வுக்கு முன் வந்தால் – இப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டால், பிறகு உச்சரிப்பதில் கஷ்டமிருக்காது. ஆங்கிலத்தில் இம்மாதிரி பல உச்சரிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக கதt (பி–யு–டி) "புட்' என்றும், But  (பி–யு–டி) "பட்' என்றும்தான் உச்சரிப்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் அறிமுகமாகாதிருந்தால், ஒரேமாதிரிதான் உச்சரிக்க வேண்டியிருக்கும். ஒரு எழுத்துக்குப் பல சப்தங்கள் இருப்பது, தமிழுக்குப் புதிதல்ல. "த' என்னும் எழுத்து "தடி' என்ற சொல்லில் ஒருவிதமாகவும், "பதம்' என்ற சொல்லில் வேறு விதமாகவும் ஒலிக்கவில்லையா?

அதேபோல் "ன' என்ற எழுத்துக்கே "ந' சப்தமும், "ங' சப்தமும், "ஞ' சப்தமும் இருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. இந்தச் சீர்திருத்தங்களைச் செய்தால், தமிழ் தனி உருவ எழுத்துகள் வெகு சொற்பமாகிவிடும். உயிர் எழுத்துகள் 10. நெட்டெழுத்துகள் எல்லாவற்றிற்கும், "õ' (காலே) போட்டு விடுவதால் அய்ந்து உருவ எழுத்துகள் தாம் இருக்கும். அதாவது (ஆங்கில "வவ்வல்கள்' போல்) அ, இ, உ, எ, ஒ நெட்டெழுத்துகள் – அõ, இõ, உõ, எõ, ஒõ என்றே எழுதலாம். மெய்யெழுத்துகள் 18 இல் 3 எழுத்துகள் (ந், ங், ஞ்) எடுக்கப்பட்டால் 15 எழுத்துகளையும், மேலே புள்ளி வைக்காமல் பக்கத்தில் ஒரே ஒரு கோடு இழுப்பதன் மூல் காட்டலாம். அதாவது, க>, ச>, ட >, ண >, த >,  ...   ...  ன > என்றபடி எழுதினால் – க், ச்  ...   என்று அர்த்தப்படுத்தப் படிக்கலாம். ஆக, சிறப்புக் குறிகளில் இந்தக் கோடு 1, ஆ–õ=1, இ–     = 1, ஈ –    =1, உ–ú=1, உõ–ü=1, எ–ö=1, எõ–÷=1.

ஆக 8 சிறப்புக் குறிகளில் இகர, இõகாரத்திற்கும்; உகர, உõகாரத்திற்கும் 4 குறிகள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஒகரத்திற்கும் ஓகாரத்திற்கும் எகர, ஏகாரக் குறிப்புகளே பயன்பட்டு விடுவதால், அவற்றிற்காகத் தனிக் குறிப்பு வேண்டியதில்லை. அல்லது ö, ÷, என்ற இந்தக் கொம்புகளை வேறு வகையில் மாற்றிப் போட்டுக் கொள்ளலாம். கடைசியாக, ஆய்தம் 1 இருக்கலாம்.

இப்போது உயிர் 5, மெய் 15, சிறப்புக்குறி 8, ஆய்தம் 1 – மொத்தம் 29, 29 உருவ எழுத்துகளிலேயேகூட தமிழ் எழுத்துகளுக்கு எண்ணிக்கையையும் (தமிழ் மொழியை) அடக்கிவிடலாம். அல்லது சிலர் கருதுவதுபோல், 12 உயிரெழுத்துகளில் ஐ, ஒள தவிர மற்ற பத்தில் "அ' வை அப்படியேயும் "ஆ'வுக்குப் பதிலாக "õ' வையும், "எ', "ஏ'வுக்குப் பதிலாக "ö', "÷' என்ற குறிப்புகளையும் உற்பத்தி செய்துகொண்டு, இவற்றையே உயிர்மெய்யாக மெய்யோடு சேர்த்துப் படிப்பதானால் – அப்போது உயிர் 10, மெய் 15, ஆய்தம் 1, மெய்குறிப்பு 1 ஆக 27 எழுத்துகளாகும். இந்த 27 எழுத்துகளைக் கொண்டே நமது சகல சொற்களையும் அதி சுலபமாக எழுதி விடலாம். பிறமொழிச் சொற்களை நம் மொழியால் எழுதுவதற்குத் தேவைப்பட்டால், ஒன்றிரண்டு வேறு எழுத்துகளையும் உண்டாக்கிக் கொள்ளலாம். அறிஞர்களும் பண்டிதர்களும் தீர்க்கமாய்ச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இது முடிவல்ல, அறிஞர்களுக்கு விண்ணப்பம்.            

"மொழி', "எழுத்து' என்னும் பொருள்கள் பற்றி கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும், 13.1.1936 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் திருநாள் விழாவிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல் "மொழி எழுத்து; "பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' தொகுதி : 3, பக்: 1730

Pin It